Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #5 – மனித விலங்கு மோதல்

சென்னன் காலையில் வந்து பார்க்கும்போது, மனம் நொறுங்கிப் போனது. இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நின்ற தென்னையிலும், வாழையிலும் பாதிக்கு மேல் சேதமாகி விட்டதோடு, மேலும் ஒரு பகுதி மிதிபட்டுக் கிடந்தன. கண்ணில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த போது, நஞ்சன் வந்து சேர்ந்தார். ‘என்ன சென்னா, இப்படி ஆகிடுச்சே? நேத்து ராத்திரி கொஞ்சம் சுதாரிச்சுக் காவல் இருந்திருக்கலாமே’ என்றார். ‘என்னண்ணே செய்யறது. ஒரு அவசர ஜோலியா போக வேண்டி இருந்தது’ என்றார். ‘சனியன் பிடிச்ச யானைங்கோ நேத்துன்னு பாத்து நம்ம பக்கம் வந்துருச்சுங்கோ,’ என்று நஞ்சன் அங்கலாய்த்தார். சென்னனின் மொத்த உழைப்பும் வீணாகப் போனது கண்டு சோகமாக இருந்தனர் ஊர் மக்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? கடந்த இரண்டு வாரங்களாக அந்தக் கிராம மக்கள் தூக்கமின்றி விளை நிலங்களைக் காப்பதில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சென்னன் சற்று ஏமாந்து விட்டார். அவ்வளவுதான்.

இந்தப் பருவத்தில், யானைகள் வருவது வெகு சகஜமான நிகழ்வுதான் என்றாலும், இம்முறை சற்றே அதிகமாகி விட்டது போலத் தோன்றியது. காவிரி நதியோரம் உள்ள காடுகள் வழியே அவை வெகு எளிதில் வந்துவிடும். மனிதர்களுக்குத்தான் இந்த எல்லை மற்றும் மாநிலப் பங்கீடுகள் எல்லாம்! யானைகளுக்கு அவை பொருந்தாது! அவை தண்ணீரும், மேய்ச்சலும் உள்ள இடங்களை நோக்கி பல காத தூரம் பயணிக்கும் வல்லமை படைத்தவை. அத்தோடு, முந்தைய தலைமுறை பயன்படுத்திய வழித் தடங்களை இயல்பாகவே அவை அறிந்திருக்கும். மந்தையை வழி நடத்தும் பெண் யானைக்கு அந்தத் தடங்கள் மற்றும் எந்தெந்தப் பருவங்களில் எங்கெங்கு என்னென்ன கிடைக்கும் என்பதை முந்தைய தலைமுறையிடம் இருந்து அறிந்திருக்கும்; அதை இந்தத் தலைமுறை பெண் யானைகள் அறிந்து கொள்ளும். இப்படிப் பல காலம் பழகிய பகுப்பறிவு அவைகளின் குடும்பச் சொத்து! அந்த வழிகள் தடைப்படும்போது, அடுத்துள்ள நிலங்களை நோக்கிப் படையெடுக்கும் அல்லது நுழைந்து போகப் பார்க்கும். அந்த வேளையில் அந்த நிலங்களில் ருசியான கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தால், ஒரு கை பார்த்து விட்டுத்தான் போகும்!

நஞ்சன் சொன்னார், ‘நீ போய் அக்கிரி ஆப்பீசரிடம் எழுதிக் கொடுத்து விட்டு, பாரஸ்ட் காரர்களிடம் சொல்லி விட்டு வா. அப்போதான் இன்னும் ஆறு மாசத்துலயாவது பணம் கிடைக்கும்’. சென்னன் பெருமூச்சு விட்டுச் சொன்னார். ‘அதுக்கு குறைஞ்ச பச்சம் ரெண்டாயிரமாவது வேணும். அதுக்கு மேலே இன்சுரன்சுகாரர், பாங்க் இதுக்கெல்லாம் காசு வேணும்; பயிர நட பணம் வேணும். எங்க போறது?’ என்றார். ‘என்ன செய்யறது? நம்ம ஊர் கவுண்டர் கிட்ட ஒரு பத்தாயிரம் கடன் வாங்கு. ஆறு மாசத்துல திருப்பிக் கொடுத்திடலாம்’ என்றார் நஞ்சன். ‘அவரு எல்லாம் சேர்த்து பதினஞ்சாயிரமா எடுத்துட்டுப் போயிடுவாரு. நமக்கு ஐயாயிரம்கூட மிஞ்சாது’, என்று சோகமாகச் சொன்னார் சென்னன். ‘விவசாயி கணக்குப் பார்த்தா உழக்குகூட மிஞ்சாதுன்னு தெரியுமில்லப்பா. அப்புறம் என்ன, விடு,’ என்றார் நஞ்சன். இப்படியாக அன்றைய பொழுது போனது.

மாலையில், டி.எஃப்.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள் வந்தனர். ‘அய்யா, நான் பல முறை கூப்பிட்டும் நீங்க யாரும் வரலீங்களே,’ என்றார் சென்னன். ‘என்ன அய்யா செய்றது? ஒரே சமயத்தில் நாலு இடங்களில் இருந்து அழைப்பு வந்திடுச்சு. மற்ற இடங்களில் யானைகள் அதிகம்; என்னிடமோ ஆட்கள் குறைவு. அங்கே முடிஞ்சதும் வரலாம்னு இருந்தோம். முடியவில்லை. வேண்டுமென்றே வஞ்சனை செய்வோமா?’ என்றார் அதிகாரி. அவர் சொன்னதும் சரிதான். முந்தைய மாதம் தான் இரு வேட்டைத் தடுப்புக் காவலர் அடிபட்டு இன்னமும் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். அவர் போகும்போது, ‘எப்போதும் எச்சரிக்கையாக இருங்க,’ என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றார். அப்போது, வனவர், ‘போன முறை கூட நீங்கள் எங்களைக் கவனிக்கவில்லை,’ என்று காதைக் கடித்து விட்டுப் போனார்!

அன்றிரவு, சுமார் இரண்டு மணி அளவில், சென்னன் நாய் குரைக்கும் ஒலி கேட்டு சடாரென்று பெரிய துருவு விளக்கை (பெரிய டார்ச்) எடுத்து அடித்துப் பார்த்தார். அதற்குள் அடுத்த நிலச் சொந்தக்காரர் நஞ்சையா, ‘ஆனெ, ஆனெ’ என்று கத்தினார். சென்னன், கருத்த மூன்று உருவங்கள் அவரது வேலியை அசைப்பதைப் பார்த்தார். டார்ச் விளக்கின் ஒளிக்கற்றையை அவற்றின் கண்களில் பாய்ச்சினார்; அருகிலிருந்த தப்பட்டையை அடித்து பெரிய குரலில் மிரட்டினார். அவை ஒன்றும் மசிவதாகத் தெரியவில்லை. மேலே முன்னேறுவது சரியல்ல என்று பட்டது. காரணம், குட்டிகளும் இருந்தன! யோசிக்கும் போது ஒரு யானை முன்னேறி வந்தது. சென்னன் பின்னால் ஓடி விடலாம் என்று திரும்பும் போது கால் தடுமாறி விழுந்தார்! கதை முடிந்தது என்று அவர் பதற்றத்தில் தடுமாறும் போது, குட்டி ஒன்று பயந்து பிளிறிக் கொண்டு சென்றதைக் கண்டு பெரிய யானையும் பின்னே திரும்பிச் சென்றது. சென்னன் தப்பியது போதும் என்று ஓட்டம் பிடித்தார்.

காலையில் கள நிலவரத்தை ஆராயும் போது, முந்தின நாள் போல பெருத்த சேதம் இல்லை என்றாலும், மேலும் சில மரங்கள் பலியானதைக் கண்டார். மனக்கிலேசத்துடன் இருந்தவரைக் கண்ட நஞ்சைய்யா, ‘ஏனு மாடுவதப்பா? கவுண்டர் கடே ஹொகி, சொல்ப சவரன் அப்பு தொக்கொண்டு பன்னி. ஆமேலே நிம்ம கெலசா நோடி,’ என்றார். அதாவது, கவுண்டரிடம் பணம் கடன் வாங்கி மேல் கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள் என்றார். ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்தைப் பராமரித்துப் பயன் பெறுவதற்கு எத்தனை பிரச்னைகள் என்று வெதும்பினார் சென்னன். கிடைக்கும் பணத்தில் பாதி இப்படி அநியாய வட்டியாகவும் லஞ்சமாகவும் போகிறதே என்ற வயிற்றெரிச்சலுடன், யானைகள் வேறு பழி வாங்குகின்றன. மோசமான மனநிலையில் சென்னன் வீடு திரும்பினார். ஒவ்வொரு வருடமும் இதே கதைதான். மாற்றமில்லை. விடிவு என்பதே இல்லை. சாப்பாடு பிடிக்காமல் ஏதோ குருட்டு யோசனையில் ஆழ்ந்தார். வீட்டில் மனைவி அமைதி காத்தார். அவருக்குத் தெரியும், இது எத்தனை கஷ்டமான நேரம் என்று. இப்படியே ஒவ்வொரு வருடமும் நடப்பதும், கடன்பட்டுப் பட்டுத் திண்டாடுவதும் தொடர் கதை ஆகி விட்டது.

ராத்திரிக்கு இன்னும் இரண்டு மூன்று பேராகக் காவலுக்குப் போவது நல்லது என்று பேசிக்கொண்டதோடு, சென்னனிடமும் எல்லோரும் சொன்னார்கள். பார்க்கலாம் என்று சென்னன் சுருக்கமாக முடித்து விட்டார். ஊரே வெகு அமைதியாக இருந்தது. இரவு எப்போதும் போல எல்லோரும், பெரிய துருவு விளக்கு, வெடிகள், மற்றும் பந்தங்களுடன் சென்றனர், சென்னன் உட்பட. எப்போதும் போல யானைகளும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படையெடுத்தன!

அடுத்த நாள் அதிகாலை வனத்துறைக்குச் செய்தி பறந்தது – ‘மாரண்டஹள்ளியில் முறையற்ற வழியில் வேலியில் மின்சாரம் பாய்ச்சியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன; விவசாயி தலைமறைவு. சோகமான நிகழ்வு,’ எனத் தகவல் சென்று சேர்ந்தது.

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *