Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #22 – ஜெர்டான் பருந்து

Jerdon's Baza

மும்பையில் இருந்து மாற்றல் ஆகி வரும்போது, எனக்குக் கோயம்புத்தூர் வட்டம் (பிராந்திய) அலுவலகத்திற்கு உட்பட்ட கிளைகளில் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதாவது, அந்தப் பிராந்திய அலுவலகத்திற்கு உட்பட்ட ஏதாவது ஒரு கிளையில் காலியிடம் இருக்குமானால், நான் பணி புரியலாம். அந்தக் காலியிடக் கிளைகளின் பட்டியல் தரப்படும். அதில் நமக்கு விருப்பமான கிளையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு சில கிளைகளுக்குப் பெரிய அடிதடி நடக்கும்! போட்டி, சிபாரிசு, மேலிடத்துத் தலையீடு என எல்லாம் இருக்கும்! சில கிளைகளுக்கு யாரும் போக மாட்டார்கள்! ஏமாளிகள் (என்னைப் போல) யாரையாவது தள்ளி விடுவார்கள்! நாங்கள் 8 பேர் அந்த வருட ஆரம்பத்தில் மாற்றலில் வந்திருந்தோம். எல்லோரையும் பிராந்திய மேலாளர் அழைத்து, கிராமப்புறச் சேவை செய்ய விரும்புபவர்கள் சில கிளைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவற்றின் பெயர்களைச் சொன்னார். அதில் நீலகிரியில் உள்ள மஞ்சூரும் ஒன்று! உடனே நான், ‘எனக்கு மஞ்சூர் கொடுங்கள்’ என்றேன். நம்ப முடியாமல் அவர், ‘மஞ்சூரா?’ என்றார்! ஏனென்றால், அங்கே போவதற்குப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. போக்குவரத்து வசதிகள் இல்லாத ஒரு கடைக்கோடி ஊர் அது. மேலும், வருடத்தில் ஆறு மாதங்கள் கடும் குளிர் நிலவும் (கடல் மட்டத்தில் வாழ்ந்தவர்கள் கணிப்பு); பள்ளி, கல்லூரி வசதிகள் குறைவு; பெரிய வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இல்லை; இதுபோல பல அசௌகரியங்களால் பெரும்பாலோனோர் அங்கு போக விரும்புவதில்லை.

அவர் உடனே தனது அந்தரங்கச் செயலாளரைக் கூப்பிட்டு, ‘சந்துரு மனம் மாறும் முன் ஆர்டரை அடித்துக் கையெழுத்து வாங்கி விடுங்கள். வெளியில் போனால் அவர் மனதைக் கலைத்து விடுவார்கள்’ என்றார்! அவர் கவலை அவருக்கு! பாவம், என்னைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை! பைத்தியங்களில் மகா பைத்தியம் என்று தெரியவில்லை! எல்லாம் முடிந்து வெளியில் வந்தேன். ஏதோ வினோத ஜந்துவைப் பார்ப்பதுபோல என்னை எல்லோரும் பார்த்தனர். ‘பாவம், மஞ்சூர் வேணும் என்று கேட்டானாமே?’ என்று பரிதாபப்பட்டனர்! எனது நோக்கம் புரியாமல், அவரவர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்! அதிகாரிகள் (தொழிற்) சங்கத் தலைவர்கள் தனியாக என்னைக் கூப்பிட்டு விசாரித்தனர். அவர்களுக்கு நான் ஏமாந்து போய் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்ற கவலையுடன், அவரவர் சங்கத்துக்கு என்னை இழுக்கவும் ஒரு யோசனை! ஆக, அன்று பிராந்திய அலுவலகத்தில் நான்தான் பேசுபொருள்; காட்சிப் பொருள்; அனுதாபத்துக்குரிய மனிதன்! எனக்கு அந்த அளவுக்குக் கவலைப்படும் ஒரு விஷயமாகத் தெரியவில்லை. மேலும் மஞ்சூருக்கு நான் முன்பே ஒருமுறை சென்றுள்ளேன். அந்தக் கதை வேறொரு சமயத்தில்! ஸ்வெட்டர், கம்பளி, இத்தியாதிகள் வாங்க வேண்டும் என்பதால், எனக்கு மட்டும் இரண்டு நாள் அவகாசம் தரப்பட்டது! மற்றவர்கள் எல்லாம் அடுத்த நாளே சேர வேண்டும் என்கிற கட்டாயம். அதுவல்லாது, போக்குவரத்து வசதிகள் குறைவு என்பதாலும்.

இப்படியாக நான் இரண்டாம் நாள் காலை 9.30 மணிக்குக் கோவையிலிருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் செல்லும் கீழ்குந்தா பேருந்தைப் பிடித்தேன். மொத்தம் 90 கி.மி. தொலைவுதான் என்றாலும், அது மதியம் 1.30 வாக்கில்தான் மஞ்சூரை அடையும். காரணம், காரமடையில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நிதானமாக வெள்ளியங்காட்டில் உணவு இடைவேளைக்குப் பின், மலை ஏறி கெத்தை அடைந்து, அதன் பின் சாவதானமாக 37 கொண்டை ஊசி வளைவுச் சாலையில் பயணித்து மஞ்சூரை அடையும்! இந்த 37 கொண்டை ஊசி வளைவுச் சாலையில் பயணிப்பதே ஒரு த்ரில்லான அனுபவம்! கடும் குறுகலான வளைவுகளில் பேருந்தை இயக்குவது ஒரு சவாலான செயல்தான். ஏனென்றால், அந்தக் காலத்தில் (1994-97) பவர் ஸ்டீயரிங் கிடையாது. நல்ல திடகாத்திரமான டிரைவராக இருந்தால்தான் சமாளிக்க முடியும். வளைவுகளில் நெட்டி வாங்கும்! அவ்வப்போது யானைகளும், கரடிகளும் குறுக்கிடும்! பயணமே ஒரு சுகமான அனுபவம்தான்! ஒரே ஒரு சங்கடம், பயணிகளின் கூட்டம்! வெகு குறைவான பேருந்துகளே இவ்வழியில் போவதால், நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவல்லாது, முள்ளியில் கேரளாவில் இருந்து ஏறும் கூட்டம் வேறு சேர்ந்துகொள்ளும். இப்படியாக இந்தப் பயணம் இருக்கும். பேருந்துதான் வழியில் உள்ள பழங்குடி கிராமங்களுக்கு நாகரிகத்துடன் தொடர்புப் புள்ளி! பேருந்தை ஒட்டித்தான் இவர்களது வாழ்க்கை. ஓட்டுனரும் நடத்துனரும் இவர்களது தெய்வங்கள்!

வார நாளாக இருந்ததால், அன்று அதிகக் கூட்டம் இல்லை. மேலும் புது முகம் என்பதாலும், நடை உடை பாவனைகள் சற்று வித்தியாசமாக இருந்ததாலும், டிரைவர் என்னைப் பற்றி விசாரித்தார்! மஞ்சூர் வங்கியின் புதிய மேலாளர் என்று தெரிந்ததும், முன்னால் இருக்கும் தனி இருக்கையை எனக்குத் தந்தார்! அதாவது, அவருக்குப் பக்கவாட்டில், ஆனால் எதிரில். எனக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு போக வசதியான இருக்கை. யாரும் இடையூறு செய்ய இயலாத முதல் ஒற்றை இருக்கை. எனவே வழியைக் கவனமாக மனதில் பதிய வைத்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தேன். காரமடை வரை அதிக நிறுத்தங்கள் இல்லை. காய்கறிகளை காரமடையில் ஏற்றிய பின், சடுதியில் வெள்ளியங்காடு அடைந்து உணவு இடைவேளை விட்டாயிற்று. நான் இறங்கி ஒரு டீ குடித்துவிட்டு உலவிக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் உணவு உண்டபின்தான் வண்டி புறப்படும். இடையில் சிலர் என்னிடம் மஞ்சூர் குறித்து நல்ல விஷயங்களைச் சொன்னார்கள். அப்போதே மஞ்சூர் மக்களின் ஒரு பகுதிக்கு நான் நண்பனாகி விட்டேன்!

இடைவேளை முடிந்ததும் பேருந்து புறப்பட்டு இரண்டு கி.மீ. தூரத்தில் இருக்கும் மலைப் பாதையின் தொடக்கத்தை அடைந்தது. இப்போது உள்ளதுபோல அந்தக் கால கட்டத்தில் சோதனைச் சாவடி அடிவாரத்தில் கிடையாது. ஆனாலும், அதிகமாகத் தனியார் வண்டிகள் அந்த வழியில் போகாது. அரசுப் பேருந்துகளும், மின்வாரிய வண்டிகளும் மட்டும் செல்லும். சில அரசுத் துறை வாகனங்கள் அவ்வப்போது செல்லும். நான் எனது இருக்கையில் நன்றாக அமர்ந்துகொண்டு அந்தக் காட்டு வழியைக் காணத் தயாரானேன். முதல் கொண்டை ஊசி வளைவைத் தாண்டிப் பேருந்து ஒரு நேரான பாதையில் சென்று கொண்டிருந்தது. நேர் எதிரே ஒரு பருந்து போன்ற பறவை பேருந்தை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது. முழுவதும் கிட்டத்தட்டப் பழுப்பு நிறம்; சின்னக் கொண்டை போன்ற ஒரு குடுமி; மார்பகத்தில் செவ்வரிகள்; கால் விரல் நுனி வரை இறகுகள்; அலகில் ஒரு சிறிய ஓணான் போன்ற பிராணியைப் பிடித்திருந்தது; கிட்டத்தட்ட ஷிக்ரா போன்ற தோற்றம். நேரே பறந்து வந்த அந்தச் சிறிய பருந்து சட்டென்று இடப்புறம் திரும்பி, மலைப் பாதையை ஒட்டி இருந்த காட்டில் சென்று அமர்ந்தது. பேருந்து அந்தச் சிறிய ஏற்றத்தில் நிறை மாதக் கர்ப்பிணி போல (கூட்டத்தால்) மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. அதனால், நான் வெகு தெளிவாக இப்போது அதன் கொண்டையையும், இறகுகள் அடர்ந்த கால்களையும் காண இயன்றது. ஏனெனில், எனக்கு நேரே ஜன்னல் வழியாகக் காணும் வகையில் அது அமர்ந்திருந்தது. அலகில் இருந்தது ஓணான்தான் என்று தெரிந்தது. எந்த வகைப் பறவையாக இருக்க வாய்ப்பு என்று மனம் யோசிக்கத் தொடங்கியது.

Jerdon's Baza

ஷிக்ராவாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் கால்கள் வரை இறகுகள் அடர்ந்திருந்தது. கொண்டைப் பருந்தாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதற்கும் கால்கள் வரை இறகுகள் கிடையாது. பறந்து வரும்போது, சற்றே அகலமான சிறகுகள் (ஷிக்ரா மற்றும் கொண்டைப் பருந்தை நோக்கும் போது) தெளிவாகத் தெரிந்தது. மிக்கவாரும் வலசை வரும் வைரியாக இருக்கலாம் என்றால், அது குளிர் காலம் அல்ல. நல்ல கடும் கோடையான ஏப்ரல் கடைசி வாரம். இது என்ன என்று அறிய நான் சாலிம் அலியின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகளின் கையேட்டைத்தான் நோக்கவேண்டும். அதில்தான் மிகத் தெளிவான விவரங்கள் கிடைக்கும். ஆனால், அப்போதுதான் மாற்றலில் வந்து கிளைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். பின்னொரு சமயம் மும்பை சென்று வரும்போதுதான், புத்தகங்கள், மற்ற சாமான்களைக் கொண்டு வரமுடியும். அது வரை இருக்க முடியாது! ஏதோ ஒரு வேலை பிராந்திய அலுவலகத்தில் வரும்போது, கோவையில் உள்ள ஏதாவது நூலகமோ அல்லது பறவையாளரிடமோ சென்று தெளிவுபெற முடிவு செய்தேன். இன்றுபோல அன்று தகவல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் கிடையாது. ஏன், தொலைப்பேசிகூட எளிதில் அகப்படாது! மஞ்சூர் சென்று கிளையை அடைந்ததும் செய்த முதல் வேலை, இந்தப் பறவையின் குறிப்பை எனது கையேட்டில் பதிவு செய்ததுதான்! அதன் பின்தான் வருகைப் பதிவேட்டிலேயே கையொப்பம் இட்டேன்! ஏனெனில், இந்த விவரங்கள் மறந்து போனால், சரியானபடி பறவையை இனம்காண முடியாதே!

மற்றொரு விஷயம், மும்பையில் இருந்து வரும்போதே, தெற்கு நீலகிரிப் பகுதிகளில் உள்ள வேட்டையாடிப் பறவைகளைக் குறித்து ஓர் ஆய்வு செய்ய பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் அங்கீகாரத்துடன்தான் வந்திருந்தேன்! அதனால், ஒவ்வொரு வேட்டையாடிப் பறவையையும் சரியானபடி அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகிப் போனது! நான் எதிர்பார்த்ததுபோல அந்த வாரமே பிராந்திய அலுவலகம் போகவேண்டிய சூழல் வந்தது. இதற்கு முன் இருந்த மேனேஜர் வேலையை ராஜினாமா செய்து விட்டதால், அவர் குறித்த சில தரவுகளைக் கொண்டுசெல்ல நேர்ந்தது. அப்போது, வேலையின் இடையில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு சாகான் (Sacon) சென்று மேற்கோள் புத்தகங்களை ஆராய்ந்தபோது, அது பல்லி பருந்து (பழைய பெயர்) என்றழைக்கப்படும் ஜெர்டான் பருந்து (Jerdon’s Baza) என்றறிந்தேன்!

கால் விரல் வரை இறகுகள் இருக்கும் என்ற ஒற்றைக் காரணம் கொண்டு நான் இதை முடிவு செய்யவில்லை. அல்லது பொதுவான பழுப்பு நிறம் கொண்டுமல்ல. சாலிம் அலியின் நடத்தை குறித்த நுட்பமான குறிப்பு அதன் இனத்தை அறிய உதவியது! அவர் சொல்கிறார் – ‘…found in hilly forested country. Still hunts lizards and large insects, pouncing on them from look-out perch in a leafy tree. Prey carried in beak, not talons!’ அந்தக் கடைசி வார்த்தை, இது எந்த வேட்டையாடிப் பறவை என்பதை வெகு துல்லியமாகக் காட்டி விட்டது. மற்ற வேட்டையாடிப் பறவைகள், காலில்தான் பிடித்துக் கொண்டு பறக்கும்! இதுதான் விஷய ஞானம் உள்ளோருக்கும் மற்றவருக்கும் உள்ள வேறுபாடு! பொட்டில் அடித்தாற் போன்ற விளக்கம் மற்றும் வர்ணனை! அதற்கு மேலும் எனக்கு உறுதிப்படுத்துதல் தேவைப்படவில்லை!

அடுத்தது, இந்த வகைப் பறவை இங்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளதா என்கிற தகவல் வேண்டும். திருமூர்த்தி போன்றோர் பறவை நோக்கர்கள் கையேட்டில் (Newsletter for Birdwatchers) இது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை; ஆசாத் ரஹ்மானியும் நீலகிரிப் பறவைகள் பற்றிய குறிப்புகளில் ஏதும் எழுதவில்லை. ஆக, இது இப்போதுதான் கண்டறியப்பட்டது என்பது உறுதியானது. அதன்பின், அத்திக்கடவில் உள்ள பழங்குடியினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த வகை வைரிகளை வேப்பமரத்தூரை அடுத்தும் காணலாம் என்று அறிந்தேன். ஒரு குழுவாக இவை மாலை நேரங்களில் அலையும் என்றும் பெரும்பாலும் ஓணான்களையே பிடிக்கும் என்றும் கேள்விப்பட்டேன். இப்படியாக எனது வேட்டையாடிப் பறவைகளைக் குறித்த ஆய்வு, ஒரு அதிர்வெடி கண்டுபிடிப்புடன் தொடங்கியது! வருத்தமான விஷயம் என்னவென்றால், அன்று நல்ல காமிராவோ, படம் பிடிக்கக்கூடிய கைபேசியோ, இன்ன பிற உபகரணங்கள் இல்லாமல் போனதுதான். என் நினைவில் நிற்கும் காட்சிகள்தான் சாட்சி!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *