Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

ஜிம் கார்பெட்

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது தயார் செய்யப்பட்ட மேடையில் ஏறி அமர்ந்தனர். அந்த மேடை பெரியதாகவும், இருவரும் வசதியாக அமர்ந்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது. மூதாட்டியின் சடலம் மேடையிலிருந்து சுமார் 200 கஜ தூரத்தில் இருந்தது. மேடைக்கும் மூதாட்டியின் உடலுக்கும் நடுவில் செங்குத்தான பள்ளத்தாக்கு இருந்தது. மூதாட்டியின் சடலம் மேடையை விடச் சுமார் 100 அடி உயரத்திற்கு மேலே இருந்தது.

இபாட்சன் தன்னுடைய ரைபிள் துப்பாக்கியில் தொலைநோக்கிக் கருவியைப் பொருத்தியிருந்தார். அந்தத் தொலைநோக்கிக் கருவியைக் கொண்டு சிறுத்தையைத் துல்லியமாகச் சுடமுடியுமா என்ற அச்சம் இபாட்சனிடம் இருந்தது. எனவே, அவர் இருகண் நோக்கியை (binocular) பயன்படுத்தினார். கார்பெட் தன்னுடைய .275 ரைபிளில் தோட்டாக்களைப் பொருத்தினார். ஆட்கொல்லி சிறுத்தை மலை வழியாக இரையை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாதையை இபாட்சன் கண்காணித்தார். கார்பெட் சுற்றுவட்டார மலைப் பகுதி முழுவதையும் கண்காணித்தார். அவர்கள் கண்களில் ஆட்கொல்லி சிறுத்தை பட்டால் அதை கார்பெட்தான் குறிபார்த்துச் சுட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்திருந்தனர். சுடுவதற்குத் தோதாக இல்லாத திசையாக இருந்தாலும், பறக்கோடியான எல்லையாக (extreme range) இருந்தாலும் கார்பெட்தான் ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட வேண்டும்.

இபாட்சன் மேடையில் தூங்கி விட்டார். கார்பெட் புகைபிடித்தவாறே தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மேற்கில், மலைகளின் நிழல் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் மீது படர்ந்தது. அஸ்தமிக்கும் சூரியனின் செஞ்சுடர் கதிர்கள் மலைகளின் முகடுகளில் படிந்தது. இபாட்சன் தூக்கத்திலிருந்து விழித்தார். தன்னுடைய இருகண் நோக்கியைக் கையில் எடுத்துக் கொண்டார். கார்பெட் தன் கைகளில் ரைபிள் துப்பாக்கியை ஏந்தினார். ஆட்கொல்லி சிறுத்தை வருவதற்கான நேரம் வந்துவிட்டது. இன்னும் 45 நிமிடங்களுக்கு வெளிச்சம் இருக்கும். இந்தச் சமயத்தில் இருவரும் சுற்றும் முற்றும் தீவிரமாகக் கண்காணித்தார்கள். தன்னுடைய வெறும் கண்களால் கார்பெட் கண்காணித்தார். ஒரு சிலருக்கு மட்டுமே கார்பெட்டைப் போல் அசாத்திய பார்வை கொண்ட கண்கள் இருக்கும். இபாட்சன் தன்னுடைய இருகண் நோக்கியைப் பயன்படுத்தி மலையின் ஒவ்வொரு அடியையும் தீவிரமாகக் கண்காணித்தார். ஆனால் அவர்களின் கண்களுக்கு எந்த ஒரு பறவையோ அல்லது மிருகத்தின் அசைவோ தெரியவில்லை.

பொழுது இருட்டிவிட்டது. ஆட்கொல்லி சிறுத்தை வந்தால் அதைச் சுடுவதற்குப் போதுமான வெளிச்சம் இல்லை. எனவே கார்பெட் தன் ரைபிள் துப்பாக்கியை வைத்துவிட்டார். சற்று நேரத்தில் இபாட்சனும் தனது இருகண் நோக்கியை வைத்துவிட்டார். ஆட்கொல்லி சிறுத்தையைச் சுடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் போய்விட்டது. ஆனால் அவர்களிடம் இன்னும் மூன்று சந்தர்ப்பங்கள் இருந்தன. அதனால் அவர்கள் மனம் தளரவில்லை.

இருட்டிய சில மணி நேரத்திற்கெல்லாம் மழை பெய்தது. கார்பெட் இபாட்சனின் காதில் கிசுகிசுத்தார். அவர்கள் செய்த முயற்சி எல்லாம் வீணாகப் போய்விடுமோ என்று அஞ்சுவதாகக் கார்பெட், இபாட்சனிடம் தெரிவித்தார். அவர்கள் பொருத்தியிருந்த ஜின் பொறியின் மீது மழைத் தண்ணீர் பட்டு கூடுதல் எடையின் காரணமாக அது தன்னிச்சையாக இயங்கிவிடும்; கூடவே மீன் தூண்டில் கயிற்றில் மழைத்துளி பட்டு ரைபிள் துப்பாக்கி வெடிக்கலாம் என்று கார்பெட் இபாட்சனிடம் தெரிவித்தார்.

மழை நின்றபாடில்லை. இபாட்சன் கார்பெட்டிடம் ‘நேரம் என்ன?’ என்று கேட்டார். கார்பெட் தன் கையில் ஒளிரும் கைக்கடிகாரத்தை கட்டியிருந்தார். அதில் நேரத்தைப் பார்த்துவிட்டு, மணி 8 ஆவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருப்பதாக இபாட்சனிடம் தெரிவித்தார். அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி, சடலம் இருந்த இடத்திலிருந்து கொடூரமான, ஆக்ரோஷமான கர்ஜனை சத்தங்கள் கேட்டன. பிரபலமான ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை ஒரு வழியாக ஜின் பொறியில் மாட்டிக் கொண்டது என்று இருவரும் கருதினார்கள்.

இபாட்சன் மேடையிலிருந்து அப்படியே கீழே குதித்தார். கார்பெட் மரக்கிளையைப் பிடித்து மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்தார். அன்று அவர்கள் மேடையிலிருந்து இறங்கும்போது, தங்கள் கை கால்களை உடைத்துக் கொள்ளாமல் இருந்தது அவர்களது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அருகிலுள்ள சேனைக்கிழங்கு வயலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்தார்கள். இபாட்சன் பெட்ரோமாக்ஸ் விளக்கைப் பற்ற வைக்கும் வேலையில் இறங்கினார். அதற்குள்ளாக கார்பெட் தன்னுடைய அச்சத்தையும், அவநம்பிக்கையையும் தெரிவித்தார். அதற்காக இபாட்சனிடமிருந்து, ‘நீ ஒரு சரியான அவநம்பிக்கையாளர். முதலில் ஒரு சில மழைத் துளிகள் ஜின் பொறியைத் தன்னிச்சையாக இயக்கிவிடும் அல்லது மழைத் துளிகள் ரைபிள் துப்பாக்கிகளைச் சுட வைத்துவிடும் என்று தெரிவித்தாய். இப்பொழுது ஆட்கொல்லி சிறுத்தையின் சத்தம் கேட்காததால், அது பொறியை விட்டுத் தப்பித்திருக்கும் என்று தெரிவிக்கிறாய்’ என்று பேச்சு வாங்கிக்கொண்டார்.

ஆனால் கார்பெட்டின் மனதில், ‘இதே போன்று சென்ற முறை ஜின் பொறியில் ஒரு சிறுத்தை மாட்டிக் கொண்ட பொழுது அது தொடர்ந்து விடாமல் கர்ஜித்தபடியும், உறுமியபடியும் இருந்தது. ஆனால் இப்பொழுதோ சில கர்ஜனைகளுக்குப் பிறகு சிறுத்தையிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை’ என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

இபாட்சன் அனைத்து விதமான விளக்குகளிலும் நிபுணத்துவம் பெற்றவர். எனவே, அவர் பெட்ரோமாக்ஸ் விளக்கை விரைவாகப் பற்ற வைத்து அதை ஒளிரச் செய்தார். எந்தக் கர்ஜனை சத்தமும் சிறுத்தையிடமிருந்து மேலும் கேட்காததால் அவருக்கும் சந்தேகம் எழுந்தது. இருப்பினும், இருவரும் தங்களது சந்தேகங்களைக் காற்றில் வீசிவிட்டு சடலம் இருந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் சென்ற பாதை கடினமானதாக இருந்தது. மீன் தூண்டில் பொறியிலும், சினம் கொண்ட ஆட்கொல்லி சிறுத்தையிடமும் மாட்டிக்கொள்ளாமல் இருவரும் சற்றுக் கவனமாகப் பக்கவாட்டிலேயே சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர்.

மேலே கரையின் பக்கமாகச் சென்று பார்த்தபொழுது, கீழே தரையில் ஒரு குழியை அவர்களால் பார்க்க முடிந்தது. அங்கு ஜின் பொறி இல்லை. இதைப் பார்த்தபொழுது அவர்களது அவநம்பிக்கை உச்சத்திற்குச் சென்றது. அப்பொழுதுதான் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளிர் வெளிச்சம், மலைச் சரிவில் 10 கஜ தூரத்தில் ஜின் பொறி இருக்கும் இடத்தை அவர்களுக்குக் காட்டியது. அந்த ஜின் பொறியின் வாய் மூடியிருந்தது. மேலும், அது காலியாகவும் இருந்தது. சடலத்தின் தலை இப்போது கரையின் மீது இல்லை. இருவரும் சடலத்தைப் பார்த்தார்கள். சடலத்தின் பெரும்பகுதி சாப்பிடப்பட்டிருந்தது.

இபாட்சனும், கார்பெட்டும் மாமரத்தை நோக்கித் திரும்பிச் சென்று மேடை மீது ஏறினர். நடந்த விஷயம் அவர்களுக்கு மிகவும் கசப்பானதாக இருந்தது. இனி, இருவரும் கண் விழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு, மிகவும் குளிராக இருந்தது. இருவரும் தங்கள் மீது வைக்கோலைப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டனர்.

விடிந்ததும், மாமரத்திற்கு அருகே நெருப்பை மூட்டி தண்ணீரைச் சூடு செய்து தேநீர் தயாரித்து இருவரும் பல கோப்பைகள் பருகினர். மூட்டிய நெருப்பில் தங்களைக் கதகதப்பாக்கிக் கொண்ட பிறகு, இருவரும் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்களுடன் பட்வாரியும், இபாட்சனின் ஆட்களும், கார்பெட்டின் ஆட்களும் சென்றனர். கிராமத்திலிருந்த ஆண்கள் பலரும் சென்றனர்.

சடலம் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்த கார்பெட் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். அன்று அவர் தனியாகச் சென்று இருந்தால் அவர் பார்த்ததை யாரிடமும் கூறியிருக்க மாட்டார். காரணம் அவர் கூறியதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அன்று அவருடன் பலர் சென்றதால் அவர் கூறப்போகும் விஷயத்திற்குச் சாட்சி இருந்தது. எனவே அவர் தான் பார்த்ததைப் பின்வருமாறு விவரிக்கிறார்.

‘… அந்தக் கொடூரமான ஆட்கொல்லி சிறுத்தை, அந்த மழை பெய்த இரவில் தனக்கு வைக்கப்பட்ட எந்த ஒரு பொறியிலும் சிக்காமல் எப்படி உயிர் தப்பியது? என்பதை நினைக்கும் போதே திகைப்பூட்டுவதாக இருந்தது’.

அன்று மழை பெரிய அளவில் பெய்யவில்லை என்றாலும், தரையில் மண்ணை நனைத்து மென்மையாக்கி இருந்தது. அந்த மென்மையான மண் தரையில் பதிந்த ஆட்கொல்லி சிறுத்தையின் கால்தடங்களைத் தொடர்ந்து சென்று, முந்தைய நாள் இரவு என்ன நடந்தது? என்று கார்பெட்டால் தீர்மானிக்க முடிந்தது.

ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையை நோக்கி எந்தத் திசையில் வரும் என்று கார்பெட்டும், இபாட்சனும் எதிர்பார்த்தார்களோ அதே திசையில்தான் அது வந்திருக்கிறது. அந்தச் சிறிய சமதளப் பகுதிக்கு வந்த பிறகு, நேராக தன் இரையை நோக்கி அது செல்லவில்லை. மாறாகப் பக்கவாட்டில் வந்திருக்கிறது. ஆட்கொல்லி சிறுத்தை பக்கவாட்டில் தன் இரையை நோக்கி வருவதைத் தடுக்க கார்பெட்டும், இபாட்சனும் குழிகளைத் தோண்டி முட்புதர்களை நட்டிருந்தனர். அப்படி வைக்கப்பட்ட மூன்று புதர்களை அகற்றிவிட்டு, தனக்குத் தேவையான வழியை ஏற்படுத்திக்கொண்ட ஆட்கொல்லி சிறுத்தை, அந்த வழியாகத் தனது இரையை அடைந்தது. இரையைப் பற்றி ரைப்பிள் துப்பாக்கிக்கு ஓர் அடிக்கு நெருக்கமாக இழுத்து வந்திருக்கிறது. அது இப்படிச் செய்ததன் மூலம், ரைபிள் துப்பாக்கியுடன் கட்டப்பட்ட மீன் தூண்டிலின் கயிறு தளர்வடைந்திருக்கிறது. பின்னர், ஆட்கொல்லி சிறுத்தை தன்னுடைய இரையைச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறது. அப்படிச் சாப்பிடும் பொழுதும், இரையின் இடுப்பில் கட்டப்பட்ட மீனின் தூண்டில் கயிற்றைத் தொட்டுவிடாதபடி கவனமாகச் சாப்பிட்டிருக்கிறது. கார்பெட்டும், இபாட்சனும் மூதாட்டி சடலத்தின் தலைக்கும், கழுத்திற்கும் சயனைடு விஷத்தை வைக்கவில்லை. அது தேவையில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தை விஷம் வைக்கப்படாத சடலத்தின் தலையையும், கழுத்தையும் தின்றிருக்கிறது. மேலும், சடலத்தின் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் அவர்கள் சயனைடு விஷம் வைத்தார்களோ, அவ்விடங்களுக்கு இடையே உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆட்கொல்லி சிறுத்தை கவனமாகத் தின்றிருக்கிறது.

பசியாறிய பிறகு, ஆட்கொல்லி சிறுத்தை மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒதுங்கியிருக்கிறது. அப்பொழுது கார்பெட் என்ன நடந்துவிடுமோ என்று பயந்தாரோ அது நடந்துவிட்டது. மழைத் தண்ணீரின் எடை ஜின் பொறியின் மீது அழுத்தம் கொடுத்து, பொறி தானாகவே வேலை செய்திருக்கிறது. அதே சமயத்தில், ஆட்கொல்லி சிறுத்தை தன் பின்னங்காலை ஜின் பொறியின் மீது வைத்திருக்கிறது. பின்கால் பொறியின் வாயில் மாட்டிக்கொண்டது. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், ருத்தரபிரயாகிலிருந்து ஜின் பொறியை எடுத்து வந்தவர்கள் அதைக் கீழே தவற விட்டுவிட்டார்கள். அதன் காரணமாக, ஜின் பொறியின் வாயிலிருந்த ஒரு மூன்று அங்குலப் பல் உடைந்துவிட்டது. பல் உடைந்த அந்த இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தையின் பின்னங்கால் மாட்டிக்கொண்டது. ஜின் பொறியின் பல் மட்டும் உடையவில்லை என்றால், பொறியில் சிக்கிய ஆட்கொல்லி சிறுத்தை அதிலிருந்து தப்பித்திருக்க முடியாது. பொறியின் பல் உடைந்திருந்த காரணத்தால், ஆட்கொல்லி சிறுத்தையால் சுமார் 3.5 கிலோ எடை கொண்ட அந்தப் பொறியை அது புதைக்கப்பட்ட குழியிலிருந்து இழுத்துச் செல்ல முடிந்திருக்கிறது. ஆட்கொல்லி சிறுத்தை ஜின் பொறியை மலைச்சரிவில் சுமார் 10 கஜ தூரத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. பின்னர், ஜின் பொறியிலிருந்து சிறுத்தையின் பின்னங்கால் வெளியே வந்துவிட்டிருக்கிறது. ஜின் பொறியில் அச்சிறுத்தையின் தோலின் சிறு பகுதியும், முடிக் கற்றையும் மட்டுமே இருந்தது.”

பின்னாளில், வெகு நாட்களுக்குப் பிறகு, அத்தோலையும், முடிக்கற்றையையும் அதற்கு உரித்தான இடத்தில் பொருத்திப் பார்த்த போது கார்பெட்டும், இபாட்சனும் பெரும் திருப்தி அடைந்தனர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *