ராமசாமி கவுண்டரிடம் இருந்து வாங்கி வந்த அரளிச்செடி மட்டும் சற்று வாடி இருப்பது போல எனக்குத் தோன்றியது. மற்றச் செடிகள் எல்லாம் நன்றாக வளர்ந்து வருகையில், அரளி மட்டும் ஏன் இப்படி சோகை பிடித்தது போல இருக்கிறது என்று கவலையாக இருந்தேன். மறுநாள் தண்ணீர் விடும்போது, நன்றாகச் செடியை நோட்டம் விட்டேன். எதிர் வீட்டுப் பெண், ‘என்ன அங்கிள், அரளிச் செடியை முதன்முதலாக வளர்க்கிறீர்களா?’ என்று கிண்டல் அடித்தாள்! அவளுக்கு என் கவலை எப்படிப் புரியும்? ஒரு வழியாக, சில இலைகளின் அடிப்பாகத்தில் சின்னச் சின்ன வெள்ளை உருண்டைகள், பொட்டுகள் போன்று இருப்பதைப் பார்த்தேன். ஏதேனும் பூச்சிகளாக இருக்குமோ என்று எண்ணினேன். எதற்கும் ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை பார்த்த பின் முடிவு செய்யலாம் என்று பட்டது. அதனால், அன்று ஏதும் செய்யாமல் விட்டு விட்டேன்.
மறு முறை தண்ணீர் பாய்ச்சும் போது, அந்த வெள்ளை உருண்டைகளில் இருந்து சிறிய புழுக்கள் வெளிவந்து கொண்டிருப்பதைக் கண்டேன். இப்போது, விஷயம் ஓரளவு தெளிவானது. ஏதோ ஒரு வண்ணத்துப்பூச்சி இந்த இலைகளில் முட்டை இட்டு இருக்கிறது, அவை தற்போது பொரிந்து, கம்பளிப் புழுக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன, என்பது தெளிவானது.
இப்போது என் ஆர்வம் பல மடங்காகி, என்னை சும்மா இருக்க விடவில்லை! ஒவ்வொரு மணி நேரத்திலும், பல முறை அரளிச் செடியைப் பார்வையிட்டவாறு இருந்தேன். என் நோட்டம் வீண் போகவில்லை! இரண்டு மூன்று முறை, சாதா காக்கை (common-crow) அரளிச் செடியை வட்டமிட்டதோடு, சில இலைகளின் அடியில் அதன் அடி வயிற்றுப் பகுதியை வளைத்துத் தேய்த்ததைப் பார்த்தேன். இவை முட்டை இடுகின்றன என்பதும், சாதா காக்கை வண்ணத்துப்பூச்சி என்பதும் நிரூபணமானது.
இப்போது ஆராய்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியது! அரளிச்செடி சாதா காக்கை வண்ணத்துப்பூச்சியின் உணவுச்செடிதானா என்பதுடன், இது குறித்த தரவுகள் ஏதும் உண்டா என்ற விவரங்கள் குறித்து அறிய முற்பட்டேன். முதலில் நினைவுக்கு வந்தவர் முனைவர் பானுமதி. அவரை எங்கள் வட்டங்களில், பாவை பானு என்றுதான் அறிவர். காரணம், அவரது முனைவர் பட்டம், பாவைக் கூத்து பற்றியதாக இருந்ததுதான். அவரது பல, பிற திறமைகள் எல்லோருக்கும் தெரியாது. சிறந்த இயற்கைக் கல்வியாளர்; வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப் பூச்சிகள் குறித்து நல்ல ஞானம் கொண்டவர்; நல்ல பறவையாளர்; பாவைக் கூத்து பற்றி நன்கறிந்தவர் என்று பலவற்றைக் கூறலாம்! இங்கு அவர் பற்றிப் பேசி நாம் நமது விஷயத்தை விட்டு விட வேண்டாம்! இது குறித்துக் கேட்டவுடன், அவர் அரளிச்செடி சாதா காக்கை வண்ணத்துப்பூச்சியின் உணவுச் செடிதான் என்றும், வெகு இயல்பாக அவை அரளியைக் குறிவைக்கும் என்றும், பல தரவுகள் வலையில் கிடைக்கும் என்றும் கூறினார்.
அடுத்த ஒரு வாரத்தில், சின்னச் சின்னப் புழுக்கள் பெரிய கம்பளிப் புழுக்களாக ஆனதோடு, மிகுந்த வண்ணங்கள் கொண்டதாகவும் மாறின. அடையாளம் தெரியாத அளவுக்கு அந்தக் கம்பளிப் புழுக்கள் கொழுத்து, கொம்புகளுடன், பல வண்ணங்களில் ஒளிர்ந்தன. ஓரிரண்டு புழுக்கள், சின்னதாக ஒரு கூண்டைக் கட்டி அதனுள் சென்று கூட்டுப்புழு பருவத்தைக் கழிக்கத் தயாராகி விட்டன! நான் நன்கு வளர்ந்த புழுக்களையும், கூண்டுகளையும் படமெடுத்துப் பானுவுக்கு அனுப்பி, மேலும் அவற்றின் அடையாளத்தை உறுதி செய்து கொண்டேன். எனக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல, பல இயற்கை விந்தைகளை அறியவும் ஒரு சந்தர்ப்பம் ஆனது. அத்தனைச் சிறிய கூண்டிற்குள் அந்தப் புழு கிட்டத்தட்ட 10 நாட்கள் உணவின்றி, காற்றின்றி எப்படி உருமாறுகிறது என்பது பெரும் விந்தையாக இருந்தது! எப்படித் தன்னைச் சுற்றி, தானே எச்சிலால் ஒரு கூண்டைக் கட்டிக் கொள்கிறது எனப் பல இயற்கை விந்தைகளைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
ஆரம்பத்தில் சின்னதாக இருந்த புழு சற்றுப் பெரிதாகி, அரளி இலைகளையே உணவாகக் கொண்டு வளர்ந்தன. இதன் காரணமாக, செடி சற்றே சோகை பிடித்தது போல இருந்தது. பல வண்ணத்துப் பூச்சிகள் ஒரே செடியை நாடினால், இப்படித்தான் ஆகும்! அருகில் பல அரளிச் செடிகள் இருந்தாலும், இந்த ஒரு செடி மீதுதான் பல வண்ணத்துப் பூச்சிகள் வந்தடைந்தன. இளந்தளிர்கள் அதிகமா அல்லது உண்ண வசதியான நிலையில் இருந்தனவா என்பது மற்றொரு ஆராய்ச்சியால்தான் அறிய முடியும்! இயற்கை இதுபோல பல விந்தைகளை நம் கண்ணெதிரே நிகழ்த்தினாலும், எத்தனை பேர் அதைப் பார்க்கத் தயார் என்பது ஒரு பெரிய கேள்விதான்! வாழ்க்கை எவ்வளவு சுலபம் என்பதை இயற்கையை நுணுகிப் பார்த்தால் புரியும். ஆனால், பார்க்கப் பெரும்பாலானோர் தயாரில்லை என்பதோடு, வேறு பல பணிகளை மிக முக்கியம் என்று கருதி வாழ்க்கையைத் தொலைக்கிறோம்!
வண்ணமயமாக புழுக்கள் இருப்பதால், மற்ற விலங்கினங்கள் அவற்றை நெருங்குவதில்லை. இருந்தும், சில புழுக்கள் மற்ற விலங்கினங்களுக்கு இரை ஆவதுண்டு. நன்கு உண்டு கொழுத்து, ஒரு பத்து நாட்கள் கூட்டுப்புழுவாக இருக்கத் தயார் செய்து கொண்ட பின், ஓர் இலையின் காம்பில் தன்னை இணைத்துக் கொண்டு, தமது எச்சில் மற்றும் பிரியும் மேல் தோல் துணை கொண்டு ஒரு கூட்டைத் தன்னைச் சுற்றி உருவாக்குகிறது. அது ஒரு சரவிளக்கு போல சில பல இலைகளின் அடியில் பல வண்ணங்களில் தொங்கும். காரணம், கூட்டின் முதிர்ச்சியைப் பொறுத்து அதன் நிறம் மாறும்.
நன்கு வளர்ந்த கூடு அதிகக் கருமை கொண்டிருக்கும். இடைப்பட்டது சற்று மஞ்சள் கலந்த பச்சையாக இருக்கும். அரளிச் செடியில் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்தது போல ஜாஜ்வல்யமாக இருக்கும். அதன் பின், நல்ல கருநிறம் அடைந்த கூட்டில் இருந்து முழு வளர்ச்சி அடைந்த வண்ணத்துப் பூச்சி மெதுவாக வெளி வரும். காரணம், அதன் கால்கள் மற்றும் உறிஞ்சு குழல் (மிக மென்மையானவை) மடக்கி வைக்கப்பட்ட நிலையில் இருந்து, நிதானமாக வெளிக்கொணரப்பட வேண்டும்! இல்லையெனில், உடைந்து போக வாய்ப்பு உண்டு! அதன் பின் கூட்டின் மேலேயே சற்று ஓய்வு எடுத்து விட்டு, செடியின் கிளைகளில் தங்கி இளைப்பாறி பின் பறக்கும். இவை (சாதா காக்கை) விஷமுள்ள வண்ணத்துப் பூச்சிகள் என்பதால், பறவைகள் பெரிதும் விரும்புவதில்லை; வேட்டையாடுவதில்லை.
இப்படியாக, ஒரு பத்து சாதா காக்கை வண்ணத்துப் பூச்சிகளின் உருமாற்றத்தை நான் என் ஜன்னல் வழியே கண்டு ரசிக்க முடிந்தது. முட்டை விரிந்து புழுக்கள் வந்த உடன், எனது முழு நேர கவனம் அவற்றின் மீதுதான் இருக்கும். கூட்டுப்புழு நிலையில், கூடுகள் பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை; கூட்டைப் பிளந்து வரும் போது சேதம் இல்லாமல் வர வேண்டுமே என்ற கவலை; பின்னர் நல்லபடியாகப் பறந்து செல்ல வேண்டுமே என்ற கவலை எனப் பல நிலைகளில் பதற்றம் அடைந்தாலும், இந்த உருமாற்ற நிகழ்வு என்னைப் பல விதங்களில் வாழ்வைப் புரிந்து கொள்ள உதவியது என்றால் தவறில்லை!
(தொடரும்)
படங்கள்: தாமஸ் வட்டக்கவென்