Skip to content
Home » ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

Kashmir Stag

காடுகளில் சுற்றித் திரிந்த நாட்களில், தான் அடைந்த பெரிய சந்தோஷமாக கார்பெட் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், காட்டுப் பிராணிகளின் பாஷைகளையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொண்டது தான். வனத்தில் பிராணிகளுக்கென்று பொதுவான எந்த ஒரு பாஷையும் கிடையாது. ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு பாஷை உண்டு. சில பிராணிகளின் பாஷைகள் குறைவானதாக இருக்கும். முள்ளம்பன்றி, ராஜாளிப் பறவை ஆகியவற்றின் பாஷை குறைவானதுதான். காட்டில் உள்ள பிராணிகளுக்கு மற்றப் பிராணிகளின் பாஷைகள் புரியும். மனிதர்கள் தங்கள் குரல் நாணைக்கொண்டு மற்றப் பிராணிகளைப் போல் குரல்களை எழுப்ப முடியும். இதில் ஒரு விதிவிலக்கு என்னவென்றால் கரிச்சான் (crested wire-tailed drongo) பறவையின் குரலை எழுப்புவது என்பது மனிதர்களுக்குக் கடினமான ஒன்று. குரல் நாணைக் கொண்டு குரல் எழுப்பி வனத்தில் உள்ள பிராணிகளுடன் தொடர்புகொள்வது என்பது மனிதர்களுக்குச் சாத்தியமான காரியம்தான். ஒருவர் காட்டுப் பிராணிகளின் பாஷையைத் தெரிந்து கொண்டு அதை வெளிப்படுத்துகையில், அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுடன், அவரால் அவரது திறமையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

(அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ….

1919ஆம் ஆண்டு, கார்பெட்டும், லியோனல் ஃபொர்டெஸ்கியு (இவர் இங்கிலாந்து நாட்டில் ஈடனில் உள்ள ஓர் உறைவிடப் பள்ளியின் பொறுப்பாளராக இருந்தவர்) இமய மலையில் புகைப்படம் எடுக்கவும் /  மீன்பிடிக்கவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இருவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கி பயணம் செய்தனர். அவர்கள் வெகுதூரம் நடந்து வந்ததால், பயணச் சாமான்களைச் சுமந்து வந்த அவர்களுடைய ஆட்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. மாலை வேளை நெருங்கிவிட்டது. எனவே அவர்கள் மலையடிவாரத்தில் இருந்த காட்டுப் பங்களாவிற்குச் சென்று தங்கினர். மறுநாள் காலை, ஃபொர்டெஸ்கியு குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அப்பொழுது கார்பெட் அங்குள்ள மலையைச் சுற்றிப்பார்க்கச் சென்றார். அப்படியே காஷ்மீர் கலைமானை வேட்டையாடவும் நினைத்தார். ஒரு தேர்ச்சி பெற்ற வேட்டைக்காரன் இல்லாமல் காஷ்மீர் கலைமானைச் சுட்டு வீழ்த்துவது கடினம் என்று கார்பெட்டின் நண்பர்கள் அவரிடம் கூறியிருந்தார்கள். காட்டுப் பங்களாவின் பாதுகாவலரும் கார்பெட்டிடம் அவ்வாறே தெரிவித்தார். கார்பெட்டுக்கு அன்று ஒரு நாள் முழுவதும் அவகாசம் இருந்தது. எனவே அவர் காலை உணவை முடித்துக் கொண்டு, தனியாளாக காஷ்மீர் கலைமானை வேட்டையாடச் சென்றார். காஷ்மீர் கலைமான்களை மலையின் எந்த உயரத்தில் பார்க்க முடியுமென்றோ, எந்த மாதிரி நிலப்பரப்பில் அம்மான்கள் இருக்கும் என்றோ கார்பெட்டுக்கு எதுவும் தெரியாது. 12000 அடி உயரத்தில் காஷ்மீரினுள் செல்வதற்கு ஒரு மலைப்பாதை இருந்தது. கார்பெட் 8000 அடி உயரத்தை அடைந்துவிட்டார். அப்பொழுது ஒரு புயல் காற்று வீசியது. மேகத்தைப் பார்த்தவுடன் கார்பெட்டுக்குப் புரிந்துவிட்டது; ஆலங்கட்டி மழை பெய்யப் போகிறது என்று. எனவே பாதுகாப்பு கருதி ஒரு மரத்திற்கு அடியில் தஞ்சம் புகுந்தார். ஆலங்கட்டி மழையினால் மனிதர்களும், விலங்குகளும் உயிர் இழந்திருக்கின்றனர். ஆலங்கட்டி மழை பெய்யும்போது கூடவே மின்னலும் தாக்கும். அம்மாதிரி சமயங்களில், உயரமான மற்றும் உச்சியில் கூம்பு போல் காட்சியளிக்கும் ஃபிர் மரங்கள் ஆகியவற்றின் கீழ் தங்கக் கூடாது. எனவே கார்பெட் மேலே வட்ட வடிவான, அடர்த்தியான இலைகளைக் கொண்ட ஒரு சிறிய மரத்தைத் தேர்வு செய்தார். காய்ந்த மரக் கட்டைகளையும், ஃபிர் மரத்தின் கூம்பு வடிவிலான காய்களையும் சேகரித்தார். தேர்வு செய்த மரத்தின் அடியில் போய் அமர்ந்தார் கார்பெட். காய்ந்த மரக் கட்டைகளையும், ஃபிர் மரத்தின் காய்களையும் வைத்து தீ மூட்டினார். ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரத்திற்கு இடியுடன் பலமாகப் பெய்தது. மரத்தின் அடியில் பாதுகாப்பாகவும், கதகதப்பாகவும் அமர்ந்திருந்தார் கார்பெட்.

ஆலங்கட்டி மழை நின்றது. சூரியன் ஒளிர்ந்தது. கார்பெட் மரத்தை விட்டு வெளியே வந்தார். கார்பெட்டுக்கு ஒரு விந்தையான உலகில் கால் எடுத்து வைத்தது போன்று இருந்தது. தரை முழுவதும் பனிக்கட்டிகள் கம்பளம் விரித்தது போல் மூடியிருந்தன. சூரியக் கதிர்கள் அந்தப் பனிக்கட்டிகளின் மீது பட்டு ஒளிர்ந்தன. மரத்திலிருந்த இலைகளும், தரையிலிருந்த புற்களும் ஒளிர்ந்தன. கார்பெட் மலை மீது ஏறத் தொடங்கினார். மேலும் இரண்டு அல்லது மூவாயிரம் அடி உயரத்திற்கு ஏறினார். அங்குத் தரைப்பரப்புக்கு மேல் உயர்ந்து நிற்கும் பெரிய பாறை ஒன்று இருந்தது. பாறையின் அடியில் நீல நிற பாப்பிச் செடிகள் பரந்து விரிந்திருந்தன. பெரும்பான்மையான பாப்பிச் செடியின் தண்டுகள் முறிந்திருந்தன. பனி படர்ந்த வெண்மையான நிலத்தில் பாப்பிச் செடிகளின் நீல நிறப் பூக்களைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அந்த இடத்தில் பாறைகள் வழுக்கின. அதற்கு மேல் மலையில் ஏறுவது அர்த்தமற்றது என்று உணர்ந்த கார்பெட் மேலே ஏறாமல், அப்படியே அவர் இருந்த இடத்திலேயே இடது புறமாகச் சென்றார். பெரிய ஃபிர் மரங்கள் கொண்ட காட்டின் வழியே ஓர் அரை மைல் தூரத்திற்கு நடந்து சென்றார். அங்கு மலை உச்சியில் தொடங்கி கீழே பல ஆயிரம் அடி நீளத்திற்குப் புற்கள் நிறைந்த சரிவு இருந்தது. அந்தச் சரிவு அப்படியே ஒரு வனத்தைச் சென்றடைந்தது. கார்பெட் மரங்களின் ஊடாக புல்வெளிச் சரிவை நோக்கி வந்தார். அங்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு சிறு குன்றின் அருகில் ஒரு விலங்கு தென்பட்டது. அதன் வால் கார்பெட்டை நோக்கி இருந்தது. தான் புத்தகங்களில் பார்த்த படங்களை வைத்து, தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது ஒரு சிவப்பு காஷ்மீர் மான் என்பதைத் தெரிந்து கொண்டார் கார்பெட். மான் அதன் தலையைத் தூக்கிய போது, அது ஒரு பெண் மான் என்று அவருக்குத் தெரிந்தது.

கார்பெட் இருந்த அந்தச் சறுக்கலான புல்வெளியிலிருந்து சுமார் 30 கஜ தூரத்தில் இருந்த வனத்தில் 4 அடி உயரத்திற்கு ஒரு பெரிய பாறை இருந்தது. அந்தப் பாறைக்கும் குன்றுக்குமான இடைவெளி சுமார் 40 கஜ தூரம். மான் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது, கார்பெட் மெதுவாகப் பாறையை நோக்கி முன்னேறிச் சென்றார். மான் தலையைத் தூக்கிப் பார்க்கும் போது, அப்படியே அசையாமல் இருந்தார். கார்பெட் மெல்ல மெல்லச் சென்று பாறையை அடைந்துவிட்டார். அவர் பார்த்த மான் ஒரு காவலாளி மான். அது ஆபத்து ஏதேனும் வந்தால் மற்ற மான்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். வலதுபுறமாகத் தலையைத் தூக்கி ஒவ்வொரு முறையும் அந்த மான் பார்க்கும் பார்வையை வைத்து, அதனுடன் மற்ற மான்களும் அங்கிருப்பதை கார்பெட் புரிந்து கொண்டார். அதற்கு மேலும் மானின் கண்களில் படாமல் புல்வெளியில் முன்னேறிச் செல்ல முடியாது. வனத்திற்குள் மீண்டும் நுழைவது, மலையின் வழியாகக் கீழே இறங்குவது கடினமான செயல் இல்லை, ஆனால் காற்று எதிர்த் திசையில் மலையை நோக்கி வீசியது. அதனால் அவரின் வாசனையை நுகர்ந்து மான் அவ்விடம் விட்டு ஓடி விடும். இதற்கு மாற்றாக கார்பெட்டுக்கு ஒரே ஒரு வழி மட்டும் இருந்தது. அது வனத்திற்குள் நுழைந்து, புல்வெளிச் சரிவின் கீழ்பகுதியைச் சுற்றி வருவதுதான். ஆனால் இப்படிச் செல்வதற்கு நேரம் ஆகும். மேலும் கடினமான மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே மானைக் கவனிக்கலானார் கார்பெட்.

புள்ளி மான்களும் கடா மான்களும் சிறுத்தையின் உறுமலுக்கு எப்படி எதிர் வினையாற்றுகின்றனவோ அதே போல் காஷ்மீர் கலை மானும் எதிர் வினையாற்றுகின்றனவா என்பதைச் சோதிக்க நினைத்தார் கார்பெட். காஷ்மீரிலும் சிறுத்தைகள் இருக்கின்றன. வரும் வழியில் சிறுத்தையின் நகக் கீறல்கள் இருப்பதை அவர் பார்த்திருந்தார். மான் மேய்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், கார்பெட் தன்னுடைய ஒரு கண் தெரியும்படிக் காட்டி, சிறுத்தையைப் போன்ற சத்தத்தை எழுப்பினார்.

உறுமல் சத்தத்தைக் கேட்ட மான் சடாரென்று திரும்பியது. கார்பெட் இருந்த இடத்தைப் பார்த்து தன் முன்னங்கால்களால் தரையைத் தட்டியது. இது மற்ற மான்கள் ஜாக்கிரதையாக இருக்கக் காவலாளி மான் செய்யும் எச்சரிக்கை. ஆனால் பாதுகாவலராக இருக்கும் மான் அழைக்காத வரை மற்ற மான்கள் அங்கு வராது. சிறுத்தையைப் பார்க்காத வரை காவலாளி மான் மற்ற மான்களை அழைக்காது. ஆனால் கார்பெட் மற்ற மான்களைப் பார்க்க விரும்பினார். அன்று அவர் பழுப்பு நிறத்தில் தடித்த கம்பளி மேலங்கி (coat) அணிந்திருந்தார். அவர் தன் இடது தோள்பட்டையைப் பாறைக்கு வெளியே சில அங்குலம் நீட்டி, மேலும் கீழுமாக அசைத்தார். காவலாளி மான் அந்த அசைவைப் பார்த்தது. பார்த்தவுடன் அப்படியே சில அடிகள் முன்னெடுத்து வைத்து மற்ற மான்களை அழைத்தது. மற்ற மான்களுக்கு ஆபத்து அருகில் இருப்பதாக எச்சரிக்கை செய்து தெரியப்படுத்தியது. மற்ற மான்களைத் தன்னுடன் வந்து சேருமாறு அழைத்தது. முதலில் ஒரு குட்டி மான் வந்தது. குட்டி மான் ஆலங்கட்டிகளின் மீது மிகவும் கவனமாகக் கால் வைத்துக் காவலாளி மானுக்கு அருகில் வந்து நின்றது. குட்டியைத் தொடர்ந்து மூன்று பெண் மான்கள் வந்தன. இவைகளைத் தொடர்ந்து ஒரு வயதான பெண் மானும் அங்கு வந்தது. ஆக மொத்தம் அவ்விடத்தில் ஆறு மான்கள் கொண்ட மான்கூட்டத்தைச் சுமார் 35 கஜ தூரத்தில் அவரால் பார்க்க முடிந்தது. காவலாளி மான் இன்னும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. மற்ற மான்கள் தங்கள் காதுகளை விரைப்பாக்கியோ அல்லது முன்னும் பின்னுமாக அசைத்தோ, சத்தத்தைக் கவனித்தபடியும் காற்றின் திசையைக் கவனித்தபடியும் அதனதன் இடங்களில் அப்படியே நின்றவாறு கார்பெட்டுக்குப் பின்னால் இருந்த வனத்தை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தன. இவையனைத்தையும் கீழே விழுந்திருந்த ஆலங்கட்டிகளின் மீது அமர்ந்தபடி கவனித்து வந்தார் கார்பெட். ஆலங்கட்டிகள் உருகிக்கொண்டிருந்தன. உருகிய ஆலங்கட்டிகள் அவரது ஆடைகளை ஈரமாக்கியதுடன், அவருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தின. அப்படியே அதில் அமர்ந்திருந்தால் ஜலதோஷம் பிடித்துவிடும் என்பதால் கார்பெட் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தார். கிளம்புவதற்கு முன்னர் ஆண் மானின் குரலையும் கேட்கவேண்டும் என்று விரும்பினார் கார்பெட். எனவே மறுபடியும் பாறைக்குப் பின்னாலிருந்து தன் இடது தோள்பட்டையைச் சில அங்குலத்திற்கு மேலும், கீழுமாக அசைத்தார். இப்பொழுது பெண் மான், குட்டி மான், ஆண் மான் என அனைத்தும் வெவ்வேறு சுருதியில் குரல் எழுப்பியதைக் கேட்டு மகிழ்ச்சியுற்றார் கார்பெட்.

கார்பெட்டுக்கு ஒரு மானைச் சுடுவதற்கான அனுமதி இருந்தது. காஷ்மீர் மானைச் சுட்டு வீழ்த்தினால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். அன்று காலையில் அவர் பங்களாவிலிருந்து கிளம்பும் முன், தான் ஒரு மானை வேட்டையாடி முகாமிற்குக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தார் கார்பெட். ஆனால் காஷ்மீர் மானைச் சுட்டு வீழ்த்தி அதைக் கோப்பை போன்று எடுத்துச் செல்ல கார்பெட்டுக்கு ஆர்வமில்லை. மேலும் காஷ்மீர் மானின் கறி கடினமானதாக இருக்கும். எனவே துப்பாக்கி எடுத்து மானைச் சுடுவதற்குப் பதிலாக அந்த இடத்திலிருந்து எழுந்து கிளம்பினார். கார்பெட்டை அந்த இடத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்ட காஷ்மீர் மான்கள் அவரது கண்களிலிருந்து வேகமாக ஓடி மறைந்தன. குன்றுக்குப் பக்கத்திலிருந்த பெரிய மரங்களுக்கு அடியில் வளர்ந்திருந்த புதர்களுக்குள் காஷ்மீர் மான்கள் சலசலப்புடன் ஓடிச் சென்று மறைந்தன.

வந்த வழியே பங்களாவை நோக்கித் திரும்பிச் சென்றார் கார்பெட். புற்கள் நிறைந்த சரிவான பாதையில் இறங்கி மலையடிவாரத்தில் இருந்த அடர்த்தி இல்லாத காடு வழியாகச் சென்றார். அவர் சென்ற பாதை மிகவும் சரிவானதாக இருந்ததால் தாவிச் செல்ல வேண்டியதாயிற்று. கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகச் சரியான இடத்தில் கால் வைத்து ஜாக்கிரதையாகச் சென்றார். அவர் அப்படிச் செல்லும் போது ஒரு திறந்தவெளி 100 கஜ தூரத்திற்கு இருந்தது. திறந்தவெளியைக் கடந்து ஒரு 600 கஜ தூரம் சென்றிருப்பார். அப்பொழுது அவரது கண்களில், வனத்தின் விளிம்பில், சரிவான பகுதியின் இடது புறத்தில், அவர் வந்து கொண்டிருந்த இடத்திற்குக் கீழே சுமார் 300 கஜ தூரத்தில் ஒரு பாறையின் மீது வெள்ளையான பொருள் ஒன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். சட்டென்று பார்த்ததில், அந்த வெள்ளை உருவம் ஓர் ஆடு என்று அவருக்குத் தோன்றியது. மேய்ச்சலுக்கு வந்த ஆடு காட்டில் தொலைந்திருக்கும் என்று நினைத்தார். கார்பெட்டும் அவரது ஆட்களும் 15 நாட்களுக்கு மேலாக மாமிசம் சாப்பிடவில்லை. கிளம்பும் போது அவர் ஃபொர்டெஸ்கியுவிடம், தான் திரும்பி வரும் போது மாமிசத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தார். அதற்கான வாய்ப்பு இது என்று கார்பெட் நினைத்தார். ஆடு கார்பெட்டைப் பார்த்துவிட்டது. ஆடு சந்தேகப்படாதபடி, அதன் பக்கத்தில் சென்றுவிட்டால் அதன் கால்களைப் பிடித்து விடலாம் என்று எண்ணினார். எனவே தாவியபடியே முன்னேறிச் சென்றார். அந்த ஆட்டை ஓரக் கண்களில் கவனித்தபடி இடதுபுறத்தை நோக்கிச் சென்றார். ஆடு ஒரு பாறையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் பாறையும் ஒரு சரிவில் நீண்டிருந்தது. தரையிலிருந்து சுமார் ஒரு ஐந்து அடி உயரத்தில் அந்தப் பாறை இருந்தது. ஆடு அதன் இடத்தை விட்டு நகராமல் இருந்தால், அந்த இடம் தான் ஆட்டைப் பிடிப்பதற்கான சரியான இடம். ஆட்டை நேராகப் பார்க்காமல், கார்பெட் விறுவிறு என்று முன்னேறிச் சென்றார். பாறையைக் கடந்து ஓடினார். இடது கையால் ஆட்டின் முன்னங்கால்களைப் பிடிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட ஆடு தும்மியபடி பின்னோக்கிச் சென்றது. எச்சரிக்கையான ஆடு கார்பெட்டின் கரங்களுக்குள் மாட்டாமல் தப்பியது. கரத்தை எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்த கார்பெட்டுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. பாறையில் நின்று கொண்டிருந்தது ஆடு இல்லை; அது ஒரு வெளிர் கஸ்தூரி மான். கார்பெட்டுக்கும் அந்த மானுக்குமான இடைவெளி வெறும் பத்து அடிகள் தான். கஸ்தூரி மான் தும்மியபடியே கார்பெட்டை எதிர்த்து நின்றது. கார்பெட் அவ்விடத்தை விட்டுத் திரும்பினார். மலையிலிருந்து கீழே இறங்கினார். சுமார் 50 கஜ தூரம் நடந்த பிறகு, திரும்பிப் பார்த்தார். கஸ்தூரி மான் இன்னமும் அங்கேயே பாறையின் மீது நின்று கொண்டிருந்தது. இந்நேரம் கார்பெட்டை பயமுறுத்தியதற்காக அது  தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கும்.

சில வாரங்களுக்குப் பிறகு, நடந்தவற்றை காஷ்மீரின் காட்டு இலக்கா அதிகாரியிடம் கார்பெட் தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்ட அதிகாரி, கஸ்தூரி மானை கார்பெட் சுடாமல் விட்டது குறித்து தன் வருத்தத்தைத் தெரிவித்தார். கார்பெட் கஸ்தூரி மானைப் பார்த்த அந்த இடத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார் அதிகாரி. ஆனால் கார்பெட்டால் அந்த இடத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவருக்கு இடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. மேலும் ஓர் இடத்தைப் பற்றிய அவரது குறிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருந்தது. எனவே கார்பெட் கூறிய குறிப்புகளை வைத்து, அந்த அதிகாரியால் கஸ்தூரி மானைத் தேடிக் கண்டுபிடித்துச் சுட்டு வீழ்த்தி இருக்க முடியாது.)

ஆண் சிறுத்தைகள் தங்களது எல்லைக்குள் மற்ற சிறுத்தைகள் வருவதை விரும்பாது. தாங்கள் வசிக்கும் பகுதி தங்களுக்கு உரித்தானதாகவே அவை கருதும். ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தையின் சுற்று எல்லை சுமார் 500 சதுர மைல்கள் கொண்டது. அந்த எல்லைக்குள் நிறைய ஆண் சிறுத்தைகள் வசிக்கலாம். ஆட்கொல்லி சிறுத்தை இப்பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல வாரங்களாகச் சுற்றித் திரிகிறது. அந்தப் பகுதியை அது தன் பகுதியாகக் கருதியிருக்கலாம். சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலம் சமீபத்தில் தான் முடிந்திருந்தது.

மரத்தின் கீழிருந்த ஆடு தூங்கிய நிலையில், ஆட்கொல்லிச் சிறுத்தைக்காக மரத்தில் காத்துக் கொண்டிருந்த கார்பெட், பெண் சிறுத்தையைப் போன்று சத்தம் எழுப்பி ஆட்கொல்லி சிறுத்தையை அங்கு வரவழைக்க நினைத்தார். அவர் எழுப்பும் சத்தத்தை வைத்து, பெண் சிறுத்தை இனச்சேர்க்கைக்கு அழைப்பதாக நினைத்துக் கொண்டு ஆட்கொல்லி சிறுத்தை அங்கு வரலாம் என்று எண்ணினார் கார்பெட். இரவாகும்வரை காத்திருந்தார். இரவானதும், பெண் சிறுத்தையைப் போன்று குரல் எழுப்பினார் கார்பெட். ஆச்சர்யம்! அவர் மகிழ்ச்சி அடையும் விதமாக ஆண் சிறுத்தையிடமிருந்து பதில் குரல் வந்தது. அக்குரல் அவர் இருந்த இடத்திற்குக் கீழ் சற்று வலது பக்கத்திலிருந்து சுமார் 400 கஜ தூரத்திலிருந்து கேட்டது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *