பில்லூர் பரலி வளாகத்தில் பறவை நோக்கல் எப்போதும் ஒரு ரசமான அனுபவம்தான். ஏனெனில், மிக அமைதியாக, அதே நேரம் கூட்ட நெரிசல் இல்லாமல், நாம் சொற்பமான குடியிருப்புகளைச் சுற்றியுள்ள காடுகளில் சுவாதீனமாக அலைந்து திரியலாம். என்னைப்போல நடைக்கு அஞ்சாதவர்கள் என்றால், வெகு தூரம் பரந்து கிடக்கும் தார் சாலைகளில் மனம் போன போக்கில் சென்று வரலாம். அதன் மூலம் பலதரப்பட்ட வாழிடங்களையும் அங்குக் கோலோச்சும் பறவையினங்களையும் பார்க்கலாம்.
சில இடங்கள் திறந்த வெளியாக இருக்கும்; சில அடர்த்தியான காடுகளாக இருக்கும்; சில இடங்களில் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும்; சில இடங்கள் மலைச் சரிவுகளாக இருக்கும்; சில ஆல், இச்சி போன்ற மரங்களைக் கொண்டிருக்கும். இப்படிப் பலவித நுண்ணிய அல்லது சிறு சிறு வாழிடங்களைக் கொண்ட ஒரு பெருங்காடு இந்த வளாகம்.
நெல்லித்துறையில் இருந்து நீலகிரி மலையின் தென் பகுதி அடிவாரத்தைத் தழுவியவாறு பவானி நதியை உள்ளடக்கி, முள்ளியை அணைத்து, குந்தா வழியாக மேல் பவானி வரை செல்லும் இந்த மலைத் தொடர், நீலகிரியின் வெகு எழிலான பகுதியாகும். காடுகளைக் குறித்து பெரிதும் பேசும் ‘சாம்பியன் அண்டு சேத்’ புத்தகத்தில் காணும் அனைத்து வகைக் காடுகளையும் இங்குக் காணலாம், பனிப் பிரதேசக் காடுகளைத் தவிர! இந்தப் பிரதேசம் இயற்கையாளர்களின் சொர்க்கம்.
மலைப்பாங்கான பகுதி என்பதால், வழியோ அல்லது தார் சாலைகளோ வளைந்தும் நெளிந்தும் காடுகளுக்கு நடுவே செல்லும். இருபுறமும் நாம் பறவைகளைக் கண்டவாறு மெதுவாகவும், பொறுமையாகவும் செல்லலாம். குடியிருப்பை அடுத்துள்ள காடுகளில் குறைந்தது மூன்று வகைக் கரிச்சான்களை (ஆனைச்சாத்தன் அல்லது இரட்டை வால் குருவி) காணலாம். குடியிருப்புகளில் உள்ளவர் வீசி எறியும் உணவுத் துணுக்குகளை உண்பதற்காக அவை அங்கிருக்கும் மின்விளக்குக் கம்பங்களில் அல்லது சுவர்களில் அமர்ந்து கிரீச்சிட்டுக் கொண்டிருக்கும். யாராவது கருங்கரிச்சான், வெண்வயிற்றுக் கரிச்சான், சாம்பல் கரிச்சான் இவற்றுக்குள்ள வேற்றுமையைக் கண்டறிய வேண்டும் என்றால், இங்கு வந்தால் போதும்! கையெட்டும் தொலைவில் அவற்றைக் கண்டு அறிந்துகொள்ளலாம். அவை இரவில் வெகு நேரம் வரை மின் விளக்கின் ஒளியில் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் ரசிக்கலாம். என்ன, அந்தி சாய்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின் உலவுவது பெரும் ஆபத்தில் முடியலாம்! யானையார் எந்த மூலையிலும் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கலாம்!
சற்று மேலே சென்றால், நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில், ஈப்பிடிப்பான்கள் (Fly Catcher), பஞ்சுருட்டான் (Bee Eater), சிலம்பன்கள் (Poplar) மற்றும் புல்புல்களைக் காணலாம். சில நேரம், சாம்பல் இருவாயனைக் காணலாம். மாலையில், கிட்டத்தட்ட எல்லாப் பறவைகளும் அங்கே சங்கமம் ஆகும். காரணம், நீரருந்த மற்றும் ஒரு குளியல் போட! ஆங்காங்கே கிடக்கும் குட்டைகளில் அல்லது நீர் ஒழுகும் கல் பாதையில் அவை ஆனந்தமாகக் குளிக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்! அந்த இடமே ஒரு பரவச அதிர்வலைகளில் இயங்கும்! மின்னல் போல அவை பல வண்ணங்களில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், அங்குமிங்கும் ஊடாடிக் கொண்டும் இருப்பதைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனம் நிறைந்து, மோன நிலை போன்ற ஒரு கிளர்ச்சியை உணர முடியும்! எல்லாம் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான். அவை கூடு அடையச் சென்ற பின் அங்கு மயான அமைதி நிலவும். மெல்லிய பின்னணி இசைபோல நீரின் ஒழுகும் ஓசை மட்டும் கேட்கும். எங்கோ ஓர் ஆந்தை அலறும் ஓசை கேட்கும். மானின் எக்காள ஒலி கேட்கும். கீழிருந்து புனல்மின் நிலைய சங்கு ஊதும். வீடு திரும்ப வேண்டும் என்று உணர்த்தும்!
இங்குதான் நான் கொண்டை உழவாரன்களை (Crested Treeswift) அத்தனை அருகில் முதலில் பார்த்தேன். சிறிய, ஆனால், மிக அழகான பறவை அது. எனது நாக்பூர் நண்பர் சுரேந்திர அக்னிஹோத்ரி அதன் மிக அழகான ஒரு படத்தை எடுத்திருக்கிறார். பனை உழவாரனை விடப் பெரியது, ஆனால் நீண்ட வாலுடன் சற்றே அதிக விரிவான வில் போன்ற இறகு அமைப்பைக் கொண்டது. கறுப்பும், சாம்பல் நிறமும் கொண்ட உடல்; ஆணுக்குக் கன்னத்தில் ஒரு சிவப்புத் திட்டு இருக்கும்; அமர்ந்திருக்கும்போது நீண்ட வால் கத்திரி போலக் குறுக்காக இருக்கும். எந்நேரமும் பறந்து கொண்டிருக்கும். மரக் கிளைகளின் நுனியில் அமரும்; கூடும் வைக்கும். குட்டை வால் கிளியின் குரலை ஒத்த ஒலி எழுப்பிக்கொண்டு காட்டில் மரங்களின் இடையே, திறந்த வெளிகளில் பறந்து இரை தேடும். சின்னச் சின்னப் பூச்சிகள், கொசுக்கள், தட்டான்கள் போன்றவற்றைப் பறந்து செல்லும்போதே பிடித்து உண்ணும். அதற்கேற்றார்போல அதன் வாய் விரிந்திருக்கும். பறக்கும் திறன் நம்மை வியக்க வைக்கும்! உண்மையில், மிதப்பது போன்ற எண்ணத்தைத் தரும். கிளைகளின் ஊடே அவை திரும்பி, சாடி, பறக்கும் அழகே தனி!
சாலிம் அலி அவற்றின் பறக்கும் திறனை வெகு அழகாக விவரிப்பார் – ‘… பூச்சிகளை வேட்டையாடுவதில் நளினமாகப் பாய்ந்து செல்லும் திறமை மற்றும் வேக வேகமாகத் திரும்பி வளைந்து செல்லும் திறமைகளைக் கொண்டது. நளினமான வளை கோட்டுப் பாதையில் கானக நீர் நிலைகளில் பாய்ந்து இறங்கி நீர் அருந்திவிட்டு அதே வேகத்துடன் மேலேறிச் செல்லும்.’ அந்த வி போன்ற இறகு அமைப்புடன் அவை திரும்பும்போது, ஒரு விமானம் எப்படிக் காற்று மண்டலத்தில் செல்லுமோ அது போல இருக்கும்; ஆனால் இது மிகச் சிறியது. அப்படித் திரும்பும்போது அதன் வால் ஒரு சுக்கான் போலச் செயல்படுவதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும்! அதே வேகத்தில் பறக்கும் பூச்சிகளைக் கபளீகரம் செய்வது அதைக் காட்டிலும் அழகோ அழகு! இவற்றை மிஞ்சும் வகையில் அவற்றின் கூடு வைக்கும் திறன் இருக்கும்! சட்டென்று பார்த்தால் தெரியாத அளவிற்கு ஓர் உலர்ந்த கிளையின் நுனியில் அது இருக்கும்! ஒருமுறை, மேலே சர்ஜ் ஷாப்ட் போகும்போது காவலர் (பாதுகாப்புக்கு போலீஸ் படை உண்டு) அறை வளைவுக்கு முன்னால் வலது புறம் இருந்த மரத்தின் உலர்ந்த கிளையின் நுனியில் ஒரு பந்து போன்ற அமைப்பைக் கண்டேன். மரப்பாசி போன்ற நிறத்தில் அது இருந்தது. உலர்ந்த கிளையில் பாசி வர வாய்ப்பில்லையே என்று யோசித்துக் கொண்டு ஒரு பத்து நிமிடம் நின்றேன்.
சிறிது நேரத்தில், நண்பன் கொண்டை உழவாரன் அந்தக் கிளை நுனியில் இருந்த மரப்பாசியின் அருகே அமர்ந்தான். மெதுவாக அலகால் சற்று அதைச் செப்பனிட்டான். எனக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடியது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆணும், பெண்ணும் குறைந்தது ஒரு பத்து முறை வந்து அங்கு அந்தப் பாசி போன்ற கூட்டை கிளையில் ஒட்ட வைத்தது! நமது பறவை ஆய்வு பிதாமகர் சாலிம் அலி இருக்கும்போது நமக்கென்ன கவலை? அன்று வீட்டிற்கு வந்ததும் 4ஆம் தொகுப்பில் உள்ள கொண்டை உழவாரன் என்ற தலைப்பில் இருந்த விஷயத்தைப் படித்துப் பிரமித்துப் போனேன்! மரத்தின் மெல்லிய பட்டை மற்றும் இறகுகளைக் கொண்டு தனது எச்சிலையும் சேர்த்துக் குழைத்து உலர்ந்த கிளை நுனியில் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பை உருவாக்கி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் என்று வெகு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். நான் பறவை எச்சிலால் கூட்டைப் பிணைக்கும்போது அங்கிருந்திருக்கிறேன்! அதுதான் சின்ன மரப்பாசி திட்டு போலத் தெரிந்தது என்று புரிந்தது!
அடுத்த முறை போகும்போது, பெண் கொண்டை உழவாரன் அடை காத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அதன் பின், குஞ்சுகள் வெளி வந்த பிறகுதான் போக இயன்றது. மிகச் சிறிய குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைக் காணப் பேரானந்தமாக இருந்தது! காற்றிலும், மழையிலும் அவை எங்ஙனம் பிழைத்து வாழ்கின்றன என்றெண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சின்னச் சின்ன முடிச்சுகள் போல அவை அமர்ந்திருந்த விதம்; பெற்றோர் ஓடி ஓடி இரை தந்த விதம்; குட்டிக் கிண்ணம் போன்ற கூட்டில் பயமின்றி அவை நெருக்கிக் கொண்டு இரையைப் பெற்ற விதம் என்று நான் மூன்று நான்கு வாரங்களை இதற்காகவே செலவிட்டேன்! மறக்க முடியாத ஒரு நிகழ்வு அது. எங்குக் கொண்டை உழவாரன்களைக் கண்டாலும், இந்த நிகழ்ச்சி என் நினைவில் நிழலாடும். அந்த அற்புதமான அனுபவம் என்னைச் சூழும்!
(தொடரும்)
Crested Treeswifts Photo credit – Adult and juvenile by Melvin Jaison – Kotagiri, Tamil Nadu ; Adult male by Anonymous – Amreli, Gujarat (Macaulay Library)