Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #14 – ராவ் வீட்டு மாமரமும் ஷிக்ராவும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #14 – ராவ் வீட்டு மாமரமும் ஷிக்ராவும்

ஷிக்ரா

சாதாரணமாக மக்கள் மொட்டை மாடியில் குளிர் காலங்களில்தான் காலையிலும் மாலையிலும் உலாவுவார்கள்; அல்லது இளைப்பாறுவார்கள். காரணம், அப்போதுதான் சீதோஷ்ண நிலை சற்று குளுமையாக இருக்கும். வெயில் காலங்களில் தெருவிலேயே நடமாட்டம் இருக்காது; மொட்டை மாடிக்கு யார் போவார்கள்? வெகு சீக்கிரமே துணிகளையும் உலர்த்திவிட்டுப் போய் விடுவார்கள். எனவே, ஏப்ரல் மாதம் நான் அடிக்கடி இந்த வேகாத வெயிலில் மொட்டை மாடியில் பகலில் வெகு நேரம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நிச்சயம் என்னைப் பற்றி வேறு விதமாக நினைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை! அதிலும் கையில் ஒரு பைனாகுலருடன் வானத்தைப் பார்த்துக் கொண்டு ஓர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பதைபதைக்கும் வெயிலில் வெகு நேரம் நின்று கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து கட்டாயம் பரிதாபப்பட்டு இருப்பார்கள்! கொஞ்சம் ஏதோ கழன்றுவிட்டது என்றும் நினைத்திருப்பார்கள்!

அவர்களுக்கு இளவேனில் தொடங்கி முதுவேனில் வரையுள்ள காலம், பறவைகள் கூடு வைக்கும் காலம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை! பறவைகள் மிக இனிமையாகப் பாடும் காலமும் இதுதான் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை! பறவைகள் காதல் வயப்பட்டு இணை சேரும் காலமும் இதுதான் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை! ஆங்கிலத்தில் சொல்வது போல இந்தக் காலம் ‘love is in the air’ ஆனால், உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்! இந்த முறை, அதாவது, இந்தக் கோடைக்காலத்தில் ஓர் இனிய நிகழ்வு நடந்தேறியது. தையல் சிட்டு, புல்புல் போன்றவை மற்றும் மைனாக்கள் கூடு வைப்பது நல்ல பறவை நோக்கர்களுக்கு எளிதாகத் தெரிய வரும். ஏனென்றால், பெரும்பாலும் அவை தோட்டச் செடிகளில் கூடு வைக்கும் அல்லது வீட்டின் தாழ்வாரங்களில் வைக்கும். அவற்றின் சுறுசுறுப்பான ஓட்டங்கள், ஒலி எழுப்புதல், குஞ்சுகளின் இரைச்சல் போன்றவை கூடு இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடும். ஆனால், வேட்டையாடிப் பறவைகளின் கூட்டைக் கண்டுபிடிப்பது கடினம். காரணம், அவை நெடிதுயர்ந்த மரங்களில் யாரும் எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் அமைந்திருக்கும்.

அன்று காலையில் படுக்கையைவிட்டு எழும்போதே ஒரு நாய்க்குட்டி ஓசை எழுப்புவது போல ‘கிக், கிக்’ என்ற ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. ஜன்னலின் வழியே பார்த்த போது, எதிர் வீட்டுத் தென்னை மரத்தில் ஒரு ஷிக்ரா அமர்ந்திருந்தது தெரிந்தது. ஷிக்ரா என்று பறவை நோக்கர்களால் அறியப்படும் இந்த வேட்டையாடிப் பறவை, பல மாவட்டங்களில் பல பெயர்களால் அறியப்படும். லகுடு, வல்லூறு, வில்லேந்திரன் என்று பல பெயர்களால் இதை அழைப்பர். இது நகரங்களிலும், கிராமங்களிலும், விளை நிலங்களிலும் சாதாரணமாகக் காணப்படும் பறவை. ஆனால், மைனாக்கள் போல மிகுந்த எண்ணிக்கையில் அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் பறவை. இவற்றின் குரலொலி, கிப், கிப் அல்லது கிக் கிக் என்று தொடர்ந்து கேட்கும். இணை சேராத காலங்களில் பெரும்பாலும் அதிகம் குரலெழுப்பாத பறவை. இவற்றின் காதல் களியாட்டங்கள் காண்பதற்கு ஒரு விருந்து. வேட்டையாடும் திறன் மற்றொரு வியக்கத்தக்கக் கலை!

இணை சேரும் ஆணும் பெண்ணும் கிப்கிப் என்று பெருங்குரலில் கத்தியவாறு, வானில் ஒன்றின் பின் ஒன்றாக வட்டமிட்டுப் பறக்கும். பின் ஒன்றின் மீது ஒன்று மோதுவது போல மேலும் கீழும் பறந்து ஒன்றையொன்று துரத்தும். உச்சக் கட்டக் களியாட்டமாக, ஒன்றின் கால் விரல்களுடன் மற்றொன்றின் விரல்களைப் பின்னிக்கொண்டு உயரத்தில் இருந்து அப்படியே பல்டி அடித்து ஒரு 500 மீட்டர் தலைகீழாகப் பாயும்! நேரே விழுந்து தரையில் மோதி விடுமோ என்று நாம் பதறும் வேளையில், சட்டென்று விரல்களை விடுவித்துக்கொண்டு மறுபடியும் மேலே பறந்து விளையாட்டைத் தொடரும்! விரல்களைப் பின்னிக்கொண்டு உயரத்தில் இருந்து அவை அடிக்கும் பல்டிதான் இந்தக் காதல் களியாட்டத்தின் சிறப்பு அம்சம்! இந்தக் களியாட்டத்தைக் காணத்தான் நான் மொட்டை மாடியில் வெயிலில் காய்ந்தது! ஏனென்றால், நல்ல பகல் வேளையில் தான் இது நிகழும்! காரணம், அப்போதுதான் காற்று லேசாகி அதிகச் சலனமில்லாமல் அவற்றுக்குத் தேவையான மிதவை சக்தியை (buoyancy) தரும்! பறக்கும் போது அவற்றின் பழுப்பு நிற உடல்; ஒளி ஊடுருவும் இறகுகள்; பட்டைகள் கொண்ட வால் பகுதி; போன்றவை நீல வானின் பின்னணியில் வெகு அழகாகத் தெரியும்.

இணையில், ஆண் சற்றே சிறிய உருவத்துடன், ஆனால் அழகான சாம்பல் நிறம் கொண்டு சிவந்த கண்களுடன் காணப்படும்; பெண் சற்றே பெருத்தும், பழுப்பு நிற உடலும் கொண்டு மஞ்சள் கண்களுடன் காணப்படும். எனது படுக்கையறை ஜன்னலின் எதிரே உள்ள தென்னையில் அமரும்போதே, அது ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய முடியும். இந்தக் காதல் காலம் ஒரு சில வாரங்கள் நீடிக்கும். பின் அவை கூடு கட்டும் பணியில் இறங்கும். முதலில் சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும், அதாவது எந்த மரம் என்று தீர்மானிக்க வேண்டும். அதன் பின் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து சின்னச் சின்னக் குச்சிகளைக் கொண்டு வர வேண்டும். இங்கேயோ, மிக வசதியாக ராகவேந்திர ராவின் வீட்டு மாமரம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு 40 அடி உயர மரம் அது. அதன் கிளைகள் அப்போதுதான் துளிர்த்து அடர்த்தியாகக் கொப்பும் குலையுமாக இருந்தது. காய் பிடிக்க இன்னும் ஒரு மாதக் காலம் ஆகும். அதற்குள் குஞ்சு வெளி வந்து விடும். இந்தத் திட்டமிடுதல் தான், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தும் விஷயம்!

இயற்கையில், இப்படி ஓர் உள்ளுணர்வு எந்தக் கல்வியும் இல்லாமல் இயங்குகிறது! எந்தக் காலத்தில் எது பூக்கும் என்று வண்ணத்துப் பூச்சிக்குத் தெரியும்; எந்த வகை மரம் காய்க்கும் என்று விலங்குகளுக்குத் தெரியும்; எங்குத் தண்ணீர் கிடைக்கும் என்று தெரியும். இப்படி அந்தச் சுழற்சி, முறையாக இயங்கும். கெடுப்பது, மனிதப் பதர்கள்தான்! அதுபோல, இந்த ஷிக்ரா ஜோடி, மாமரத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்தது! அதன் நேர்கோட்டில் தென்னை மரம் – ஒரு கண்காணிப்பு கோபுரம் போல! அங்கிருந்து கூட்டில் என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரியும்! இணையில் ஒன்று கூட்டில் இருக்கும்போது மற்றொன்று தென்னையில் காவல் இருக்கும்! ஆணும் பெண்ணும் இணைந்து குடும்ப வேலைகளைப் பார்த்தன. கூடு அடர்த்தியான இலைகளின் நடுவே இருப்பதால், பிற கண்களில் படுவது சிரமம்; நல்ல உயரத்தில் இருப்பதால் மற்ற விலங்குகள், பாம்புகள் வர வாய்ப்பு குறைவு! எனவே, நல்ல பாதுகாப்பு. இப்படி உள்ளுணர்விலேயே அவை கச்சிதமாகச் செயல்படுவதைக் கண்டு வியந்து போனேன்!

எனக்கு இயலும் என்றால், கூடு உள்ள மாமரத்துக்கு அருகே இருக்கும் வீடுகளின் மொட்டை மாடிக்குச் சென்று அவை எவ்வாறு குஞ்சுகளை வளர்க்கின்றன என்று காண ஆவலாக இருந்தது. ராவ் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்ததால், அவர் வீட்டிற்குச் செல்ல இயலவில்லை; அடுத்துள்ள வீடுகளில் உள்ளவர்கள் என்னுடைய நீண்ட நேர அவதானிப்புகளை விரும்பவில்லை! எனவே, எப்படிக் குஞ்சுகள் வளர்ந்தன, பறந்தன என்று அறிய முடியவில்லை. என்னுடைய மொட்டை மாடியில் இருந்து கூட்டைக் காண முடியாது; பெற்றோர் பறவைகள் அவ்வப்போது பறந்து வந்து போவதை மட்டும் பார்க்க முடியும். இப்படி ஒரு மாதம் இந்த ஷிக்ரா ஜதையுடன் எனது நாட்கள் நகர்ந்தன! ‘மேரி சாமுனிவாலி கிடுகி மே ஏக் சாந்த்திகி டுக்டா ரஹ்தா ஹை’ என்கிற அறுபதுகளில் வந்த பாட்டை, ‘மேரி சாமுனிவாலி நாரியல் மே ஏக் ஷிக்ராக்கி டுக்டா ரஹ்தா ஹை’ என்று மாற்றிப் பாட வேண்டி வந்தது! எது எப்படியோ, ராவ் வீட்டு மாமரம் எனக்கு மிகவும் நெருங்கிய தோழனாகிவிட்டது. அது எப்போதும் யாருக்கேனும் அடைக்கலம் தரும் இடம் ஆகிவிட்டது. ஏனெனில், இப்போது பழந்தின்னி வவ்வால்கள் அங்குக் குடியேறிவிட்டன; அடுத்த சில மாதங்களில், நீர்ப்பறவைகள் வரத் தொடங்கி விடும்!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *