Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

ஜிம் கார்பெட்

விடியற்காலைப் பொழுது என்பதால் உடைபட்ட பாறைகள் இருக்கும் இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை படுத்துக்கொண்டு குளிர் காயும் என்று கார்பெட் கருதினார். எனவே அவ்விடம் சென்று, அங்குச் செங்குத்தாக நீட்டிக் கொண்டிருந்த ஓர் உயரமான பாறையின் மீது படுத்தபடியே சுற்று வட்டாரத்தைக் கவனித்தவாறு இருந்தார். அது உயரமான இடமாக இருந்ததால், சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்துக் காட்சிகளும் அவருக்கு நன்றாகத் தெரிந்தது. சென்ற தினம் மாலைப் பொழுதில் மழை பெய்திருந்ததால், மூடுபனி இல்லாமல் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன. சுற்று வட்டாரத்தில் சிறுத்தை எங்கு வந்தாலும் அவரால் அச்சிறுத்தையைப் பார்க்க முடியும். உயரமான இடத்தில், தெளிவான காட்சிகளைப் பார்க்கும் சூழலில் கார்பெட் இருந்தார். அவர் இருந்த இடத்திற்குக் கீழே அலக்நந்தா பள்ளத்தாக்கு அழகாகக் காட்சியளித்தது. அலக்நந்தா நதியில் தண்ணீர் ஓடுவதை உயரத்திலிருந்து பார்க்கும்பொழுது மின்னுகிற வெள்ளி நாடா வளைந்து நெளிந்து செல்வது போல் இருந்தது. நதியை அடுத்திருந்த மலை மீதுள்ள கிராமங்களில் இருந்த வீடுகள் புள்ளிகளாகக் காட்சியளித்தன. சில வீடுகள் கூரை வீடுகளாக இருந்தன. சில வீடுகள் ஓட்டு வீடுகளாக அடுக்கடுக்காக இருந்தன. இவை அனைத்தும் தனித்தனி வீடுகளே. கார்வால் பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்கு அத்தியாவசியமானது. மேலும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரமும் ஏழ்மையானது. எனவே இடத்தின் தேவையையும், செலவையும் கருத்தில் கொண்டு, அடுக்கடுக்காகச் சிறிய வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

மலையை அடுத்து கரடு முரடான உயரமான பாறைகளைக் கொண்ட பகுதி இருந்தது. குளிர் காலத்திலும், வசந்த காலத்திலும் உயரமான பாறைகளின் சரிவில் பனித்திரள்கள் விரைவாகச் சரிந்து இறங்கும். இந்த உயரமான பாறைகளுக்கு அடுத்தாற்போல் மேலே உள்ள பகுதியில் எப்பொழுதும் பனி படர்ந்திருக்கும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குப் பின்னால் தெரியும் நீல நிற வானத்தில் ஒரு பகுதியை வெட்டி எடுத்தது போன்று, பனி மலையானது காட்சியளித்தது. இதைப் போன்ற ஓர் அழகான, அமைதியான காட்சியைக் கற்பனையிலும் காண முடியாது. ஆனால் கிழக்கில் உதிக்கும் சூரியன் அப்படியே நகர்ந்து மாலை வேளையில் எதிர்ப்பக்கத்தில் தோன்றினால் கார்பெட் இருக்கும் இடமே பயங்கரமானதாக மாறிவிடும். அப்படி ஒரு பயங்கரத்தைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். அப்படிப்பட்ட பயங்கரம், கடந்த 8 ஆண்டுகளாக கார்வால் பகுதியை ஆட்டிப் படைத்து வருகிறது. அப்பகுதியைத்தான் ஒரு பாறையின் உச்சியிலிருந்து கார்பெட் கவனித்துக் கொண்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த உயரமான பாறையின் மீது படுத்தபடி இருந்தார் கார்பெட். அப்பொழுது இருவர் மலையிலிருந்து இறங்கிக் கடைத்தெருவிற்குச் சென்றார்கள். அவர்களுடைய கிராமம் மலையைத் தாண்டி சுமார் ஒரு மைல் தொலைவில் இருந்தது. முந்தைய தினம், கார்பெட் அந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தார்.

அந்த இருவரும் கார்பெட்டிடம் வந்து, சூரியன் உதிப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாக சிறுத்தை உறுமியபடியே இந்தத் திசையை நோக்கி வந்ததாகத் தெரிவித்தனர். கார்பெட் அவர்களுடன் பேசி, ஓர் ஆட்டைத் தூண்டிலாக வைத்து சிறுத்தையை சுட்டு வீழ்த்த முடியுமா? என்று, அதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தார். அந்தச் சமயத்தில் கார்பெட்டிடம் கைவசம் ஆடு ஏதுமில்லை. அவ்விருவரும் தங்கள் கிராமத்திற்குச் சென்று, சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஓர் ஆட்டுடன் கார்பெட்டைச் சந்திப்பதாகத் தெரிவித்து விட்டுச் சென்றனர்.

அவர்கள் இருவரும் சென்ற பிறகு, அமர்வதற்குச் சரியான இடத்தைத் தேடினார் கார்பெட். அந்தச் சுற்று வட்டார மலைப் பகுதியில் ஒரே ஒரு தேவதாரு மரம் மட்டுமே இருந்தது. அம்மரம் மலை முகட்டில் வளர்ந்திருந்தது. மரத்தின் அருகே பாதை ஒன்று சென்றது. அந்தப் பாதையில்தான் கார்பெட்டைப் பார்க்க வந்த இருவரும் சற்று நேரத்திற்கு முன்னர் திரும்பிச் சென்றனர். மரத்திற்குக் கீழாகச் சென்ற அந்தப் பாதை இரண்டாகப் பிரிந்து மலை வழியாக பிளவுண்டப் பாறைகளைக் கடந்து சென்றது. கார்பெட் அந்தப் பிளவுண்ட பாறைகளின் மீது எங்காவது சிறுத்தை குளிர்காய்ந்து கொண்டிருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருந்தார். தேவதாரு மரத்தின் மீது ஏறிப் பார்த்தால் சுற்று வட்டாரக் காட்சிகள் அனைத்தும் நன்றாகத் தெரியும். ஆனால் சிக்கல் என்னவென்றால், அந்த மரத்தில் ஏறுவது கடினம். மேலும் அம்மரத்தில் சிறுத்தை ஏறி வர வாய்ப்பிருப்பதால், அம்மரம் அவருக்குப் பாதுகாப்பானதாகவும் இல்லை. ஆனால் கார்பெட்டுக்கு வேறு வழியில்லை.

மாலை 4 மணியளவில் இரண்டு கிராமவாசிகளும், கார்பெட் சொன்ன இடத்திற்கு ஆட்டுடன் வந்து சேர்ந்தனர். கார்பெட்டும் 4 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்தார்.

இருவரும் கார்பெட்டிடம், ‘நீங்கள் எங்கே உட்காரப் போகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, கார்பெட் தேவதாரு மரத்தைக் காட்டி, ‘நான் அதில்தான் உட்காரப் போகிறேன்’ என்று பதிலளித்தார். கார்பெட் கூறுவதைக் கேட்டு அவ்விருவரும் சிரித்தனர். ‘உங்களால் அம்மரத்தில் கயிறோ அல்லது ஏணியோ இல்லாமல் ஏற முடியாது. அப்படியே நீங்கள் ஏணியின் உதவி இல்லாமல் மரத்தில் ஏறி, இரவு முழுதும் கண் விழித்திருந்தாலும், அம்மரம் உங்களுக்குப் போதுமான பாதுகாப்பைக் கொடுக்காது’ என்று தெரிவித்தனர். சிறுத்தை அம்மரத்தில் எளிதாக ஏறிவிடும் என்று ஆட்சேபித்தார்கள். அதற்கு கார்பெட், ‘மொத்த கார்வால் பகுதியிலும், இரண்டு வெள்ளைக்காரர்கள் நன்றாக மரம் ஏறுவார்கள். அதில் ஒருவர் இபாட்சன், மற்றொருவர் நான்’ என்று தெரிவித்தார். சிறுவர்களாக இருந்த போது மரத்தின் மீது ஏறி பறவைகளின் முட்டைகளை எடுத்துச் சேகரித்த அனுபவம் இருவருக்கும் உள்ளதாகத் தெரிவித்தார். கிராமத்தவர்கள் இரண்டாவதாக ஆட்சேபித்த கேள்விக்கு, அவரால் பதில் எதுவும் கூற முடியவில்லை. அவர்களிடம் தன் துப்பாக்கியைக் காட்டி, அது தனக்குப் பாதுகாப்பு கொடுக்கும் என்று கூறினார் கார்பெட்.

தேவதாரு மரம் ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. மரத்தின் 20 அடி உயரம் வரை கிளைகளே கிடையாது. ஆனால் கார்பெட் எப்படியோ ஏறி மரத்தின் கீழ் கிளையை அடைந்து விட்டார். அதன் பிறகு, அவர் மேலே ஏறிச் செல்வதற்கு கஷ்டப்படவில்லை. அவர் தன்னுடன் ஒரு நீளமானக் கயிறை எடுத்து வந்திருந்தார். மரத்தின் கீழிருந்த இருவரும், கயிற்றின் ஒரு முனையில் கார்பெட்டின் துப்பாக்கியைக் கட்டினார்கள். மரத்தின் மேலிருந்து கயிற்றை இழுத்தார் கார்பெட். துப்பாக்கி மேலே வந்தது. கார்பெட் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். அவ்விடத்தில் தேவதாரு மரத்தின் கூம்புகள் அவருக்கு மறைவைத் தந்தன.

கிராமவாசிகள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த ஆடு நன்றாகக் கத்தும் என்றனர். கொண்டு வந்த ஆட்டை மரத்திலிருந்து வெளிப்பட்டிருந்த வேரில் கட்டிவிட்டு, மறுநாள் காலை அங்கு வருவதாகக் கார்பெட்டிடம் தெரிவித்துவிட்டு இருவரும் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

இருவரும் தன் கண்களிலிருந்து மறையும் வரை ஆடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர், மரத்தின் கீழ் வளர்ந்திருந்த சிறிய புற்களை மேயத் தொடங்கியது. ஆடு அதுவரை ஒருமுறை கூடக் கத்தாதது குறித்துக் கார்பெட் கவலை கொள்ளவில்லை. அது தனியாக இருப்பதால் கத்தாமல் இருக்கலாம். ஆனால் மாலைப் பொழுது தொடங்கியதும், ஆடு கத்தத் தொடங்கலாம் என்று எண்ணினார் கார்பெட். இரவில் ஆடு கத்தினால் அதை வைத்து சிறுத்தை அங்கு வரும். அப்படி வந்தால், சிறுத்தை மரத்தை நெருங்குவதற்கு முன்னரே, மரத்தின் உயர்வான பகுதியிலிருந்து சிறுத்தையைச் சுட்டு வீழ்த்துவது எளிது என்று கார்பெட் நினைத்தார்.

கார்பெட் மரத்தில் ஏறும் போது பனிமலையின் நிழல் அலக்நந்தா நதியின் மீது படர்ந்தது. மெதுவாக அந்த நிழல் கார்பெட் இருந்த மலையையும், பிறகு கார்பெட்டையும் கடந்து சென்றது. கார்பெட் இருந்த மலையின் உச்சி மட்டும் செந்நிறமாக ஒளிர்ந்தது. பின்னர் அந்தச் செந்நிற ஒளியும் மங்கத் தொடங்கியது. அஸ்தமிக்கும் சூரியக் கதிர்களின் ஒளி, நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களுக்குள் ஊடுருவ முடியாமல், திஸில் விதையில் (thistle seeds) இணைந்திருக்கும் பஞ்சு காற்றடித்தால் எப்படிப் பறந்து போகுமோ, அது போல அவ்வொளி பனிமலையில் பட்டு ஒளிர்ந்தது. இவ்வாறு சூரியன் அஸ்தமிப்பதைப் பார்த்திருப்பவர்கள் வெகு சிலரே. உலகளவிலேயே இந்தச் சூரிய அஸ்தமனத்தை வேறு எந்த இடத்திலும் நடைபெறும் சூரிய அஸ்தமனத்துடன் ஒப்பிட முடியாது. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் தான்சானியா நாட்டில் உள்ள தாங்கனீக்காவில் ஏற்படும் சூரிய அஸ்தமனத்தைக் குறிப்பிடலாம். அங்குப் பனி படர்ந்த கிளிமாஞ்சாரோ மலையும், அதற்கு மேல் தவழ்ந்து செல்லும் மேகங்களும், அஸ்தமிக்கும் சூரியக் கதிர்களால் உருக்கப்பட்ட தங்கம் போலக் காட்சியளிக்கும். இதற்குக் காரணம், அங்கிருக்கும் வளி மண்டலத்தின் பிரத்யேகத் தன்மை என்று கூறப்படுகிறது. இமய மலையில் சூரியன் அஸ்தமிக்கும் போது ஏற்படும் நிறங்கள் பெரும்பான்மையாக சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது தங்க நிறத்தில் இருக்கும்.

அன்று கார்பெட் தேவதாரு மரக்கிளையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தபோது அவர் கண்ட நிறங்கள் இளஞ்சிவப்பு மற்றும் கற்றையான வெள்ளை நிறத்தில் ஒளிக்கோடுகள். இந்த ஒளிக்கீற்றுகள் ஈட்டியின் கூர்மையான முனையை ஒத்திருந்தன. அவை பனி படர்ந்த மலையின் பள்ளத்தாக்கில் தோன்றி, இளஞ்சிவப்பு மேகங்களை ஊடுருவி, அப்படியே விரிவடைந்து தலைக்கு மேலே சென்று வானத்தில் கலந்துவிட்டது.

மனிதர்களைப் போல் அஸ்தமிக்கும் சூரியனின் மீது ஆடுகளுக்கு ஆர்வம் இல்லை. தனக்கு எட்டிய தூரம் வரை புற்களைத் தின்ற ஆடு, பின்னர் தரையில் ஒரு சிறிய பள்ளத்தை ஏற்படுத்தி அதில் சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டது. இதனால் கார்பெட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டது. மரத்திற்குக் கீழ் கட்டப்பட்ட ஆடு கத்தும், அதை வைத்து ஆட்கொல்லி சிறுத்தை அங்கு வரும், அப்பொழுது சிறுத்தையைச் சுட்டு வீழ்த்தலாம் என்று திட்டம் போட்டிருந்தார் கார்பெட். ஆனால் கட்டப்பட்ட ஆடோ, வந்ததிலிருந்து ஒரு முறை கூட வாயைத் திறந்து கத்தவில்லை. புற்களைத் தின்பதற்கு மட்டுமே அந்த ஆடு வாயைத் திறந்தது. இப்பொழுது என்னவென்றால், ஆடு வசதியாகப் படுத்துக் கொண்டு இரவு முழுவதும் நன்றாகத் தூங்கப் போகிறது என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் மரத்தை விட்டுக் கீழே இறங்கி பங்களாவிற்கு நடந்து செல்வது என்பது தற்கொலைக்குச் சமம் என்று நினைத்தார். ஆனால் ஆட்கொல்லி சிறுத்தையை எப்படியாவது கொன்றாக வேண்டும் என்று எண்ணினார் கார்பெட். இரையில்லாத சந்தர்ப்பங்களில், எந்த இடமாக இருந்தாலும் அது ஒன்றுதான். எனவே, மரத்தில் இருந்தவாறே சிறுத்தையை அங்கு வரவழைத்து அதைக் கொல்ல எத்தனித்தார் கார்பெட்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *