Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #21 – சாம்பல் தலை மீன் கழுகும் பில்லூரும்

Grey-headed Fish Eagle

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. காரணம், சமதரை முட்காட்டிற்கு அது ஒரு நல்ல உதாரணம் என்பதோடு, ஆற்றோரக் காடுகளுக்கும் நல்ல உதாரணம். சம தரையில் இருந்து சற்று மேலே அல்லது உயரத்தில் இலையுதிர் காடுகளும் உண்டு. மேலும், வன உயிரினங்களுக்கு உகந்த காடுகள் என்பதுடன், வேட்டையாடிப் பறவைகளையும் நல்ல விகிதத்தில் காணலாம். மும்பையில் இருந்து நீலகிரிக்கு மாற்றலில் வந்தபோது,வேட்டையாடிப் பறவைகளை ஆய்வு செய்ய நான் தேர்ந்தெடுத்த ஓர் இடம் இந்தப் புனல்மின் நிலையங்களைச் சுற்றி அமைந்த காடுகள். மற்றொரு இடம், உயர் மட்டத்தில் இருக்கும் அப்பர் பவானி ஆகும். அது கிட்டத்தட்ட 7000 அடி உயர்ந்த மலைப் பிரதேசம். கடும் குளிர் மற்றும் முற்றிலும் வித்தியாசமான சோலைக் காடுகள் மற்றும் புல்வெளிகளைக் கொண்ட ஓர் இடம். இருவேறு துருவங்களான வாழிடங்களில் வேட்டையாடிப் பறவைகள் எப்படிப் படர்ந்துள்ளன; எந்த வகைப் பறவை எந்த வாழிடத்தைத் தேர்வு செய்கிறது என்பதை அறிய அந்த ஆய்வு உதவியது.

என்னுடைய வங்கி இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியான மஞ்சூரில் இருந்தது மிக வசதியாகப் போனது! ஏனெனில், கீழே பரலி பக்கம் வரவும் போக்குவரத்து இருந்தது; மேலே அப்பர் பவானி போகவும் போக்குவரத்து இருந்தது. என்ன, சற்று முன்னேற்பாட்டுடன் செயல் பட வேண்டும். அப்பர் பவானி போக மாலை மட்டுமே பேருந்து உண்டு. அதனால், முதல் நாள் இரவே செல்ல வேண்டியிருக்கும்; மூன்றாம் நாள் அதிகாலை பேருந்தில் வர வேண்டி நேரும். பரலி போக அது போன்ற சிரமங்கள் இல்லை. ஆனால், முள்ளியில் பேருந்து மாற்ற வேண்டி வரும். எப்படியாயினும், களப் பணியாளர்களுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை! தொடர் போக்குவரத்து இருந்தால் போதும். அப்படி ஏதும் தடங்கல்கள் வந்தால், வேறு வழிகளை ஆய்ந்து அவற்றை மேற்கொள்ள வேண்டியதுதான்! கவலைப்படுவதாலோ, சோர்ந்து போவதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை!

பில்லூர், பரலி மின்வாரிய வளாகங்களை ஒட்டிய காடுகளில், வேட்டையாடிப் பறவைகளை ஆற்றோரம் உள்ள காடுகளிலும், சர்ஜ் ஷாப்ட்டை (Surge Shaft) ஒட்டி இருக்கும் காடுகளிலும், நெல்லித்துறை வரை நீண்டு கிடக்கும் காடுகளிலும் காணலாம். என்னுடைய முதல் செவ்வயிற்றுக் கழுகை (Rufuous-bellied Eagle) இங்குதான் கண்டேன். சர்ஜ் ஷாப்ட் போகும் சாலையில் மரக்கிளைகளின் ஊடே அது பறந்து சென்ற காட்சி அப்படியே ஒரு சித்திரம் போல இன்றும் நினைவில் நிற்கிறது. அது தவிர, கொண்டைப் பாம்புக் கழுகு, முயலடி என்னும் கொண்டைப் பருந்து, குட்டை விரல் பாம்புக் கழுகு, கருடன், சாம்பல் தலை மீன் கழுகு, வலசை வரும் வல்லூறு, வெள்ளைக்கண் வைரி, ஷிக்ரா, குருவி, வல்லூறு என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம்! என்ன, கடும் வெயிலையும், யானைகளின் நடமாட்டத்தையும் பொருட்படுத்தாமல், அதே நேரம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்! சில சமயம், பாம்புகள், கரடிகளின் இடையூறும் இருக்கும்! கண்ணும், காதும் கூர்மையாக இருக்க வேண்டும்! இல்லையென்றால், கஷ்டம்தான்! எல்லாவற்றிற்கும் மேலாக, நடக்க அஞ்சக் கூடாது! அங்கு வேறு வழி கிடையாது. தீவு போலத் தனியான உலகம் அது! நகரத்தைப் போல, நினைத்த போதெல்லாம் பேருந்து கிடையாது. அந்தந்த நேரங்களில் மட்டும் பேருந்து செயல்படும். பேருந்தின் நேரத்தை ஒட்டியே மக்களின் செயல்பாடுகளும் இருக்கும். அதுதான் அங்கு வாழ்வாதாரம்!

செவ்வயிற்றுக் கழுகை
செவ்வயிற்றுக் கழுகை

இப்படி ஓர் உலகத்தில், எனக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். கந்தவேல் என்பவர் பழங்களை உண்டு வாழும் பறவைகளைக் குறித்து ஆய்வு செய்ய அங்கு வந்திருந்தார். நானும் பறவை ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், நல்ல நண்பராகிப் போனார். அவர் மூலம் அந்த மின்வாரிய வளாகத்தை அப்போது நிர்வகித்து வந்த செயல் பொறியாளர் நரேந்திரன் அறிமுகமானார். இன்னும் சில பொறியாளர்கள் நண்பர்கள் ஆனார்கள். அதனால், தேவைப்படும்போது தங்க அல்லது உள்ளே செல்ல வெகு எளிதானது. அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதியில் உணவும் கிடைத்தது! அது உண்மையிலேயே ஒரு வசந்த காலம்தான்! காலையில் இருந்து மாலை வரை பறவை நோக்கல்; நல்ல மதிய உணவு; மாலை பணி முடிந்ததும் அரட்டைக் கச்சேரி; தேநீர்; பின் இரவு உணவு அல்லது மஞ்சூர் திரும்புதல். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இது போன்ற வசதிகளுடன் எனது ஆய்வு நடந்தது. பின்னர், நரேந்திரன் மாற்றலில் போனார்; கந்தவேல் ஆய்வை முடித்தார்; என்னையும் கோவைக்கு மாற்றினர்.

இந்தக் கதை, சாம்பல் தலை மீன் கழுகுடன் எனக்கு இருந்த நட்பை விவரிக்கும். சாம்பலும், கருப்பும், வெள்ளையும் கொண்ட ஓர் அழகான கழுகு இது. ஆற்றோரம் காணப்படும் நெடிதுயர்ந்த மரங்களின் மேல் அமைதியாக அமர்ந்திருக்கும். அதே நேரம், சலசலத்து ஓடும் ஆற்றின் நீர் மீது ஒரு கண் வைத்திருக்கும். பாறைகளின் இடையே தேங்கி நிற்கும் குட்டையிலும் ஒரு கண் இருக்கும். ஏதாவது அசைவு தென்பட்டவுடன், உற்று நோக்கும். அது மீன் அல்லது பெரிய நண்டு என்றறிந்தால், பட்டென்று கீழே பறந்து வந்து கொத்திச் செல்லும்! அவை நண்பகல் வேளையில், வானில் வட்டமிட்டுப் பறக்கும் அழகே ஒரு காவியம். கறுத்த உடலும், சிறகும் வெள்ளை அடிப்பாகத்துடன் முரண்பட்டு அழகான ஓவியம் போலக் காணும். விசிறி போன்ற வால் மற்றும் சாம்பல் தலை அதன் அடையாளத்தைக் காட்டும். நிதானமான மிதப்பது போன்ற பறக்கும் திறன், சுழன்று திரும்பும் எழில், எல்லாம் ஒரு கவிதை போன்ற நயத்தில் இருக்கும். கூடு அங்குள்ள பெரிய மரங்களில் வேனில் காலத்தில் காணும். நெல்லித்துறை வரை வளைந்து செல்லும் பவானி ஆற்றின் கரையின் இரு மருங்கிலும் இந்தக் கழுகுகள் கூடு வைக்கப் பல தோதான மரங்கள் உள்ளன. கொண்டை பாம்புக் கழுகும் இந்தப் பிரதேசத்தில் கூடு வைப்பதுண்டு. இது அல்லாது, சில சமயங்களில் வலசை வரும் மற்றொரு மீன் கழுகும் தென்படும், ஆனால் வெகு அபூர்வமாக. ஹுமிலிஸ் என்ற அந்த இனக் கழுகை ஓரிரு இடங்களில் கண்டதாகத் தரவுகள் இருக்கின்றன.

சாம்பல் தலை மீன் கழுகு
சாம்பல் தலை மீன் கழுகு

பில்லூர் ஒரு மிகச் சிறிய மின்வாரியக் குடியேற்றம். ஒரு காலத்தில் நிறைய வீடுகள் இருந்திருக்கலாம்; கடை கண்ணிகள் இருந்திருக்கலாம்; கூலித் தொழிலாளர்கள் பலர் இருந்திருக்கலாம். ஆனால் 1995இல் நான் வெகு சில வீடுகளில் மட்டுமே மக்கள் இருப்பதைக் கண்டேன். காரணம், புனல்மின் நிலைய வேலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துவிட்டதுதான். அந்தக் கடை வீதியையும் இடிந்த பணியாளர் குடியிருப்பையும் கடந்து சென்றால் அணையின் பின்பகுதிக்கு வருவோம். அங்கிருந்து பார்த்தால், 30 அடி உயர நீர் தேக்கத்தின் மதிலையும், தண்ணீர் திறக்க உதவும் மதகுகளையும் காணலாம். அங்கிருந்து வெளியேறும் நீர், நெல்லித்துறை வழியாக மேட்டுப்பாளையம் சென்று பின் பவானிசாகரை அடையும். அந்த நீர்ப் பாதையின் குறுக்கே ஒரு பழங்கால இரும்புப் பாலம் அக்கரையை அடைய இருக்கும். அக்கரையில் கொடியூர் என்கிற கிராமம் இருக்கிறது. நான் அந்தக் கிராமத்தின் வழியாக ஆற்றின் அக்கரையில் நடந்து சற்று முன்னே போய் பெரிய தண்டு உள்ள மத்தி மரத்தின் அடியில் அமர்ந்து சாம்பல் தலை கழுகை நோட்டம் விடுவேன். ஏனெனில், அவை அந்தப் படுகையில்தான் அதிகம் தென்படும். அங்கே நீரோட்டம் இல்லை என்றாலும், பாறைகள் அதிகம் காணப்படுவதால், நல்ல குழிவான பள்ளங்கள் இருக்கும். அவற்றில் நீர் நிறைந்து இருக்கும். அந்தக் குழியில் மீன்கள், நண்டுகள் ஓடிக்கொண்டிருக்கும். கழுகுகளுக்கு இஷ்டம் போல இரை கிடைக்கும். காரணம், மிக எளிதாக, பிடிக்க வசதியாகத் தொட்டி போன்று அந்தக் குழிகள் இருக்கும்.

நான் செய்ய வேண்டியதெல்லாம், அமைதியாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பதுதான்! ஒரு கால் மணி நேரம் ஆனதும், ஒரு மீன் கழுகு எதிர் மரத்தில் இருந்து எனக்கு வெகு அருகில் இருக்கும் குழியில் உள்ள மீனைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அதே கிளையில் போய் அமர்ந்து நிதானமாக உண்ணும்! அத்தனை அருகில் அந்தப் பளீர் வெண்ணிற அடிப்புறம் மற்றும் பழுப்புக் கண்கள்; கூர்மையான விரல் நகங்கள்; பறக்கும் நேர்த்தி; இரையைக் குறி வைத்துப் பிடிக்கும் லாகவம்; என அனைத்துமே ஒரு கவித்துவமான இயக்கமாக இருக்கும்! இடையில் பஞ்சுருட்டான்கள் பறந்து கொண்டே நீரருந்தும் அழகையும் காணலாம்! அமர்ந்து அருந்தும் வகையில் கால்கள் அமையாததால், அவை பறந்து ஒரு வட்டம் அடித்து, நீரின் மேல் அலகை வைத்து உறிஞ்சிக் குடிக்கும் அழகே அழகு! இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிரிப்பு போன்ற குரல் கேட்கும்! பார்த்தால், நமது நண்பன் நாரை அலகு மீன் கொத்தி அங்கு வந்திருப்பான்! ஒரு சிறிய வாழிடம் எப்படிப் பலதரப்பட்ட உயிரினங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்றெண்ணி வியப்போம்! அதை விட, பறவையியல் நிபுணர் சலீம் அலி இந்தக் காட்சிகளை எல்லாம் எவ்வளவு அனுபவித்து எழுதியிருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியாது! அவரது எழுத்தில் – ‘A predominantly fish eating eagle, met singly or in widely spaced pairs sitting bolt upright on boughs overlooking clear shingly perennial streams and rock pools in forest– in more or less the same facies as favoured by the Stork billed kingfisher.’ இதே போன்ற மற்றொரு மீன் கழுகு வாழிடம் மோயாற்றங்கரை, குறிப்பாக மங்களப்பட்டி. அங்கும் மீன் கழுகுகளைக் கண்டு களிக்கலாம்!

பறவை நோக்கல் என்பதை ஒரு கலையாக, இயற்பியல் உண்மைகளுடன் இணைத்து இது போல எழுதுவதும் கற்பிப்பதும் வேறு எவருக்கும் வராது என்பது எனது கருத்து! வாழிடப் பங்கீடு, எந்த வாழிடத்தில் எந்தெந்தப் பறவைகளைக் காணலாம், அவற்றின் குணாதிசயங்கள் என்னென்ன என்று எல்லாவற்றையும் அவரது இந்தியா – பாகிஸ்தான் பறவைகள் கையேடு மிகத் தெளிவாக எடுத்துரைக்கும். ஒரு வாழிடத்தின் பல்லுயிர் பெருக்கத்தைப் பறவைகள் மூலம் அறிந்து கொள்ள அவரது புத்தகங்கள் ஒரு கருவூலம் மட்டுமல்ல, விளக்கக் களஞ்சியம். வெறும் பறவை நோக்கல் மட்டும் கற்பிப்பது அல்ல அவரது நூல்கள். அதன் மூலம் இயற்கைப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொக்கிஷம். இப்படியாக எனது வேட்டையாடிப் பறவைகள் ஆய்வு பில்லூரிலே வெகு அருமையாக நடந்தது தொண்ணூறுகளின் இடைப்பட்ட காலங்களில். இன்றும் என்னை ஈர்க்கும் ஓர் அற்புதமான பிரதேசம், இந்த பில்லூர் – பரலி வளாகம்!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *