Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஜிம் கார்பெட்

ஆட்கொல்லி சிறுத்தையின் செயல்கள் நம்ப முடியாதவையாக இருக்கலாம். ஆனால் 8 ஆண்டுகளாக மனிதர்களை வேட்டையாடிக் கொன்று, தின்று வருவதால் அது மிகவும் சுதாரிப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

திறந்த வெளியை விடுத்து, மறைவாகத் தன் இரையை நோக்கி வந்தது; தடுப்பாக வைக்கப்பட்ட முட்புதர்களை அகற்றியது; இரையை வசதியான ஓர் இடத்திற்கு எடுத்துச் சென்று சாப்பிட்டது; உடலில் சயனைடு விஷம் வைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளைத் தின்றது (சயனைடின் வாசனையை வைத்துக் கண்டுகொண்டு கவனமாகத் தவிர்த்திருக்கிறது) என இவையனைத்தும் ஆட்கொல்லி சிறுத்தையின் சாதாரணமான, இயற்கையான செயலாக கார்பெட்டுக்குத் தோன்றியது.

அதேபோல் ஜின் பொறியில் ஆட்கொல்லி சிறுத்தை மாட்டாமல் இருந்ததன் காரணம் கார்பெட்டுக்கு தற்செயலான ஒன்றாகப் பட்டது. மழை நீர் ஜின் பொறியில் அழுத்தத்தை அதிகமாக்கி அது திறந்து கொள்ளவும், அதே சமயத்தில் ஆட்கொல்லி சிறுத்தை அதன் மீது காலை நேராக எடுத்துச் செல்லவும் சரியாக இருந்திருக்கிறது. எனவே, ஆட்கொல்லி சிறுத்தை ஜிம் பொறியில் சரியாகச் சிக்கவில்லை.

ஆட்கொல்லி சிறுத்தை மறுபடியும் தப்பித்துவிட்டது. கார்பெட்டும், இபாட்சனும் ஜின் பொறியை அகற்றினர். மூதாட்டியின் உறவினர்கள் மூதாட்டியின் சடலம் இருந்த இடத்திற்கு வரும் வரைக் காத்திருந்தனர். மூதாட்டியின் உறவினர்கள் சடலம் இருந்த இடத்திற்கு வந்து, மீதம் இருந்த சடலத்தைத் தகனம் செய்ய எடுத்துச் சென்றனர். கார்பெட்டும், இபாட்சனும் ருத்ரபிரயாக்கிற்குச் சென்றனர். வேலையாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

அன்றிரவு, ஆட்கொல்லி சிறுத்தை மூதாட்டியின் சடலம் இருந்த இடத்திற்கு வந்தது. மறுநாள் காலை, ஆட்கொல்லி சிறுத்தையின் கால் சுவட்டை கார்பெட்டும், இபாட்சனும் மாமரத்தின் அருகே பார்த்தனர். தரையில் இருந்த மூதாட்டியின் இரத்தக் கறையை இப்பொழுது அவர்களால் பார்க்க முடியவில்லை. மழைத் தண்ணீர் இரத்தக் கறையை அடித்துச் சென்றுவிட்டது. கார்பெட்டும், இபாட்சனும் ஆட்கொல்லி சிறுத்தையின் கால் தடத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். யாத்திரீகர்களின் சாலை வழியாக சிறுத்தை சென்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்து நான்கு மைல்கள் கடந்து ஆய்வு பங்களாவிற்கு வந்திருக்கிறது அந்தச் சிறுத்தை. ஆய்வு பங்களாவின் வாயிற்கதவின் தூண் அருகில் உள்ள தரையைத் தன் நகங்களால் பிறாண்டிவிட்டு, அங்கிருந்து கீழே இறங்கி, சாலை வழியாக ஒரு மைல் தூரம் கடந்து ஆட்டுப் பட்டிக்குச் சென்றிருக்கிறது. அங்கு ஓர் ஆட்டைச் சும்மா வேண்டுமென்றே கொன்று போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.

ரைபிள் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவர்கள் அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற தொடர் தோல்வி, ஏமாற்றம் எல்லாம் அவர்களைத் துவண்டு போகச் செய்யாது, மாறாக அவர்களுடைய மனதை உறுதிப்படுத்துமென்று . அதேபோல் கார்பெட் கண்ட தோல்விகளும் அவரை உறுதிப்படுத்தியது. என்றாவது ஒருநாள் பகல் பொழுது அல்லது இரவு, விஷம், பொறி இவற்றின் துணையில்லாமல் தன் ரைபிள் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவானது நிச்சயமாக ஆட்கொல்லி சிறுத்தையின் உடலைத் தைத்துக் கொல்லும் என்று கார்பெட் நினைத்துக் கொண்டார்.

பெரிய வேட்டைக்காரர்கள் எல்லாம் வேட்டையின் போது தங்களுக்கு ஏற்படும் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வேட்டையாடச் செல்பவர்களோ அல்லது புகைப்படம் எடுக்கச் செல்பவர்களோ எந்த விலங்குகளின் மீதும் எந்த விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்த முடியாது.

பொதுவாக நிறையப் பேர் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறார்கள். காட்டு மிருகங்களுக்கு மிக நுட்பமான பார்வையும், செவித் திறனும் உண்டு. தங்களது நுட்பமான பார்வையையும், செவித்திறனையும் வேட்டையாடுவதற்கு மட்டும் அவை பயன்படுத்துவதில்லை; தங்களை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கின்றன. மிருகங்களின் நுட்பமான திறன்கள் மனிதர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை. நாம் வேட்டையாடக் காத்திருக்கும் மிருகங்களை நம்மால் பார்க்கவோ அல்லது அவைகளின் நடமாட்டத்தைக் கேட்கவோ முடியவில்லை என்றால் அம்மிருகங்களாலும் நம்மைப் பார்க்கவோ அல்லது நம்முடைய அசைவைக் கேட்கவோ முடியாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறானது. வேட்டையாடும் போது ஏற்படும் தோல்விகளுக்குக் காரணம், வேட்டையாடப் போகும் மிருகத்தின் திறன்களின் மீது வைத்திருக்கும் தவறான கணிப்பு மற்றும் அவர்களால் வெகு நேரத்திற்குச் சத்தமில்லாமல், அசையாமல் இருக்க முடியாதது என்பதுதான்.

ஒரு மிருகத்தின் செவித் திறன் எவ்வளவு நுட்பமானது, அம்மிருகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு கார்பெட் தன்னுடைய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

‘மார்ச் மாதத்தில் ஒரு நாள், இலையுதிர் காலத்தில், கீழே தரையே தெரியாத அளவிற்கு இலைகளால் தரை மூடப்பட்டிருந்தது. அந்த இலைகள், தரையில் உணவிற்காக அலையும் சிறிய பறவைகளின் நகர்வை எளிதாகக் காட்டிக் கொடுத்தன. அப்படிப்பட்ட இடத்தில், ஓர் அடர்ந்த புதருக்குப் பின்னால் ஒரு புலியைப் பார்த்தேன். அந்தப் புலியை நான் புகைப்படம் எடுக்க எண்ணினேன். லங்கூர் குரங்குகளின் நடமாட்டத்தை வைத்து, புலி எந்தத் திசையில் அமர்ந்திருக்கிறது என்பதை யூகித்தேன். புலி இருந்த இடத்திலிருந்து சுமார் 70 கஜ தூரத்தில் ஒரு திறந்தவெளி இருந்தது. அத்திறந்தவெளி சுமார் 50 கஜ தூரம் நீளமும், 30 கஜ தூரம் அகலமும் கொண்டதாக இருந்தது. அந்தத் திறந்த வெளியின் விளிம்பில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அம்மரத்தைப் பெரிய கொடிகள் சுற்றியிருந்தன. அக்கொடிகள் மரத்தின் உச்சிக் கிளை வரை சென்றன. தரையிலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்த அந்த உச்சிக் கிளைகள் இரண்டாகப் பிரிந்திருந்தன.

புதருக்கு அடியில் படுத்திருந்த புலியானது, மதியவேளையில் அந்தத் திறந்தவெளியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்த்தேன். காரணம் அத்திறந்தவெளி, புலி இருந்த புதருக்கும் அது காலையில் வேட்டையாடிக் கொன்று போட்டிருந்த கடா மான் இருந்த இடத்திற்கும் சரியாக நடுவில் இருந்தது. வேட்டையாடிய இரைக்கு அருகாமையில் சரியான மறைவிடம் இல்லாததால், புலி பகல் பொழுதில் அந்த அடர்ந்த புதரின் நடுவே சென்று அமர்ந்திருந்தது. புலி புதரில் மறைந்திருப்பதை லங்கூர் குரங்குகள் காட்டிக்கொடுத்தன.

காட்டுக்குள் நடந்து சென்று ஒரு புலியையோ அல்லது சிறுத்தையையோ வேட்டையாடச் சென்றாலோ அல்லது அவற்றைப் புகைப்படம் எடுக்கச் சென்றாலோ, முதலில் அவை எங்கு இருக்கிறது என்று சரியாகத் தெரிந்து கொள்வது அவசியம். காயம் பட்ட மிருகமாக இருந்தால், அதனை வேதனையிலிருந்து போக்குவிக்க அதைச் சுட்டு வீழ்த்தும் அவசியம் ஏற்படும். அதேபோல் மிருகங்களைப் படம் பிடிக்க வேண்டுமென்றாலும் அவை இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள, பறவைகள் மற்றும் மற்ற விலங்குகளின் துணை வேண்டும். வனத்தில் பொறுமை மற்றும் பறவைகள் / விலங்குகள் பற்றிய அறிவு இருந்தால் வேட்டையாடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் மிருகங்களைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும். அவ்வகையில் மனிதர்களுக்கு அதிகம் உதவி செய்யக்கூடிய பறவைகள் எது என்றால் காட்டுக் கோழிகள், மயில்கள் மற்றும் சிலம்பன்கள். அதுவே விலங்குகள் என்றால் கரட்டாடு மற்றும் லங்கூர் குரங்குகள்.

நான் புகைப்படம் எடுக்க நினைத்த புலி காயப்படாத புலி. எனவே என்னால் சுலபமாக அந்த அடர்ந்த புதருக்குள் சென்று புலியைத் தேடியிருக்க முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யும் பட்சத்தில், புலிக்குத் தொந்தரவு ஏற்பட்டு அது அவ்விடத்தைவிட்டுப் போயிருக்கும். ஆனால் லங்கூர் குரங்குகள் கூட்டத்தின் செயல்பாடுகளை வைத்து, புலியைத் தொந்தரவு செய்யாமலேயே புலியின் இருப்பிடத்தையும், நகர்வையும் என்னால் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நான் மிகவும் கவனமாக அந்த உயரமான மரத்தை நோக்கி ஓசை எழுப்பாமல் நடந்து சென்றேன். மரத்தை அடைந்தவுடன் மரத்தில் படர்ந்திருந்த கொடிகளில் என் கால்கள் படாதவாறு, மரத்தின் மீது ஏறினேன். கொடியில் உள்ள இலைகள் அசைந்தால் அது புலிக்குத் தெரிந்துவிடும். மரத்தின் மீது ஏறி, உச்சியில் இரண்டாகப் பிரிந்த கிளைகளின் மத்தியில் வசதியாக அமர்ந்தேன். நான் அமர்ந்திருப்பது புலிக்குத் தெரியாதபடி இலைகள் மறைத்திருந்தன. மறைத்திருந்த இலைகளின் நடுவே ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படம் எடுப்பதற்காக என்னுடைய 16 mm சினி கேமராவைக் கையில் எடுத்துக் கொண்டேன். இவை அனைத்தையும் ஒரு சின்னச் சத்தமும் இல்லாமல் செய்தேன். அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய பார்வை எனக்கு முன்னாலிருந்த திறந்த வெளியையும், அதற்குப் பின்னாலிருந்த வனத்தையும் கவனித்தபடி இருந்தது.

இப்படியே ஒரு மணி நேரம் கடந்தது. அப்பொழுது இரண்டு வெண்கலப் புறாக்கள் (bronzewing doves), காட்டிலிருந்து கிளம்பி புதர்களுக்கு மேலே பறந்தன. பின்னர், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து எனக்கு அருகாமையில் பிப்பிட் (pipit) பறவைகள் தரையிலிருந்து எழுந்து நேர்த்தியாகப் பறந்து போய், இலையே இல்லாத ஒரு மரத்தின் கிளையை இலகுவாகத் தாண்டி மரத்திற்கு மேலே பறந்து அப்படியே சென்று விட்டன. இந்த இரண்டு பறவையினங்களும் எச்சரிக்கை சத்தம் எழுப்பாதவை. ஆனால் அவற்றின் செயல்பாட்டை வைத்து, அவை புலியின் நடமாட்டத்தால் தொந்தரவிற்கு உள்ளாகி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தது. சில நிமிடங்கள் கழித்து, நான் என் கண்களை இடது புறத்திலிருந்து வலது புறமாக எனக்கு முன்னாலிருந்த என்னால் பார்க்க முடிந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் துருவிப் பார்த்தேன். அப்பொழுது என் கண்களில் எனக்கு முன்னர் அந்தத் திறந்த வெளியின் விளிம்பிலிருந்து சுமார் 10 அடி தொலைவில், வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய பொருள் தென்பட்டது. சுமார் ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அளவில் அப்பொருள் தென்பட்டது. நகர்ந்து கொண்டிருந்த அந்த வெள்ளைப் பொருளையே சிறிது நேரம் நான் உன்னிப்பாகக் கவனித்து வந்தேன். பிறகு புதரில், வலது பக்கமாக என் பார்வைக்கு எட்டிய தூரம் வரை துழாவியபடிப் பார்த்தேன். பிறகு அந்த வெள்ளைப் பொருளைப் பார்த்தேன்.

எனக்கு அப்போது புரிந்தது. நான் சற்று நேரத்திற்கு முன் பார்த்த அந்த வெள்ளைப் பொருள் இப்பொழுது அந்த இடத்தில் இல்லை. அந்த வெள்ளைப் பொருள் வேறொன்றும் இல்லை, அது புலியின் முகத்தில் இருக்கும் வெள்ளைக் கோடுதான். நான் மரத்தை நோக்கி வருவதை, மரத்தில் ஏறுவதைப் புலி கேட்டிருக்கிறது. நான் என்னதான் ரப்பர் காலணிகள் போட்டு எந்தச் சத்தத்தையும் எழுப்பாமல் நடந்திருந்தாலும், புலிக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. எனவே தன் இரையை நோக்கிச் செல்வதற்கு முன், அது மெதுவாக நடந்து எங்கிருந்து சந்தேகப்படும்படியாக சத்தம் வந்ததோ அதனருகே சுமார் 70 கஜ தூரத்தில் இலைகளின் மீது நடந்து வந்திருக்கிறது. பின்னர் அங்கு ஓர் அரை மணி நேரம் எந்த அசைவையும் ஏற்படுத்தாமல் அமர்ந்துவிட்டு, எழுந்து நின்று, உடலை நீட்டியவாறே கொட்டாவி விட்டபடியே, பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகே புலியானது திறந்த வெளியில் நடக்க ஆரம்பித்தது. திறந்தவெளிக்கு வந்த பிறகு, புலி முதலில் தன் தலையை வலது பக்கமாகத் திருப்பிப் பார்த்தது, பின்னர் இடது பக்கமாகப் பார்த்தபடியே திறந்தவெளிப் பகுதியை நான் அமர்ந்திருந்த மரத்திற்குக் கீழாகக் கடந்து சென்று அதன் இரையை அடைந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *