கடந்த ஒரு வாரமாகத்தான் இவனை (எனது வசதிக்கு ஆணாக்கி விட்டேன். பெண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில், சில பறவை இனங்களில் ஆண், பெண் வித்தியாசம் கடினம்.) நான் எனது வீட்டு மின் கம்பி மேல் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். இதற்கு முன்னால் பார்த்ததாக நினைவில்லை. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியவில்லை. ஆனால், அவ்வப்போது எங்காவது அலைந்து திரிந்து விட்டு வருவான். அதிகாலை மற்றும் அந்தி நேரத்தில் கட்டாயம் படுக்கை அறை ஜன்னல் எதிரே செல்லும் மின் கம்பி மேல் அமர்ந்திருப்பான். பெரும்பாலான காலை நேர அலாரம் இவனாகத்தான் இருப்பான்! ஆண்டாள் பாசுரத்தில் சொன்னது போல, ‘கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!’ என்பது தான் நினைவுக்கு வரும்! பேய்ப்பெண்ணிற்குப் பதிலாக பேய் ஆணாக நான்! ஏனடா இப்படித் தூங்கித் தூங்கி வீணாகப் போகிறாய் என்று தினமும் திட்டித் தீர்க்கும்! நமக்கு விடிவதே ஏழு மணிக்கு மேல் தானே! கலியமூர்த்தி கேட்டால், நம்மை எல்லாம் எருமை என்று சொல்லி விடுவார்!
இப்படி இந்தக் கரிக்குருவி (சாதாரண மனிதர்கள் பாஷையில்) அதிகாலையில் என்னைத் துயிலெழுப்புவதில் கடந்த ஒரு மாதமாக கன ஜோராக ஈடுபட்டிருக்கிறது. எப்படித்தான் இரவு பத்து மணி வரை தெரு விளக்கு ஒளியில் வேட்டையாடிவிட்டு, அதிகாலை நான்கு மணிக்குக் கச்சிதமாக வந்து விடுகிறது என்று எனக்குப் புரிவதே இல்லை! இப்போது நல்ல எல்.ஈ.டி விளக்குகள் போட்டிருப்பது இவனைப் போன்றவர்களுக்குத்தான் என்று தோன்றுகிறது! இரவில் வரும் விட்டில்கள் மற்றும் இதர பூச்சிகளை வேட்டையாட இந்த வகை விளக்குகள் மிகவும் தோதாக உள்ள காரணத்தால், இவற்றின் வேட்டை நேரமும் அதிகரித்து விட்டன! ஐடி ஊழியர்கள் இரவு ஷிப்ட் செய்வதுபோல இவனும் தொடங்கி விட்டான்! இவனுடைய சிர்கேடியன் ரிதம் என்ன ஆகும் என்று இனிமேல் தான் தெரிய வரும்! ஒரு வேளை இவனும் என்னைப் போல் எருமையாகி ஏழு மணிக்கு எழுந்திருப்பானோ? தெரியவில்லை!
Black Drongo – தமிழில் சாதாரணமாக அறியப்படும் பெயர் கரிக்குருவி, கரிச்சான் அல்லது ரெட்டைவால் குருவி (வால் பிளவுபட்டு இரண்டு நுனி இருப்பதால்). பழைய இலக்கியங்களில் காரி என்ற பெயர் காணப்படுகிறது. ஹிந்தியில் கொத்வால் (kotwal) என்று சொல்கிறார்கள். அதாவது போலீஸ்காரன் என்ற அர்த்தத்தில். என் கணக்கில் அது மிகச் சரியான விவரிப்பு! ஏனெனில், போலீஸ்காரன் போல, சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லாப் பறவைகளையும் கண்காணிப்பதுடன், எந்த ஓர் அத்துமீறலும் நடக்க விடாது! அதன் எல்லைக்குள் பருந்து போன்ற பெரிய பறவைகள் கூட வருவதற்குப் பலதரம் யோசிக்கும்! அந்த அளவிற்கு அவற்றை விரட்டி அடிக்கும் திறன் கொண்டவை கரிச்சான்கள்.
நல்ல கருநீல உடலும் வாலும் கொண்ட சிறிய பறவை. ஆணும் பெண்ணும் களத்தில் பிரித்தறிய இயலாத வகையில், ஒரே போலக் காணும். சிவந்த கண்கள்; ஒரு வெண் பொட்டு வாயடியில் காணும். வேலிக் கற்கள், மின்கம்பிகள், மற்றும் சுற்றுவட்டாரத்தை நோட்டம் விட லாயக்கான ஓர் இடத்தில் அமர்ந்திருக்கும். பல சமயங்களில், ஆடு மாடுகளின் மேல் சவாரி செய்து கொண்டு போகும்! அங்கிருந்து, கீழே ஊர்ந்து அல்லது அசையும் புழு, பூச்சிகளைப் பட்டென்று பறந்து பிடித்து உண்ணும். எப்போதும் கீச் கீச் என்று கடூரமான ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். அது போக, நல்ல விகடம் (பல குரலில் பாடக் கூடியது) செய்யும் பறவை. ஷிக்ராவைப் போலக் குரலெழுப்பி, மற்றப் பறவைகளைப் பயமுறுத்தும்; தையல் சிட்டு போலப் பாடி மகிழும். காடுகளிலோ, நாட்டிலோ இவை இருக்குமிடத்தில், நாம் ஏமாறுவது நிச்சயம்! ஷிக்ரா இருக்கிறதோ என்று பார்த்தால், இவன் தான் இருப்பான்!
நானும் அருந்தவச்செல்வன் அவர்களும் ஒரு முறை கூந்தகுளத்தில் நெடுங்கால் உள்ளான் (Black Winged Stilt) மற்றும் மயில் உள்ளான்களின் (Painted Snipe) கூடுகளைக் காணச் சென்றிருந்தோம். நண்பர் பால்பாண்டி அந்த ஊர்க்காரர் என்பதோடு, பறவைகளின் பாதுகாவலர் மற்றும் அவற்றின் நடத்தைகளை நன்கறிந்த ஓர் அற்புதமான பறவையியலாளர். முறையான ஏட்டுப் படிப்பு இல்லை என்பதைத் தவிர, அவரது இயற்பியல் அறிவு போற்றத்தக்கது. அவர் அந்தக் கூடுகள் எங்கிருக்கின்றன என்று கண்டுபிடித்து வைத்திருந்தார். நாங்கள் அருந்தவச்செல்வன் அவர்களின் டொயோடொ ட்ரூப்பர் என்ற வாகனத்தில் சென்றிருந்தோம். ஏனெனில், அருந்தவச்செல்வன் தமிழகத்தின் சிறந்த புகைப்பட நிபுணர்களில் ஒருவர். ஆதலால், பலவித கேமரா உபகரணங்களுடன் வருவார். அதற்கேற்ற வண்டி வேண்டும். இந்த வண்டி அதற்கேற்றது. நாங்கள் குளத்தை ஒட்டிய தரிசு நிலத்தில் இஷ்டம் போல ஓட்டாமல், மாட்டு வண்டிகள் அல்லது டிராக்டர் சென்ற தடங்களிலேயே சென்றோம். இல்லையென்றால், வெறும் (நிலத்தில்) தரையில் கூடு வைக்கும் ஆள்காட்டிகளை (Lapwing) போன்ற பறவைகள் பாதிக்கப்படும். நாங்கள் தேடிச் சென்ற கூடுகளும் சீமைக் கருவேல மரத்தின் வேர்ப் பகுதியில்தான், தரையிலேயே அமைந்திருந்தன. அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்!
போகும் பாதையில், ஒரு நாட்டுக் கருவேல மரத்தின் கிளை வண்டிக்கு இடையூறாக நீட்டிக் கொண்டிருந்தது. அதாவது, அந்தக் கிளை பாதையின் மேல் கவிந்து கிடந்தது. அதன் நுனியில் ஒரு கூடும், குஞ்சுகளும் இருந்தன. இப்படித் திறந்த கோலத்தில் யாரடா கூடு வைத்துள்ளனர் என்று வண்டியை நிறுத்திப் பார்த்தோம். நம்ம கரிச்சான் தான் இப்படிப் பிந்தாசாக (அலட்சியமாக) கூடு வைத்திருக்கிறான்! கீச் கீச் என்று கடூரமான ஒலி எழுப்பிக் கொண்டு எங்கள் தலை மேல் பறக்கத் தொடங்கினான்! நாங்கள் இருவரும் வழுக்கைத் தலையர்கள்; எனவே அவனுடைய ஒரு கொட்டைக் கூடத் தாங்க முடியாது! நல்ல வேளையாக, நாங்கள் சற்றுத் தூரத்திலேயே நின்று விட்டதால், கூட்டில் போய் அமர்ந்து கொண்டு எங்களைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான்! என்ன ஆச்சரியம், அதே மரத்தின் உள்ளே இரண்டு புள்ளிப் புறாக்கள் மற்றும் புல்புல்கள் கூடு வைத்திருந்தன! அந்தச் சுற்றுவட்டத்தில், வேறெந்த மரத்திலும் இப்படிக் கூடுகள் நிறைந்திருக்க வில்லை! கரிச்சானின் ஆதரவு அப்படிப்பட்டது என்றல்ல, அந்தப் பகுதிக்கே ஒரு வேட்டையாடிப் பறவை கூட வராது என்பதுதான் முக்கிய காரணம்! யாரால் கரிச்சானுடன் மல்லுக்கட்ட முடியும்? சிவந்த விழிகளின் உக்கிரமும், பாய்ந்து அடிக்கும் வீரமும், வசவுகளும், சுழன்று போரிடும் குணமும் கரிச்சானை ஓர் உன்னத வீரனாக ஆக்கி உள்ளது. எப்படி நம்பியார் வந்தால் வில்லன் தான் என்று புரிகிறதோ, அதுபோலக் கரிச்சான் என்றால் விலகு என்று பொருள்! அதனால்தான், ஹிந்தியில் இவன் கொத்வால்!
சாலிம் அலி இவற்றைக் குறித்து எழுதும் போது சொல்வதாவது: ‘A pair will fearlessly attack and put to flight large birds like crows and raptors, blundering within the precincts of the nest-tree with angry war-cries and much ferocity, the pair maneuvering in concert, shooting straight into the intruder from below and the sides, diving at intruder from above and describing circles round it–like fighter planes tackling a heavy bomber– leaving the outraged visitor nonplussed and defenseless while making a hasty getaway.’ உண்மையில் மிகவும் அனுபவித்தால்தான், இது போல எழுத முடியும்! அதற்கு மேல், நல்ல கூர் நோக்குப் பார்வையும் வேண்டும்!
அதே போல, பரலியில் நீர்மின் நிலையப் பகுதிகளில் உள்ள காடுகளில், இந்தக் கரிச்சான் மற்றும் இவனது பங்காளிகள் வெண்வயிற்றுக் கரிச்சான், சுருள் வால் கரிச்சான், சாம்பல்கரிச்சான் போன்றோருடன் இவன் கொட்டமடிப்பான். அந்தக் காடுகளில் இவர்களது விகடம், குரல் மாற்று வேலை, சண்டை சச்சரவுகள் அதிகம். ஆனால், வெகு எளிதாகக் கரிச்சான் இனங்களில் உள்ள மூன்று நான்கு வகைகளை இனம் பிரித்தறியலாம். அங்குள்ள பழைய குடியிருப்புகளை அடுத்த காடுகளில் இவை நல்ல எண்ணிக்கையில் காணப்படும்.
ஒரு முறை தேக்கடியில் நிலா அந்துப் பூச்சியை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ராக்கட் வால் கரிச்சான் (நமது நாட்டுக் கரிச்சானின் அண்ணன்) அதைக் கொத்திக் கொண்டு போனது. நிலா அந்துப் பூச்சி மிக அழகான இளம்பச்சை நிறத்தில் நீண்ட வாலுடன் கூடியது. இப்படிப் பல பூச்சிகளைக் கபளீகரம் செய்வதால், கரிச்சான்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்வன என்று அறியப்படும். பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் திறமைசாலிகள். ஆயினும், நாகரீக உலகில் பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாகவும், வாழிட அழிப்பு காரணமாகவும் (திறந்த வெளிகள் குறைந்து போவதால்) இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. எது எப்படியோ, தற்போது இவன் எனக்கு நல்ல தோழனாக இருக்கிறான்; அதிகாலை மற்றும் அந்தியில் தனது சேட்டைகளால் என்னை மகிழ்விக்கிறான். எதிர் வீட்டுக் காலி இடம் கட்டடம் ஆகாத வரை, இந்தப் பந்தம் தொடரும்! அதன் பின் என்ன ஆகும் என்று யோசிப்பதில் பயனில்லை. ஏனெனில், வாழ்க்கையே ஒரு புதிர்தானே!
(தொடரும்)