Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #23 – யானை எனும் புதிர்

யானை எனும் புதிர்

யானைகளின் சுபாவம் எப்படி மாறும் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, யானைகள் சுபாவத்தில் மிகவும் சாந்தமானவை. சண்டை சச்சரவுகளை விரும்பாதவை. ஒரு சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக அவை மூர்க்கமாக மாறுவதுண்டு.

இரண்டு நாட்களுக்குமுன் கர்நாடகாவில் உள்ள ஆலூர் சரகத்தில் (ஹாசன் வட்டம்) நிகழ்ந்த சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். பொம்மா என்ற கொம்பனைப் பிடிக்கும் முயற்சி வெற்றி பெறாததால், அதைப் பிடிக்க மயக்க மருந்து ஊசி செலுத்துவதில் வல்லவரான வெங்கடேஷ் என்ற ஓய்வு பெற்ற வன ஊழியரை வனத்துறை கூப்பிட்டு வந்தனர். கொம்பன் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது; காட்டின் ஊடே ஒரு ஜீப் தடம் சென்ற வழியில் இவர்கள் யானையைக் கண்டு மயக்க ஊசி போடக் கால்நடையாகச் சென்றிருக்கின்றனர்.

முதலில் அதுவே ஒரு தவறு. காரணம், யானையை இவர்கள் பார்க்கும்முன், அது இவர்களைக் கண்டு ஓடவும் வாய்ப்புண்டு அல்லது தாக்கவும் செய்யலாம். இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்கள். எச்சரிக்கையுடன் ஒரு கும்கி மீதோ அல்லது வண்டியிலோ போயிருக்க வேண்டும். அல்லது ஒரு திறந்த வெளியைத் தேர்ந்தெடுத்து, யானையை அங்கு வரவழைத்து மறைந்திருந்து ஊசி போட்டிருக்க வேண்டும்.

யானை காட்டிலிருந்து தடத்திற்கு வந்தபோது, வெங்கடேஷ் வெறும் 30 மீட்டர் தொலைவில் இருந்து மயக்க மருந்து ஊசியைப் போட்டிருக்கிறார். அது குறி தவறிவிட்டது. ஆனால், யானை கோபமடைந்து, திரும்பி அவரை விரட்டியது. கூட இருந்த (கன்மென்) துப்பாக்கி ஏந்திய காவலர் யானை இருந்த திசை நோக்கிச் சுட்டுவிட்டு ஓடி விட்டார்! காவலர் அவருக்குப் பின்னால் இருந்திருக்கிறார்! யானை திரும்பி விரட்டத் தொடங்கியதும், காவலர் ஒரு முறை காற்றில் சுட்டுவிட்டு, மயக்க ஊசி வெங்கடேஷைத் தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்! யானை வெங்கடேஷை விரட்டிச்சென்று மிதித்துவிட்டுப் போய்விட்டது. மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

கொடூரமான, ஆனால், முட்டாள்தனத்தின் விளைவாக நேர்ந்த ஓர் உயிரிழப்பு. இது போன்ற சமயங்களில், நிதானமும் எச்சரிக்கையுணர்வும் மிக மிக அவசியம். அதை விட, யாருக்கும் சேதம் நேராதவாறு ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தப்பிச் செல்லும் ஒரு வழி எப்போதும் திறந்திருக்க வேண்டும். அநாவசிய அலட்டல்களுக்கும், அசட்டு தைரியத்துக்கும் அங்கு இடமில்லை. ஆனால் இங்கு அது இல்லாமல் போய்விட்டது; ஒருவர் இறந்துவிட்டார்.

இப்போது நான் இது குறித்து எழுத நேர்ந்த அவசியம் என்னுடைய அனுபவம்தான். ஏனெனில், கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் நான் பந்திப்பூரில் யானைகளிடம் இருந்து தப்பித்தேன். யானைகளின் நல்ல குணத்தால் பிழைத்தேன் என்றும் சொல்லலாம்! யானைகள் பெரும்பாலும் அமைதியானவை; ஒதுங்கிப் போகும் குணம் கொண்டவை. அதோடு, யானைகள் கோபம் கொண்டிருந்தால், நாங்கள் தப்பிக்க வாய்ப்பே அன்று இல்லை! இருந்தும், தப்பித்து வந்து இதை எழுதும்வரை நான் இருக்கிறேன் என்றால், யானைகளுக்கும், இறைவனுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்!

இது நடந்தது 2001ஆம் வருடம் மே மாத இறுதியில்! அப்போது நான் கொல்லத்தில் பணியில் இருந்தேன். ஜனவரி மாதம் தட்டேகாட்டில் யானை விரட்டி உயிர் பிழைத்து வந்தபின் நாலு மாதத்தில் நடந்த சம்பவம் இது. பறவை கணக்கெடுப்பு முடிந்து தேவரிமடு முகாமில் இருந்து திரும்பும்போது நிகழ்ந்தது. தேவரிமடு முகாம் போகும்போது நிகழ்ந்த சம்பவத்தை என்னுடைய ‘கழுகுகளின் காடு’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இது அடுத்த இரண்டு நாட்களில் நடந்தது.

பறவை கணக்கெடுப்பு முடிந்து எல்லோரும் ஒரே இடத்தில் சந்தித்தபின் கலைவதுதான் வழக்கம். அந்த முறை என்னுடன் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த உமாசங்கர், உஷா இருவரும் இரவுக்குள் போகவேண்டும் என்பதால், முகாமில் இருந்து குறுக்கு வழியில் மைசூரு நெடுஞ்சாலையை அடைந்துவிட்டால், அவர்கள் மதியம் மூன்று மணிக்குள் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டனர். மேலும் வனத்துறை வண்டி வந்து கூட்டிச் செல்ல மாலை ஆகிவிடும் என்ற நிலை வேறு. எனவே ஒரு கன் மேன் (துப்பாக்கி ஏந்திய காவலர்) எங்களுடன் வந்து நெடுஞ்சாலையில் எங்களைவிட வேண்டும்; பேருந்து ஏறிய பிறகு அவர் திரும்புவது என்று ஏற்பாடு.

துப்பாக்கி ஏந்திய காவலர்தான் இருக்கிறாரே என்கிற தைரியத்தில், நாங்கள் மூவரும் எங்கள் மூட்டைகளைச் (haversack) சுமந்து கொண்டு காலை சுமார் 11 மணிக்கு புறப்பட்டோம். கன் மேன் எங்களுக்கு முன்னால், அவர் பின் நான், அடுத்து உஷா, கடைசியில் உமாசங்கர் என்று எங்கள் ஊர்வலம் தொடங்கியது.

முதல் ஒரு மணி நேரம் ஒரு பிரச்சினையும் இல்லை. நிதானமாக ஆனால் நல்ல வேகத்தில் நாங்கள் கிட்டத்தட்ட பாதி தூரத்தைவிட அதிகமாகவே கடந்துவிட்டோம் என்று கன் மேன் சொன்னார். இன்னும் ஒரு முக்கால் மணி நேரத்தில் நெடுஞ்சாலை அருகே சேர்ந்துவிடுவோம் என்று உற்சாகப்படுத்தினார்! அஙகுதான் நான் பாதையோரம் ஒரு நீண்ட வால் பக்கியின் (Long-tailed Nightjar) கூட்டைப் படம் எடுத்தேன். (அந்தக் கதை பின்னொரு சமயத்தில்!) வெகு நேரம் அங்கு நின்று படங்கள் எடுத்ததுடன் அதன் உருமறைப்பு உக்தியைப் பெரிதும் பாராட்டியவாறு மேலும் நடந்தோம்.

இடது புறம் ஒரு சிறிய குட்டை இருந்தது; கடுங்கோடை காரணமாக, அதில் நீர் குறைவாக இருந்தது; அதில் 5 விடலை யானைகள் (sub adult) நீரருந்திக் கொண்டிருந்தன. சுமார் 3 அல்லது 4 வயதுக் குட்டிகள். நாங்கள் கரையை அடைந்ததும், அவை கலைந்து எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தன! நான் சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்தேன். பெரிய யானை ஏதும் இல்லை. ஆனால், இந்தக் குட்டிகள் எங்களை முட்டித் தள்ளி விடுவதுபோல ஓடி வந்து எங்கள் நடுவில் புகுந்து சென்றன. இடித்திருந்தால், எங்களால் சமாளிக்க முடிந்திருக்காது. அவற்றின் தலையில் குச்சி போன்ற தடித்த முடிக் கற்றைகள் கட்டாயம் குத்தி காயப்படுத்தி இருக்கும். நல்ல வேளை, பெரிய சேதாரம் இன்றித் தப்பினோம்.

அதன்பின், வெகு எச்சரிக்கையாக பார்த்துக்கொண்டு சற்றே வேகமாக நடந்தோம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் ஓசை மெலிதாகக் கேட்டது. ஆனால், அந்த இடத்தில், பாதையின் இரு புறமும் உண்ணிச் செடிகள் (Lantana Camara) அடர்ந்து கிடந்தன. உள்ளே எந்த விலங்கு இருந்தாலும் தெரியாது. சரி, நெடுஞ்சாலைக்கு அருகே வந்து விட்டோம், ஒரு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டு, ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு போகலாம் என்று உஷா சொன்னாள். அதுவும் சரிதான் என்று முதுகில் இருந்த சுமையை அருகில் இருந்த ஆச்சா மரத்தடியில் இறக்கி வைத்து விட்டு, சற்று இளைப்பாறினோம்.

கன் மேன் எங்களுக்கு சற்று முன் நின்று கொண்டிருந்தார். உமாசங்கர், திடீரென பதட்டம் அடைவது கண்டு நான் இடது புறம் குவிந்து கிடந்த உண்ணிச் செடி புதரை உற்று நோக்கினேன். சடாரென்று எங்களுக்கு 20 மீட்டர் முன்பு உண்ணிச் செடி புதர் விலகியது; ஒரு பெரிய கொம்பன் வெளிவந்து எங்களைப் பார்த்தவாறே எதிர்புறம் சென்று மறைந்தது! எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வெகு வேகத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. பக்கத்தில் இருந்த கன் மேன் எங்கே போனார் என்று தேடவேண்டி வந்தது!

யானை போன பின்னர் கன் மேன் அருகில் இருந்த மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தார். எனக்கோ பயங்கர கோபம். எங்களைப் பாதுகாக்க வந்தவர் இப்படி பயந்து ஓடினால் என்ன பயன்? எனக்கு கன்னடம் பேச அப்போது வராது. அதனால், கோபமாக உமாசங்கரிடம் அதை கன் மேனுக்கு சொல்லச் சொன்னேன். உமாசங்கர் அவரைக் கடிந்து கொண்டார். ஆனால், உமாசங்கர் என்னிடம், ‘இந்த ஆளை நம்பிப் பயனில்லை. மிகவும் பயந்து போய் இருக்கிறான். நம்மை இவனே யானையிடம் மாட்டி விடுவான் போலத் தெரிகிறது’ என்றார். முதுகில் சுமை இல்லாமல் இருந்தாலாவது வேகமாக ஓடலாம்; எங்கள் பை வேறு இடைஞ்சல்.

நான் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தாமதித்து இடப்புறத்தில் இருந்து ஒரு விலங்கும் வரவில்லை என்றால் மேலே நடக்கலாம் என்றேன். காரணம், யானைக் கூட்டம் இருந்தால், அவை மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாகத்தான் வரும். நாம் அவற்றின் வழியில் மோதுவதுபோலப் போவது நல்லதல்ல என்றேன். கன் மேன், நாங்கள் உடனே போவதுதான் நல்லது, இல்லையென்றால் யானைகள் வந்துகொண்டுதான் இருக்கும், அந்த இடத்தை விட்டு சீக்கிரம் போவதுதான் நல்லது என்றார். உமாசங்கரும் அதுதான் சரி என்றார். வேறு வழியில்லை. ஒரு பத்தடி முன்னே போயிருப்போம். அதே உண்ணிப் புதரில் இருந்து ஒரு தாய் யானையும், குட்டியும் வெளி வந்து எங்களைக் கண்டு மிரண்டு, பிளிறியவாறு எதிர் புதரில் ஓடி மறைந்தன!

கன் மேன், ‘மரி, மரி’ என்று புலம்பியது கேட்டது. அடுத்த கணம் அவர் 100 மீட்டர் பின்னால் ஓடி மறைந்துவிட்டார். நாங்கள் செய்வதறியாது அப்படியே உறைந்து நின்றுவிட்டோம். அது எங்களுக்குச் சாதகமாகப் போனது என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது! மற்றொரு காரணம், குட்டி இருந்தது. குட்டியைப் பாதுகாப்பதை தாய் யானை பெரிதாக எண்ணி விரைவில் சென்றுவிட்டது என்று எண்ணுகிறேன். நாங்கள் ஓடி இருந்தாலோ அல்லது சத்தம் போட்டிருந்தாலோ என்ன நடந்திருக்கும் என்று சொல்ல இயலாது. அதன் பின், உமாசங்கர் என்னிடம் வந்து, ‘நீங்கள் சொல்வது போலச் செய்வோம்’ என்றார்.

நான், ‘ஒரு பத்து நிமிடம் அருகில் இருந்த மரத்தடியில் நின்று கவனித்த பின், மேலே நடப்போம்’ என்றேன். சுற்றுமுற்றும் நன்கு நோட்டம் விட்டவாறு, பதற்றம் தணிய குடுவையில் இருந்து நீர் அருந்தினோம். அமைதியாக பத்து நிமிடங்கள் கழிந்தன. கன் மேன் மெதுவாக திரும்பி வந்து, ‘என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள்’ என்று கண்ணீர் மல்கக் கெஞ்சினார். தன்னுடைய தவறை உணர்ந்தார் என்பதைவிடப் பத்திரமாகப் போகவேண்டுமே என்ற கவலைதான் அதிகமாக இருந்ததுபோல எனக்குப் பட்டது.

அதன்பின் அரை கிலோமீட்டரே இருந்த தூரத்தை விரைவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து நெடுஞ்சாலையை அடைந்தோம். அங்கு நல்ல வேளையாக எனக்கு கூடலூர் வரை ஒரு மகிழூந்தில் (கார்) இடம் கிடைத்தது. காட்டின் நடுவில் இப்படி மூட்டையுடன் ஒருவர் நிற்கிறாரே என்று பரிதாபப்பட்டு இடம் தந்தார்! அங்கிருந்து வழிக்கடவு, திருச்சூர், ஆலப்புழா வழியாக கொல்லம் போய்ச் சேர்ந்தேன். உமாசங்கரும், உஷாவும் எதிர் புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அப்போது வந்த மைசூரு மார்க்க பேருந்தில் ஏறிச் சென்றனர். கன் மேன் தன் வழியில் சென்றார்.

பின்னர் நண்பர் சீனாவிடம் (ஸ்ரீனிவாஸ்) பேசும்போது, மரி என்றால் கன்னடத்தில் குட்டி என்று அறிந்தேன். கன் மேன் தலைதெறிக்க ஓடிய காரணம் புரிந்தது. எல்லோரும் குட்டியுடன் இருக்கும் யானை தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பர். காரணம், குட்டியைப் பாதுகாக்க வலிந்து தாக்குவது ஒரு தந்திரம் ஆகும். அவர் எந்த இடர் எதிர்கொள்ளவும் தயாரில்லை.

பெரும்பாலும் சாந்த குணம்தான் என்றாலும் நிலைமையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஒரு யானை என்ன செய்யும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இங்கு நாங்கள் தாக்கப்படத்தான் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், நாங்கள் நேர்கொண்ட யானைகள் அமைதியை விரும்பின. மேலும் நாங்கள் கத்திக் கூப்பாடு போடவில்லை, இங்கும் அங்கும் ஓடி அவற்றைப் பயமுறுத்தவில்லை, கன்மேனைத் தவிர! உறைந்து போய் நின்று விட்டோம். கன் மேனும் அந்த இடத்தைவிட்டு ஓடியே விட்டார்… நல்ல வேளையாக எதிர் திசையில்.

துப்பாக்கி இருப்பதோ அல்லது ஆயுதம் இருப்பதோ பெரிய லாபம் இல்லை, அதைப் பயன்படுத்தத் தேவையான மன நிலை இல்லாதவரை. எங்களது கன் மேனும் சரி, சமீபத்தில் நடந்த சம்பவ கன் மேனும் சரி, வேண்டிய மனநிலையில் இல்லை. எங்களுக்கு மற்றொரு அனுகூலம், எங்கள் கன் மேன் சுடவேயில்லை. அதனால் யானைகள் கிலேசம் அடையவில்லை. இப்படி எல்லாம் இந்த நேரத்தில் நாம் அலசி ஆராயலாம், போஸ்ட் மார்ட்டம்போல. என்னைப் பொறுத்தவரை, இது இறைவனின் அருள் என்றுதான் சொல்வேன். காரணம், நான் தாக்கப்படுவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் நூறு சதவீதம். அதிலும், ஜனவரியில் யானை விரட்டி அடிபட்ட வலது காலுடன் வேறு இருந்தேன். ஓட நேர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றே சொல்லமுடியாது. இப்படிப் பல முறை நடந்திருக்கிறது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *