Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #29

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

முள்வேலியிலான ஆட்டுப் பட்டிக்குள் வியாபாரியின் இறந்த ஆடு கிடத்தப்பட்டிருந்தது. இறந்த ஆட்டையும், வியாபாரப் பொருள்களையும், வியாபாரியின் இரண்டு மேய்ப்பு நாய்கள் பாதுகாத்து வந்தன. மேய்ப்பு நாய்கள் தடிமனான சங்கிலிகளால் கட்டிப் போடப்பட்டிருந்தன. இம்மாதிரி நாய்கள் கறுப்பான நிறத்தில், பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருக்கும். இமாலய மலைப் பகுதிகளில் இம்மாதிரி நாய்களை வியாபாரிகள் பயன்படுத்துவர். இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ளதுபோல அங்கீகரிக்கப்பட்ட மோப்ப நாய்கள் இல்லை இவை. ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும்போது இந்த நாய்கள் ஆடுகளுக்கு அருகாமையில் செல்லும். இரவில் ஆடுகளைப் பட்டியில் அடைத்தவுடன் அவ்வாடுகளை விலங்குகளிடமிருந்து காப்பது இந்த நாய்களின் கடமை. நாய்கள் தங்கள் கடமையைக் கச்சிதமாகச் செய்யும். ஆடுகளைத் தாக்க வந்த ஒரு சிறுத்தையை இந்த மேய்ப்பு நாய்கள் கொன்ற சம்பவமும் உண்டு. பகல் பொழுதில் வியாபாரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பிறகு, பட்டியை வெளியாட்களிடமிருந்து காவல் காப்பதும் இந்த நாய்களின் கடமை. வியாபாரி இல்லாத சமயத்தில் வெளியாள் ஒருவன் பட்டியில் புகுந்து சரக்கைத் திருட முயன்றபோது மேய்ப்பு நாய் ஒன்று அவனைக் கடித்துக் கொன்றதாகப் பதிவுகளில் குறிப்புகள் இருக்கின்றன.

ஆட்கொல்லி சிறுத்தை வியாபாரியின் ஆட்டைக் கொன்றுவிட்டு சாலை வழியாகச் சென்ற இடத்திலிருந்து அதன் கால் சுவடுகளை வைத்துப் பின்தொடர்ந்தார் கார்பெட். ஆட்கொல்லி சிறுத்தை கோலப்ராய் வரை சென்று, பின்னர் ஒரு மைல் தொலைவில் உள்ள சாலையில் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றது தெரிய வந்தது. மாமரத்திலிருந்து பள்ளத்தாக்கு வரை ஆட்கொல்லி சிறுத்தை கடந்த தூரம் சுமார் எட்டு மைல். தன் இரை இருந்த இடத்திலிருந்து இலக்கில்லாமல் எந்த ஒரு சிறுத்தையும் இவ்வளவு தூரத்தைக் கடக்காது. மேலும், பசியேயில்லாமல் எந்த ஒரு சிறுத்தையும் ஓர் ஆட்டை அடித்துக் கொல்லாது.

அந்தப் பெரிய பள்ளத்தாக்கிலிருந்து சுமார் கால் மைல் தூரத்தில், வியாபாரி ஒரு பாறையில் அமர்ந்தவாறு கம்பளியை நூல் ஏற்றிக் கொண்டிருந்தார், அதே சமயத்தில் அவர் தன் ஆடுகள் மலையில் மேய்வதையும் கவனித்துக் கொண்டிருந்தார். கார்பெட் அந்தச் சமயத்தில் அவ்விடத்திற்கு வந்தார். கார்பெட்டைப் பார்த்ததும், வியாபாரி கம்பளியையும், நூல் பாவையையும் தன்னுடைய போர்வையிலிருந்த விசாலமான பையில் வைத்து விட்டு கார்பெட் கொடுத்த சிகரெட்டைப் பெற்றுக் கொண்டார். வியாபாரி, கார்பெட்டைப் பார்த்து தன்னுடைய முகாமின் வழியாக வந்தீர்களா என்று கேட்டார். அதற்கு ஆம் என்று சொன்ன கார்பெட், அங்கு அந்தத் தீய சக்தி (ஆட்கொல்லி சிறுத்தை) செய்த காரியத்தையும் பார்த்ததாகத் தெரிவித்தார்.

கார்பெட், வியாபாரியிடம் ‘உங்களுடைய மேய்ப்பு நாய்களுக்குத் தைரியம் போதவில்லை; எனவே அவற்றை அடுத்த முறை ஹரித்துவாருக்குச் செல்லும்போது ஒட்டகக்காரர்களிடம் விற்று விடுங்கள்’ என்று அறிவுறுத்தினார். கார்பெட் சொன்னதைக் கேட்ட வியாபாரி, அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்தார்.

பின்னர் வியாபாரி கார்பெட்டிடம், ‘சாகிப், அனுபவசாலிகளான நம்மைப் போன்றவர்களே சில சந்தர்ப்பங்களில் தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் அதற்காகத் துன்பப்படுகிறோம். சென்ற இரவு கூட நான் என்னுடைய சிறந்த ஆட்டை இழந்துவிட்டு வருத்தப்படுகிறேன். என்னுடைய மேய்ப்பு நாய்களுக்குப் புலியை ஒத்த தைரியம் இருக்கிறது. என்னுடைய நாய்கள்தான் கார்வால் பகுதியிலேயே சிறந்த நாய்கள். அப்படிப்பட்ட நாய்களை ஒட்டகக்காரனிடம் விற்று விடுமாறு சொல்வது அவற்றை இழிவுபடுத்துவதாகும். நான் முகாமிட்டிருந்த இடம் சாலையோரமாக இருந்ததை தாங்கள் பார்த்திருப்பீர்கள். இரவில் சாலை வழியாக வருவோர்களுக்கு என் நாய்கள் மூலம் காயம் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினால், அவற்றை அப்படியே விடாமல் எப்பொழுதும் போல் முள்வேலிக்கு வெளியே சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தேன். அதன் விளைவைத்தான் நீங்கள் பார்த்தீர்கள். அதற்காக என் நாய்களைக் குறை சொல்லாதீர்கள் சாகிப். ஆட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக என் நாய்கள் கடுமையாகப் போராடியிருக்கின்றன. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த தங்களது கழுத்துப் பட்டைகளைப் பிடுங்கிக் கொண்டு செல்ல அவை முயன்றிருக்கின்றன. அதனால், நாய்களின் கழுத்துப் பகுதி ரணமாகி விட்டது. அந்தப் புண்கள் ஆறுவதற்கே வெகு நாட்களாகும்’ என்றார்.

இப்படியாக இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, கங்கை நதிக்கு அப்பால் மலை உச்சியில் ஒரு விலங்கு தோன்றியது. கார்பெட், அவ்விலங்கின் நிறத்தையும், உருவ அளவையும் பார்த்து அது ஓர் இமாலயக் கரடி என்ற முடிவுக்கு வந்தார். அது மலையை விட்டு இறங்கி நதியை நோக்கி வரும்போதுதான் தெரிந்தது அது ஒரு பெரிய காட்டுப் பன்றி என்று. அந்தக் காட்டுப் பன்றியை நாட்டு நாய்கள் துரத்தி வந்தன. நாட்டு நாய்களைச் சலசலப்புடன் சில சிறுவர்களும், மனிதர்களும் பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களது கைகளில் வெவ்வேறு அளவிலான கம்புகளை வைத்திருந்தனர். இவர்கள் அனைவரது பின்னும் கையில் துப்பாக்கி ஏந்தியவாறே ஒருவன் வந்தான். அவன் மலையிலிருந்து இறங்கி வரும் பொழுது அவனுடைய muzzle-loading துப்பாக்கியிலிருந்து புகை வெளியேறியது, பின்னர் அதனைத் தொடர்ந்து மந்தமான வெடிச் சத்தமும் கேட்டது. அத்துப்பாக்கிச் சுடும் எல்லையில் சிறுவர்களும், மனிதர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட முன்னேறிச் செல்வதில் பின்வாங்கவில்லை. துப்பாக்கியால் சுட்டவன் தன் குறியைத் தவறவிட்டிருக்கிறான் என்று தெரியவந்தது.

காட்டுப் பன்றி ஓடி வந்த பாதை புற்கள் நிறைந்த ஒரு சறுக்கலான மலைப்பகுதி. அப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாகப் புதர்கள் இருந்தன. சறுக்கலான பகுதியை அடுத்து, பாறைகள் குறுக்கும் நெடுக்குமாக உடைபட்டுப் பல குறுகிய இடைவெளிகளுடன் அமையப்பெற்ற ஓர் இடம் இருந்தது. அந்தப் பகுதியை அடுத்து, அடர்த்தியான உடைந்த மரக் கிளைகள் தொடர்ச்சியாக இருந்தன. அடர்த்தியாக இருந்த அக்கிளைகள் கங்கை நதி வரை நீண்டிருந்தன. உடைபட்ட பாறைகள் உள்ள தரையில் காட்டுப் பன்றியால் வேகமாக ஓட முடியவில்லை. காட்டுப் பன்றியும், பின்தொடர்ந்து வந்த நாய்களும் அடர்த்தியாக இருந்த மரக் கிளைகளுக்குள் ஒன்றாகச் சென்று மறைந்தன. மறு நிமிடமே, அனைத்து நாய்களும் அந்த அடர்த்தியான மரக் கிளைகளிலிருந்து வெளியே வந்தன. ஆனால் காட்டுப் பன்றி வெளியே வரவில்லை. அச்சமயத்தில் கையில் கம்புகளுடன் அவ்விடத்திற்கு வந்த சிறுவர்களும், மனிதர்களும், நாய்களை அந்த அடர்த்தியான மரக்கிளைகளுக்குள் செல்ல வற்புறுத்தினர். உள்ளே சென்றால், காட்டுப் பன்றி தன்னுடைய தந்தங்களால் என்ன செய்யும் என்பதை இப்பொழுதுதான் நாய்கள் பார்த்திருந்தன. அதனால் அவை உள்ளே போக மறுத்து விட்டன. துப்பாக்கி ஏந்தியிருந்தவன் அப்போது அந்த இடத்திற்கு வந்தான். அவனை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

கங்கை நதிக்கரையின் உயரமான இடத்திலிருந்தபடியே கார்பெட்டும், வியாபாரியும் மறுகரையில் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேற்சொன்ன விவகாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரே, நதிக்கு அப்பால் மலையில் நடந்து கொண்டிருந்தது. நதியில் ஓடிய தண்ணீர் எழுப்பிய சலசலப்பின் காரணமாக, மறு கரையில் நடப்பவற்றை அவர்களால் பார்க்க மட்டுமே முடிந்தது. மறுகரையில், muzzle-loading துப்பாக்கியின் மந்தமான வெடிச் சத்தத்தைத் தவிர அங்கிருப்பவர்கள் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று கேட்க முடியவில்லை.

நாய்களைப் போலவே துப்பாக்கி வைத்திருந்தவனும் பின் வாங்கினான். அவன் அந்த அடர்த்தியான மரக் கிளைகளுக்குள் போக மறுத்துவிட்டான். அவன் மற்றவர்களிடமிருந்து விலகிச் சென்று ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டான். இதற்கு மேல் நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை, இனிமேல் உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது போல் இருந்தது அவனது செய்கை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், சிறுவர்களும், மற்றவர்களும் அந்த அடர்த்தியான மரக் கிளைகளின் மீது கற்களை வீசினர்.

கற்கள் வீசப்பட்டதும், காட்டுப் பன்றி அடர்த்தியான மரக் கிளைகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டது. அந்த இடம் மணல் பகுதியாக இருந்தது. வெளியே வந்து வேகமாகச் சில அடிகள் எடுத்து வைத்த பன்றி, சில நொடிகளுக்கு அப்படியே நின்றது. பின்னர், மேலும் சில அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றது. பின்னர், சிறிது தூரம் ஓடி நதிக்குள் குதித்தது. காட்டுப் பன்றிகள் நன்றாக நீச்சல் அடிப்பவை. பலர் நினைப்பது போன்று, அவை நீச்சலடிக்கும் போது தங்களது குளம்புகளினால் தங்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளாது.

கங்கை நதியில் தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. காட்டுப் பன்றியைப் போன்ற தைரியமான மிருகத்தைப் பார்க்க முடியாது. நதியில் இறங்கிய காட்டுப் பன்றியை, ஒரு கால் மைல் தூரத்திற்கு நதி அடித்துச் சென்றுவிட்டது. ஆனால் காட்டுப் பன்றி எதிர்நீச்சல் போட்டு நதியைக் கடந்து, கார்பெட் இருந்த மறுகரையை அடைந்துவிட்டது.

‘உங்கள் துப்பாக்கி சுடும் தூரத்தில் அந்தப் பன்றி இருந்ததா, சாகிப்?’ என்று வியாபாரி கார்பெட்டை பார்த்துக் கேட்டார். ‘ஆமாம், காட்டுப் பன்றி என் துப்பாக்கி சுடும் தூரத்தில்தான் இருந்தது, ஆனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ஒரு பன்றியைச் சுடுவதற்காக நான் கார்வாலுக்குத் துப்பாக்கியைக் கொண்டு வரவில்லை. தீய சக்தி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்லத்தான் நான் துப்பாக்கியை எடுத்து வந்திருக்கிறேன்’ என்றார் கார்பெட்.

‘நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது இங்கிருந்து கிளம்பப் போகிறீர்கள். நாம் இனிமேல் சந்திக்காமல் போகலாம். என்னுடைய ஆசீர்வாதங்களை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கூற்றுப் படி அது ஒரு சிறுத்தையா? அல்லது என்னுடைய கூற்றுப் படி அது ஒரு தீய சக்தியா? என்பதைக் காலம் நிரூபணம் செய்யும்’ என்று தெரிவித்தார் வியாபாரி.

(கார்பெட்டால் அந்த வியாபாரியை பிறகு பார்க்க முடியவில்லை. அந்த வியாபாரி ஒரு வயதான மனிதர். அவருடைய சிறந்த ஆடுகளைச் சிறுத்தைகள் அடித்துக் கொல்லாதவாறு, அவருடைய மேய்ப்பு நாய்களின் தைரியம் கேள்விக்குள்ளாகாதபடி, அவர் சந்தோஷமாக இருப்பார் என்று கார்பெட் நினைத்துக் கொண்டார்.)

மறுநாள் இபாட்சன் பெளரிக்குச் சென்றார். அதற்கு அடுத்த நாள் கார்பெட், ருத்ரபிரயாகிற்கு கிழக்கில் உள்ள மலைக் கிராமங்களைப் பார்வையிட்டு வந்தார். அப்பொழுது ஒரு கிராமத்திலிருந்து வரும் பாதையில், ஆட்கொல்லி சிறுத்தையின் கால் சுவடுகள் அவரது கண்களில் தென்பட்டன. சென்ற நாள் இரவு, ஆட்கொல்லி சிறுத்தை ஒரு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்திருக்கிறது. அவ்வீட்டில் ஒரு குழந்தை கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டிருந்தது. கார்பெட் சிறுத்தையின் கால்சுவடுகளைத் தொடர்ந்து சென்றார். சிறுத்தையின் கால்சுவடுகள் அவரை இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஒரு மலை மேட்டிற்கு அழைத்துச் சென்றது. அந்த இடத்தில்தான் சில நாட்களுக்கு முன்னர் இபாட்சனும், கார்பெட்டும் ஓர் ஆட்டைத் தூண்டிலாக வைத்து ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடக் காத்திருந்தனர். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தையோ அந்த ஆட்டைக் கொன்று போட்டுவிட்டுச் சென்றது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *