அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும் போது ‘ஹா, ஹா ஹூ’ என்று சிரிப்பது போல ஒரு குரலோசை கேட்டது. அப்படியே அது வீட்டின் வலமிருந்து இடம் வரை ஒலித்து, பின் மங்கி மறைந்துவிட்டது. தேநீரைக் காட்டிலும் அந்தக் குரல் என்னுள் கிளப்பிய பழைய நினைவுகள் அது நாரை அலகு மீன்கொத்தியாக இருக்கும் என்று உணர்த்தியது. இந்தச் சிரிப்பு போன்ற ஒரு மூன்று அல்லது நான்கு இசைக்குறிப்பு, அடர்ந்த மரங்களைக் கொண்ட நதியோரக் காடுகளில் கேட்கும் ஒரு குரல். அந்தப் பறவை எப்படி இங்கே வந்தது?
சாதகமாக உள்ள ஒரு விஷயம், என் வீடு பவானி நதியோரம் இருக்கிறது என்பதுதான். ஆனால், அடர்ந்த மரங்கள் இங்கு இல்லையே? மீண்டும் அந்தக் குரலோசை அன்று மாலை நான் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும்போது கேட்டது. நன்றாக, கூர்ந்து கவனித்தபோது, ஒரு நாரை அலகு மீன்கொத்தி நதிக்கரை ஓரம் உள்ள பகுதியில் இருந்து பறந்து சென்றது!
மலையாளத்தில் சொல்வது போல உண்மையிலேயே அது நீலப் பொன்மான்தான்! நல்ல மஞ்சள் வண்ண உடல்; நீண்டு சிவந்த பவள நிற அலகு; நீல நிறச் சிறகுகள்; செம்பவள கால்கள் என்று மனதை மயக்கும் வண்ணங்களுடன் மைனாவின் அளவு பருத்த ஒரு அழகான மீன்கொத்தி!
ஆற்றங்கரைக் காடுகளில் அதிகமாகத் தென்படும் ஒரு எழிலான பறவை. முன் காலத்தில், இந்தப் பகுதிகளில் ஆற்றங்கரைக் காடுகள் இருந்திருக்கும்; நல்ல பருத்த மத்தி மரங்கள், மாமரங்கள் அடர்ந்திருந்திருக்கும்; தெள்ளிய நீர் ஆண்டு முழுவதும் பாய்ந்து கொண்டிருந்திருக்கும்; எனவே அவை இங்கு கூடி வாழ்ந்திருக்கும். இன்று அனைத்தும் மறைந்து ஒன்றிரண்டு நீலப்பொன் மான்கள் மட்டும் உலவிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது என் வீட்டு வழியே செல்லும்போது குரலெழுப்பி என்னை உற்சாகப்படுத்துகின்றன.
பெரும்பாலும் நாரை அலகு மீன்கொத்திகள் காட்டு ஓடைகள் அல்லது நதிகளின் ஓரம் உள்ள மரங்களில் அதிகம் காணப்படும். இதுபோன்ற இடங்களில் உள்ள சிறு குட்டைகளில் கிடைக்கும் மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உண்டு வாழும். மீன்கொத்திகள் இரை தேடும் அழகே தனி! பகலில் சூரியக் கதிர்களின் கோணம் கணக்கிட்டு அவை இரை தேடும்.
அதாவது, சாய்வான கதிர்கள் விழும் காலை அல்லது மாலை நேரங்களில் இவை இரை பிடிக்கும் கோணம் கிட்டத்தட்ட 45லிருந்து 60 பாகையாக இருக்கும்; நடுப்பகலில் 90 பாகையாக இருக்கும். யார் இப்படி கோணங்களை மாற்றி மீன்பிடிக்கக் கற்றுத்தந்தார் என்று வியக்காமல் இருக்க முடியாது! ஒளி விலகும் கோணத்தை அறிந்து அவை செயல்படுவதை நாம் நாளெல்லாம் கண்டு வியக்கலாம்.
நீருள் கிழித்துக் கொண்டு செல்லும் போது எப்படி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் அவை இரையை லாகவமாகப் பிடிக்கின்றன என்பது மற்றொரு வியப்பு! இந்த லாகவத்தை நுணுகி ஆராய்ந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியதுதான் புல்லெட் ரயில்! இந்த வகை ரயில் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த அவர்கள் அமைத்த முகப்பு மீன்கொத்தியின் அலகு போல இருக்கும்; அது நீருள் செல்லும்போது உடல் இருக்கும் அமைப்பில் ரயிலும் இருக்கும்!
இப்போது நாம் நீலப்பொன் மானைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம்! பறவை இயலின் பிதாமகர் என்றறியப்படும் சாலிம் அலி சொல்கிறார். ‘சாம்பல் தலை மீன்பிடி பருந்தும், நாரை அலகு மீன்கொத்தியும் ஒரே வாழ்விடத்தைத் தெரிவு செய்கின்றன. இரண்டிற்கும் நீர் தேங்கி கிடக்கும் குட்டைகள் மற்றும் சலனமற்ற நீர் பரப்பு மிகவும் உகந்தது. எங்காவது நீங்கள் நாரை அலகு மீன்கொத்தியைக் கண்டால், நிச்சயம் அருகிலேயே ஒரு சாம்பல் தலை மீன்பிடி பருந்தும் இருக்கும்; சற்றுத் தேட வேண்டி இருக்கும்.’
நான் பல காட்டாறுகளின் அருகே உள்ள காடுகளில் இந்தச் சக வாழ்வை கண்டு வியந்திருக்கிறேன். இயற்கை எப்போதுமே எல்லா உயிரினமும் சேர்ந்து வாழ்வதையே போதிக்கிறது! என்னுடைய இப்போதைய கவலை இவை எங்கே கூடு வைத்து இனப்பெருக்கம் செய்கின்றன என்பதுதான். சத்தியமங்கலம் முன்புபோல இல்லை; நாள்தோறும் மரங்களும், ஆற்றங்கரையும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் அவை தாக்கு பிடிக்குமோ!
போன மாதம் என்னுடைய மாலை நடைப் பயிற்சியின் போது கோம்புபள்ளத்தின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஒரு மஞ்சள் மின்னல் என்னைக் கடந்து சென்றது. என்ன அது என்று அவதானிக்கும் போது, என் நண்பன் நீலப்பொன் மான்தான் என்று உணர்ந்தேன். இங்கே அவனுக்கு என்ன வேலை என்று சற்று நின்று கூர்ந்து ஆராய்ந்தபோது, அங்குள்ள மணல் படுகை கரைத் திட்டில் சென்று அமர்ந்ததைக் கண்டேன்.
நடைப் பயணத்தை சற்றே நிறுத்திவிட்டு பத்து நிமிடங்கள் அங்கே இருந்தேன். மெதுவாக அவன் மணல் திட்டில் உள்ள பொந்தை நோக்கிப் போவதைக் கண்டேன். எனக்குப் புரிந்து விட்டது, அங்குதான் கூடு வைத்திருக்கிறான். பொதுவாக மீன்கொத்திகள், மணல் திட்டு அல்லது மணல் கரைகளில்தான் சுரங்கம் போன்ற கூடுகளை அமைக்கும். வாய் சற்று குறுகி இருந்தாலும், உள்ளே இருக்கும் அறை ஐந்து அல்லது ஆறு குஞ்சுகள் தங்க ஏதுவாக பெரிதாக இருக்கும். கோம்புபள்ளம் பவானி ஆற்றின் அதிகப்படி நீர் வடியும் ஒரு கால்வாய் என்பதாலும், நதி மிக அருகில் இருப்பதாலும், பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இருக்காது. ஆடு, மாடுகள் மேயும்; எப்போதாவது வண்டிகள் கழுவுவார்கள்.
நமது நண்பனுக்கு இங்கே நல்லதொரு இடம் வாய்த்துவிட்டது, கூடு வைக்க. பின்னர், தினமும் அதைப் பார்த்து மகிழ்வது எனக்கு வழக்கமாகி விட்டது. அதன் பின் நான் ஒரு வாரம் சைலண்ட் வாலி போக வேண்டி இருந்தது. திரும்பி வந்து பார்க்கும்போது, எந்தச் செயல்பாடும் காணவில்லை. என்ன ஆயிற்றோ என்ற கவலையுடன் அன்று திரும்பினேன்.
நேற்று முன் தினம், மீண்டும் அவன் குரல் காலையில் என்னை எழுப்பியது. மாலை வீட்டின் குறுக்கே அவன் ஒலி எழுப்பிக்கொண்டு பறந்தான். அதைப் பார்த்ததும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. நான் இருக்கும் வரை இந்த நீலப்பொன் மான்கள் இருக்கும் என்றால் அதை விட மகிழ்ச்சி வேறு ஒன்றுமில்லை!
(தொடரும்)