Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

மஞ்சூர்

நீலகிரியின் தென் பாகங்கள் பற்றிப் பெரும்பாலும் தமிழகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு இன்றும் விரிவாகத் தெரியாது! நீலகிரி என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, லவ்டேல் போன்ற இடங்கள்தான் என்பது சாதாரணப் பயணிகளின் அனுமானம். தவறில்லை, காரணம் மற்ற இடங்கள் நெடுஞ்சாலைகளை அடுத்து இல்லாமல் உள்ளடங்கி இருப்பதுதான். மேலும், அங்கு மேலே சொன்ன நகரங்களில் கிடைக்கும் வசதிகள் கிடைக்காததும் முக்கிய காரணம். ஆனால், இங்குதான் இயற்கை தன் எழிலை முழு வீச்சில் காட்டுகிறாள். சுமார் இரண்டரை வருடங்கள் இந்தப் பிரதேசத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், இந்தப் பிரதேசத்தின் முழு அழகையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். காலை மற்றும் மாலை நேர வானம் காட்டும் அழகு; இரவு வானம் காட்டும் அற்புதமான வான்வெளிக் காட்சி; சலசலத்து ஓடும் நீரோடைகளின் எழில்; நெடிய மலைத்தொடர்களின் கம்பீரம்; காடுகளின் பசுமை; காற்றின் தூய்மை; மயக்கும் சீதோஷ்ணம் என்று பல விஷயங்கள் நம்மை ஈர்க்கும்.

இத்தனைக்கும், முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் இங்குதான் படமாக்கப்பட்டன! ஆயினும், இந்தப் பிரதேசம் வெகுவாகப் பிரபலமாகவில்லை. ஆனால், என்னைப் போன்ற இயற்கை விரும்பிகளின் பிடித்தமான இடங்களில் இந்தப் பகுதி முக்கியமானதாகும். எனது வங்கி மஞ்சூரில், அதாவது, குந்தாவை ஒட்டி இருந்தது. போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், ஒரு பெரிய நகரத்தைப் போல வசதிகள் கிடையாது. மேலும், அருகிலுள்ள நகரத்துக்குப் போகவேண்டும் என்றால், வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் பயணம் செய்யவேண்டும். சுமார் 30 கி.மீ. தூரம் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடிக்கும் (அந்தக் காலகட்டத்தில்). சொந்த வண்டியில் செல்வது அவ்வளவு உசிதமில்லை, சாலைகளின் நிலையால். இன்று முற்றிலும் எல்லாம் மாறிவிட்டது! எல்லா இடங்களிலும் நல்ல சாலை; நின்று செல்ல நிழற்குடைகள்; சாலையோரத் தடுப்புச் சுவர்கள் என்று பிரமாதமாக ஆகி விட்டது!

மஞ்சூர் ஓர் அழகான சிற்றூர். பெரும்பாலும் படுகர்கள்தான் இந்தப் பகுதிகளில் அதிகம் வாழும் மக்கள். அவர்களுடன் இலங்கை அகதிகளும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேயிலைதான் இந்தப் பிரதேசத்தின் வாழ்வாதாரம். சுற்றிலும் நெடிய மலைகள்சூழ்ந்த ரம்மியமான சூழல். குளுகுளு என்று இயற்கை ஏசி. மாலை ஆறு மணி ஆகிவிட்டால், கம்பளிச் சட்டை இல்லாமல் வெளியே போக இயலாது. இரவு சர்வ சாதாரணமாக 12லிருந்து 10 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். பகலில் 24 முதல் 28 வரை இருக்கும். நல்ல குளிர் காலத்தில் இன்னும் 2லிருந்து 4 வரை குறைய வாய்ப்புண்டு. அங்குதான் தமிழ்நாட்டின் முதல் புனல் மின் நிலையம் காமராஜரின் காலத்தில் கனடா நாட்டு ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டது. இங்குள்ளது, இரண்டாம் புனல் மின் நிலையம். எனவே, மின் நிலைய ஊழியர்கள் நண்பர்களாகினர். மாலை நேரங்களில், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் நடக்கும். அடுத்துள்ள சின்னக் கிராமங்களுக்கு அல்லது சமூகக் காடுகளுக்கு நடைப்பயணம் போவோம். இப்படி நல்ல உடல் பயிற்சி கிடைக்கும். நல்ல சீதோஷ்ணம். சாமிநாதன் கடையில் நல்ல சாப்பாடு. பின் கேட்கவா வேண்டும், ஆரோக்கியத்திற்கும், உற்சாகத்திற்கும்? அது ஒரு பொற்காலம். இந்தக் கதை அங்கிருந்த ஒரு வனத்துறை ஊழியர் பற்றியது. மனித உளவியல் குறித்ததும் ஆகும்.

பென்ஸ்டாக்

பென்ஸ்டாக்

முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் பென்ஸ்டாக்தான் இந்த நிகழ்ச்சியின் களம். பென்ஸ்டாக் என்பது புனல் மின் நிலையங்களில் நீரின் வரத்தை நிர்ணயிக்கும் வால்வு போன்ற அமைப்பு. ஆனால், மிகப் பெரிதான ஓர் உருளைத் தொட்டிபோல இருக்கும். அப்போதுதான் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலும்; நீரை ராட்சதக் குழாய்களில் திருப்ப முடியும். பென்ஸ்டாக்கில் இருந்து கீழே உள்ள கெத்தை மின் நிலையம் வரை ராட்சதக் குழாய்களைக் கண்காணிக்க விஞ்ச் (உருளையில் இரும்புக் கம்பிகளால் இயக்கப்படும் ஊர்தி) இயக்கப்படும். சினிமாவில் ரஜினி இந்த விஞ்ச் இயக்குபவராக வருவார். இந்த விஞ்ச் இருக்கும் இடத்தை ஒட்டி வனத்துறையின் ஒரு நடைப்பயணக் கொட்டகை (டிரெக்கிங் ஷெட்) இருக்கிறது. இங்கு முன் அனுமதி பெற்றுத் தங்க வசதிகள் உண்டு. இந்த இடத்தின் விசேஷமே இங்கு நாம் காணக்கூடிய இயற்கைக் காட்சி தான். U போலக் கிடையாக (பக்கவாட்டில்) கிடக்கும் நீலகிரி மலைத்தொடர்கள் கண் முன்னே விரிந்து கிடக்கும் காட்சியின் எழிலை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது! ‘காடுகள் மலைகள் தேவன் கலைகள்’ என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை என்பதை உணர முடியும்! அதிகாலையில், மலைகளின் மேல் கவிந்து கிடக்கும் மேகத் திரள்கள் ஒரு நம்ப இயலாத காட்சியைத் தரும்! இரவிலோ, வான்வெளி ஒரு வைரம் பதித்த கரும் பட்டாக விண்மீன் கூட்டங்களுடன் பொலியும். இயற்கைக் காட்சிகளை ரசிப்பவருக்கு இது ஒரு சொர்க்க லோகம்!

இந்த நடைப்பயணக் கொட்டகையை அந்தக் காலத்தில் பராமரித்து வந்த பொறுப்பாளர் திரு. துரைராஜ் அவர்கள். அவரது விருந்தோம்பல் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலம். சமையலும் பிரசித்தி பெற்றது. வனத்துறை உயர் அதிகாரிகள் பெரிதும் விரும்பி வரும் ஓர் இடம் பென்ஸ்டாக் நடைப்பயணக் கொட்டகை. உள்ளூர் வாசிகளும், அரசியல் தலைவர்களும் மற்றும் பலரும் விரும்பி வரும் இடம். இதற்கு முக்கியக் காரணம், துரைராஜ் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்! இதனால், துறையில் பலருக்கு அவர் மீது பொறாமையும் இருந்தது! எனக்கும் அவருக்கும் வன உயிரினங்கள் மற்றும் செடி, கொடிகள் குறித்த ஆர்வம் இருந்ததால், நல்ல நட்பு இருந்தது. பின்னாட்களில், அங்கு குடித்துக் கும்மாளம் போடும் கூட்டங்கள் தொல்லை அதிகமாகிவிட்டது என்று புகார் வந்தது எதிர்பார்த்ததுதான்! பணமும், அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நிகழும் சம்பவங்கள் அவை! அங்கு மாலை நேரத்தில் மேய வரும் கேழை ஆடுகளைக் காணவே நான் இங்கு வருவேன். மற்றொரு காரணம், இரவு நேர வானத்தையும், நட்சத்திரக் கூட்டங்களையும் காண இதைப் போன்ற இடம் கிடைப்பது அரிது.

அன்று ஊட்டியில் இருந்தும், சென்னையில் இருந்தும் சில உயர் அதிகாரிகள் வந்து இருந்தனர். வழக்கமான உபசரிப்பு, மதிய உணவு முடிந்தபின், சற்றுக் கால்நடையாக உலவி வரும் போது, ஓர் உயர் அதிகாரி அங்கிருந்த ஒரு மரத்தைக் காட்டி, ‘இது என்ன மரம்?’ என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு விடை தெரியவில்லை! அதில், துரைராஜின் அடுத்த அதிகாரிகளும் அடக்கம். அதாவது, சரகர், வனவர், காப்பாளர் உட்பட. துரைராஜ் பேசாமல் இருந்திருக்கலாம்! சட்டென்று, ‘இது நாவல் மரம் சார். சிஸ்ஜியம் குமுனை’ என்று பதிலளித்தார்! உயர் அதிகாரி ஆச்சரியமாக இவரைப் பார்த்து, ‘நீங்கள் யார்? என்ன பெயர்? எத்தனை ஆண்டுகளாகப் பணி புரிகிறீர்கள்?’ என்று கேட்க, இவர் நான் தற்காலிக ஊழியர் என்று சொன்னார்! அவ்வளவுதான்! அங்கிருந்த எல்லா நிரந்தர ஊழியர்களுக்கும் நல்ல பாட்டு (டோஸ்) கிடைத்தது! ‘ஒரு தற்காலிக ஊழியர் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளார், அதுவும் தாவர இயல் பெயருடன், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று இடம் வலமாக அன்று எல்லோருக்கும் சரியான திட்டு! ஒரே நாளில், துரைராஜ் வில்லன் ஆகிப் போனார்!

சாதாரணமாகவே, நான்கு பேர் உள்ள இடத்தில் ஒருவர் சற்று மிடுக்காகவும், புத்திசாலியாகவும் இருந்தால், மற்றவர்களுக்குப் பொறுக்காது! அதுவும் சீருடைப் பணியாளர்களின் இடையில் இது பெரிய பிரச்னையை உண்டாக்கும்! மேலதிகாரியின் முன் என்றால், இன்னும் விபரீதம்! நம்மை விட அடுத்தவர் சற்றுத் திறமைசாலி என்பதை ஒப்புக்கொள்ள மனம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் வராது என்பது உலக நியதி! அத்துடன், உடன் இருந்தவர்கள் பதவியிலும், பணி மூப்பு அடிப்படையிலும் இவரை விட ஒரு படி மேலே! இதனால், துரைராஜின் நிலை அந்த அதிகாரிகள் போன பின் சற்றுக் கவலைக்கிடமாகத் தான் ஆயிற்று, என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் போயிற்று. திறமையை ஊக்குவிக்கும் குணம் எல்லோருக்கும் வர வேண்டும்; ஒருவரின் நிலை அல்லது அந்தஸ்தை வைத்து அது இருக்கக் கூடாது என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் தான் என்பதையும், நடைமுறை வாழ்வில் அப்படிப் பெரும்பாலும் நிகழ்வதில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்! எது எப்படிப் போனாலும், அதன் பின் நான் அங்கிருந்தவரை துரைராஜை சிஸ்ஜியம் குமுனை என்றுதான் அழைப்பேன்! பல வருடங்களுக்குப் பின் மஞ்சூர் சென்றிருந்த போது, துரைராஜ் நல்லபடியாக ஓய்வு பெற்று மஞ்சூரிலேயே குடியேறி விட்டார் என்று அறிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. சிஸ்ஜியம் குமுனையைத் தின்றால் எப்படி நாக்கு கரு நீலமாகிறதோ, அது போல, எனக்கு பென்ஸ்டாக் என்றால், துரைராஜின் நினைவும் மேலோங்கி நிற்கும்!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *