ராமேஸ்வரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த ஓர் ஐந்தாறு வருடங்கள் தொடர்ச்சியாக எங்கள் குழுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் நான் குறிப்பிட்டது போல, பறவை நோக்க கணக்கெடுப்பு நடத்துவதில், நானும் என் குழுவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தோம். காரணம், பல ஜாம்பவான்களுடன் நான் பல பிரதேசங்களில் இது போன்ற கணக்கெடுப்புகளில் பங்கு பெற்றிருந்த அனுபவம் எனக்குக் கை கொடுத்ததுடன், நல்ல பறவை நோக்கர்கள் உள்ள குழு அமைந்ததும்தான்.
உதாரணமாக, மஹாராஷ்டிராவில் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்துடன் பல கணக்கெடுப்புகளில் பங்கு வகித்ததோடு, சில இமாலயப் பறவை நோக்கப் பயணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியது பல வகைகளில் உதவியது; கேரளத்தில் பணிபுரியும் போது, திரு. உத்தமன் மற்றும் மரு. ஸ்ரீகுமார் போன்றோரின் பறவைகள் கணக்கெடுப்புகளில் பங்கு பெறும் வாய்ப்பும், சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பும் வாய்த்தது; முனைவர் பாலசந்திரன் போன்றோருடன் பல பறவைகள் கணக்கெடுப்புகளில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி இந்தப் பணியில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்ததால், பல சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த அழைப்பு கிடைத்தது. சில நல்ல வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிட்டியது.
அத்துடன், கிரிஸ்டோபர், ஜயசங்கர், அபிஷேக், பரமேஸ்வரன் போன்ற வல்லுனர்களும், பிற நல்ல பறவை நோக்கர்களும் எனது குழுவில் இருந்ததால், இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்த எளிதானது. எந்த நேரத்திலும், சுமார் 20 பேரைத் திரட்டக்கூடிய திறன் இருந்தது! மேலும், ஒரு குழுவாக இயங்க அவர்கள் என்றுமே யோசித்ததில்லை. ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எடுத்த காரியத்தை முடிக்க அவை தடையாக இருந்ததில்லை. காலப் போக்கில், குழு பிரிந்து போக நேர்ந்தாலும், அந்த நாட்கள் என்றும் நினைவில் நிற்பவை. அது போல ஒரு பறவைகள் கணக்கெடுப்பில் நேர்ந்த அனுபவம் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.
ஒரு ஜனவரி மாதம் வலசைப் பறவைகளையும் பூநாரைகளையும் கணக்கெடுக்கப் போயிருந்தோம். முதல் நாள் மாலை கோதண்டராமர் கடற்கழியில் வெகு அதிகமான எண்ணிக்கையில் கடற்காகங்களும் (Gulls), ஆலாக்களும் (Terns) அங்குக் கூடியிருந்தன. அவற்றோடு, பூநாரைகளும் (Flamingos) அதிக அளவில் இருந்தன. ஆனால், வெகு தொலைவில், மணல் திட்டுகளின் அருகே இருந்தன. காலை சூரியோதயத்திற்கு முன் அங்கிருந்தால், சற்று அருகில் பார்க்கலாம் என்று மனதில் பட்டது. அது மிக அண்மைக் கணக்கை (better approximate count) தரும் என்று தோன்றியது.
அப்போது, கூட இருந்த நண்பரும், புகைப்படக் கலை ஆர்வலரும் ஆன பைஜு, ‘சார், நாம் இருவரும் காலையில் கட்டாயம் வரலாம். அப்போது நல்ல படங்கள் கிடைக்கும்.’ என்றார். வண்டியை அவர்தான் ஓட்ட வேண்டும்! எனவே, நான் சரி என்றேன்! சொன்னது போல, அதிகாலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு கடற்கழியின் பின்புற வழியில், அதாவது கோயிலின் எதிரில் உள்ள கருவேலங் காட்டுக்குள் புகுந்து கழியின் மேற்கு முனையை அடைந்தோம். எதிரில் கிழக்கு வானம் சிவந்து கொண்டு வந்தது. இடது புறம் கோதண்டராமர் கோயில் பொன்னிற ஒளியில் தகதகத்தது. சூரியன் ஆரஞ்சுக் கோளமாக அரிச்சல்முனை பாகத்தின் இடது புறத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது. எங்குப் பார்த்தாலும், மயக்கும் பொன்னிறமும் சிவப்பும் கலந்த கிறங்கடிக்கும் ஒளி ஜாலம்! அந்தப் பிரதேசமே ஒரு சொல்லமுடியாத மாயமான ஒளி ஜாலத்தில் திகழ்ந்தது. அதனிடையில், நாங்கள் தேடி வந்த பூநாரைகள் எங்களுக்கு அருகிலேயே அந்த மயக்கும் ஒளியில் தகதகத்துக் கொண்டு ஒரு ரோஜாத் திட்டு போல ஒளிர்ந்தன. கீழ் வானில் மிதந்த சில மேகத் திரள்கள், இந்த மாய ஒளியைக் கூட்டியும், குறைத்தும், வடிகட்டியும் என்னென்னவோ ஜாலங்களைக் காட்டின! ஆக மொத்தம், அந்தக் காலைப் பொழுது வேறு உலகத்திற்கு எங்களைக் கொண்டு சென்றது என்றால் சரியாக இருக்கும்!
பல அருமையான படங்கள் நண்பருக்குக் கிடைத்தன. என்றாலும், எல்லாப் புகைப்படக் கலைஞர்களைப் போல, மிகுந்த சொந்தம் கொண்டாடும் தன்மையால், ஒரு சில படங்களையே என்னுடன் பகிர்ந்து கொண்டார்! இது ஒரு வகை பொஸஸிவ்னஸ் என்றுதான் சொல்ல வேண்டும்! மனிதர்களில் நூறு சதம் நல்லவர் என்று யாரேனும் உண்டோ? இப்படித்தான் நட்பில் மற்றும் உறவில் விரிசல்கள் வருகிறது! எனக்கு அன்றைய அனுபவம் மறக்க இயலாததானது! காரணம், மறு முறை காணக்கூடிய காட்சி அல்ல அது! அதே இடத்தில் அதே நேரத்தில் வேறொரு நாள் இப்படி ஒரு நிகழ்வு சாத்தியம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வானமும், சூரியனும், கதிர்களும், மேகங்களும் காட்சி தரும். புகைப்படங்கள் அந்த அரிய நிகழ்வை நினைவுபடுத்துமே அன்றி, மனத்திரை தான் அதைச் சரியானபடி வெளிக்கொணரும்!
இப்படியாக, அந்த இயற்கை அழகில் பாரதி போல மனதைப் பறிகொடுத்து விட்டு, நேரம் போவது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். சற்று நேரத்தில், சுய நினைவு வந்ததும், பூநாரைகளின் எண்ணிக்கையை எடுக்க வேண்டும் என்ற பணி நினைவுக்கு வந்தது. அதற்குள் சூரியனும் நிறம் மாறி, தங்கத் தட்டு போல ஆகி விட்டான்! தொடுவானில் இருந்து மேலெழும்பி, பிரகாசமாக ஒளிரத் தொடங்கினான். எனவே, கணக்கிடுவது எளிதாகப் போனது. சுமார் 5000 பூநாரைகள் அந்தக் கடற்கழியில் விரவிக் கிடந்தன. ஒரே இடமாக இல்லாமல், திட்டுத் திட்டாக அவை அங்கங்கு சிதறி அந்தக் கழி மொத்தமும் ரோஜா வண்ணத்தில் ஒளிர வகை செய்து கொண்டிருந்தன. அவற்றுடன், வெண்ணிறக் கடற்காகங்கள் இணைந்து ஒரு வண்ணமயமான ஓவியம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.
அன்று அங்கிருந்தவை பெரிய பூநாரைகள் (Greater Flamingos). சில நேரங்களில், இவற்றுடன் சிறிய பூநாரைகளும் காணப்படும். பூநாரைகள் பெரும்பாலும் குஜராத்தில் இருக்கும் ரான் ஆஃப் கட்ச்சில் (அதாவது கட்ச்சில் உள்ள உவர் நிலம்) இருந்து வருபவை. ஆயினும் சில கூட்டங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் வருவதுண்டு என்று வலசை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று வரை அவை இனப்பெருக்கம் செய்யும் இடம் ரான் ஆப் கட்ச் தான். சாலிம் அலி தன்னுடைய சுயசரிதையில், ரான் ஆப் கட்ச் சென்று, பூநாரைகள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தைப் பார்வையிட்டதை வெகு சுவாரஸ்யமாக எழுதி இருப்பார். எப்படி ஒட்டகங்களின் மேலேறி ஒரு கூட்டமாகப் போனார்கள்; அந்தக் குஜராத்தி மன்னரின் புகைப்படக் கலைஞர் கொண்டு வந்த கேமராவைப் பார்த்து அதில் படம் எடுக்க இயலுமா என்று அவர் சந்தேகித்தது; வனத் துறை அதிகாரியை எப்படி ஒட்டகம் கீழே தள்ளியது; என்று ருசிகரமாக எழுதி இருப்பார்! அந்த இடத்திற்கு பிளமிங்கொ சிட்டி என்று பெயரிட்டு இருப்பார்! தரையில் மண்ணைக் குழைத்து அவை அண்டா அளவில் ஒரு மேடையை அமைத்து அதன் குழிவில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும் அழகை வர்ணிப்பார்! வெகு நீண்ட கால்கள் இருப்பதால், மடக்கித் தரையில் அமர்ந்து அடை காப்பது இயலாத காரியம் என்பதால், மணல் மேடைகள்! இயற்கையின் விந்தை தான் என்னே!
பூநாரைகளின் இரை தேடும் அழகு காண்பதற்கு இனிய காட்சி. இரண்டு துண்டாக வெட்டப்பட்ட கிழங்குத் துண்டுகளை ஒட்டியது போல இருக்கும் அலகினால் அவை உவர் நிலங்களில் நிற்கும் நீரில் உள்ள நுண்ணுயிரிகளைக் கீழ்ப்புறம் மடிந்து காணப்படும் அலகில் உள்ள சல்லடை போன்ற அமைப்பினால் சலித்து எடுத்து மேல்புற அலகில் உள்ள நாக்கு போன்ற அமைப்பினால் எடுத்து உண்ணும்! இதற்குத் தோதாக, அலகினை நீரில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் இழுத்துக் கொண்டே செல்லும்! கூட்டமாக அவை இது போலக் கழுத்தை வளைத்துக் குனிந்து இரை தேடும் காட்சி, பார்க்க அழகாக இருக்கும். அவற்றின் குழறல் ஒலி, எப்போதும் ஒரு பின்னணி இசை போலக் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தி சாய்ந்து இருள் படர்ந்த பின்னும், பூநாரைகள் நிற்பதை நாம் இந்த ஒலியின் மூலம் அறியலாம். மிகப் பழங்காலப் பறவை வகையை (Pelagic) சேர்ந்த பூநாரைகள், பல ஆயிரம் வருடங்களாக மாறாமல் உள்ளன.
சிறிய பூநாரைகள் நன்கு அடர் ரோஜா நிறத்தில் சின்ன உருவம் கொண்டு இருக்கும். இவைதான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வருகின்றன என்று தோன்றுகிறது. இவை கிழக்கு கடற்கரையின் பகுதிகளில் சென்னைக்குக் கீழே பெரும்பாலும் அதிகம் காணப்படுவதில்லை. எது எப்படியோ, மன்னார் வளைகுடா பகுதிகளில் நாங்கள் நடத்திய பறவைக் கணக்கெடுப்புகளையும் அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் என்றும் மறக்க இயலாது. குறிப்பாக, பூநாரைகள் குவியும் இடங்களையும், அந்த மயக்கம் தரும் வர்ண ஜாலங்களையும், அற்புதமான அந்தக் கடலோர கவிதைகளையும், வலசைப் பறவைகளின் சொர்க்க பூமியான நெய்தல் நிலத்தையும் மறக்க இயலவே இயலாது!
(தொடரும்)
புகைப்படங்கள்: பைஜு
தனுஷ்கோடி – “அரிச்சல் முனை” இந்து மகா சமுத்திரமும் , வங்க கடலும் சந்திக்கும் இடம் . இரு கடல்கள் சந்திக்கும் இடம் ஒரு இயற்கை அற்புதமே . இந்த அரிச்சல் முனை வரை சாலை போடப்பட்டது தேசத்தின் பாதுகாப்பிற்காக என்பதை கருத்தில் கொண்டாலும் இந்த அரிச்சல் முனை ,முகுந்த ராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் அளவற்ற சுற்றுலா பயணிகள் வரவால் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளால் மாசு அடைந்து வருகிறது . இந்த உலகம் நமக்கானது மட்டும் அல்ல ,பல்லுயிருக்கும் தான் .இந்த தனுஷ்கோடி -அரிச்சல் முனை பகுதிக்கு வரும் பறவைகள் பற்றி அறிந்து கொள்ள கிழக்கு டுடே யில் வந்த இந்த கட்டுரையை படிக்கவும் .அவசியம் குழந்தைகளை படிக்க சொல்லவும் .