ஜனவரி இரண்டாம் வாரம் நடப்பதாக இருந்த சைலண்ட் வாலி பறவைகள் கணக்கெடுப்பு சில தவிர்க்க இயலாத காரணங்களால் பின்னொரு சமயத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதை நான் மறந்தே போனேன். பிப்ரவரி இரண்டாம் வாரம் குருஜி உத்தமனிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததும்தான் எனக்கு அதுபற்றி நினைப்பே வந்தது. ‘எந்தோ சந்துரு, தீர்ச்சையாயிட்டு வரணம், கேட்டோ’ என்று அன்புக் கட்டளை இட்டதும், முடியாது என்று சொல்ல இயலவில்லை. மேலும், சைலண்ட் வாலியை நான் வெயில் காலத்தில் சரியாகக் கண்டதில்லை. எனவே, மற்ற சில சொந்தப் பணிகளைத் தள்ளி வைத்துவிட்டு மார்ச் முதல் வாரம் முக்காலி செல்ல தயாரானேன். காடுகளை ஒவ்வொரு காலத்திலும் காண்பது, அதன் தன்மையையும் காட்டுயிர்களின் தகவமைப்பு உத்திகளை (adaptive strategy) காணவும் நல்ல ஒரு சந்தர்ப்பம். மேலும், இது பறவைகளின் இனவிருத்திக் காலம் என்பதால் பல புதிய பதிவுகள் கிடைக்க நல்ல வாய்ப்பு.
நாலாம் தேதி முக்காலியில் முன்னுரைக் கூட்டம் முடிந்ததும், எனது குழுவுக்கு தத்தேங்கலம் பகுதி காடுகளில் ஒரு மூன்று நாட்கள் அலைந்து திரியப் பணிக்கப்பட்டது. இப்பகுதி, சைலண்ட் வாலி புனல்மின் நிலையம் அமைக்கப்பட இருந்தபோது, உற்பத்தி நிலையம் நிறுவப்பட இருந்த இடம். இப்போது பழைய சிதிலமடைந்த கட்டடங்களும், சிறிய கிராமமும் இருக்கின்றன. சுற்றிலும், இலையுதிர் காடுகளும், மலைகளும், அவற்றின் மேல் பகுதிகளில் ஈரப்பதக் காடுகளும் விரவிக் கிடக்கும். ஊடே குந்திப் புழா (ஆறு) வற்றாமல் வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும். எங்களுக்குத் தங்க வசதியான டார்மிட்டரி ஒதுக்கப்பட்டது. அங்கு நிரந்தரமாகச் சுமார் பன்னிரண்டு ஊழியர்கள் இருப்பதால், நாங்கள் ஆறு பேர் சேர்ந்தது ஒரு பிரச்னையாக இல்லை.
ஆனால் பிரச்னை வேறு வடிவில் வந்தது! இந்த மாதம் தொடங்கியது முதலே, வெயில் கொளுத்தித் தள்ளுவதால், எல்லா இடங்களிலும், காட்டுத் தீ கனன்று சுழன்று கொண்டிருந்தது. இதனால், எங்களுடன் வர ஆட்கள் பற்றாக்குறையானது. ஏனெனில், கிட்டத்தட்ட எல்லோரும் தீயணைப்புக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்! ஆயினும், நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு வழிகாட்டியுடன் அடுத்துள்ள காடுகளில் ஆறிலிருந்து எட்டு கி.மி. வரை சென்று அலசி வந்தோம். வழிகாட்டிகள் தங்களது சோர்வையும் பொருட்படுத்தாது எங்களுடன் வந்து உதவியதே பெரிய சாதனை! காரணம், கடந்த சில நாட்களாக அவர்கள் இரவு பகல் பாராது தீயணைக்கச் சென்றிருக்கின்றனர். இங்கு கிராமம் இருப்பதாலும், ஆடு மாடுகள் மேய்வதாலும், நெருப்பு பற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
முன்பே சொன்னது போல, எங்கு நோக்கினும் பறவைகளின் பாட்டு; கூடு வைக்கும் காலமாதலால், அவை எப்போதையும் விட எளிதில் காணும் விதத்தில் நடமாட்டம்; வறண்ட காட்டில், காணும் வாய்ப்புகள் கூடுதல் என்று மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஆங்கிலத்தில் ‘love is in the air’ என்று சொல்வார்கள்! அது போன்று எங்கு பார்த்தாலும் பறவைகளின் இனப்பெருக்கக் களியாட்டங்களும், பாட்டும், குஞ்சுகளுக்கு இரை கொண்டு செல்லும் பணிகளுமாகக் காடே குதூகலமாக இருந்தது! ஒரு புறம் காட்டுத் தீயின் தாக்கம், ஆனாலும் அது பறவைகளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. இடர்ப்பாடுகளுக்கிடையில் அவை வாழக் கற்றுக் கொண்டுவிட்டன என்றே தோன்றியது. இயற்கை என்றுமே இன்முகம் காட்டியே தீரும்; மனிதன்தான் எதிலும் குறை காணுகிறான்.
முகாமில் இருந்த மொட்டை மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி, கூடு வைத்திருந்தது; நெடிய வாகையில் கிளிகள் கூடு வைத்திருந்தன; ஆற்றோரம் கருடன் கூடு வைத்திருந்தது. இப்படிக் காணும் இடமெல்லாம் இந்த இளவேனில் ஒரு சொர்க்கக் காலமாகத் தோன்றியது! அன்று ஆற்றின் கரையருகே நீலப்பொன்மான், அரசவால் ஈப்பிடிப்பான், நீலத் தொண்டை ஈப்பிடிப்பான் போன்றவற்றைக் கண்டு விட்டுத் திரும்பினோம். சிறிய வலசை வரும் ஈப்பிடிப்பான்களில் மூன்று வகைகளைக் கண்டோம். ஆயினும், கூட வந்த ரெஹானாவுக்குச் செந்தலைக் கிளியின் நல்ல புகைப்படம் கிடைக்கவில்லை என்ற வருத்தம், மற்றும் ஓர் அரிய உள்நாட்டுப் பறவை கிடைக்கவில்லை என்ற ஏக்கம். பறவை நோக்கர்களுக்கு இதுபோன்ற ஏக்கம், குறை எல்லாம் சாதாரண விஷயம்!
அடுத்த நாள் மாலை திரும்பும் போது, ஒரு வளைவில் செந்தலைக் கிளியின் குடும்பம் வளைவின் மேலே கவிந்து நின்ற மரத்தில் உள்ள கனிகளைத் தின்று கொண்டிருந்தன. ஒரு தந்தை, தாய், குஞ்சு என அழகான குடும்பமாகக் கனிகளைத் தின்று கொண்டிருந்தன. சூரியனின் அற்புதமான பின்புற மஞ்சள் கிரணங்களில் தகதகவென இருந்தன. ஸ்டுடியோவில் கூட அது போல ஓர் அமைப்பு கிட்டாது! அந்த அளவு சிலாகிக்கத் தக்க வகையில் அந்தக் காட்சி இருந்தது. ஆசை தீரப் பல படங்கள் எடுத்த பின்னர், மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். அருகில் உள்ள புதரில் இருந்து பூனையின் மியாவ் போன்ற ஓர் ஒலி கேட்டது. பொறுமையாகத் துழாவும்போது, அங்கே மஞ்சளாக ஒரு பறவை தென்பட்டது. என்ன அது என்று சற்று நிதானமாக நோக்கும்போது, தீக்காக்கையின் பெண் பறவை என்று அறிந்தோம். ரெஹானாவுக்கு பெரும் மகிழ்ச்சி! கேரளத்தின் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயல் இனங்களில் ஒன்று என்பது மற்றொரு விசேஷம்! ஆக, கேட்டவை கிடைத்த மகிழ்ச்சியில் படமெடுத்துத் தள்ளினார் ரெஹானா!
சாலிம் அலி இந்தப் பறவையைக் குறித்துத் தன் புத்தகத்தில் எழுதும் போது, ‘the peculiar mewing calls are its first indication in a jungle’ என்று மிக அழகாகக் குறிப்பிடுகிறார்! இந்தக் குரலோசைதான் அதனைக் கண்டுபிடிக்க உதவியது! மற்றொரு ரசனையான அவரது குறிப்பு, இப்பறவை தனது சருகு போன்ற பின்புறத்தை மட்டும் காட்டிக்கொண்டு கிளையில் இருப்பதால், காண்பது வெகு கடினம், என்பது! பறவைகளின் குணங்களையும், வாழ்விடங்களையும் அவரைப் போல எழுத இன்னொருவர் பிறக்க வேண்டும்! நான் இன்னும் சற்று நேரம் அங்கேயே நின்றால், ஆண் பறவையையும் காண வாய்ப்புண்டு என்று கருதினேன். எனவே, பாதையோரம் இருந்த கல்லில் சற்று நேரம் அமைதி காத்தோம். எதிர்பார்த்தது போல, ஆண் பறவை ஒரு பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தது! ஏன் இதைத் தீப் பறவை என்று சொல்கிறார்கள் என்பதை முழுமையாக உணர முடிந்தது!
நன்கு கருத்த தலை மற்றும் பிடரி; இள மஞ்சள் முதுகு; சிவந்த வயிற்றுப் பகுதி; இடையில் ஒரு வெண்ணிறப் பட்டை எனத் தீப்பிழம்பின் நிறத்தில் இருக்கும் ஆண் பறவையின் அழகைக் கண்டு ரசிக்க நேரம் போதாது! இயற்கை இந்த வண்ணங்களை வழங்கி என்ன வகையில் உதவுகிறது என்று முழுமையாக அறிய இயலவில்லை! அப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டதால், துணைக்கு வந்த வழிகாட்டி பரபரப்பானார்! ‘இங்கே ஒரு மோழை (makhna) சில சமயம் வருவதுண்டு, எனவே நாம் போக வேண்டும்’ என்றார். அவரைக் கிலேசத்தில் ஆழ்த்த எனக்கு விருப்பம் இல்லை. மேலும் அவர்களே தீ அணைப்புப் பணி காரணமாக மன அழுத்தத்தில் உள்ளனர். மேலும், ரெஹானா சற்றே ஸ்தூல சரீரம் கொண்டவர்! எனவே, ஓடுவது எளிதல்ல என்பதாலும், discretion is the better part of valour (விவேகம் என்பது வீரத்தின் சிறந்த பகுதியாகும்) என்பதாலும், நாங்கள் முகாமை நோக்கி நடையைக் கட்டினோம்!
அடுத்த நாள் வெள்ளை வயிற்று வால்காக்கை, குட்டை வால் கிளி, வெள்ளைத் தலை மைனா என பலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம். பறவை நோக்குதல் இது போல எங்களைக் காடு காடாக அலைய விட்டாலும், அதன் சுகமே தனி! தினமும் கிடைப்பது கஞ்சியும், பயறும் அல்லது நேந்திரம் புழுக்கு, புட்டு என்றாலும், அவை எந்த வகையிலும் எங்கள் சந்தோஷத்தையோ ஆர்வத்தையோ குறைக்கவில்லை! மாறாக, மேலும் சுறுசுறுப்போடு இயங்க உதவியது. காட்டின் அழகும், பறவைகளின் சகவாசமும் எப்போதும் என்னைப் போன்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்!
(தொடரும்)