Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

தேயிலைத் தோட்டம்

மஞ்சூரில் இருந்தபோது, சில அபூர்வ மனிதர்களின் நட்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கெச்சி கட்டி மணி மற்றும் வெங்கிடரமணன் இருவரின் நட்பு அப்படித்தான் அமைந்தது. இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அண்ணனும் தம்பியும் ஆவர். மணி, குடும்பச் சொத்தான தேயிலைத் தோட்டத்தைப் பராமரித்து வந்தார்; அவருடன் ரமணனும் தேயிலைத் தோட்டத்தைப் பராமரித்து வந்தாலும், மாடு வளர்ப்பில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்தப் பிரதேசத்தில், அப்படி ஒரு முறையான மாட்டுப் பண்ணை அதுவரை இருக்கவில்லை. எனது வங்கியில்தான் அவர்களது கணக்குகள் இருந்தன. வேறு போட்டி வங்கி அங்கு இன்று வரை வரவில்லை என்று நினைக்கிறேன்! காரணம், அடுத்த பெரிய நகரில் இருந்து உள்ள தொலைவு; அடிப்படை வசதிக்குறைவு; போக்குவரத்துச் சிக்கல் போன்றவைதான். என்னுடைய அணுகுமுறை, நட்புடன் பழகும் தன்மை போன்ற குணங்கள் எனக்கு எல்லா இடங்களிலும் நல்ல நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் தந்திருக்கிறது. இங்கேயும் அப்படி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும், வாடிக்கையாளர்களாகவும் ஆகிப் போயினர்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்களது தேயிலைத் தோட்டம் அம்மக்கல் என்கிற காட்டுப் பகுதியில் இருந்தது. சுமார் 8 கி.மீ. தொலைவில், காப்புக் காடுகளைத் தாண்டிக் கிட்டத்தட்ட 6500 அடி உயரத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் ரம்மியமான சோலைக் காடுகள். இந்த வகைக் காடுகள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 6000 அடிக்கு மேல் காணப்படும். கிட்டத்தட்ட மழைக் காடுகளைப் போன்றவை எனலாம். எப்போதும் ஈரப்பதம் நிறைந்த இந்தக் காடுகள்தான் கீழே உள்ள எல்லா ஊர்களுக்கும் நீராதாரம். இவை இல்லையென்றால், நாமெல்லாம் தண்ணீருக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்! வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களுக்கு இந்தக் காட்டின் இடையில் தோட்டம் அமைக்க அனுமதி கிடைத்திருக்கிறது. அவர்கள் வீட்டில் பாடம் செய்யப்பட்ட காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்றவற்றை இன்றும் காணலாம்! வெள்ளைக்காரனுடன் அவர்களின் தாத்தா அல்லது அப்பா வேட்டையாடிய காலத்தில் கிடைத்தவை! இப்போதும் தேயிலைத் தோட்டத்தின் சுற்றுமுற்றும் புலி மற்றும் சிறுத்தையின் கால் சுவடுகளைக் காணலாம். எனக்கு அங்கு போவதில் ஆர்வம் அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதிலும், எனக்கு ஒன்று அல்லது இரண்டு இரவுகளை அங்கு கழித்தால்தான் சந்தோஷம்!

அங்கு தோட்டத் தொழிலாளர்கள் தங்குவதற்கு ஓட்டு வீடுகள் வரிசையாக இருக்கும். வரவேற்பு அறை, சமையலறை என்றெல்லாம் எதுவும் கிடையாது! ஒரு நீண்ட பெரிய அறைதான் வீடு! அதில்தான் சமையல், தூக்கம் எல்லாம்! இரவு சரியான குளிர் இருக்கும்! தரையில் பாய் போட்டுப் படுத்தால், முதுகெலும்பு வரை குளிர் ஏறும்! எனவே, இரண்டு அல்லது மூன்று கம்பளிகள் தேவைப்படும்! காலை 8 மணி வரை வெளியே வெளிச்சம் வராது. காரணம், காட்டின் ஊடே சூரியக்கதிர்கள் வர நேரமாகும் என்பதோடு, பனிமூட்டம் விலகவும் தாமதமாகும். ஆனால், வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டால், பறவைகள் தங்கள் பாட்டுக்களை ஆரம்பித்து விடும்.

சீகாரப் பூங்குருவி, கருஞ்சிட்டு, ஈப்பிடிப்பான்

சீகாரப் பூங்குருவி என்று தமிழில் அறியப்படும் மலபார் விசிலிங் த்ரஷ் (Malabar Whistling Thrush) பருவ காலத்தில் தனது சீழ்க்கை மூலம் பாடத் தொடங்கி விடும். மலைவாசஸ்தலங்களில் இதன் பாட்டைக் கேட்காதவர் இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான சீழ்க்கை ஒலி, பாடல் அல்லது ராகம் போல மயக்கும்! கொண்டைகுலாத்திகள் ஒன்றை ஒன்று விளித்துக் கொண்டு அங்கும் இங்கும் பறக்கும். தென்னிந்தியக் கருஞ்சிட்டு (Black bird) அல்லது மலைச் சிட்டான் அதன் உள்ளம் கவரும் பாடலைப் பாடும். ஈப்பிடிப்பான்கள் (Flycatcher) சன்னமான குரலில் பாடிக் கொண்டு பூச்சிகளைப் பிடித்து வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால், கேழை ஆடு (Barking Deer), கட மான் (Sambar) போன்றவற்றைக் காணலாம். மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால், சிறுத்தை அல்லது புலி தென்படும்! எப்போதாவது யானைகள் இந்த வழியாகப் போகும்.

என்னுடைய முதல் பயணமே ஓர் அற்புதமான அனுபவமாக அமைந்தது. சனிக்கிழமை மாலை ஒரு 5.30 மணி அளவில் அங்குச் சென்றடைந்தேன். தொட்டக்கொம்பையில் இருந்து ஓர் அரைக் கிலோமீட்டர் நடந்த பின் காப்புக்காடுகள் தொடங்கும்; அதன் பின் தைல மரக்காடு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு; பின் மீண்டும் சோலைக்காடு; அதன் பின் தைலம் மற்றும் சீகை மரக்காடுகள்; அதனிடையே கீழுள்ள ஊர்களுக்கு வழங்க நீராதார நிலையம்; வடிகட்டிச் சுத்திகரிக்கும் தொட்டிகள்; சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் என்று நான்கு கிலோமீட்டர் வரை மனிதக் குடியிருப்புகள் இல்லாத ஓர் இடம். நீராதார நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் மேலே சென்றால், மணியின் தோட்டத்தை அடையலாம். அதன் மேலே குன்றின் முடி, காடு மற்றும் சோலைக்காடுகளின் தொடர்ச்சி. நீராதார நிலையத்தின் அருகில், ஈரமண் நிலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைக்கு உரித்தான பல வகை வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டேன். சுவாலோ டெயில் வகையில் மூன்று வகை; பாப்பிலோனிடே வகையில் நான்கு; நவாபில் இரண்டு வகை; கிராஸ் யெல்லோவில் மூன்று வகை; என்று பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அவை அந்தப் பிரதேசம் எங்கும் பரவிக் கிடந்தன. இரண்டு இடங்களில் யானைகள் வந்து சென்ற அடையாளங்கள் இருந்தன!

அப்படியே மேலே ஏற, ஏற தேயிலைத் தோட்டங்களின் இரு மருங்கிலும், பறவைகள் மண்டிக்கிடந்தன. ஈப்பிடிப்பான்கள், புல்புல்கள், சிலம்பன்கள், கருஞ்சிட்டுகள் எனக் கூடடையும் முன்பு கடைசி நேர அல்லது இரவு உணவு தேடுவதில் மும்முரமாக இருந்தன. வரிசை வீடுகளுக்கு முன் பழைய சிதிலமடைந்த சில வீடுகள் இருந்தன. அவற்றின் உள்ளே இருந்து சில உழவாரன் குருவிகள் (Swallows and Swifts) போன்றவை வெளியே வருவதைப் பார்த்தேன். தகைவிலான் குருவிகள் மிக்கவாறும் இது போன்ற இடிபாடுகளில் கூடு வைப்பது வழக்கம். செம்பிட்ட தில்லான் (Red Rumped Swallow) பழைய அல்லது அதிகம் நடமாட்டம் இல்லாத கட்டங்களில் கூடு வைப்பது வழக்கம். பல இடங்களில் இதைக் கண்டுள்ளேன். இங்கு இருந்த பறவையோ சற்று வித்தியாசமாக இருந்தது. சின்ன ஊதா நிற உடல்; தலையும் தொண்டையும் செங்கல் சிவப்பு; பறக்கும் போது வாலின் அடிப்புற நுனியில் வெள்ளைப் புள்ளிகள் என்று இருந்தது. இடிந்த வீட்டின் அருகே சென்று கூர்ந்து நோக்கினேன். இருள் கவியத் தொடங்கியதால், முதலில் ஒன்றும் தென்படவில்லை. பின் இரண்டு சுவர்கள் இணையும் இடத்தில், கதவு நிலையை ஒட்டி, கிண்ணம் போன்ற கூடு இருந்தது! தகைவிலான்கள் எனது இருப்பைப் பற்றி கவலையில்லாமல் பறந்து வந்து கூட்டில் அமர்வதும் போவதுமாக இருந்தன! ஒன்று நிச்சயம், கூட்டில் முட்டையோ, குஞ்சோ இருப்பது உறுதி. வெளிச்சம் இல்லாததால், மறுநாள் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இரவு தங்குமிடம், உணவு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்று விட்டேன்.

என்னதான் மணி சொல்லியிருந்தாலும், மிகத் தாமதமாகப் போவது இது போன்ற இடங்களில் எல்லோருக்கும் சங்கடத்தைக் கொடுக்கும் என்பதால், அங்கிருந்த வேலையாட்களைப் பார்த்து நான் வந்து விட்டேன் என்று சொல்லி, அவர்களுடன் சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன். அதற்குள் கடுங்காப்பி சுடச் சுட வந்தது. அவர்களுக்கு ஒரே ஆச்சரியம், இப்படி ஒரு நகரத்து ஆசாமி இந்தக் காட்டில் இரண்டு இரவுகள் தங்க வந்திருக்கிறாரே என்று. பரஸ்பரம் குசலம் விசாரித்த பின்பு எனது அறையைக் காட்டினர். ஒரு பாய், அதன் கீழும் மேலும் சாக்குகள் (குளிர் ஏறாமல் இருக்க!), பின் இரு கம்பளிகள், (போர்த்திக்கொள்ள). சாப்பாடு எப்போதும் போல, சோறும், குழம்பும்! பேசிக் கொண்டிருக்கும் போது, மணியின் உயர்ந்த பண்புகள் தெரிந்தன. அங்குள்ள எல்லா ஊழியர்களின் மருத்துவச் சிகிச்சை முழுவதும் மணியால் தரப்படுகிறது; குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் மற்றும் உதவிகள் செய்யப்படுகிறது; வருடத்திற்கு இரண்டு மாதச் சம்பளத்துடன் விடுப்பு தரப்படுகிறது. இப்படி மற்ற எந்தத் தோட்டத் தொழிலாளியும் பெறாத ஆனால் பெறத் தக்க சலுகைகள் இவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கின்றன என்றறிந்து நான் மகிழ்ந்தேன். ஓர் ஆதர்ச முதலாளியாக மணி இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன். மற்ற தோட்டங்களை நோக்கும் போது இங்கு ஏன் தொழிலாளர்கள் மாறுவதில்லை என்ற உண்மையும் புலப்பட்டது. உண்மையில் ஒரு சிறந்த மனிதாபிமானம் மிக்க மனிதரின் தோட்டத்தில் தங்கியது எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது. இப்படி எல்லா முதலாளிகளும் இருந்து விட்டால், சண்டை ஏது, சச்சரவு ஏது?

நல்ல உறக்கத்திற்குப் பின், காலையில் சூடான கடுங்காப்பி குடித்துவிட்டு, ஒதுக்குப்புறத்தில் காலைக் கடனைக் கழித்து விட்டு (சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்துக் கொண்டேதான்!) தகைவிலான் குருவிக் கூடு இருந்த இடிந்த வீட்டை நோக்கிப் போனேன். இப்போது நல்ல வெளிச்சம் வந்து விட்டதால், அதன் நிறம், மற்ற குறிகள் போன்றவற்றைக் காண முடிந்தது. அது நீலகிரி வீட்டுத் தகைவிலான் என்பது தெளிவானது. இப்போது அதை மலைத் தகைவிலான் என்கின்றனர். தனது எச்சிலையும் மண்ணையும் குழைத்து இரு சுவர் சேரும் இடத்தில் கோப்பை அல்லது கிண்ணம் போன்ற கூட்டை இரு சுவரிலும் நிற்பது போல் கட்டும். அதனுள் இறகுகள், பாசி போன்றவற்றை இட்டு மிருதுவாக ஆக்கிய பின் முட்டைகளை இடும். சில சமயங்களில் சுவற்றின் மூலையில் அல்லது உத்திரத்தில் கூடக் கட்டும். மிகப் பிரமிக்கத்தக்க வகையில் அந்தக் கூட்டின் வலிமை மற்றும் சமநிலை இருக்கும்.

இத்தனைச் சிறிய பறவை எப்படி அந்தக் கூட்டின் விளிம்பில் உட்கார்ந்து குஞ்சுக்கு இரை கொடுக்கிறது என்று பார்க்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அடைகாக்கும்போது இன்னும் பேராச்சரியமாக இருக்கும். காரணம், மிகச் சிறிய கால்களால் பிடித்து எழ முடியாது. அப்படியே மேலெழும்பிப் பறக்க வேண்டும்! வந்து அமரும் போதும் அப்படித்தான்! அந்தக் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன! என்னுடைய அண்மை அவற்றை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! வெகு காலமாகத் தொழிலாளர்கள் இடையே வாழ்ந்து பழகி விட்டதால், மனித நடமாட்டம் பெரிய அளவில் அவற்றைப் பாதிக்கவில்லை. மிகப் பழைய நிகழ்வு என்பதோடு, அந்தக் காலகட்டத்தில் என்னிடம் நல்ல நிழல் படக்கருவி இருக்கவில்லை. நினைவின் நிழலாக இருக்கின்றது! அன்று முழுவதும் அவற்றுடன்தான் வாசம்! இடையிடையே உணவுக்கு மட்டும் போய் வந்தேன்; சுற்றிலும் உள்ள இயற்கையை அவ்வப்போது ரசித்தேன்.

சுறுசுறுப்பான அவற்றின் இரை தேடிக் குஞ்சுகளைக் கவனிக்கும் ஓயாத ஓட்டம், ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கும் பாங்கு, இரவில் குஞ்சுகளுக்குக் கூட்டில் இடமளித்து, அவை வெளியில் உத்திரத்தில் உறங்கும் அழகு, குஞ்சுகளின் ஓயாத பசிக்குரல், விர்ரென்று அவை கட்டடங்களுக்கிடையில் பறக்கும் திறமை, இவையெல்லாவற்றையும் கண்டு நேரம் போவது தெரியாமல் உலவிக் கொண்டிருந்தேன்! இன்றும் அந்த நாள் ஒரு மறக்க இயலாத நாட்களில் ஒன்று. தகைவிலான்களின் சுறுசுறுப்பு, ஓயாத ஓட்டம், கூட்டின் கலைநயம், கட்டுமான நேர்த்தி, பெற்றோர் கவனிப்பு, கடமை உணர்வு என்று எல்லாவற்றிலும் பாடம் படித்த நாள் அது! ஆயினும், அன்று மாலை எனது கூட்டிற்கு (வீட்டுக்கு) திரும்ப வேண்டிய நிலை! அரை மனதோடு நான் மஞ்சூர் திரும்பினேன். இரவு கனவில் தகைவிலான்கள் தொல்லை கொடுத்தது என்னவோ உண்மைதான், ஆனால், சுகமான துன்பம் அது!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *