Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

கருந்தேள்

காட்டுயிர்களைக் காண நாம் எப்போதும் காடுகளுக்குப் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம் செடி கொடிகளை நன்றாக உற்றுக் கவனித்தாலே போதும். அங்குப் பல நாடகங்கள் அரங்கேறும்; கவிதைகள் புனையப்படும்! கருத்தூன்றிப் பார்த்தால், பல நிகழ்வுகள், விஷயங்கள் புலப்படும்! அன்று மாலை நடைப் பயிற்சிக்கு பண்ணாரி சாலையைத் தேர்ந்தெடுத்தேன். ஒரே பாதையில் போவதை விடத் தினமும் ஒவ்வொரு பாதையில் போவது ஒரு நிறைவைத் தரும். மேலும், பண்ணாரி சாலை விஸ்தாரமாக இருபுறமும் புளிய மரங்கள் அடர்ந்து நிற்பதால், நடைப் பயிற்சிக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். மைசூரு போகும் சாலை என்பதால் போக்குவரத்து அதிகமாக இருந்தாலும், பெரிய அளவில் ஒரு தொந்தரவாக இருக்காது. நல்ல காற்றும், இயற்கைச் சூழலும் நடைப் பயிற்சிக்குத் தோதாக இருக்கும்.

ஊரின் எல்லைக்குள் இருக்கும் சாலையின் இரு மருங்கிலும் நிற்கும் புளிய மரங்களில், மாலை நேரம், கொக்குகளும், நாரைகளும் வந்து அடையும் காட்சியோடு நடைப் பயிற்சி தொடங்கும்! கூட்டம் கூட்டமாக அவை புளிய மரங்களில் வந்து அமரும் அழகே தனி. முதலில் நீர்க் காக்கைகள் சாரி சாரியாக வரும்; பின்னர் வெண்கொக்குகள் அணிவகுத்து வரும்; அதன் பின்னர் வக்காக்கள் இரவு வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்லும்; கடைசியாக, பெருங்கொக்குகளும், நாரைகளும், மடையான்களும் வந்து அடையும். அந்த ஒரு கி.மீ. தூரமுள்ள சாலையே ஒரு திருவிழாக் கோலம் பூண்டு விடும், சுமார் அரை மணி நேரத்திற்கு! ராமகிருஷ்ண பரமஹம்சர் கொக்குகள் நீலவானின் பின்னணியில் பறக்கும் அழகில் மோன நிலை அடைந்தார் என்று சொல்வது சரிதான் என்று ஒவ்வொரு முறை இந்தக் கொக்குகளின் அணிவகுப்பைப் பார்க்கும் போது நினைப்பதுண்டு! கூடு வைக்கும் காலங்களில் கேட்கவே வேண்டாம், இங்கு எப்போதும் கொண்டாட்டம்தான்! நாளின் எந்த நேரமும் பறவைகள் வட்டமிட்டபடி இருக்கும்.

நல்ல காலம், இன்று வரை புளிய மரங்கள் வெட்டப்படாமல் இருக்கின்றன; சாலை விஸ்தரிப்பு என்ற பெயரில் எந்தச் செயலும் இல்லை. ஆயினும் இது எத்தனை நாள் நீடிக்கும் என்பது ஒரு புதிர்தான்! காரணம், முன்பே சொன்னது போல, இது மைசூரு போகும் நெடுஞ்சாலை! இது போக, சாலையின் இரு மருங்கிலும் உள்ள கடைக்காரர்கள் இது வரை இப்பறவைகளை ஒரு பெரிய தொந்தரவாக நினைக்கவில்லை. இப்படித்தான் மூன்றடைப்பு ஒரு காலத்தில், திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் நல்ல நீர்ப்பறவை சரணாலயமாக இருந்தது. குறிப்பாக, கூழைக்கடாக்கள் சாலை ஓர மரங்களில் கூடு வைத்து இனப்பெருக்கம் செய்தன. நாளடைவில், அவை அருகி, மொத்தமும் காணாமல் போயின. பல காரணங்கள் – பறவை எச்சம் சாலையோரக் கடைக்காரர்களை இம்சைப்படுத்தின; முட்டைகள் உடைந்து கூரைகளில் விழுந்தன; கடைக்காரர்கள் தேவைக்கு முட்டைகளைத் திருடினர்! இறுதியில், பறவைகள் அங்கிருந்து ஓடிப் போயின!

நெடுஞ்சாலையில் இன்னும் சற்று தூரம் போன பின்பு, ஒரு புறம் வயல்வெளிகள் தென்படும். மற்றொரு புறம் வீடுகள் அல்லது கடைகள் காணும். அங்கங்கு, புதிய குடியிருப்புகள் கண்ணில்படும். ஆயினும், கெஞ்சனூர் பிரிவில் இருந்து சற்றுப் பசுமை மிகுந்திருக்கும். அங்கு மயில்கள், செம்போத்து, மரங்கொத்தி போன்ற பறவைகளைச் சாதாரணமாகப் பார்க்கலாம். இன்னும் ஒரு நான்கைந்து மைல் சென்றால், இரவு 8 மணிக்கு மேல், யானைகளைக் காணலாம்! வலதுபுறம் வேலமரக் காடுகள் மலை அடிவாரம் வரை நீண்டு கிடப்பதால், யானைகள் இந்தப் பகுதிகளில் சாலையைக் கடந்து எதிர்புறம் உள்ள காப்புக் காடுகளில் நுழைந்து வேறு இடங்களுக்குச் செல்லும். ஆயினும், நடைப் பயிற்சிக்காக அத்தனை தூரம் போக இயலாது என்பதோடு, அர்த்தமற்ற வேலை என்பதாலும், ஒரு 5 கி.மீ. தூரத்தோடு முடித்துக் கொள்வது வழக்கம்.

அப்படித் திரும்பி வரும் பொழுது, தண்ணீர் மேல்நிலைத் தொட்டி (வாட்டர் டேங்க்) அருகே தரையில் ஒரு சிறிய பிராணி ஓடுவது போலத் தெரிந்தது. அந்திக் கருக்கலில், வெளிச்சம் இல்லாததால், முதலில் என்னவென்று தெளிவாகவில்லை. நான் ஒரு 50 மீட்டர் தொலைவில் இருந்தேன். சற்று அருகே வந்ததும், அது ஒரு பெரிய கருந்தேள் என்று உணர்ந்தேன். தொட்டி இருக்கும் இடத்தை ஒட்டி, குப்பை அதிகம் காணப்படும். உடைந்த செங்கற்கள், கட்டட இடிபாடுகள், கண்ணாடிக் குப்பிகள் என்று ஒரு குப்பைக் கிடங்கு போல அந்த இடம் இருக்கும். தேள், பூரான் போன்ற ஜந்துக்கள் வாழத் தோதான இடம்! அங்கிருந்து, கருந்தேள் என்ன காரணத்தால் புறப்பட்டு வந்தது என்றறிய அந்தக் குறுகிய நேரத்தில் இயலவில்லை. ஆனால், அது அப்போது சாலை விளிம்பில் வந்து விட்டது. நான் முன்பே சொன்னது போல, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. நொடிக்கொரு வண்டி கடந்து செல்லும் இடம். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

வேறு ஏதேனும் உயிரினம் என்றால் ஓடிச் சென்று தள்ளி விடலாம் அல்லது விரட்டி விடலாம். பெரிய கருந்தேள் கொடுக்கினை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிற்கும் போது, என்ன செய்வது என்று விளங்கவில்லை! கருந்தேள் சாலையைக் கடக்க முடிவு செய்தது போல, இன்னும் முன்னேறியது! நான் இப்போது 30 அடி தூரத்திற்குள் வந்து விட்டேன். எதிரே சாலையில் ஓர் ஆறு சக்கர லாரி வந்து கொண்டிருந்தது! நிச்சயம் கருந்தேள் பிழைக்காது என்று தோன்றியது. முன்னும் பின்னும் பல வகை வாகனங்கள், லாரியைத் தவிர! அன்று கருந்தேளின் முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்றே நான் நினைத்தேன். அப்போது, ஒரு சைக்கிள்காரர் தேளின் முன்பு (வெகு அருகில்) கடந்து போனார்! கருந்தேள் ஒரு நொடி தாமதித்தது. பின் சட்டென்று திரும்பி, வந்த வழியில் பின்னோக்கிப் போனது. அதாவது, குப்பை மேட்டை நோக்கித் திரும்பி ஓடியது! ஆறு சக்கர லாரி சாலையின் விளிம்பில் இருந்து சற்றே விலகிக் கடந்து போனது!

இந்தச் சம்பவத்தை எழுத எனக்கு இத்தனை நேரம் பிடித்தது; படிக்க உங்களுக்கு ஒரு நிமிடமாவது பிடித்திருக்கும். ஆனால், அன்று இவை யாவும் 15லிருந்து 20 வினாடிகளுக்குள் நடந்து முடிந்தது! கருந்தேள் பார்வையில் பட்டதிலிருந்து லாரி கடந்து போகும் வரை ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போன்ற அனுபவம்! கருந்தேள் தப்பித்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும், அது எத்தனை நாள் இது போல யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் என்பதும் கேள்விக்குறி தான். நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து, சிறிய உயிரினங்களுக்கு எப்போதும் எமன் தான் என்றாலும், இது ஓர் அதிகப்படியான கவலையோ என்றும் தோன்றுகிறது. தீர்வு என்ன என்பது புலப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு முறை தண்ணீர்த் தொட்டியைக் கடக்கும் போதும், இந்த நிகழ்வு மனதில் நிழலாடுவது என்னவோ உண்மைதான்!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *