சில நேரங்களில், நாம் எதிர்பார்த்ததுபோல எல்லாம் நடப்பது இல்லை என்பதை வாழ்க்கை உணர்த்தும். பல வகையில் திட்டமிட்டும், அதே போல நடப்பது இல்லை என்றாலும் சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட நேர்த்தியாகச் சம்பவங்கள் நடக்கும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம்தான் இது.
சாதாரணமாக, பெரும்பாலான வனத்துறை அதிகாரிகள் தங்கள் களப்பணி வேலைகளில் இயற்கை ஆர்வலர்களை இணைத்துக்கொள்வது அபூர்வம். வெகு குறைவான மற்றும் திறந்த மனம் உடையோர் மட்டுமே அதுபோலச் செய்வர். அந்த வகையில், திரு. அன்வர்தீன் சற்று வித்தியாசமானவர். நேரமும் நோக்கமும் ஒத்து வந்தால், என் போன்ற ஆர்வலர்களை இணைத்துக் கொள்வார். இது அவர் கோயம்புத்தூர் வனக் கோட்டத்தின் அதிகாரியாக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம். காரமடை சரகம், கோயம்புத்தூர் வனக் கோட்டத்தின் ஒரு பகுதி. அங்குச் சமதளத் தரைக் காடுகள், இலையுதிர் காடுகள், ஆற்றோரக் காடுகள் காணப்படும். பவானி நதி, நீலகிரியின் வழியாக (குந்தாவில் இருந்து) பரலி, பில்லூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்றடையும். அங்கு புனல் மின் நிலையத்தின் இரண்டு உற்பத்தி நிலையங்கள் (பரலி, பில்லூர்) நிறுவப்பட்டுள்ளன. சுற்றிலும் அடர்ந்த காடு, அண்டை மாநிலமான கேரளத்துடன் இணையும் இடம் (முள்ளி). யானைகளின் வலசைப் பாதை இங்கிருந்து அட்டப்பாடி வரை நீண்டு கிடக்கும். நதி மற்றும் காடுகள், வன உயிரினங்களுக்கு ஓர் உயிர் நாடி. இந்த இடம்தான் இந்தக் கதைக்கான களம்!
முள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அவருக்குச் சில அலுவல் நிமித்தமான பணிகள் இருந்தன. அத்துடன், ஒரு பறவை நோக்கல் நிகழ்ச்சியையும் இணைத்துக் கொண்டு அவர் என்னையும் அழைத்துக் கொண்டு போனார். வழியில் காணும் பறவைகளை நான் அவருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்! எனது வேலை அதுதான்! காரமடைக்கு முன்பு வெள்ளியங்காட்டிற்குப் பிரியும் வழியில் சென்று மலைப் பாதையை அடைய வேண்டும். மலைப் பாதையில் ஒரு சில பழங்குடி கிராமங்களைக் கடந்து முள்ளி சென்று அங்குள்ள வன ஓய்வு விடுதியில் இரவு தங்கல். பின் மறுநாள் பில்லூர் வரை போவது என்று திட்டம். வெள்ளியங்காட்டை அடைந்தபோது மணி நான்கு. அங்கு சரகர், மற்றும் வனவர் வந்துசேர்ந்தபின் பயணம் தொடங்கியது. வனத்துறை வண்டி (ஜீப்) பழுதாகி விட்டதால், வெள்ளியங்காட்டில் உள்ள ஒரு வண்டியை ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த வண்டியை அதன் உரிமையாளரே ஓட்டி வருவது என்று ஏற்பாடு. ஏனெனில், அவர் திரும்பி வர வேண்டுமே!
மலைப் பாதையின் அடிவாரத்தில் உள்ள சில பழங்குடி கிராமங்களில் நடக்கும் பணிகளைப் பார்வையிட்டு, ஒரு தேநீர் குடித்த பின், மலை ஏறத் தொடங்கினோம். அப்போதே மணி ஐந்தே கால். மாலை மயங்கத் தொடங்கும் நேரம். வெள்ளியங்காட்டுத் தரைக் காடுகள் பொன்னொளியில் தகதகத்து மின்னின. முட்காடுகள்தான் என்றாலும், அவற்றின் அழகு அந்த ஒளியில் வேறு விதமாக ஒளிர்ந்தது! குண்டூர் அடையும்போது, இலையுதிர் காடுகள் வேறு தினுசில் அழகுடன் மிளிர்ந்தன. அங்கிருந்து அத்திக்கடவு சென்று பவானி நதிக்கரையோரம் சற்று நேரம் ஆற்றோரக் காடுகளைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தோம். அமைதியாக சலசலத்து ஓடும் பவானியின் அழகும், இரு மருங்கிலும் நெடிதுயர்ந்து நிற்கும் மத்தி மற்றும் மா மரங்களும் பெரும் மகிழ்வைத் தந்தன. அங்கு பெரும்பாலும் மலபார் கருப்பு வெள்ளை இருவாயன் அல்லது இருவாட்சியைக் காண வாய்ப்பு உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடைய நல்ல நேரம், இரண்டு மலபார் இருவாட்சிகள் பறந்து வந்து ஆற்றோர மரத்தில் அமர்ந்தன. மாவட்ட வன அலுவலர் மகிழ்ந்து போனார்! என்ன ஒரு கணிப்பு என்று பாராட்டினார்! என்னுடைய பங்கு ஒன்றுமில்லை என்பதை உணர்த்தப் பெரும் பாடுபட்டேன்! இன்னும் நான்கு இருவாட்சிகள் வந்து அமர்ந்து அங்கிருந்த அத்தி மரத்தில் இருந்த பழங்களை ஒரு கை பார்த்தன.
அவை கருப்பு நிற மேல் உடலும் வெள்ளை அடிப்பாகமும் கொண்டு, இரண்டு அடுக்கு மஞ்சள் மூக்குடன் வெகு அழகாக இருக்கும். ஒரு வித மூக்கடைப்பு போன்ற ஒலி எழுப்பிக் கொண்டு பழங்கள், சிறு பிராணிகள் மற்றும் பல சிறு உயிரினங்களை உண்டு வாழும். இவற்றின் கூடுகள் பெரிய மரத்தின் உச்சியில் ஒரு பொந்தில் இருக்கும். இந்த நதிக்கரை ஓரம் உள்ள மரங்கள் இதற்குத் தோதானவை. மேலும், இந்தப் பகுதி பழங்காலம்தொட்டு இவற்றின் வாழிடமாக உள்ளது. புனல் மின் நிலையங்கள் இருப்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதால், இங்கு ஒரு நல்ல தொகுப்பாக அவை வாழ்கின்றன. இவற்றின் குஞ்சுகளைப் பராமரிக்கும் முறை, கூட்டில் பெண் பறவை அடைகாக்கும் முறை போன்றவை மிகவும் பிரபலம். வெகுவாக எழுதப்பட்ட விஷயம். நல்ல வீடியோக்கள் பல கிடைக்கும். அடைகாக்கும் காலத்தில், ஆண் பறவை படும் கஷ்டங்களைக் கண்டு எல்லோருமே பரிதாபப்படுவர்! அப்படிப் பறந்து பறந்து இணையையும், குஞ்சுகளையும் பராமரிக்கும்!
இயற்கையில் எல்லாப் படைப்புகளும் ஏதோவொரு பணியைச் செய்யப் படைக்கப்பட்டிருக்கும். அதற்கு உறுதுணையாக மற்ற உயிரினங்கள் இருக்கும். பெரிய ஆற்றோர மரங்கள் வளர இருவாட்சிகள் உதவும்; பெரிய மரங்கள் ஆற்றின் போக்கைக் கட்டுப்படுத்தும்; அதனடியில் வளரும் புல் மற்றும் குறுஞ்செடிகள் மண் அரிப்பைத் தடுக்கும்; ஆறு மண் மற்றும் தாதுப் பொருள்களைக் கீழுள்ள ஊர்களுக்குக் கொண்டு சேர்க்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான் இயற்கையின் சுழற்சி. இதில் எங்காவது சங்கிலி அறுபட்டால், மொத்தச் சுழற்சியும் மாறுபடும்; விரும்பத்தகாத விளைவுகள் உண்டாகும். அப்படித்தான் இருவாட்சிகள் குறையும்போது, பெருமரங்கள் குறைந்தன; ஆற்று நீர் மாசுபட்டது அல்லது கீழ் உள்ள ஊர்களில் மணல் அதிகம் படியத் தொடங்கியது. முன் இருந்ததை விட இப்போது இருவாட்சிகள் குறைந்துவிட்டன என்பது கண்கூடு. அதற்கு ஆற்றோரம் பெரிய மரங்கள் வேண்டும். ஏனெனில், அவை கூடு வைக்க ஏற்ற மரங்கள் அவைதான். கூடுகளைக் குடைந்து வைக்கும் அளவில் சுற்றளவு கொண்ட மரங்கள் பெரும்பாலும் 60 அடி உயரமும் நன்கு பருத்தும் இருக்க வேண்டியது அவசியம். கூடுகள் 50 அடி உயரத்தில் பொந்து போல இருக்கும். நண்பர் அருந்தவச்செல்வன் இதைப் படமாக்கியதாக நினைவு.
அப்படி அமைந்த கூட்டில் முட்டைகளை இட்ட பின் பெண் உள்ளே அடை காக்கச் சென்று அமரும். வெளியே பொந்தில் ஒரு சிறிய பிளவு போன்ற இடைவெளியை (ஸ்லிட்) விட்டு விட்டு கூட்டை ஆண் பறவை அடைத்து விடும்! குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகும் வரை ஆண்தான் பெண்ணிற்கும் குஞ்சுகளுக்கும் இரை தேடிக் கொண்டு வர வேண்டும்! அந்தச் சிறிய பிளவு வழியேதான் ஊட்டி விடுதல், கூப்பிடுதல் எல்லாம்! பெண் கூட்டினுள் சேர்ந்த குப்பைகளை (கழிவு, மலம் போன்றவை) பொறுக்கி வெளியே எறியும்! கூட்டினைச் சுத்தமாக வைப்பதில் பறவைகளுக்கு இணை பறவைகளே! இந்தக் கழிவுகள் கிடப்பதை வைத்தே மற்ற வேட்டையாடிகள் கூட்டிற்குப் படை எடுக்கும்! அதாவது பாம்பு, கழுகுகள், மரநாய், வெருகு போன்றவை இந்தக் கழிவுகள் இருப்பதை வைத்து எந்த மரத்தில் கூடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும்! நாமும் எங்குக் கூடு இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்!
இப்படி ஆண் பறவை, கிட்டத்தட்ட 20 நாட்கள் உணவு ஊட்டியும், சேகரித்தும், கூட்டைப் பாதுகாத்தும், முடிவில்லாமல் பறந்து பறந்தும் தளர்ந்து விடும்! நல்ல காலமாகப் பெண் பறவை, குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து விட்டதும், கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விடும். குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலை வர ஒரு மாதக் காலம் ஆகும். 20 நாட்களுக்குப் பின், ஆணும் பெண்ணும் சேர்ந்தே இரை தேடிக் கொண்டு வந்து குஞ்சுகளை வளர்க்கும். இந்த வகை வளர்க்கும் முறை, பெற்றோரின் தியாகம் மற்றும் கவனிப்புக்கு உதாரணமாகச் சொல்லப்படும்! குறிப்பிட்ட அத்தி மரப் பழங்களை உண்பதால், காட்டில் அத்தி மரங்கள் பரவ இவை பெரும் உதவியாக உள்ளன. குஞ்சுகளுக்கு பழங்களுடன், புரோட்டீன் நிறைந்த பூச்சிகள், பல்லிகள் போன்றவற்றையும் கொண்டு தரும். இவை பறக்கும் போது உண்டாகும் ஓசை, ஒரு சின்ன டகோட்டா விமானம் போவது போல இருக்கும்! காட்டுப் பெரு மரங்களின் காவலன் இருவாட்சிகள் என்றால் மிகையில்லை.
இருவாட்சிகளில் நான்கு வகை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. சாம்பல், மலபார், கருப்பு வெள்ளை மற்றும் இந்திய அல்லது பெரும் இருவாட்சிகள் தான் அவை. எல்லா வகைக் காடுகளிலும் அவை இருப்பதில்லை. அவற்றுக்கேற்ற மரங்கள் மற்றும் காடுகளில் தான் அவை காணப்படுகின்றன. அந்த வகையில், வெள்ளியங்காட்டில் இருந்து கெத்தை வரையிலான பழைய இயற்கைக் காடுகளில் அவை தற்போது இருக்கின்றன. சாதாரணமாக நாம் அந்த வழியில் போகும்போது அவற்றை பவானி நதிக்கரைக் காடுகளில் அல்லது அத்தி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் காணலாம். சில நேரங்களில் பெரும் இருவாட்சியும் கண்ணில் படும். அப்படித்தான், பில்லூர் பழங்குடியின சூழலியல் சுற்றுலாவைக் காணப் போனபோது முள்ளியில் பார்த்தேன். அத்தி மரங்கள் பழுக்கும் நேரம் அவற்றைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். அத்தியும் இருவாட்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை!
(தொடரும்)