Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

நானும் ஸ்ரீதரும் சத்தியில் இருந்து முதுமலையின் தெப்பக்காடு வரை செல்லத் திட்டமிட்டிருந்தோம். சத்தியில் இருந்து மைசூரு வரை நிறையப் பேருந்துகள் இருப்பதால், குண்டல்பெட் போய் அங்கிருந்து பண்டிபூர் வழியாகத் தெப்பக்காடு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஏனென்றால், ஊட்டி மலைப் பாதை மற்றும் கல்லட்டியின் கடும் கொண்டை ஊசி வளைவுகளைத் தவிர்க்கலாம் என்பதோடு, விரைவாகவும் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் நடந்ததோ வேறு! காலை ஏழு மணி முதல் காத்திருந்தும், ஏழு நாற்பது வரை ஒரு மைசூரு பேருந்து கூட வரவில்லை.

தற்செயலாக வந்த ஒரு கர்நாடகா நண்பர், அந்த நேரத்தில் மைசூருக்குப் பேருந்துகள் குறைவு என்றும் ஏழே முக்காலுக்கு வரும் தனியார் பேருந்தில் சாமராஜ நகரா வரை போய் மாறிக்கொள்வது நல்லது என்றார். காரணம், அந்தப் பேருந்து இடையில் உணவுக்கு நிற்காது; அதனால், மற்றப் பேருந்துகள் நகரா செல்லும் அதே நேரத்தில் போய்ச் சேர்ந்து விடும் என்றார். சரியாக அதே நேரத்தில் நகரா செல்லும் தனியார் பஸ் வந்தது. நாங்கள் நேரத்தை வீணாக்காமல் அதில் ஏறி விட்டோம். ஓட்டுநரின் எதிரே உள்ள நீள வாக்கில் இருந்த இருக்கையில் எங்களுக்கு நடத்துனர் இடமளித்தார், அதுவும் நல்ல வரவேற்புடன்! முகம் கோணாமல், ஐந்நூறு ரூபாய்க்கும் சில்லறை கொடுக்கச் சம்மதித்தார்! மிகவும் உரிமையுடன், ‘சில்லறை நகரா வந்துதான் தருவேன். அதுவரை கேட்கக் கூடாது’ என்று நட்புடன் ஆனால் நகைச்சுவையாகக் கூறினார்! அப்போதே இந்தப் பயணம் களை கட்ட ஆரம்பித்து விட்டது!

நான் சும்மா இருக்காமல், ‘சில்லறையுடன் எங்களை குண்டல்பெட் வண்டியில் ஏற்றி விட வேண்டும்’ என்றேன்! உடனே நடத்துனர், ‘நானும் கூட வருகிறேன்’ என்றார். நான், ‘அது சிக்கல் ஆகிவிடும், வேண்டாம்’ என்றேன்! ஓட்டுநர் அதைக் கேட்டு பெரிதாகச் சிரித்து விட்டு, ‘எப்படி நீங்கள் இவரை இவ்வளவு சீக்கிரம் எடை போட்டு விட்டீர்கள்?’ என்றார். இப்படியாகப் பயணம் நகைச்சுவையுடன் தொடங்கியது. அடுத்த நிறுத்தத்தில் மூன்று பெண்கள் ஏறினர். பார்த்தாலே, சுகாதாரத்துறை அல்லது மருத்துவப் பணியாளர்கள் என்பது தெரிந்தது. வெள்ளைக் கோட்டும், உபகரணங்களும் காட்டிக்கொடுத்தன. அவர்களுக்கு ஒரே இருக்கையில் இடம் கிடைக்கவில்லை. காரணம், மொத்த இருக்கைகளும் நிரம்பி விட்டன. பண்ணாரி வரை எஞ்சின் மேல் அமர்ந்து கொண்டு வந்தனர். ஒருவர் எங்கள் இருக்கையில் எனக்கருகே அமர்ந்து கொண்டார், சிறிது தயக்கத்துக்குப் பின்னர்! நான் அவர்களது பணி மற்றும் இடம் குறித்து விசாரித்தேன். தினமும் இது போலப் போவது சிரமமாக இல்லையா என்றும் கேட்டேன். அவர் அது பழகி விட்டது என்றும், இப்படி ஜாலியாகப் பேசிக்கொண்டு இதே பேருந்தில் எல்லோரோடும் கிண்டலடித்துக் கொண்டு போவதால், சிரமம் தெரிவதில்லை என்றார். தாளவாடியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலைய ஊழியர்கள் என்றறிந்தேன். வீடு மற்றும் பிள்ளைகளின் படிப்பு சத்தியில் இருப்பதால், இது போலப் போய் வர வேண்டி உள்ளது என்றனர்.

அதற்குள் பண்ணாரி வந்து விடவே, பலர் இறங்கினர்; இருக்கைகள் காலியாகின. அவர்கள் மூவரும் ஒரே இருக்கையில் மாறி அமர்ந்தனர். ஒரு எழுபது வயது பாட்டியம்மாள் ஏறினார். ‘எத்தனை டிக்கெட் அம்மா?’ என்றார் நடத்துனர். ‘ஒரு ஆளுக்கு எத்தனை டிக்கெட் வாங்குவாங்கப்பா?’ என்று இடக்காகக் கேட்டார் அந்தப் பாட்டி! அவர் வழக்கமாக வருபவர் என்றும் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் எல்லோரையும் நன்கு அறிந்தவர் என்பதும் நன்றாகத் தெரிந்தது! ஆனாலும், அந்தச் சுவாதீனமான பேச்சு, அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தைக் காட்டியது. கள்ளமில்லாத அந்த உரையாடல், வீட்டிற்குள் நடப்பதைப் போல ஓர் இயல்பானதாக இருந்தது.

அப்போது பேருந்து, திம்பம் மலைப் பாதையில் ஏறத் தொடங்கியது. இயல்பாகப் பேச்சு, யானைகளைப் பற்றித் திரும்பியது. ஏனெனில், அந்த மலைப்பாதையில், யானைகளைப் பார்க்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்! அப்படித் தினமும் கிட்டத்தட்ட எல்லா வண்டிகளில் செல்வோரும் யானைகளைப் பார்ப்பார்கள் – ஏதாவது ஒரு இடத்தில் – கொண்டை ஊசி வளைவுகளில் அல்லது ஹாசனூர் அருகில் அல்லது அரேபாளயம் பிரிவில். எதுவும் இல்லையென்றால் காட்டுப் பன்றிகள் அல்லது மான்கள் சாலையோரம் இருக்கும். வன உயிரினங்களைக் காண இது ஒரு நல்ல வழி. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் சிறுத்தை கூடத் தென்படும்!

அப்போது மருத்துவமனை ஊழியர் முதல் நாள் மாலை திரும்பி வரும் போது 15 வது சுற்றில் யானையைப் பார்த்ததை விவரித்தார்! ‘சுமார் ஆறு மணி இருக்கும். பஸ் 15 வது சுற்றில் திரும்பும் போது இந்த யானை ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. என் ஜன்னலுக்கு ரொம்பப் பக்கத்துலதான். தும்பிக்கையை நீட்டி இருந்தால் என்னப் பிடிச்சிருக்கலாம், அவ்வளவு கிட்ட. ரொம்பப் பயந்துட்டேன்’ என்று ஒரு ரீப்ளே கொடுத்தார்!

இந்தச் சாலையில் யானைகள் சுவாதீனமாக நடமாடும்; என்ன, வளைவுகளில் அதிகமாகக் காணப்படாது; பெரும்பாலும் திம்பம் தாண்டியபின்தான் அதிகம் தென்படும். முன் தினம் கரும்பு லாரியைத் தொடர்ந்து வந்திருக்கலாம்! அல்லது அங்கிருந்து வேறு வழிக்குச் சென்றிருக்கலாம். யானைக் கதையை எங்கு கேட்டாலும் சுவையாகத்தான் இருக்கும்! அப்போது ஏழு மணிக்கு முன் சென்ற கர்நாடகா அரசின் மைசூரு பேருந்து பழுது பட்டு நின்றிருந்ததைப் பார்த்தோம். மனதில் ஓர் அல்ப சந்தோஷம்! ஆகா, எந்த விதத்திலும் எங்களுக்கு நஷ்டம் இல்லை என்று! அதில் ஏறி இருந்தாலும், பயனில்லை. எனவே, எங்கள் முடிவு சரியானது என்ற சந்தோஷம் அது. அதற்குச் சூழ்நிலை காரணம் என்பது அப்போது உறைக்கவில்லை!

இந்தத் திம்பம் மலைப்பாதை சிறுத்தைகளுக்குப் பெயர் போனது. பல நேரங்களில் சாலையிலேயே சிறுத்தைகளைக் காண்பது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஒரு முறை இரண்டு சிறுத்தைகள் விளையாடிக் கொண்டு இருந்ததெல்லாம் பதிவாகி உள்ளது. இங்குதான் ஒரு சிறுத்தை, கிருஷ்ணன் என்ற வன ஊழியரைத் தாக்கிக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. மற்றொரு நேரம் பழுதாகி நின்ற லாரியின் கிளீனரைத் தொடர்ந்த கதையும் உண்டு. எனவே, ஓட்டுனரிடம், சமீபத்தில் சிறுத்தை தென்பட்டதா என்று கேட்டேன். அதற்கு, இரண்டு வாரங்களுக்கு முன் ஹாசனுர் பள்ளத்திற்கு அருகே ஒரு மரக்கிளையில் படுத்திருந்ததைப் பார்த்தேன் என்றார். இது இந்தப் பகுதியில் சாதாரண நிகழ்வு! சாலையிலும், சிறு பாலங்களின் மேலும், அவை பெரும்பாலும் காணப்படும். அரிதாகத்தான் அவற்றைக் காண முடியும்; யானைகளைப் போல அடிக்கடி அல்ல! ஆயினும், தற்காலத்தில் சற்றுக் கூடுதலாகவே அவை தென்படுகின்றன என்பது உண்மைதான்!

இப்படி பேச்சும் நகைச்சுவையுமாக புளிஞ்சூர் வந்து விட்டது. ஓட்டுனரோ தாமதம் ஆகிவிட்டது என்ற கவலையில் இருந்தார். அப்போது நடத்துனர் எங்கோ போய் விட்டு சற்று நேரம் கழித்து வந்தார். ‘என்னய்யா நீ, இப்பிடிப் பண்ணுரே, லேட் ஆயிட்டு இருக்கு’ என்று ஓட்டுனர் கடிந்து கொண்டார். ‘ஆமாப்பா, நீயே கொஞ்ச நேரத்திலே வடை எங்கேன்னு கேப்பே’ என்று நடத்துனர் பதிலளித்தார்! பார்த்தால், அவர் கையில் ஒரு பொட்டலத்தில் பத்துப் பதினைந்து வடைகளும், பஜ்ஜிகளும் இருந்தன! இது தினமும் நடக்கும் சம்பவம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை! நடத்துனர் அந்தத் தின்பண்டங்களைப் பேருந்தில் வாடிக்கையாக வரும் பெண்களுக்கு வினியோகம் செய்தார்! அவர்களும் அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டு வாங்கித் தின்றனர்! ‘சாருக்கும் ஒண்ணு குடுங்க’ என்று சிபாரிசு வேறு! எனக்கும் ஒரு பஜ்ஜி கிடைத்தது! ஓட்டுனர்தான் பாவம்! அவர் முறை வரும் முன் எல்லா வடையும் காலியாகி விட்டது! வடை இல்லாததால், எதுவும் வேண்டாம் என்று கூறி விட்டார்! கும்டாபுரம் வரை எந்த நிறுத்தமும் இல்லாமல் விரைவாக வந்து சேர்ந்தோம். அங்கு ஒருவர் சத்தியில் சந்தையில் வாங்கிய பொருள்களை இறக்கி விட, கிட்டத்தட்ட எல்லோரும் உதவினர்! சாதாரணமாக, அரசுப் பேருந்துகளில் இது போல ஏற்றி வரச் சம்மதிக்க மாட்டார்கள்! அடுத்துத் தாளவாடி வந்தது. மருத்துவமனை ஊழியர்கள் இறங்கினர். கிட்டத்தட்ட பேருந்தே காலியாகி விட்டது.

அங்கிருந்து பள்ளிக் குழந்தைகள், வேலைக்குப் போகிறவர்கள் என்று மற்றொரு கூட்டம் ஏற, பேருந்து நிரம்பி விட்டது. நகரா செல்ல அந்த ஊர் மக்கள் விரும்பிச் செல்லும் ஒரு வண்டி இது என்று தெரிந்தது. இரண்டு ரோமியோக்களும் வண்டியில் ஏறினர்! காரணம், இரண்டு மூன்று வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள் எங்கள் வண்டியில் ஏறியதுதான்! வழக்கம் போலப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு அவர்கள் வந்தனர்! அவ்வப்போது அந்த இளம் பெண்களை நோக்கியவாறு அவர்களது பயணம் இருந்தது. இடையில், பஸ்ஸின் உள்ளே ஒரு குடிகாரனுக்கும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடியும் நிலை வந்தது! நடத்துனரின் உதவியாளர் (இவர் தனியார் பேருந்தில்தான் காணப்படுவார்) குடிகாரனை அடிக்கப் போக, நாங்கள் அதைத் தடுத்து அமைதியை நிலை நாட்டி, அடுத்த நிறுத்தத்தில் குடிகாரனை இறக்கி விடச் செய்தோம். சொன்னது போல, நகராவில் சில்லறை தந்ததுடன், குண்டல்பேட் பஸ் நிற்கும் இடத்தில் எங்களை இறக்கி விட்டனர், ஓட்டுனரும், நடத்துனரும்! ஒரு இரண்டு, இரண்டரை மணி நேரப் பயணம் இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!

இது தனியார் பேருந்து என்பதால்தான் இத்தனை நிகழ்வுகள் மற்றும் ஒரு நட்பான அணுகுமுறை! ஆனால், எட்டாத மற்றும் தொடர்பு வசதிகள் இல்லாத கடைக்கோடி கிராமங்களுக்குச் செல்லும் எந்தப் பேருந்திலும் இது போன்ற ஒரு நட்பைப் பயணிகளுக்கும், ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே காணலாம்! உதாரணமாக, தெங்குமரஹடா, மஞ்சூர், டாப்ஸ்லிப் போன்ற இடங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்திலும் இப்படித்தான் ஓர் உறவாடல் காணப்படும். இதுபோன்ற உறவாடல் பயணிகளின் இடையே எல்லாப் பேருந்துகளிலும் இருக்குமா என்பது சந்தேகம்தான்! அல்லது பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் இடையே இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான்! ஒரு வேளை இந்த நட்பு உறவாடல்தான் பல பணிக்குச் செல்லும் மக்களை இது போன்ற தனியார் பேருந்துகளை நாடச் செய்கிறதோ? சின்னச் சின்ன நீக்கு போக்கான நடத்தை மற்றும் நட்பான அணுகுமுறை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றுதான் தோன்றுகிறது. இல்லை என்றால், இந்த இரண்டரை மணி நேரப் பயணம் ஒரு பெரும் அழுத்தத்தைத் தந்திருக்கும்! நேரம் போவதே தெரியாமல் நாங்கள் வெகு எளிதாக மக்களோடு மக்களாக மகிழ்ச்சியாகப் பயணித்தது மட்டுமல்ல, மகிழ்ச்சியாக மற்ற வேலைகளையும் செய்ய இயன்றது!

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *