Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

ஹல்லி மாயார் நண்பர்களிடம் இருந்து தகவல் வந்தது. இந்த வருடமும் கோயில் திருவிழாவும் வாலிபால் போட்டிகளும் நடக்க இருக்கின்றன என்று. ஒவ்வொரு வருடமும் இது தவறாமல் நடக்கும் நிகழ்வு என்பதோடு, பலதரப்பட்ட நண்பர்களும் வருவார்கள் என்பதாலும், பழங்குடியின நண்பர்களோடு ஓரிரு நாட்கள் சந்தோஷமாகச் செலவிடலாம் என்பதாலும், நான் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடுவதில்லை. மேலும் ஒரு காரணம், இயற்கையின் மடியில் ஓரிரு நாட்கள் இருக்கலாம் என்பதும்தான். வேறெங்கும் இது போன்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைக் கிராமங்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான். அத்தனை அழகு வாய்ந்த பகுதி, இந்த வடகிழக்கு நீலகிரிப் பிரதேசம். பருவ மழைக் காலங்களில் நொப்பும் நுரையுமாகப் பொங்கி ஓடும் மாயாறு இந்தப் பிரதேசத்தையே தீவு போல மற்ற இடங்களில் இருந்து தனிமைப் படுத்தினாலும், குளிர் காலங்களில் யானைகள் உலவினாலும், இந்தப் பழங்குடி கிராமம் என்னை மிகவும் ஈர்த்த ஒரு ஊராகும்.

மற்றொரு சிறப்பம்சம், நான் தங்குவதற்கு அவர்கள் தரும் இடம்தான்! ஒரு சமயம் வீட்டுத் திண்ணையாக இருக்கும்; மறுமுறை கோடவுனாக இருக்கும்; இல்லையென்றால் கோயில் தாழ்வாரமாக இருக்கும்! இப்படி விதவிதமான இடங்களில் கிடந்து உறங்குவது எத்தனை சுகம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்! இரவில் சில சமயங்களில் வனவிலங்குகள் வரும்; அவற்றை விரட்டிவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடருவோம்! மக்களும் நன்றாக இயல்பாகப் பழகுவதால், நாட்கள் போனதே தெரியாது. மாலை நேரங்களில் வயதானவர்களிடம் பழைய கதைகளைக் கேட்கலாம் ; மயங்கும் மாலை ஒளியில் ஒளிரும் நீலகிரி முகடுகளின் எழிலை ரசிக்கலாம்; தொலைவில் யானைகளின் பிளிறலைக் கேட்கலாம்; வெகு அபூர்வமாகப் புலியோ, சிறுத்தையோ உறுமுவதைக் கேட்கலாம். பறவைகளின் இனிய கானத்தைக் கேட்டவாறு மதகுகளின் கீழே குளிக்கலாம். இப்படி ஒரு ரம்மியமான விடுமுறையை அனுபவிக்கும் சுகமே தனிதான்.

இரவு தங்கிய கோயில், பின்புறம் கழனி, அதன் பின் நீண்டு கிடக்கும் காடு

இரவு தங்கிய கோயில், பின்புறம் கழனி, அதன் பின் நீண்டு கிடக்கும் காடு

இந்தமுறை எனக்கு ஊருக்குள் இருக்கும், ஆனால், அவர்களது விளைநிலங்களையும் காட்டையும் ஒட்டி அமைந்த கோயில் தாழ்வாரத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில்தான் படுக்கை. இரவு தங்கல்! இந்தக் கோயிலை ஒட்டிப் பூசாரியும், ஊர்த் தலைவரும் ஆன நாகராஜ் ஐயாவின் வீடு. பின்புறம் கழனி ஒரு 100 மீட்டர் வரை. அதன் பின் காடு நீண்டு கிடக்கிறது. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மலை அடிவாரம், பின் நீலகிரிக்கு இட்டுச் செல்லும் மலைச் சரிவுகள். கோயிலின் முன்புறம் ஊரில் இருந்து வரும் வழி, அதனை ஒட்டிய பயிர் நிலங்கள். என்னுடன் சிவனின் அப்பா அந்தப்புறம் உள்ள கட்டிலில், எப்போதும் போல! நாகராஜ் ஐயா வழக்கம் போல, வீட்டு மாடியில் இருந்து காவல்! ஊர் சுமார் 500 மீட்டர் தொலைவில்.

இரவு சாப்பிட்டுவிட்டு, நானும், நாகராஜ் அய்யாவும் பல கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தோம், சுமார் 10.30 மணி வரை. சிவனின் அப்பா அதற்குள் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டார். காரணம், இரவில் கொஞ்ச நேரம் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக! சுகமாக நான் போர்வைக்குள் புதைந்து தூங்க ஆரம்பித்தேன். சுவர்க்கோழிகளின் ஒலி மற்றும் அங்கும் இங்கும் சிறு ஆந்தைகளின் அலறல், இவை தவிர பெரிதாக எதுவும் இல்லை. நல்ல உறக்கத்தைச் சட்டென்று கிளம்பிய ஓசைகள் முறித்தன. சடாரென்று எழுந்து பார்க்கும் போது, நான்கைந்து பேர் கையில் தப்பட்டையுடன் ஒலி எழுப்பிக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் அடிவாரம் நோக்கிப் போவதைக் கண்டேன்! நானும் அவர்களுடன் கூச்சல் போட்டுக்கொண்டு நடந்தேன். ஏனெனில், தனியே அந்தத் தாழ்வாரத்தில் கிடப்பது எத்தனை தூரம் சரி என்று புரியவில்லை! மேலும், வந்தது என்ன விலங்கு என்றும் தெரியவில்லை! இருட்டில் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை.

இப்படி ஒரு 200 மீட்டர் போனதும், வாழைக் காட்டின் இறுதியில், அடிவாரத்தை ஒட்டி ஒரு யானை நிற்பது மசமச என்று தெரிந்தது! சிவனின் அப்பா, ‘எப்பவும் வர்ற கொம்பன் தாண்டா,’ என்று வெகு சாதாரணமாகச் சொன்னார்! மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

எப்பவும் வரும் கொம்பன்

எப்பவும் வரும் கொம்பன்

எனக்கு இது புதிராக இல்லை. காரணம், இதைப் போன்று காட்டை ஒட்டி வாழும் பழங்குடியினர் அந்தப் பிரதேசத்தில் உலவும் பிரச்னையான விலங்குகளை நன்றாக அறிந்து வைத்திருப்பதோடு, அவற்றின் நடத்தையையும் தள்ளி இருக்க வேண்டிய தூரத்தையும் அறிந்திருப்பர். பல காலங்களாக ஒரே இடத்தில் வாழ்வதாலும், குறிப்பிட்ட விலங்குகளே திரும்பத் திரும்ப வருவதாலும், அவர்கள் அவற்றை எளிதில் தங்களுள் ஒன்றாகக் கருதி அன்பாக விரட்டவே பார்ப்பார்கள். கடுஞ்சொற்களையோ, கடுமையான ஆயுதங்களையோ பிரயோகிக்க மாட்டார்கள். அன்புடன் மன்றாடுவார்கள்; ‘போப்பா, பேசாம போயிரு, வேணாண்டா கண்ணா’, என்பது போல! முதலில் பார்ப்பவர்களுக்கு இது கிறுக்குத்தனமாகப் படும்! ஆனால், இது குறித்து சமீபத்திய ஆய்வுகள் விளக்குகின்றன – நம்முடைய குரல் மாறுபாடுகள் மற்றும் உடல் மொழி, விலங்குகளைப் பாதிக்கின்றன என்று. காடர்கள் எவ்வாறு யானைகளை விரட்டுகின்றனர் என்பது குறித்த ஆய்வு இதனை விளக்குகிறது.

இதுவல்லாது, பலகாலமாக வனவிலங்குகளுடன் வாழ்ந்து வருவதால், நகரத்தில் இருப்பவர்களைப் போல மற்ற உயிரினங்களைக் கண்டு அவர்கள் பயமோ கவலையோ கொள்வதில்லை. மாறாக, அவற்றுடன் அனுசரித்து வாழும் கலையை அவர்கள் நன்கு கற்றிருக்கிறார்கள். யானை அல்லது மற்ற விலங்குகளால் சேதம் ஏற்பட்டால் பெரும் கவலை கொள்வதும் இல்லை. அதை இயற்கையாக நிகழும் ஒரு விபத்து என்று கடந்து போய் விடுகிறார்கள். இந்த மனநிலை அவர்கள் காட்டின் ஊடே அமைதியாகவும் கவலையற்றும் வாழ உதவுகிறது. மேலும் காட்டு விலங்குகளைத் தம் சொந்தம் போல பாவிக்கும் குணம் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கிறது. நகரத்தில் உள்ள நமக்குத்தான் எல்லாம் பிரச்னை!

யானை சிறிது நேரம் நின்று பார்த்தது. அதற்குள் இரண்டு பேர் குப்பைகளைப் போட்டு நெருப்பு உண்டாக்கினர். எல்லோரும் யானையிடம் இருந்து பத்திரமான தூரத்தில்தான் இருந்தோம். நெருப்பும், பந்தங்களும், தப்பட்டைகளும் சேர்ந்து யானையை யோசிக்க வைத்திருக்கும் என எனக்குத் தோன்றியது. மெதுவாக அடிவாரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. மற்றொரு காரணமும் இருக்கலாம். அப்போது மணி அதிகாலை மூன்றிருக்கும். இன்னும் சற்று நேரத்தில் விடியத் தொடங்கி விடும். கென்னெத் அண்டர்சன் சொல்வது போல, நகல் விடியல் (false dawn) நாலு மணிக்கே வந்து விடும். அதனால், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று யானை திரும்பிப் போயிருக்கலாம். எப்படியோ, அன்றைய யானை விரட்டும் பணி செவ்வனே முடிந்தது!

‘புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை… [205]

(விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்ன வரும் யானைகளை ஓட்ட, கவணால் கல் வீசுவர்.)

மேலே உள்ளது மலைபடுகடாம் காட்டும் ஒரு காட்சி. அன்றே குறிஞ்சி நில மக்கள் யானைகளை விரட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று அறிகிறோம்.

நாளைய கதை நாளை பார்த்துக் கொள்ளலாம்! இரவில் எத்தனை அருகில் என்னென்ன விலங்குகள் வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டரை மணி வரை குறட்டைவிட்டுத் தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன்!

அதன் பின்னர் உறக்கம் தொலைந்து போனது. நாகராஜ் அய்யாவும் வந்து சேர்ந்து கொண்டார். நெருப்பு மூட்டி அதன் கதகதப்பில் அப்படியே கண் மூடிக் கிடந்தேன். பின்னர், ஆறு மணி சுமாருக்கு மீண்டும் தூங்கிப் போனேன்.

இதேபோல, முன்னொரு சமயம், அடுத்துள்ள கல்லம்பாளையத்தில் ஒருமுறை யானை விரட்டியது நினைவில் வந்தது! இங்கு யானைகளுக்கும் பஞ்சமில்லை; விரட்டும் பணிக்கும் குறைவில்லை!

அன்று விழா 10 மணிக்கு ஆரம்பிக்க இருந்ததால், அதனால் பெரிய பாதிப்பு இல்லை. அதன் பின் நடந்த கைப்பந்து போட்டிகளை எப்போதும்போல கண்டு ரசித்து, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் கொடுத்து (நான் மட்டும் அல்ல, பிற ஆதரவாளர்களும் உண்டு) மகிழ்ந்தோம்.

கைப்பந்து போட்டி நடந்த மைதானம் (பின்னணியில் நீலகிரி மலை) – போட்டி துவங்கும் முன் நடனமாடிய பெண்

மாலை கோயில் திருவிழாவிலும் பங்கேற்று மறுநாள் அதிகாலைப் பேருந்தில் புறப்பட்டு வந்து சேர்ந்தோம். நல்ல வேளையாக, இரண்டாம் நாள் இரவு யானை வரவில்லை. என்றாலும், எனது தூக்கம் எப்போதும் போலச் சுகமானதாக இல்லை! உள்ளுணர்வு விழித்திருந்ததால், நல்ல உறக்கம் கிடைக்கவில்லை! சிவனின் அப்பாவை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை! 70 வயதில் தினமும் இதேபோல யானையை எதிர்நோக்கி இருப்பது என்னால் முடியுமா என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *