Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #4 – மயக்கும் விண் வெளிக் கூட்டங்கள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #4 – மயக்கும் விண் வெளிக் கூட்டங்கள்

அந்தி சாயும் நேரம், ஆனால் வெளிச்சம் முற்றிலும் குறையவில்லை. ஒரு மங்கலான ஒளி இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆடிக்கொம்பை முகாமை அடைந்தோம். கிழக்கு வானில் ‘சிரியஸ்’ என்கிற சிவன் நட்சத்திரம் மங்கலாகத் தெரியத் தொடங்கிவிட்டது. வான்வெளியில் மிகப் பிரகாசமாகத் தெரியும் நட்சத்திரம் இது. சிலர் இதை ‘அழல் மீன்’ என்றும் சொல்வதுண்டு. கானிஸ் மேஜர் விண் கூட்டத்தில் கிடக்கும் வெகு பொலிவான நட்சத்திரம்.

மறு நாள் பிணந்தின்னிக் கழுகுகளின் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டி நாங்கள் இந்த முகாமுக்கு அனுப்பப்பட்டோம். இரவு உணவு தயாராகும் வரை நாங்கள் செய்ய ஒன்றுமில்லை. அப்போது, உற்சாகம் தரும் வகையில், கடுங் காப்பி அல்லது கருப்பு தேநீர் வந்தது. அதை உறிஞ்சியவாறு நான் கிழக்கு வானத்தை நோக்கிக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல இருட்டு கவியத் தொடங்கியது. சுற்றிலும் உள்ள குன்றுகள் நிழலாகத் தெரியத் தொடங்கின. வானம் கருப்பு பட்டுபோல மாறியது. எனக்கு பாரதியின் கண்ணம்மா பாட்டுதான் நினைவுக்கு வந்தது!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ’

கொஞ்சம் கொஞ்சமாக வானம் நட்சத்திர வைரம் பதித்த பட்டுக் கருநீலப் புடவையாக மாறியது! சற்று நிமிர்ந்து கிழக்கில் பார்த்தால், ஒரியான் விண் கூட்டம் மிகவும் பிரகாசமாகக் காணப்பட்டது. ஒரியான் ஒரு வேட்டைக்காரனாகவும், அவனுடன் வரும் நாயாக அதன் கீழுள்ள நட்சத்திரங்கள் உருவகப்படுத்தப்படும், கிரேக்க விண்வெளி சாஸ்திரத்தில். வேட்டைக்காரன் அணியும் இடுப்புப் பட்டையாகக் குறுக்கில் ஓடும் மூன்று நட்சத்திரங்கள் அறியப்படும். அந்தப் பகுதியில்தான் பல பால்வெளி மண்டலங்கள் (எம்-18 போன்ற) காணப்படுகின்றன. இந்த ஒரியான் விண் கூட்டம் நமது புராணங்களில் ருசிகரமாக சித்தரிக்கப்படுகிறது! சிரியஸ் என்கிற மிகப் பிரகாசமான நட்சத்திரம், சிவபெருமானாக அறியப்படுகிறது; குறுக்கே ஓடும் மூன்று நட்சத்திரங்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு; அதன் கீழே காணப்படும் ஒரு பொலிவான நட்சத்திரம், மன்மதன். தவத்தில் இருக்கும் சிவனை மன்மதன் பாணம் கொண்டு கலைக்கிறான்! சிவனின் திருவாதிரை நட்சத்திரம், ஒரியான் கூட்டத்தில், மின்னும் செந்நிற நட்சத்திரமாக (பீடல்கீஸ்) இருக்கிறது.

ஒரியான் விண் கூட்டம்
ஒரியான் விண் கூட்டம்

இந்த விண் கூட்டத்தின் முன்னே, அதாவது மேற்கு வானம் நோக்கி நகர்ந்து, காளை அல்லது ரிஷப ராசியில் உள்ள செந்நிற விண்மீன் ரோஹிணியையும் கார்த்திகை (Pleiades) கூட்டத்தையும் கண்டேன். திராட்சைக் கொத்து போன்ற Pleiades, நமது நாட்டில், கிருத்திகா அல்லது கார்த்திகைப் பெண்கள் என்று அறியப்படுகிறது. கிட்டத்தட்ட 7 அல்லது 8 நட்சத்திரங்கள் அழகான சரவிளக்குபோல இலங்கும் அழகே தனி. ஒரு நட்சத்திரக் கூட்டமான கார்த்திகை 400 இல் இருந்து 1000 வரையிலான நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது.

இப்படி நான் இந்த விண்வெளி அழகினைக் கண்டு நிலை மறந்து நின்று கொண்டிருக்கும்போது, எங்கள் துணைவர்களான வேட்டைத் தடுப்புக் காவலர்கள், எனது தியானத்தைக் கலைத்தனர்! ‘அய்யா, சாப்பாடு ரெடி, சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் படுங்கள். நாளை ஃபீல்டுக்கு போகணும்’ என்று கிளப்பினர். காட்டில் இரவு வெகு நேரம் விழித்திருப்பது நல்ல வழக்கம் இல்லை; வெள்ளனே படுத்து விடியும்முன் எழுவது இங்கு எழுதப்படாத சட்டம்! காரணம், அப்போதுதான், கடும் வெயிலுக்கு முன் வேலைகளை முடித்து ஓய்வெடுக்க முடியும். நாமோ நகரவாசிகள்; நம் பழக்க வழக்கங்கள் இயற்கையின் நியதியை ஒட்டி இருப்பதில்லை என்றாலும், காட்டில் திரியும்போது நான் அவர்களைப்போல நடந்து கொள்ளப் பழகிவிட்டேன்.

காட்டின் நடுவே முகாம்
காட்டின் நடுவே முகாம்

முகாமில் கிடைக்கும் சாதாரண உணவான சோறும் ஒரு குழம்பும்தான் என்றாலும், அந்தப் பசி வேளைக்கு அமிர்தம்போல இருந்தது. அவர்களது சமையலில் காரம் சற்றுத் தூக்கலாகத்தான் இருக்கும், ஆயினும் எனக்கு எந்த விதத்திலும் பாதித்ததில்லை. சாப்பிட்டு தட்டுகளைக் கழுவிவிட்டு அண்ணாந்து மாசி கோவில் பள்ளம் உள்ள திசையில் எதேச்சையாக நோக்கினேன். வடகிழக்கு வானில் சட்டமிட்டு மாட்டிய படம்போல சப்தரிஷி மண்டலம் தெரிந்தது! அதன் வால் மாசி கோவில் பள்ளம் வரை படர்ந்திருந்தது. அதாவது அருந்ததி பள்ளத்தில் வால் வளையும் இடத்தில் இருந்தது. தலை காங்கிரஸ் மட்டத்தில். மிகப் பிரம்மாண்டமான காட்சியாக அந்தக் கும்மிருட்டில் அது அடிமனது வரை ஊடுருவியது! ஒரியான்போல மிக எளிதில் அடையாளம் காணக்கூடிய விண் கூட்டம், சப்தரிஷி. ஆங்கிலத்தில் இதை Great Bear என்று அழைப்பர். ‘பெருங் கரடி’ என்று தமிழாக்கம் செய்யலாம்! ஒரு கனவுலகில் இருப்பதுபோல நான் உணர்ந்தேன்! காரணம், சமவெளியில், நகரங்களுக்கு அருகில், இதுபோல விண் கூட்டங்களைக் காண்பது வெகு அரிது. அதுவும் இதுபோல வெகு தெளிவாக, எழுதப்பட்ட சித்திரமாக!

சப்தரிஷி. ஆங்கிலத்தில் Great Bear என்று அழைப்பர்.

அப்படியே அதன் தலையில் உள்ள இரண்டு நட்சத்திரங்களில் இருந்து ஒரு நேர்கோட்டை வடக்கு நோக்கி இழுத்துப் பார்த்தேன். மங்கலாக, அடி வானத்தில் துருவ நட்சத்திரம் தெரிந்தது. வாலில் இருந்து ஒரு வளை கோட்டை இழுத்து நோக்கினேன். கிழக்கு வானின் அருகே ஸ்வாதியும் அதில் இருந்து மேலும் வளைந்தால் சித்திரையும் தெரிந்தன. அருந்ததி ஓர் இரட்டை நட்சத்திரம். பழங்காலத்தில், படைவீரர்களின் கண்பார்வையைப் பரிசோதிக்க அருந்ததியில் எத்தனை நட்சத்திரங்கள் உண்டு என்று கேட்பார்களாம்! நேரமாக ஆக, சப்தரிஷியின் வால் மேல் நோக்கி வளைந்து ஒரு பட்டம்போல வரும். இப்படியாக, நான் இந்த விண்கூட்ட அழகைக் கண்டு தட்டைக் கூட வைக்காமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வேட்டைத் தடுப்புக் காவலர், ‘அய்யா, இப்படிப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால், பின்னால் யானை வந்தால் கூட உங்களுக்குத் தெரியாது. போய்ப் படுங்கள், காலையில் நேரத்தில் போகணும்’ என்றார்!

அவர் சொன்னதிலும் உண்மை இருந்தது. ஏனெனில், அது யானைகள் எப்போதும் உலவும் பகுதி. எங்கள் அகழி அத்தனை வலிமையாக வேறு இல்லை. இரண்டு தினங்களுக்கு முன் முகாமுக்கு ஒரு யானைக் கூட்டம் வருகை தந்திருந்த செய்தியை நாங்கள் வரும் போதே சரகர் மற்றும் நண்பர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கு மேலும், காவலர்களின் பொறுமையைச் சோதிக்க நான் தயாரில்லை! இதைப் போன்று விண்வெளியைக் காண எப்போது நேரிடும் என்ற அங்கலாய்ப்பு நியாயமானது என்றாலும், வேறு வழியில்லை. வந்த காரியத்தையும், பாதுகாப்பையும் கருதி, முகாமிற்குள் செல்வதுதான் உசிதம் என்று உணர்ந்தேன்! மெதுவாக நடந்து சென்று, சோகமாகப் படுக்கையில் சரிந்தேன். இந்த வருத்தத்தை அடுத்த நாள் கழுகு கணக்கெடுப்பு சரி செய்தது என்பது வேறு கதை!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *