பில்லூர் பரலி வளாகத்தில் நான் பறவைகளைத் தேடி உலாவும்போது, பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அவற்றை எல்லாம் காணாமல் போக இயலாது. அந்தப் பிரதேசத்தில் பல உயிரினங்களைக் காண வாய்ப்பு கிட்டும். அப்போதெல்லாம், கண்ணை மூடிக்கொண்டு போக முடியாது! குறிப்பாக, மழைக் காலங்களில் (அது தென்மேற்கு அல்லது வடகிழக்கு ஆக இருக்கலாம்) வறண்டு கிடக்கும் நிலம் பச்சைப் புல் போர்த்தி நீரோடைகள் ஓடும் இடமாகும்; தாவரங்கள் பசுமையாகக் கண்ணுக்கினிய விருந்தளிக்கும்; குளிர் காற்று மெல்ல வீசும்; வெயில் சுட்டெரிக்காமல் இதமாகத் தெரியும். வண்ணத்துப் பூச்சிகளின் வரவு, இந்த அழகினை மேலும் அதிகரிக்கச் செய்யும். காட்டின் ஆபரணங்கள் (jewels of the forest) என்றறியப்படும் இந்த வண்ணத்துப் பூச்சிகள், இந்தக் காலத்தில் பலவித வண்ணங்களில் அங்குமிங்கும் ஊடாடித் திரியும். போதாக்குறைக்கு, உண்ணிச் செடி இந்த நேரத்தில் பூத்துக் குலுங்கும்! இந்த வெளிநாட்டுத் தாவரம் நமது காடுகளில் பெரிதும் ஊடுருவி இருக்கும் ஒரு களைச்செடி. விரும்பத்தகாத ஒரு களைச்செடிதான் என்றாலும், தற்போது இவை இல்லாத இடமே இல்லை என்பதோடு, பல பறவைகள், பூச்சிகள் இவற்றின் பூ, தேன், பழங்களை உணவாக ஏற்றுக்கொண்டுவிட்டன. அழகான நிறங்களில் (வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ரோஜா) உள்ள சிறிய பூக்கள் வண்ணத்துப் பூச்சிகளின் பிரதான உணவு இந்தக் காலங்களில்.
கொடியூர் செல்லும் சின்னப் பாலத்தைக் கடந்து வலது புறம் திரும்பி பழைய தார்ச் சாலையில் நடந்தால், நீர்த் தேக்கத்தின் மதில் சுவரின் கீழ் உள்ள வழியில் குடியிருப்புகளை நோக்கிச் செல்லும் சாலையை அடையலாம். அப்படியே சென்று மனமகிழ் மன்றத்தையும் பள்ளிக்கூடத்தையும் கடந்து பேருந்து வரும் வழியை அடையலாம். கிட்டத்தட்ட 4 கி.மீ. தொலைவுள்ள ஒரு வட்டப்பாதை இது. இந்தப் பாதையில் ஒரு சுற்றுச் சுற்றினாலே பல அவதானிப்புகள் கிடைக்கும். மழை நேரங்களில் வேறு வழிகளில் போவதைக் காட்டிலும், இது சற்றே நல்ல பாதை. ஏனெனில், சேறும், சகதியும் அதிகம் இருக்காது. நிதானமாக நின்று பார்த்துக் கொண்டு போகலாம். என்ன, உண்ணிச் செடிகள் மிகவும் அடர்ந்து கிடக்கும் பகுதி இது. பாதையின் இரு மருங்கிலும் மண்டிக் கிடக்கும் என்பதோடு சில இடங்களில் நல்ல உயரத்திற்கும் வளர்ந்து கிடக்கும். இதனால், வெகு ஜாக்கிரதையாக நாம் செல்ல வேண்டும். காரணம், இவற்றின் பின்னே என்ன இருக்கும் என்று பட்டென்று அனுமானிக்க இயலாது! கரடிகள், காட்டெருமைகள் சாதாரணமாக இங்கு உலவும்! எப்போதாவது யானையார் வருவார்! இங்குள்ள பழங்குடிகள் சொல்வது போல ‘சாமியார்’ வருவதே தெரியாது! நாம்தான் பார்த்துப் போக வேண்டும்!
நான் சொன்னதுபோல முதல் மழையிலேயே காடு பச்சைப் பசேல் என்று ஆகி விடும். தாவர உண்ணிகளுக்கு விருந்து தொடங்கி விடும்! அதேபோல வண்ணத்துப் பூச்சிகளின் வலசை ஆரம்பித்து விடும். மழை நன்றாக இருந்தால், ஜூலை மாத இறுதியிலேயே வலசை தொடங்கி விடும். ஆகஸ்ட் செப்டெம்பருக்குள் புது வண்ணத்துப் பூச்சிகள் வெளி வந்து விடும். உண்ணிச் செடிகளின் மேல் அவை தேன் குடிக்கும் அழகை, கைக்கெட்டும் தொலைவில் நின்று காணக் கண் கோடி வேண்டும்! பல வித வண்ணங்களில் சிறிதும் பெரிதுமாக அவை அப்பிக் கிடப்பதைக் கண்டால் மனம் நிறைந்து விடும்! குறிப்பாக, பெரிய பாப்பிலோன் வகை வண்ணத்துப் பூச்சிகள் மிகவும் அழகானவை. மிகக் கவர்ச்சிகரமான சிறகமைப்பு; வண்ணங்கள்; வடிவமைப்பு; இவற்றால் தெளிவாகப் பிரித்தறிய முடியும். ஏன் ‘ஜுவல்ஸ் ஆப் த பாரெஸ்ட்’ என்கிறார்கள் என்று புரியும்! மிக்கவாறும், நீலம், பச்சை, சிவப்பு, கருநீலம் மற்றும் சந்தன நிறம் இவற்றின் ஒரு தொகுப்பாக அல்லது கலவையான அழகிய பட்டாடை போல இருக்கும்!
நாம் சாதாரணமாகப் பார்க்கக் கூடிய சாதா ரோஜா, மோர்மோன், ஸ்வாலோ டெயில், போன்றவை தவிர அளவில் பெரிய கண்ணைப் பறிக்கும் நிற அமைப்பைக் கொண்ட ரெட் ஹெலென், லைம், பேர்ட் விங்க், மயில் அழகிகள் போன்றவற்றையும் காணலாம். மயில் அழகிகள் பீகாக் இனத்தைச் சார்ந்தவை. மயிலின் கழுத்து அல்லது தோகை போல பல வண்ண ஜாலங்களைக் காட்டும் சிறகமைப்பு கொண்டவை. இந்த ஒட்டுமொத்த அழகிய வண்ணத்துப் பூச்சிகளும் பாப்பிலோனிடே குடும்பத்தைச் சார்ந்தவை. இவற்றைக் காண இது ஒரு நல்ல இடம் என்பதோடு, மிகவும் அமைதியான, பாதுகாப்பான பிரதேசம். என்ன, ஓர் அனுமதி மட்டும் வனத் துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டால், எந்தப் பிரச்னையும் இருக்காது. இப்படித்தான் நான் பறவைக் காதலில் இருந்து வண்ணத்துப் பூச்சிக் காதலிலும் விழுந்தேன்! எல்லாம் அழகின் சிரிப்புதானே! பின் காதலிக்க என்ன தடை? A thing of beauty is a joy forever, அல்லவா? வண்ணத்துப் பூச்சிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் செல்வி. மீனா ஹரிபல். நான் மும்பையில் இருந்த போது அவருடன் வண்ணத்துப் பூச்சி கணக்கெடுப்புக்குப் பலமுறை சென்றதுண்டு. முதல் குரு அவர். பின்னர் பாவை பானுமதியுடன் சில பயணங்களில் ஒரு சில விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இருப்பினும் அவர்கள் அளவிற்கு பாண்டித்தியம் கிடையாது! இது எனக்கு இரண்டாம் பட்சம்தான்.
இயல்பாகவே அழகாக இருக்கும் லாண்டனா (உண்ணிச் செடி) பூக்கள் ஒரு போர்வை போலப் பாதையின் இரு மருங்கிலும் பரவி இருக்கும். அவற்றின் மேல் பல நிற வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்தும், அமர்ந்தும் இருக்கும் காட்சி, வெகு ரம்மியமாகப் பொலியும். இப்படி எந்த வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பது, விடுவது என்று தெரியாது! அத்தனை வண்ணத்துப் பூச்சிகள் பறந்த வண்ணம் இருக்கும். அது ஒரு காலை நேரம். அதிகாலை இல்லை என்றாலும், மதிய நேரமும் அல்ல. சுமார் ஒன்பது மணி இருக்கலாம். வெயில் சற்றே சுள்ளென்று உறைக்கத் தொடங்கிய நேரம். வண்ணத்துப் பூச்சிகளுக்கு வெயில் வேண்டும். அப்போதுதான் அவை சுறுசுறுப்பாகச் செயல்படத் துவங்கும். நான் கண்ணெதிரே விரிந்து கிடந்த அழகைப் பருகியவாறு மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தேன். இடப்புறம் இருந்த உண்ணிச் செடியில் ஒரு பெரிய வித்தியாசமான ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கண்டேன். முதல் பார்வைக்கு மலபார் பாண்டெட் பீகாக் போல இருந்தது. உண்ணிச் செடியில் அமர்ந்திருந்த விதம் சற்றே வித்தியாசமாக இருந்தது. மெதுவாக முன்னேறி பத்து அடி இடைவெளியில் நின்றேன். அப்போதும் அந்த வண்ணத்துப் பூச்சி நகரவில்லை. மிக மெதுவாக எனது காமிராவை வலது கைக்கு மாற்றிக் கொண்டேன். சிறகுகள் மேல் நோக்கி இருந்ததால், அடிப்பகுதியைத்தான் கண்டேன். கீழ்புறம் பழுப்பு கலந்த கருப்பு; சாம்பல் டிஸ்கல் கோடுகள் கொண்ட முன் இறக்கைகள்; சிவப்பு மற்றும் நீல பிறை வடிவங்களுடன் பின் இறக்கை. என் நல்ல நேரம், ஒரு சில நிமிடங்களில் சிறகை விரித்து மேல் புறத்தையும் காட்டியது! நல்ல கருநீலச் சிறகின் கீழ்ப் புறத்தில் இரண்டு வெளிர் நீலத் திட்டுகள் தெரிந்தன. அப்போது இருந்த பிலிம் சுருள் காமிராவில் முடிந்த அளவு தெளிவாகப் படம் பிடித்துக் கொண்டேன். ஆனால் மனம் சொன்னது – நீ ஒரு புதிய வண்ணத்துப் பூச்சியை இன்று பார்த்து விட்டாய் என்று!

பின்னர் சென்று பிரிண்ட் செய்து பார்த்தபோது அது ‘பாரிஸ் பீகாக்’ எனப்படும் ‘பாரிஸ் மயில் அழகி’ என்று தெரிந்தது. அதன் உறவினன், தமிழ் மயில் அழகியும் இங்கு இருக்கலாம் என்று எனது நண்பர் முனைவர் பானுமதி பின்னர் சொன்னார். கிட்டத்தட்ட இதே நிறங்கள் மற்றும் அமைப்பு கொண்ட மயில் அழகி அவள்! பெரிய வித்தியாசம் இவற்றிடையே இல்லை என்றாலும், நீலத் திட்டு சற்றே பரந்தும் கடும் நீலமாகவும் இருக்கும். இது போல வேறு சில அந்துப் பூச்சிகளையும் நான் அங்குக் கண்டுபிடித்தேன். ஆங்காங்கே கிடக்கும் மழைநீர் குட்டைகளில் இந்த வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக அப்பிக் கிடப்பதைக் காண வெகு அழகாக இருக்கும். அங்கு பல இன வண்ணத்துப் பூச்சிகள் பெருந்திரளாகக்கூடி ஈர மண்ணில் இருந்து உயிர்ச் சத்துக்களையும், அழுகும் தாவரக் கழிவில் இருந்து சத்துக்களையும் உறிஞ்சுவதைக் காணலாம். சமீபத்தில் விலங்குகள் இட்ட சாணம் அல்லது கழிவில் வண்ணத்துப் பூச்சிகள் கூடுவது இயல்பான நிகழ்வு. அவற்றில் உள்ள தாதுப் பொருட்களுக்காக அவை மொய்க்கும். புலி, சிறுத்தை போன்றவற்றின் புதிய எச்சத்தில் அவை கூடுவது வெகு இயல்பான நிகழ்வு. இந்த மண் துழாவுதலை (mud puddling) காணவே நான் மழை நாட்களில் இங்கு வருவதைப் பெரிதும் விரும்புவேன்!
இப்படி ஒரு மூன்று மாதங்கள் வண்ணத்துப் பூச்சிகள் இங்கு பல நிறங்களில் எல்லோரையும் ஈர்க்கும். இவற்றைக் குறித்து ஆராயவும், படிக்கவும் மிகவும் உகந்த இடம் என்பதோடு, அடிப்படைத் தேவைகளுக்கு பிரச்னை இல்லாத ஓர் இடம் இது. என்ன, டிவி, இண்டர்னெட் போன்றவற்றிற்கு ஒரு சில நாட்கள் விடுமுறை தர வேண்டி வரும்! மற்ற பொழுதுபோக்குகளுக்குத் தற்காலிக விடுமுறை தரவேண்டி வரும். மற்றபடி இயற்கையுடன் இணைந்து வாழ இது ஒரு சொர்க்க பூமி. காலாற நடக்கலாம்; அமைதியாக இருக்கலாம்; வெள்ளந்தியான மக்களுடன் பழகலாம்! காடுடன் பேசலாம், மனமிருந்தால்! இங்கு காணப்படும் வண்ணத்துப் பூச்சிகளை யாரேனும் பட்டியலிட்டு ளார்களா என்று தெரியவில்லை. ஆனால், அது ஒரு நல்ல தரவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு வாய்ப்பு கிடைத்தால், இந்த சொர்க்க பூமியில் மீண்டும் உலா வர நான் தயார்!
(தொடரும்)
Photo by Sheri Rypstra (Green Moss Peacock Butterfly on Lanata Camara blooms)