Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

கார்பெட்

மரத்தின் மீது உட்கார்ந்திருந்த கார்பெட்டால் தனக்கு முன் சென்ற நீண்ட பாதையில் ஒரு 10 கஜ தூரத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவருக்கு இடது புறமாக ஒரு பள்ளத்தாக்கின் வழியாக அந்தப் பாதை வெகு தூரம் சென்றது. வலது புறத்தில், சுமார் 300 கஜ தூரத்தில் புதர்களுக்கு இடையே கவ்யாவின் சடலம் இருந்தது. பள்ளத்தாக்கின் அருகாமையில் தண்ணீர் ஏதும் இல்லை. ஆனால் கார்பெட் அமர்ந்திருந்த மரத்திற்கு அருகாமையில், சுமார் மூன்று அல்லது நான்கு கஜ தூரத்தில் நிறையச் சின்னச் சின்னக் குட்டைகள் இருந்தன. சற்றுத்தூரத்தில் ஒரு சிறிய ஓடை ஓடியது. கிராமத்து மக்கள் அந்த ஓடையிலிருந்து தண்ணீர் எடுத்து தங்கள் வீட்டுத் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தினர்.

கார்பெட்டுக்கு முன் சென்ற பாதை, மலையிலிருந்து கீழே இறங்கி வந்த ஒரு பாதையுடன் வலது கோணத்தில் சந்தித்தது. அந்த மலைப் பாதையில் ஒரு 300 கஜ தூரத்தில் கவ்யாவின் வீடு இருந்தது. மலைப் பாதையிலிருந்து சுமார் 30 கஜ தூரத்தில் ஒரு சிறிய வளைவு இருந்தது. அந்த வளைவு கார்பெட் பார்வைக்குத் தெரிந்த பாதையுடன் இணைந்திருந்தது. ஆனால் அந்த வளைவுக்கும் பாதைக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு பள்ளம். அந்தப் பள்ளத்தின் ஆரம்பமும், முடிவும் கார்பெட்டின் கண்களுக்குப் புலப்படவில்லை.

அன்று கார்பெட்டுக்கு டார்ச் லைட் தேவைப்படவில்லை. சந்திரனின் வெளிச்சம் வானில் பிரகாசமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில், ஆட்கொல்லி சிறுத்தை கார்பெட்டுக்கு முன் சென்ற பாதையின் வழியாகவோ அல்லது கவ்யாவின் வீட்டிலிருந்து வந்த பாதையின் வழியாகவோ, 20 அடியிலிருந்து 40 அடி தூரத்திற்குள் வந்தால், கார்பெட்டால் அச்சிறுத்தையைக் குறி தவறாமல் சுட்டு வீழ்த்த முடியும். சென்ற தினம், ஆட்கொல்லி சிறுத்தை கவ்யாவின் வீட்டிலிருந்து வந்த பாதை வழியாக வந்திருக்கிறது என்பதைச் சிறுத்தையின் கால் தடங்கள் கார்பெட்டுக்கு உணர்த்தின.

கார்பெட், இபாட்சனுடன் மலையிலிருந்து சற்று தூரம் கீழே நடந்து சென்றார். பின்னர், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக ரோடோடென்ட்ரான் மரத்தின் மீது ஏறித் தயாராக உட்கார்ந்தார் கார்பெட். சில நிமிடங்களில் மூன்று காட்டுக் கோழிகள் அவர் அமர்ந்திருந்த மரத்தைக் கடந்து சென்றன. அந்தக் கோழிகளில் இரண்டு பெட்டைக் கோழிகள், ஓர் ஆண். அக்கோழிகள் மலையிலிருந்து இறங்கி வந்து, சுனையில் நீர் பருகி விட்டு வந்த வழியே திரும்பிச் சென்று விட்டன. அக்கோழிகள் வரும் போதும், மறுபடியும் திரும்பிச் செல்லும் போதும் மரத்தின் மீது கார்பெட் இருப்பதைக் கவனிக்கவே இல்லை. இதன் மூலம், ‘தான் மரத்தில் உட்கார்ந்திருப்பது யாருக்கும் தெரியவில்லை’ என்பதை கார்பெட் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.

அன்றைய இரவின் தொடக்கம் மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு 8 மணியளவில், சடலம் இருந்த இடத்தை நோக்கி ஒரு கரட்டாடு கத்தியது. ஆட்கொல்லி சிறுத்தை சடலம் இருந்த இடத்திற்கு வந்துவிட்டது என்று கார்பெட் தெரிந்து கொண்டார். ஆனால் கார்பெட் எதிர்பார்த்தது போல், ஆட்கொல்லி சிறுத்தை அவருக்கு முன் இருந்த இரண்டு பாதைகள் வழியாகவும் வரவில்லை. சில நிமிடங்கள் கத்திய கரட்டாடு, பிறகு தன் கத்தலை நிறுத்தியது. அதன் பின்னர், அந்த இரவு மிகவும் அமைதியாக இருந்தது. இரவு 10 மணியளவில், கரட்டாடு மறுபடியும் கத்தத் தொடங்கியது. இதிலிருந்து ஆட்கொல்லி சிறுத்தை சடலத்திற்கு அருகில் சுமார் 2 மணி நேரம் இருந்திருக்கிறது என்பதைக் கார்பெட் கணித்தார். இரண்டு மணி நேரம் அவ்விடத்தில் இருந்ததால், ஆட்கொல்லி சிறுத்தை சடலத்தை நன்றாகத் தின்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. இம்முறை, ஆட்கொல்லி சிறுத்தையின் உடலில் விஷம் நன்றாக ஏறியிருக்கும். ஏனெனில், இரண்டாவது நாள் கார்பெட்டும், இபாட்சனும் சடலத்தின் உள்ளே நிறைய சயனைட் விஷத்தை சொருகி வைத்தார்கள்.

ஒரு நொடி கூட கண்ணிமைக்காமல், தனக்கு முன்னால் இருந்த மலைப்பகுதியை உற்றுக் கவனித்தபடியே இருந்தார் கார்பெட். அந்தப் பிரகாசமான நிலா வெளிச்சத்தில், அவரால் புற்களைக் கூட நன்றாகப் பார்க்க முடிந்தது. நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், கவ்யா வீடு இருந்த பாதையின் வழியாக ஆட்கொல்லி சிறுத்தை வரும் சத்தத்தைக் கார்பெட் கேட்டார். இரண்டு பாதைகளிலும் முன்னேற்பாடாகக் காய்ந்த இலைச்சருகுகளைச் சிதற விட்டிருந்தார் கார்பெட். ஆட்கொல்லி சிறுத்தை சருகுகள் மீது நடந்து வந்த பொழுது, அதன் கால்கள் சருகுகள் மீது பட்டு சத்தத்தை ஏற்படுத்தின. இதை வைத்து கார்பெட் ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டத்தைத் தெரிந்து கொண்டார். ஆட்கொல்லி சிறுத்தை தன்னை நோக்கி வருவது நினைத்து கார்பெட்டுக்கு நம்பிக்கை பிறந்தது. இன்னும் சில நிமிடங்களில், தன் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா ஆட்கொல்லி சிறுத்தையின் உடலைத் துளைக்கும் என்று நினைத்தபடி இருந்தார்.

தான் வந்த பாதையின் வளைவில் ஆட்கொல்லி சிறுத்தை சற்று நின்றது. பின்னர் அங்கிருந்த பள்ளத்தின் வழியாகச் சிறிய பாதையை அடைந்தது. பின்னர் மறுபடியும் நின்றது. கார்பெட் தன் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ரைபிள் துப்பாக்கியை மடியில் வைத்து, கைகளில் பிடித்தபடியே பல மணி நேரம் மரத்தில் உட்கார்ந்திருந்தார். ஆட்கொல்லி சிறுத்தை மரத்திற்கு அடியில் தன்னைக் கடந்து செல்லும், அப்படிச் செல்லும் போது ரைபிள் துப்பாக்கியைத் தன் தோள்பட்டையில் ஏந்தி, அச்சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தலாம் என்று கணக்குப் போட்டார் கார்பெட். அந்த யோசனையில் மூழ்கியபடியே, கார்பெட் பாதையைக் கவனித்தவாறு இருந்தார். மரத்தின் கிளைகளின் வழியாகப் பார்க்கும்பொழுது, முதலில் ஆட்கொல்லி சிறுத்தையின் தலை தெரியும் என்று ஆவலாக எதிர்பார்த்திருந்தார் கார்பெட். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சிறிது நேரம் சென்றது. கார்பெட்டால் பதற்றத்தை நிறுத்த முடியவில்லை. சிறுத்தை, தான் வந்த பாதையிலிருந்து விலகி, கீழே தாவும் சத்தம் அவர் காதுகளில் விழுந்தது. சிறுத்தை குறுக்காகக் கார்பெட் உட்கார்ந்திருந்த மரத்தை நோக்கி வந்தது. தான் மரத்தில் இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட சிறுத்தை, தன்னைத் தாக்க வருவதாகத்தான் கார்பெட் முதலில் நினைத்தார். கவ்யா சடலத்தின் சுவை பிடிக்காது போகவே சிறுத்தை வேறொரு இரையைத் தேடி வந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை இரையைத் தேடி வரவில்லை, தண்ணீரைத் தேடி வந்திருக்கிறது என்னும் விஷயத்தை கார்பெட் உடனேயே புரிந்து கொண்டார். சிறுத்தை பாதையை விட்டு விலகி, குறுக்கு வழியில் வந்து நேராக சுனையை நோக்கிச் சென்றது. சத்தமாகவும், ஆர்வமாகவும் தன்னுடைய நாக்கை வைத்து சிறுத்தை சுனையில் நீர் குடிக்கும் சத்தத்தைக் கார்பெட்டால் நன்கு கேட்க முடிந்தது.

சிறுத்தை பாதையில் சென்ற விதத்தையும், அது தண்ணீர் பருகும் விதத்தையும் வைத்து, விஷம் சிறுத்தையின் உடலில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்ற முடிவுக்கு கார்பெட் வந்தார். ஆனால் சயனைடு விஷத்தைப் பற்றி முன் அனுபவம் இல்லாத கார்பெட், அந்த விஷம் சிறுத்தையின் உடலில் எவ்வளவு நேரத்தில் செயல்பட்டு அதை வீழ்த்தும் என்று விவரம் தெரியாதவராக இருந்தார். ஆட்கொல்லி சிறுத்தை சுனையில் நீர் பருகி 10 நிமிடம் ஆகிவிட்டிருந்தது. சுனை அருகே ஆட்கொல்லி சிறுத்தை செத்து வீழ்ந்திருக்கும் என்று எண்ணினார் கார்பெட். ஆனால் மாறாக, ஆட்கொல்லி சிறுத்தை எதிர்த்திசையிலுள்ள மலையில் ஏறிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்து செல்வது அவருக்குத் தெரிந்தது. ஆட்கொல்லி சிறுத்தை மலையைக் கடந்து செல்லும் போது, எந்த ஒலியும் இல்லாமல் அவ்விடமே கப்சிப் என்று இருந்தது.

துரதிர்ஷ்டமாக, பாதையில் வரும் போதோ, பள்ளத்தை விட்டு வெளியே வரும் போதோ, கார்பெட் உட்கார்ந்திருந்த மரத்தின் அடியில் வரும் போதோ, தண்ணீர் பருகும் பொழுதோ அல்லது தண்ணீர் பருகிவிட்டு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போதோ, அச்சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த கார்பெட்டுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் அது கொடுக்கவில்லை. அவரால் மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் ஆட்கொல்லி சிறுத்தையைப் பார்க்க முடியவில்லை. மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் எல்லாம், எதார்த்தமாகவோ அல்லது முன் யோசனையுடனோ ஆட்கொல்லி சிறுத்தை மறைவாகவே சென்றிருக்கிறது. நடந்து வரும் போது, துளியளவு நிலா வெளிச்சம் கூட தன்னைக் காட்டிக் கொடுக்குமாறு அது எங்கேயும் வரவில்லை.

இனிமேலும் அவ்விடத்தில் ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை கார்பெட்டுக்கு சற்றும் இல்லை. ஆட்கொல்லி சிறுத்தையின் உடலுக்குள் சென்ற விஷம், அதை வீழ்த்தியிருக்குமா என்று சொல்வதற்கில்லை.

மீதி இரவை, தனக்கு முன் இருந்த பாதையைப் பார்த்தவாறே, சத்தங்களைக் கேட்டவாறே கார்பெட் கழித்தார். மறுநாள் காலை விடிந்தது. இபாட்சன் கார்பெட்டை நோக்கி வந்தார். இருவரும் தேநீர் தயாரித்துப் பருகினர். சென்ற இரவு நடந்த விஷயங்களை கார்பெட், இபாட்சனிடம் தெரிவித்தார்.

இருவரும் கவ்யாவின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர். சடலத்தின் ஒரு கால் முழுவதையும் தின்றிருந்தது சிறுத்தை. இந்தக் காலைத்தான் ஆட்கொல்லி சிறுத்தை இரண்டு இரவுகளுக்கு முன் சிறிதளவு கடித்துத் தின்றிருந்தது. கொஞ்சம்போல் தின்னப்பட்ட இடத்தில்தான் இபாட்சனும், கார்பெட்டும் முழு சயனைடு விஷத்தை உட்புகுத்தி வைத்திருந்தனர். காலில் உள்ள விஷம் சிறுத்தையின் உடலினுள் நிச்சயம் சென்றிருக்கும். கூடுதலாகச் சடலத்தின் இடது தோள்பட்டையையும், பின்பக்கத்தையும் தின்றதனால் அதில் வைக்கப்பட்டிருந்த சயனைடு விஷமும் ஆட்கொல்லி சிறுத்தையின் உடலினுள் சென்றிருக்கும்.

விஷமேறிய ஆட்கொல்லி சிறுத்தை எங்கேனும் இறந்து கிடக்கும் என்ற எண்ணத்தில், அதன் உடலைத் தேடி மீட்க ஏற்பாடு செய்யப்பட்டது. இபாட்சனுடன் வந்த பட்வாரி அதற்கான வேலையில் இறங்கினார். மதிய வேளையில், கிராமங்களில் இருந்து சுமார் 200 ஆண்களை அழைத்து வந்தார் பட்வாரி. 200 நபர்களை வைத்துக்கொண்டு இபாட்சனும், கார்பெட்டும் முரசுகளைக் கொட்டியவாறே, சென்ற இரவு ஆட்கொல்லி சிறுத்தை சென்ற திசையில் சென்றனர்.

ஆட்கொல்லி சிறுத்தை நேற்று சுனையில் நீர் பருகிய இடத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் பெரிய பாறைகளால் சூழப்பட்ட ஒரு குகை காணப்பட்டது. அந்தக் குகை அப்படியே ஒரு மலை வரை நீண்டு சென்றது. அந்தக் குகை வாயிலில் ஒரு சிறுத்தை எளிதாக நுழைந்து உள்ளே செல்ல முடியும். குகையின் வாயிலுக்கு அருகே உள்ள தரையைச் சிறுத்தை தன் நகங்களால் கீறி இருப்பது தெரிந்தது. கீறப்பட்ட இடத்திற்கு அருகே கால் கட்டை விரல் ஒன்று கிடந்தது. தன் கடைசி இரையின் கால் கட்டைவிரலை ஆட்கொல்லி சிறுத்தை முழுவதுமாக விழுங்கி பின்னர் துப்பியிருக்கிறது.

கூட வந்தவர்களில் பலர் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த கற்களைக் கொண்டு அந்தக் குகையின் முகப்பு மூடப்பட்டது. எந்த விதத்திலும் ஆட்கொல்லி சிறுத்தை குகையை விட்டு வெளியே வராதபடி, அக்குகை கற்களால் மூடப்பட்டது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *