Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்

ராமேஸ்வரமும் பறவைகளும்

பறவை நோக்கர்கள் (bird watchers) எல்லோருக்குமே ஒவ்வொரு முறை ஒரு பயணம் மேற்கொள்ளும் போது, ஏதாவது வித்தியாசமான பறவையைக் காண வேண்டும் அல்லது பிரமிக்கத்தக்க வகையில் பயணம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இது இயற்கை என்றாலும், சாத்தியமா என்பது நல்ல கேள்வி என்பதோடு, தர்க்க ரீதியாகவும் வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை! ஆயினும், இது வாய்ப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ள இடம் ராமேஸ்வரம் என்றால் பலரும் ஆச்சரியப்படுவர். ஒரு புண்ணியஸ்தலம் எப்படிப் பறவை நோக்கர்களின் விருப்ப இடமாகப் போனது என்று புரிந்து கொள்ள நாம் பறவைகளின் வலசை பற்றிச் சற்றே அறிந்து கொள்ள வேண்டும். இந்த வலசை (migration) தான் நம் நாட்டுக் கிழக்கு கடற்கரைக்குப் பல விதேசி (வெளிநாட்டு) பறவைகளைக் கொண்டு சேர்க்கிறது.

ராமேஸ்வரம் ஒரு தீவு என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள். ராமநாதபுரத்தில் இருந்து ஒரு நீண்ட சாலை மண்டபம் வரை இரு மருங்கிலும் கடற்கரையோடு குறுகி, பாம்பனின் முன்பு முடிந்து விடும். அங்கிருந்து கடலின் மேலே அமைந்த சாலை வழியோ அல்லது ரயில் வழியோ தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். இந்த ரயில் வழி மிகவும் பிரபலமான ஒன்று என்பதோடு, மனதை அள்ளும் எழில் கொண்டது! இருபுறமும் நீலக்கடல்; அங்கங்கு தோணிகள்; தொலைவிலே தீவுகள்; வெண் மேகக் கூட்டங்கள் என்று ஓர் எழில் ஓவியமே கண்முன் விரியும்! சரி, நாம் இப்போது பறவைகளைக் குறித்துக் கவலைப் படுவோம்!

இந்த நீண்ட கடற்கரையும், அதனை ஒட்டியுள்ள மணல் பரப்புகளும் வலசை வரும் உள்ளான்களின் (waders) மற்றும் நீர்வாழ்ப் பறவைகளின் வாழ்வாதாரம். எப்படி மீனவர்களுக்குக் கடலும் மீனும் வாழ்வாதாரமோ, அதேபோல, இப் பறவைகளுக்கு இந்தக் கடற்கரையும், அதனோடு இணைந்த பிரதேசங்களும் வாழ்வாதாரம். பாலத்தின் மீது போகும் போதும் சரி, ரயில் பாதை மீது போகும் போதும் சரி, நூற்றுக்கணக்கில் வட்டமிடும் கருடன்களை (செம்பருந்து) காணலாம். மீன்பிடிப் படகுகளில் இருந்து சிதறிய துணுக்குகள், முழு மீன்கள், மற்றும் சில உயிரினங்களைக் கொத்திக்கொண்டு போக அவை அந்தப் பகுதியில் அலைந்து கொண்டே இருக்கும். செம்பருந்தின் விடலை, வளர்ந்தவை, முதிர்ந்தவை என்று பல பருவங்களில் உள்ளவற்றை நாம் கண்டறிய இது ஒரு திறந்த வெளிப் பல்கலைக்கழகம்! யாரும் தேவையில்லாமல், நாமே அவற்றுக்குள் இருக்கும் வித்தியாசங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

கடற்கரையின் மணற்பரப்பில், அலைகள் தவழும் படுகையில், உள்ளான்களின் இரை தேடும் அழகை ரசிக்கலாம். அவற்றுடன், இணைந்து இரை தேடும் கொக்குகள், நாரைகள் போன்றவற்றையும் காணலாம். இந்த உள்ளான்கள், பூமியின் வட பகுதியில் இருந்து, அதாவது, இந்தியாவின் மேல் உள்ள பகுதிகளில் இருந்து வலசை வருபவை. பெரும்பாலானவை ஐரோப்பா, ஆர்க்டிக், மங்கோலியா போன்ற பகுதிகளில் இருந்து வலசை வருபவை. வலசை, இயற்கையின் விந்தை என்றால் மிகையாகாது. ஏனென்றால், இன்று வரை இதற்கு ஒரு சரியான விளக்கம் கிடையாது! இதனால் இருக்கலாம்; அதனால் இருக்கலாம் என்றுதான் ஊகிக்க முடிகிறதே அன்றி, ஒரு தெளிவான விளக்கம் இல்லை! அதிலும், 25 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பறவை எப்படி இவ்வளவு தூரம் பறந்து வர முடிகிறது, அதன் திறன் எப்படி என்று ஒரு தெளிவான அறிவு இன்னும் புலப்படவில்லை. உதாரணத்திற்கு, காட்விட் என்கிற உள்ளானின் வலசையை எடுத்துக்கொள்வோம்.

இந்த ஆண்டில், அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு 7,000 அல்லது அதற்கு மேற்பட்ட மைல்கள் பறந்து சாதனை படைத்த பறவையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வழியில் சாப்பிடவோ, எரிபொருள் நிரப்பவோ இல்லை. அலாஸ்காவில் புறப்பட்ட அந்த பார் டெயில்டு (கோட்டு வால்) காட்விட், எங்கும் நிற்கவும் இல்லை; இரை உண்ணவும் இல்லை! மிஞ்சிப் போனால், அந்தப் பறவை ஒரு 200 கிராம் எடை இருக்கும்! அதனுள் 7000 கி.மீ. பறக்கும் சக்தி எப்படி வந்தது? இந்தப் பயணம் எட்டில் இருந்து பத்து நாட்கள் வரை மழையோ, குளிரோ, காற்றோ, எதனாலும் பாதிக்கப்படாமல் செவ்வனே செயல்படுகிறது! இதை ஆராய்ந்த விஞ்ஞானி அவரால் இதை நம்பவே இயலவில்லை என்கிறார்! இந்த பார்டெயில்டு காட்விட், இந்த ராமேஸ்வரம் கடற்கரையின் மணற்பரப்பில், அலைகள் தவழும் படுகையில், ஒய்யாரமாக உலா வருவதை நாம் பார்க்கலாம்! ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற அவ்வையின் கூற்றிற்கேற்ப அவை வருகின்றனவோ? இதே போல நாகாலாந்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வரை அமூர் வல்லூறுகள் வலசை போகின்றன!

இவனுடன் கூடவே ஆர்க்டிக் பகுதியில் இருந்து வலசை வரும் சாண்டெர்லிங் என்கிற ஒரு மற்றொரு 60 கிராம் உள்ளானையும் பார்க்கலாம். சிறிது சாம்பல் கலந்த வெண்ணிறம், கருத்த மூக்கும், கால்களும் கொண்ட ஒரு சிறிய உள்ளான். இவற்றுக்கெல்லாம் இந்தக் கிழக்கு கடற்கரையும் அதன் மணற்பரப்பும் சொர்க்க லோகங்கள்! வருடா வருடம் தவறாமல் அவை இங்கு ஆஜர் ஆகி விடுவது வழக்கம்! பறவை நோக்கர்கள் ஆக இருந்தாலும் பலர் இவற்றைக் கண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. காரணம், இந்த உள்ளான்கள், இங்கு வரும்போது, பெரும்பாலும் வெளிர் பழுப்பு நிறத்தில்தான் காணப்படும். அவற்றின் இனப்பெருக்கக் காலம் முடிந்து விட்டதால், பறவைகளின் கவர்ச்சியான நிற மாறுதல்கள் மங்கிப் போயிருக்கும். எல்லாம் கிட்டத்தட்ட இளம் பழுப்பு நிறத்தில்தான் காணப்படும். இவற்றை வெகு முனைப்புடன் பறவை நோக்கம் செய்யும் சிலர், கிழக்கு கடற்கரையின் பிற பகுதிகளில் (சென்னை, கன்னியாகுமரி போல) கண்டிருக்கக் கூடும். ஆனால், இங்குப் பெரும் முயற்சி இன்றிக் காண வாய்ப்புகள் அதிகம். உள்ளான்களின் வலசை குறித்துப் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் நீண்ட காலமாக ஆராய்ந்த உண்மைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அது உண்மையிலேயே ஒரு பொக்கிஷம். பறவைகளின் வலசை ரகசியங்களை அறிவதற்கு நல்ல நூல்.

அதே போல ராமேஸ்வரத்தை அடுத்த முகுந்தராயர் சத்திரம் அல்லது கோதண்டராமர் கடற்கழியில் (lagoon) கூட்டம் கூட்டமாக நாம் கடற்காகங்கள் (கடல் புறா) மற்றும் ஆலாக்களைக் காணலாம். மாலையில் அவை பெரும் மேகத்திரள் போல அங்கும் இங்கும் பறந்து திரிவது ஒரு கண்கொள்ளாக் காட்சி! அதிலும், மென்மூக்கு கடற்காகங்கள் (slender billed) மயங்கும் மாலை ஒளியில் அல்லது விடியல் கிரணங்கள் வரும் வேளையில் ஒரு பெருங்கூட்டமாக மிதந்து வரும் போது, அவற்றின் ரோஜா நிற அடிவயிறு ஒளிரும் விதம் அவ்வளவு மயக்கம் தரும் காட்சியாக இருக்கும். அதே போல, நல்ல வெண்ணிறத்தில் கரும்பட்டைகளோடு ஒளிரும் கடல் கழுகின் (சிலர் ஆழிக் கழுகு என்பர்) எழிலை விவரிக்க இயலாது. இவற்றுடன், பெருங்கொக்குகள், நாரைகள், மடையான்கள் என்று ஒரு பெரிய கூட்டமே அங்கு இயங்கும்.

இவற்றுக்கு இடையில், தண்ணீர் அதிகமாக இல்லாத இடங்களில், மற்றும் மணற்பாங்கான இடங்களில், சிறிய உள்ளான்கள் பல வகை காணப்படும். அவற்றை இனம் பிரித்து அறியப் பெரும் முயற்சி மற்றும் நல்ல கள அறிவு வேண்டும். ஏனென்றால், பெரிய நாட்டிற்கும், சிவப்பு நாட்டிற்கும் (knot)(க்னொட்) உள்ள வித்தியாசம் மிகக் குறைவு, ஆனால் நுண்ணியது. பலகாலம் களப் பணியில் ஈடுபட்டவர்களால் மட்டுமே பிரித்தறிய இயலும். இப்படி அந்தப் பிரதேசமே வலசைப் பறவைகளின் உயிர்த் துடிப்பாக ஓர் ஆறு மாதக் காலத்திற்குக் காணப்படும். நல்ல வெயில் ஏறும் போது, அவை தாய் வீடு திரும்பி, இனப்பெருக்கம் செய்த பின், மறுபடியும் செப்டம்பர் மாதம் வாக்கில் வந்து சேரும். என்னைப் போன்ற பறவை நோக்கர்கள் இந்த இடத்தை எங்கள் மறு வீடாகக் கருதுவதில் வியப்பென்ன?

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

1 thought on “ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #11 – ராமேஸ்வரமும் பறவைகளும்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *