Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #7 – நாடகம்

நாடகம்

கொம்பனுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. மலை அடிவாரத்தில் இருந்து தினமும் இடைப்பட்ட தடங்கல்களைத் தாண்டி தண்ணீரும் உணவும் கிடைக்கும் விளைநிலங்களை நாடி வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வழியில் ரயில் பாதை, வாகனங்கள் சீறிப் பாயும் சாலை, மற்றும் ஆலைகள், குடியிருப்புகள் எனப் பல தடைகள். அத்துடன் மானிடப் பதர்களின் இடையறா விரட்டல்கள். என்றாலும் கடந்த நான்கைந்து நாட்களாக மனிதர்களின் இடையூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. ஆனால் வேறு வழியில்லை; கொம்பனுடன் இணைந்த வேறொரு யானைக் கூட்டம் இந்தப் பகுதியில்தான் நடமாடிக் கொண்டிருக்கிறது. அதில்தான் அவனது காதலியும் இருக்கிறாள். எனவே இன்றும் இருட்டியபின் ஒரு முறை சென்றே தீர்வது என்ற முடிவுடன் புறப்பட்டான்.

வனப் பாதுகாவலர் அபூபக்கரின் அலுவலகத்தில் கடைசி நேர ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தது. முதன்மைக் காட்டுயிர் காப்பாளர் குல்கர்னி போன் செய்து, ‘என்னா அபூபக்கர் சாப், tusker ஐ பிடிக்க ஏற்பாடு செய்தாச்சா? நீங்கோ எது செஞ்சாலும் சரி, புடிச்சிடுங்கோ. நீலகிரிலே மேன் ஈட்டிங் டைகரைப் பிடிச்சா மாதிரி செஞ்சாலும் சரி. நானு கண்டுக்க மாட்டேன்,’ என்றார்.

இதைக் கேட்ட அபூபக்கர், ‘என்ன செய்வீர்களோ தெரியாது. இந்தக் கொம்பனைப் பிடிச்சே தீரணும். அமைச்சரிலிருந்து உள்ளூர் கட்சிக்காரன் வரை படுத்தும் பாடு தாங்கவில்லை. இது இல்லாமல் மீடியாக்காரன் வேறே’ என்று தன் சக அலுவலர்களிடம் அலுத்துக்கொண்டார்.

‘சார் கொம்பன் என்பதால்தான் இத்தனைப் பிரச்னை, நல்ல ட்ராக்கர் இருந்தாலும் நெறைய ரிஸ்க்தான்’ என்றார் கால்நடை மருத்துவர் சிங்காரம். ‘அதுதான் கும்கிங்க இருக்கே’ என்றார் பாதுகாவலர். ‘சார் கொம்பன் கும்கிங்க இருக்கிற இடத்துக்கு வரணுமே. வேற வழியிலே போய்ட்டா…’ என்று இழுத்தனர் மற்ற அதிகாரிகள்.

‘அப்ப நஞ்சனைக் கூப்பிடுங்கப்பா’ என்றார் அபூபக்கர். நஞ்சன் கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆன பழங்குடி இனத்தவர். யானைக் காடுகளிலேயே சிறு வயது முதல் வாழ்ந்து பழகியதால் யானையைப் பற்றிய நல்ல அறிவும் அதன் பழக்க வழக்கங்களை நன்கு புரிந்தும் செயல்படக்கூடியவர். ஆனால் இன்றும் கடைநிலை ஊழியராகவே இருப்பவர். யானைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பல ஆராய்ச்சியாளர்களும் விரும்பித் தேடும் வனவிலங்கு வழிகாட்டி அவர். காட்டிலே பணி புரிவதை ஒரு பெருமையாகக் கருதுபவர்.

நஞ்சன் வந்ததும் எல்லோரும் பெரிய நிம்மதி அடைந்தனர். ‘வாப்பா நஞ்சன், நீதான் எங்க எல்லோரையும் காப்பாத்தணும்’ என்றதும், ‘ஐயா ஏனுங்க பெரிய பேச்செல்லாம், நான் உங்க ஸ்டாப் ஐயா. எப்பிடியும் பிடிச்சிரலாம்ங்க. மின்னே ஒரு பூசை போட்டே ஆவணுங்க’ என்றார்.

எல்லாப் பழங்குடிகளும் காட்டில் போவதற்கு முன்போ அல்லது விலங்குகளைப் பிடிக்கப் போகும்போதோ கட்டாயம் அவரவர் மரபுப்படி தெய்வங்களை வேண்டுவதுடன் பூஜையும் போடுவர் . அதில் சிறிய பலியும் இடப்படும். இது அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும், விலங்குகளுக்குத் துன்பம் நேரிட்டால் அதிலிருந்து வரும் இடர்களைத் தெய்வம் மன்னிக்கும் என்ற அமைதியையும் தரும். ஜீஷன் அலி போன்ற பகுத்தறிவுவாத சுற்றுச்சூழல்வாதிகள் அதைக் கேலி செய்தாலும், பழங்குடிகள் அவர்களது பாரம்பரிய வழக்கங்களை விடுவதில்லை.

அமைச்சர் கோவன் பெரும் கோபத்தில் இருந்தார். ‘தேர்தல்லே அந்தப் பகுதி மக்கள் எல்லாம் நமக்குதான்யா வோட்டு போட்டிருக்கானுங்க. எம்எல்ஏ போனெப் போட்டு வறுக்கிரான்யா. என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ இதுக்கு ஒரு முடிவு கட்டணும். யானை செத்தாலும் சரி, பிரச்னை முடியணும். சும்மா பேசிக்கிட்டு திரியாதிங்க’ என்று கடித்தார்.

முன்பே மற்ற டிராக்கர்கள் கொம்பனின் தினசரி நடமாட்டத்தைக் கண்டு வைத்திருந்ததாலும், தோட்டக்காரர்கள் இரவு ரோந்தில் கொம்பனின் பழக்கங்களைக் கண்டிருந்ததாலும், நஞ்சனுக்கு அதன் வழக்கமான பாதையைக் கண்டுபிடிப்பது கடினமாயில்லை. மேலும் தோட்டங்களுக்கும் பிரதான சாலைக்கும் இடையே உள்ள குட்டையில் நீர் குடிக்கும் பழக்கத்தையும் கண்டதால் வேலை இன்னும் எளிதாயிற்று. அத்துடன் மனிதர்களைக் கண்டு அஞ்சும் குணம் அறவே கொம்பனிடம் இல்லாததால் பெரிதாக மறைந்திருந்து முடிக்கத் தேவையில்லாது போயிற்று.

கொம்பன் பெரும்பாலும் ஒரே தடத்தில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் வனத்துறையினர் கும்கிகளை அதன் இரு புறமும் அதன் பார்வையில் படாதவாறு நிலைப்படுத்தினர். ஆயினும் யானையின் மோப்ப சக்தி அபரிமிதமானது, வெகு தொலைவிலிருந்தே மனித வாடையை அறிய இயலும். இருந்தாலும் கும்கிகளின் வாடையும் இருப்பதால் கொம்பன் பெரிதாகச் சந்தேகப்பட வாய்ப்பில்லை என்று வியூகம். நஞ்சன் முன்னே சென்று கொம்பன் வரும் வழியைத் தெளிவாக அறிந்த பின் மற்றவர்களுக்குச் சமிஞ்ஞை தருவதுடன் கொம்பனின் உடலில் மயக்க மருந்தினைச் செலுத்தவும் உதவ வேண்டும் என்பது திட்டம். இந்த வேலை கொம்பன் நீர் அருந்த நிற்கும் குட்டைக்கு அருகிலேயே நடக்க வேண்டும் என்றும் முடிவானது. காரணம் அந்நேரம் அவன் சற்றே சூழலை மறந்து தாகத்தைத் தணித்துக்கொள்ளுவதிலேயே கவனமாக இருப்பான். மயக்க மருந்து செலுத்தும் முன்பு கும்கிகள் முன்னே சென்று மிகப் பெரிய வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கொம்பன் அவர்களது பார்வையில் இருந்து ஓடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடு.

கொம்பன் இப்படி அடிக்கடி தோட்டங்களுக்குள் வந்து தொல்லை கொடுப்பதைத் தோட்டத்துச் சொந்தக்காரர்கள் விரும்பவில்லை என்பதோடு வனத் துறையையும் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். ‘இந்த முறையும் வனத் துறை நடவடிக்கை எடுக்கலைன்னா பேசாமே கரெண்ட இழுத்து விட்டிற வேண்டியதுதான். எத்தினி நாள்தான் சும்மா இருக்கிறது? மத்திய அரசு வேற பயிர்களை அழிக்கிற மிருகங்களைக் கொல்லலாம்னு சொல்லிடுச்சே, அப்பறம் என்ன?’ என்றார் ஊர் கவுண்டர். ‘போனைப் போட்டு DFO ஐயாகிட்டவும் எம்எல்ஏ கிட்டவும் சொல்லிடுவோம்’ என்று முடிவெடுத்தனர். ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன் வரை இந்தத் தோட்டங்கள், கல்லூரிகள், மற்ற ஆலைகள் உள்ள இடங்கள் எல்லாம் யானை வழித் தடங்களாக இருந்தன. அப்போது விலங்குகள் ஊருக்குள் புகுவதென்பது நடைபெறாத சமாசாரமாக இருந்தது. காரணம், இத்தனை வளர்ச்சி (!?) அந்தப் பகுதியில் இல்லை.

நிலைமை தனக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணராத கொம்பன் தன் பயணத்தைத் தொடங்கினான். வடகிழக்கில் சிமெண்ட் ஆலை தூரத்தில் தெரிந்தது. ரயில்வே தண்டவாளத்தை எப்போதும் போல ரயில் வராத சமயத்தில் கடந்தாயிற்று; சற்று முன்பு ஒரு யானைக்கூட்டம் போனது தெரிந்தது. இனி உள்ள தடை நெடுஞ்சாலைதான். அதன் பின் மனிதர்கள்தான். ஆனால் அவர்களைக் கண்டு கொம்பன் என்றும் பயந்தது இல்லை. கட்டாயம் தொல்லை தருவர் என்றாலும் மிரட்டும் அளவுக்குத் தைரியம் இல்லாதவர்கள் என்று கொம்பன் புரிந்து வைத்திருந்தான்.

கொம்பன் தனது மனம் போலத் தோட்டத்திலுள்ள பயிர்களை மேய்ந்து விட்டுப் பார்த்தால் விடிகாலை ஆனது தெரிந்தது. சற்றே விரைவாகவும் கவனக் குறைவாகவும் திரும்பி வரத் துவங்கும்போது, குட்டையில் தண்ணீரும் குடித்து விட்டே போகலாம் என்று நின்று நீரை அருந்தத் துவங்கினான். நான்கைந்து முறை குடித்த பின் விலாவில் சுளீர் என்று ஏதோ தைத்தது போல இருந்ததோடு எரிச்சலும் தொடங்கியது. ஏதோ விபரீதம் என்று புரிந்து வழக்கமான பாதையில் விரையத் துவங்கினான். சற்றுப் பயணித்ததும் மனித வாடையுடன் யானை வாடையும் வருவது கண்டு சற்றே குழம்பிப் போய் பாதையை மாற்றலாமா என்று யோசித்து நின்ற வேளையில் யானை வாடை அருகே வரத் துவங்கியது. சுதாரித்து முடிவெடுக்கும் முன் மனிதர்களும் அங்குமிங்கு தொலைவில் ஓடுவது வேறு குழப்பியது. யானைகளைக் கண்டா அல்லது வேறு எண்ணங்களோடு மனிதர்கள் வந்துள்ளனரா என்று புரியாமல் நின்ற அந்த சில நிமிடங்கள் கொம்பனின் சுதந்திர வாழ்வைப் பறித்து விட்டன.

கொம்பன் பார்த்துக்கொண்டே இருக்கும் வேளையில் நான்கு கும்கிகளும் சுற்றி வளைத்து நிற்க நஞ்சன் உதவியோடு சற்றுத் தூரத்திலிருந்தே சிங்காரம் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தினார். பின் பக்கம் எரிவது போன்ற உணர்வுடன் இங்கிருந்து ஓடுவதே நல்லது என்று அடி எடுக்கும் போதுதான் கொம்பனுக்கு தான் நடப்பதே இயலாமல் போனது தெரிந்தது. பெரு முயற்சியுடனும் பயங்கரப் பிளிறலுடனும் செய்வதறியாது தடுமாறித் துடிக்கும்போது சுருக்குக் கயிறுகளைக் கொண்டு கொம்பனைப் பிணைத்தனர். ஆபரேஷன் கொம்பன் என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த முயற்சியை முன்கூட்டியே அறிந்து கொண்ட மக்கள், மீடியாக்காரர்கள், பெரும் திரளாகக் கூடி இருந்தனர். மக்கள் வெறி கொண்டவர்கள் ஆகி கொம்பனைப் பிடித்ததை ஒரு சாகசமாக எண்ணி ஆர்ப்பரித்தனர்.

கொம்பன் இனி நம் பலம் கொண்ட மட்டும் போராடுவதுதான் நல்லது என்ற முடிவுடன் கும்கிகளின் இழுப்புகளுக்கு வளையாமல் நின்றான். கும்கிகளோ கொம்பனை முழு வேகத்துடன் முட்டியும் குத்தியும் வனத்துறை வண்டியில் ஏற்றப் பார்த்தன. உடலெல்லாம் காயத்துடனும் மனமெல்லாம் வெறுப்புடனும் கொம்பன் முடிந்த வரை போராடி மேலும் ரத்தக் களரியானான். மயக்க மருந்தின் விளைவும் சேர சோர்ந்து போய் கும்கிகள் தள்ளி விட்டு வண்டியில் சென்று விழுந்தான்.

கூடியிருந்த மக்கள் ஒரு வீர தீரச் செயலைக் கண்டதுபோலக் கொண்டாடினர். சிங்காரம் கையில் மறுபடி மயக்கமருந்து துப்பாக்கியை எடுப்பது கண்டு நஞ்சன் பதறி, ‘ஐயா என்ன செய்யப் போறீங்க?’ என்றார். ‘இந்த யானை முதுமலை வரை போகணும். அதனாலே இன்னொரு டோஸ் மயக்க மருந்து கொடுத்திருவோமேன்னு பாக்குறேன்’ என்றார். ‘வேணாம் ஐயா ஏற்கெனவே ரொம்ப மோசமாயிருச்சு. யோசிச்சுச் செய்ங்க’ என்றார். சிங்காரம் அவரை ஒரு நெடிய பார்வை பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாமல் இரு முறை இப்புறமும் அப்புறமும் நடந்து விட்டு துப்பாக்கியை எடுத்து மீண்டும் ஒரு டோஸ் மருந்தை கொம்பனின் உடலில் செலுத்தினார். அதிர்ந்து அடங்கியது கொம்பனின் உடல். துதிக்கை வண்டியின் பக்கவாட்டுக் கம்பிகளில் பாம்பு போலப் பிணைந்து நின்றது. அரை மயக்கமாகக் கொம்பன் அவஸ்தையில் நின்ற நிலையில் அவனது பயணம் தொடங்கியது.

முதுமலையில் மீண்டும் சித்ரவதை. அடித்தும் கும்கிகளைக் கொண்டும் கொம்பனை க்ராலில் (மரக் கூண்டு) தள்ளினர். குற்றுயிரும் கொலையுயிருமாக எதுவும் பிடிக்காமல் வெறி பிடித்தது போல் க்ராலில் முட்டி மோதியவாறு கொம்பன் பலத்த குரலில் பிளிறியவாறு நாளெல்லாம் கழித்தான். மலை அடிவாரக் காடுகளின் நினைவும், காதலியின் நினைவும், சுதந்திரப் பறவையாகத் திரிந்ததும் மங்கலாக நினைவில் ஓடியது. வெளியில் வருவது இயலாதோ என்று என்னும் போதே துக்கம் பொங்கியது. இவற்றுடன் பாழாய்ப்போன மயக்க மருந்தின் விளைவு வேறு என்னென்னவோ செய்யத் துவங்கியது. மெல்ல மெல்ல நினைவிழக்க ஆரம்பித்து உடலும் அடங்க ஆரம்பித்தது. விபத்தில் சிக்கியவரைப் போன்ற சொல்லொணாத மன வேதனை தாக்கியதில் இதயம் துடிக்க மறந்தது. கொம்பன் மீளாத்துயிலில் ஆழ்ந்தான்.

நஞ்சன், கொம்பனின் மரணம் கேட்டு வாய் விட்டு அழுதார். ‘என்ன பாவம் பண்ணிட்டேன் ஐயா! எத்தினி வருஷம் யானை டாக்டர் மூர்த்தி ஐயாவோடு போயிருக்கேன். ஒரு வாட்டி கூட எந்த யானைக்கும் கேடு வந்ததில்லையே. அவரு ஊசி போடறதும் தெரியாது; யானையைக் கொண்டு வரதும் தெரியாது; நாங்க கூட பயந்துக்குவோம், அவரு பீல்ட்லே நின்னு வெளையாடுவார். அது மாதிரித்தான் நடக்கும்னு நினைச்சேன். இப்புடி ஆயிடுச்சே’. என்ன அழுதும் பயன் இல்லை என்றாலும் அவர் அதிர்ந்து போனார். காட்டுயிருடன் வாழ்ந்தவர் ஆயிற்றே.

தோட்டக்கார கௌண்டரும் ஊர் மக்களும் உடனே போஸ்டர் அடித்து அஞ்சலி செலுத்தினர். இது ஏதோ தலைவரின் மரணம் போல! இருந்தவரைக் கொல்ல நினைத்துவிட்டு இப்போது கூலிக்கு மாரடிப்பு! நாளை தேங்காய் பழம் வைத்துப் பூஜையும் போடலாம்!

சென்னையில் அமைச்சர் வனவிலங்கு விழாவில், ‘யானைகள் மதிப்பிற்கு உரியவை; விநாயகரின் அம்சம்; காட்டின் உயிர்நாடி’, என்று அடுக்கு மொழியில் கவித்துவமாகப் பேசிக்கொண்டிருந்தார், முதன்மை காட்டுயிர் காப்பாளர் குல்கர்னி சகிதம்!

வனத்துறை இந்த மரணம் யானை க்ராலில் முட்டி மோதி ஏற்பட்ட காயத்தால் நேர்ந்தது என்று ஒரு கால்நடை மருத்துவர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்து தன் கடமையை முடித்துக்கொண்டது.

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *