Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

ஜிம் கார்பெட்

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட பிறகு எதிரில் காட்சிகள் சரிவரத் தெரிய வேண்டும் என்பதற்காக மரங்களின் கிளைகள் வெட்டப்படும். அந்த இடத்தில் தரையில் குப்பைகள் கிடக்கும். மேடை அமைக்கும் பொழுது, அதை அமைப்பவர்கள் அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் அந்த இடத்தில் சத்தம் ஏற்படும். இம்மாதிரி அமைக்கப்பட்ட மேடைகளில் இருந்து வேட்டையாடுபவர்கள், நூற்றுக் கணக்கான முறை அங்குக் காத்திருந்தாலும் ஒருமுறை கூட ஒரு புலியையோ அல்லது ஒரு சிறுத்தையையோ பார்த்திருக்க மாட்டார்கள். மேற்சொன்ன விஷயங்கள்தான் அதற்குக் காரணம். ஆனால் வேட்டைக்காரர்களோ தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, அதனால்தான் ஒரு புலியையும், சிறுத்தையையும் பார்க்கமுடியவில்லை என்பார்கள்.

ஆனால் ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை விவகாரத்தில், கார்பெட்டும், இபாட்சனும் சிறுத்தையை வீழ்த்த என்ன செய்யவேண்டுமோ அதை சரியாகத்தான் செய்தார்கள். எதைச் செய்யக் கூடாதோ அதைத் தவறியும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவர்களால் ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த முடியவில்லை. அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில், கார்பெட்டுக்கு சரியான நேரத்தில் டார்ச் லைட் கிடைக்காமல் போனது; வேட்டையாடும் சமயத்தில் இபாட்சனுக்கு இருகால்களிலும் சதைப் பிடிப்பு ஏற்பட்டது; பிறகு, ஆட்கொல்லி சிறுத்தை சயனைடு விஷத்தை அதிக அளவில் உட்கொண்டதால் சயனைடு விஷம் சிறுத்தையைப் பாதிக்கவில்லை. ருத்ரபிராயக்கிலிருந்து ஜின் பொறியை எடுத்து வரும் பொழுது வேலையாட்கள் அதனைக் கீழே தவறவிட்டதால், ஜின் பொறியின் பற்களில் ஒன்று உடைந்து போனது. இவ்வாறு ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாட கார்பெட் முயன்ற போதெல்லாம் துரதிர்ஷ்டங்கள் அவரைத் தொடர்ந்தன.

மூதாட்டியின் உடலைத் தூண்டிலாக வைத்து ஆட்கொல்லி சிறுத்தையை வீழ்த்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த பிறகு, இபாட்சன் பெளரிக்குச் சென்றுவிட்டார். ஆட்கொல்லி சிறுத்தையைச் சுட்டு வீழ்த்த முடியும் என்று கார்பெட் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ருத்ரபிரயாகிற்கு வந்த முதல் நாளன்று, ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டு வீழ்த்த எவ்வளவு வாய்ப்பு இருந்ததாகக் கருதினாரோ தற்பொழுது அதை விட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கார்பெட் நினைத்தார். ஆட்கொல்லி சிறுத்தையின் திறன்கள் பற்றி அவர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.

ஆனால் கார்பெட்டை ஒரு விஷயம் மட்டும் விசனப்படுத்தியது. அதற்கு எப்படி வழிவகை செய்வது என்று யோசித்தார். அது வேறு ஒன்றும் இல்லை, ஆட்கொல்லி சிறுத்தையை அலக்நந்தா நதியின் ஒரு கரையிலேயே முடக்கி வைத்திருப்பது தான். ஆட்கொல்லி சிறுத்தையை நதியின் இடது கரையிலேயே வைத்திருப்பது அவருக்குச் சரியாகப் படவில்லை. இடது கரையில் உள்ள மக்களே ஆட்கொல்லி சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டுமா என்ன? வலது கரையில் இருக்கும் மக்கள் மட்டும் ஆட்கொல்லி சிறுத்தையின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டிருப்பார்கள். இரண்டு நாட்களுக்குள், நதியின் இடதுகரையில், ஒரு சிறுவன் உட்பட மூன்று நபர்கள் தங்களது உயிர்களைச் சிறுத்தையிடம் இழந்திருந்தார்கள். இடது கரையில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்தக் கதி ஏற்படலாம். இருப்பினும், நதியின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்களின் கதவுகளையும் திறந்து ஆட்கொல்லி சிறுத்தையை நதியின் வடகரை பகுதிக்குச் செல்ல அனுமதித்தால் கார்பெட்டுக்கு பிரச்னைகள் ஏராளம் ஆகிவிடும். தற்பொழுதே பிரச்னைகள் அதிகமாக இருக்கின்றன, இந்த சமயத்தில் பாலத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால் ஒட்டு மொத்தக் கார்வால் பகுதிக்கும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று கார்பெட் கருதினார். இடது கரையில் உள்ள மக்களின் உயிர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே போல் வலது கரையில் உள்ள மக்களின் உயிர்களும் முக்கியமானது. எனவே, கார்பெட் வேறு வழியில்லாமல் இரண்டு பாலங்களும் மூடியே இருக்கட்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார். இவ்விவகாரத்தில் இடது கரையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு கார்பெட் மனம் உவந்த நன்றிகளைத் தெரிவித்தார். பாலங்கள் மூடியிருக்கும் காலம் வரை ஆட்கொல்லி சிறுத்தையின் நடவடிக்கை இடது கரையில் உள்ள பகுதிகளில் மட்டுமே இருக்கும். பல மாதங்களுக்கு ஆட்கொல்லி சிறுத்தையின் நடவடிக்கை இடது கரை பக்கத்தில் முடக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் இருந்த மக்கள் ஒரு முறை கூட பாலங்களின் கதவுகளைத் திறந்து விடும்படி கேட்கவில்லை. அவர்களாகவே பாலத்தில் போடப்பட்ட தடுப்புகளை அகற்றவும் முனையவில்லை.

பாலங்களின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், நதியின் இடது கரையில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஆட்கொல்லி சிறுத்தையால் ஆபத்து உள்ளது என்பதை தன் ஆட்கள் மூலம் எச்சரிக்கை செய்யதார் கார்பெட். நேரடியாக, எவ்வளவு தூரம் தன்னால் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்து பல கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களை எச்சரிக்கை செய்தார். கார்பெட்டை சாலைகளிலும், கிராமங்களிலும் சந்தித்த நபர்களில் ஒருவர் கூட அவரிடம் பாலங்கள் அடைக்கப்பட்டு தங்கள் பகுதியிலேயே ஆட்கொல்லி சிறுத்தை முடக்கப்பட்டதாக வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம், அப்பகுதி மக்கள் அவருக்கு நல்ல உபசரிப்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்கினர். அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் அவரைப் பெரிதும் ஊக்கப்படுத்தினர். அவர் சந்தித்த மக்களில் யார் வேண்டுமானாலும் ஆட்கொல்லி சிறுத்தையின் அடுத்த இலக்காக இருக்கலாம். இருப்பினும், ஆட்கொல்லி சிறுத்தை இன்று சாகவில்லை என்றாலென்ன! நாளையோ அல்லது நாளை மறுநாளோ செத்துவிடப்போகிறது என்று கார்பெட்டை அவர்கள் உற்சாகப்படுத்தினர்.

ஹரித்துவாரில் உப்பு மற்றும் வெல்லம் கொள்முதல் செய்யச் சென்ற வியாபாரி முந்தைய நாள் இரவுதான் ருத்ரபிரயாகிற்குத் திரும்பி வந்திருந்தார். அங்கிருந்த ஆட்டுப் பட்டியில் தன் ஆடுகளை அடைத்து விட்டு அவ்விடத்தில் தங்கியிருந்தார். ஹரித்துவாரிலிருந்து கொண்டு வந்திருந்த உப்பு மற்றும் வெல்லத்தைத் தன் ஆடுகளின் முதுகில் சரக்கு மூட்டைகளாகக் கட்டிச் சென்று, பத்ரிநாத்திற்கு அப்பாலுள்ள கிராமங்களில் வியாபாரம் செய்வது அவரது வாடிக்கை. சென்ற இரவு, அவருடைய ஆடுகள் பெரும் சரக்கு சுமைகளுடன் வெகுதூரம் நடந்து வந்திருந்தன. அவர் ஆட்டுப் பட்டியை வந்தடைவதற்குள் இரவாகிவிட்டபடியால், அவரால் ஆட்டுப் பட்டியின் முள்வேலியில் இருந்த இடைவெளியைச் சரிசெய்ய முடியவில்லை. அதனால் ஆட்டுப் பட்டியின் முள்வேலிகளில் பலவீனமானப் பகுதிகள் இருந்தன. அந்தப் பலவீனமானப் பகுதிகளைப் பயன்படுத்தி, வியாபாரியின் பல ஆடுகள் வேலியைத் தாண்டி வெளியே சென்று விட்டன. அப்படிச் சென்ற ஆடுகளில் ஒன்றை விடியற்காலையில், சாலை ஓரமாக ஆட்கொல்லி சிறுத்தை அடித்துக் கொன்றது. ஆட்கொல்லி சிறுத்தையின் இச்செயலைப் பார்த்த வியாபாரியின் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. அந்த சத்தத்தைக் கேட்டு கண் விழித்த வியாபாரி, சூரிய வெளிச்சம் வந்த பிறகு, பட்டிக்கு வெளியே சென்று சாலையோரத்தைப் பார்த்தார். அங்கு அவர் வளர்த்ததிலேயே சிறந்த, பெரிய சாம்பல் நிற ஆட்டை ஆட்கொல்லி சிறுத்தை அடித்துக் கொன்றிருப்பதைக் கண்ணுற்றார்.

ஆட்கொல்லி சிறுத்தையின் இந்த நடத்தை அதன் மூர்க்கத்தை வெளிப்படுத்தியது. ஒரு மிருகம் ஆட்கொல்லி மிருகமாக மாறி, அது மக்கள் மத்தியில் பல ஆண்டுகள் வாழ்ந்தால் அதனுடைய குணாதிசயம் எந்த அளவிற்கு மாறியிருக்கும் என்பதை இந்த நிகழ்வு கார்பெட்டுக்குக் காட்டியது.

சென்ற தினம், ஆட்கொல்லி சிறுத்தை ஜின் பொறியில் மாட்டி அந்தப் பொறியைப் பத்து கஜ தூரத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது; அதன் விளைவாக அது கோபத்துடன் உறுமியிருக்கிறது; ஜின் பொறியில் மாட்டிய ஆட்கொல்லி சிறுத்தை பெரும் அதிர்ச்சியும், பயமும் அடைந்திருக்கிறது; பின்னர் பொறியிலிருந்து விடுபட்ட ஆட்கொல்லி சிறுத்தை மனித நடமாட்டமே இல்லாத ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றிருக்கிறது; பிறகு அதற்குப் பசியெடுக்கவே, மூதாட்டியின் சடலம் இருந்த இடத்திற்கு மறுபடியும் சென்று, அங்கு அருகாமையிலேயே பதுங்கி இருந்திருக்கிறது; ஆட்கொல்லி சிறுத்தையின் உறுமலைக் கேட்ட கார்பெட்டும், இபாட்சனும் மூதாட்டியின் சடலம் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர்; அங்கு ஜின் பொறியிலிருந்து ஆட்கொல்லி சிறுத்தை தப்பிவிட்டதை உணர்ந்த கார்பெட்டும், இபாட்சனும் வந்தவழியே திரும்பிச் சென்று மாமரத்தின் மீது இருந்த மேடையின் மீது ஏறி, பின்னர் தூங்கிவிட்டனர். இருவர் செல்வதையும் பார்த்துக் கொண்டிருந்த ஆட்கொல்லி சிறுத்தை அவர்கள் மேடையில் ஏறித் தூங்கிய பிறகு மேடை அமைக்கப்பட்டிருந்த மாமரத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், இபாட்சன் முன்னெச்சரிக்கையாக, மேடை போடப்பட்டிருந்த மாமரத்தைச் சுற்றி கம்பி வலை அமைத்திருந்தார். அதனால் அன்று அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.

மரத்தின் மீது மேடை அமைத்து சிறுத்தைகளை வேட்டையாடக் காத்திருந்தவர்களைச் சிறுத்தைகள் வேட்டையாடிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ருத்ரபிரயாக் சிறுத்தை வாழ்ந்த அதே காலத்தில் இந்தியாவின் மத்திய மாகாணத்தில் ஓர் ஆட்கொல்லி சிறுத்தை இருந்தது. அதைச் சுட்டு வீழ்த்த மேடையில் காத்திருந்த நான்கு வேட்டைக்காரர்களை அச்சிறுத்தை வேட்டையாடிக் கொன்று தின்றது. கடைசியாகக் கிடைத்தத் தகவலின் படி, அச்சிறுத்தை சுமார் 40 நபர்களைக் கொன்றிருக்கிறது. மேலும், அச்சிறுத்தை தன்னை வீழ்த்த வந்த வேட்டைக்காரர்களையும் வீழ்த்தி, மனித இரையையும், ஏனைய பிராணிகளையும் மாறி மாறிப் புசித்து, எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

கார்பெட்டும், இபாட்சனும் இருந்த மாமரத்திற்கு வந்த ஆட்கொல்லி சிறுத்தை, பின்னர் அங்கிருந்து கிராமத்திற்குச் செல்லும் ஒரு நடைபாதை வழியாகச் சென்று, ஒற்றையடிப் பாதையைச் சந்திக்கும் சந்திப்பில் (இங்கு தான் மூதாட்டியின் உடலிலிருந்து வெளியேறிய இரத்தம் குட்டை போல் இருந்தது) வலது புறமாகத் திரும்பி ஒரு மைல் தூரம் சென்று, அங்கிருந்து யாத்திரிகர்கள் சாலை வழியே நான்கு மைல்கள் கடந்து, மக்கள் அதிகமாக வாழும் இடத்தை அடைந்திருக்கிறது. அவ்விடம்தான், ஆட்கொல்லி சிறுத்தை செயல்படும் இடம். பின்னர், அங்கிருந்து ருத்ரபிரயாகிற்கு வந்த ஆட்கொல்லி சிறுத்தை, பஜாரின் முக்கியக் கடைத் தெரு வழியாக ஓர் அரை மைல் தூரம் கடந்து வந்து ஆய்வு பங்களாவை அடைந்திருக்கிறது. அங்கு வாயிற்கதவருகே ஆட்கொல்லி சிறுத்தை தன் நகங்களைக் கொண்டு தரையைப் பிராண்டியிருக்கிறது. சென்ற நாள் இரவு மழை பெய்திருந்ததால், மண் சாலை ஈரமாகி மென்மையாக இருந்தது. ஆட்கொல்லி சிறுத்தையின் கால் சுவடுகள் அந்த மென்மையான மண் சாலையில் பதிந்திருந்தன. மண் தரையில் பதிந்திருந்த ஆட்கொல்லி சிறுத்தையின் கால் சுவடுகளைப் பார்த்த கார்பெட்டுக்கு ஒரு விஷயம் புலனாகியது. ஜின் பொறியில் மாட்டிய ஆட்கொல்லி சிறுத்தையின் கால்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற விஷயம் தான் அது.

காலை உணவை முடித்துக் கொண்டு பங்களாவின் வாயிற் கதவருகே காணப்பட்ட சிறுத்தையின் கால் சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றார் கார்பெட். கால் சுவடுகள், வியாபாரி இருந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றன. அங்கு ஆட்டுப் பட்டியிலிருந்து நூறு கஜ தூரத்தில், ஒரு சாலையின் வளைவில் ஆட்கொல்லி சிறுத்தை வியாபாரியின் ஆடுகளைப் பார்த்திருக்கிறது. சாலையைக் கடந்த ஆட்கொல்லி சிறுத்தை மலை அடிவாரத்தில் பதுங்கியபடி வந்து, சாலையின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பெரிய சாம்பல் நிற ஆட்டை அடித்துக் கொன்றது. கொன்ற பிறகு, இறந்த ஆட்டின் ரத்தத்தைக் கூட சிறுத்தை அருந்தவில்லை. ஆட்டைக் கொன்றுவிட்டு சாலைக்குத் திரும்பியது ஆட்கொல்லி சிறுத்தை!

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *