Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

Python Molurus

பில்லூர் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் உலவி வந்ததால், அவ்வூர் மக்கள் மட்டும் இன்றி, பள்ளி மாணவர்களுக்கும் என்னைத் தெரியும். ஒரு முறை நான் சித்துகணி சென்று திரும்பி வந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது இரண்டு மாணவர்கள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினர். ‘சார், நீங்க எப்போதும் ஒரே பாதையில்தான் போய் வருகிறீர்கள். நாங்கள் உங்களை வேறு பாதையில் அடுத்த முறை வரும்போது கூட்டிச் செல்கிறோம். உங்களோடு நாங்கள் வருவதால் ஏதாவது புதிதாகத் தெரிந்து கொள்வோம்’ என்று கூறினர்.

எனக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு போவதில் இருந்த ஒரே சிக்கல், எந்த விதத்திலும் அவர்களுக்கு ஏதும் நேரக்கூடாது என்ற எண்ணம்தான். தனியனாக நான் எங்குச் சென்றாலும், நேரும் விளைவுகளுக்கு நானேதான் பொறுப்பு என்ற சுலபமான முடிவு, என்னை வேறு யாரையும் அழைத்துப் போக விடவில்லை! ஆனால், அவர்களது ஆர்வம் என்னை ஈர்த்தது; எனக்கும் ஒரு புதிய இடம் பார்த்தது போல இருக்கும் என்று பட்டது. சரியென்று ஒரு வார இறுதியைக் குறிப்பிட்டு, அப்போது அவர்களுடன் வருகிறேன் என்று சொன்னேன். அந்த இருவரும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள். அதனால், வெகு தூரம் போகாமல், சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை போய் விட்டுத் திரும்பி விடலாம் என்று மனதிற்குள் ஒரு முடிவு செய்தேன்.

அதற்குள் பேருந்து வந்து விட, ‘மறக்காமல் நாங்கள் அந்த வாரயிறுதியில் பேருந்து நிலையத்தில் முதல் பேருந்து வரும் நேரத்தில் காத்திருப்போம்,’ என்று சொல்லி அவர்கள் அன்று எனக்கு விடை கொடுத்தார்கள். நான் அன்று வரும் போது உள்ள நிலவரத்தைக் கணக்கில் கொண்டு முடிவெடுப்போம் என்று மஞ்சூர் சென்று விட்டேன். அதன் பின் அந்த நாள் வரும் வரை அதைப் பற்றி எண்ணவும் இல்லை.

அந்த முறை முள்ளியில் இருந்து பேருந்தில் வந்து இறங்கும் வரை எனக்கு இந்த விஷயம் நினைவில் இல்லை! பேருந்தில் இருந்து இறங்கும் போது, அவர்கள் இருவரும் நிறுத்தத்தில் காத்திருந்ததைப் பார்த்ததும்தான், எனக்கு எல்லாம் ஞாபகம் வந்தது! உடனே கிளம்பிச் செல்ல, அவர்கள் தயாராக வந்திருந்தனர்! நான் அதிகாலையில் மஞ்சூரில் புறப்படுவதால், (6 மணிக்கு) காலை உணவு சாப்பிட வழி இல்லை. பில்லூரில் வாசுதேவன் நாயர் கடையில்தான் டிபன், சாப்பாடு எல்லாம்! இவர்களோ சாப்பிட்டு விட்டுத் தயாராக இருந்தனர்! எனவே, நாயரிடம் டிபனை கட்டச் சொன்னேன். போகிற வழியில் காட்டில், நீரோடை உள்ள இடத்தில் வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுடன் புறப்பட்டேன்.

மிக நீண்ட தொலைவு போவதில்லை என்ற முடிவால், சாப்பாட்டுக்கு வந்து விடலாம் என்ற முடிவுடன் கிளம்பினோம். அந்த இரண்டு இளைஞர்களுக்கும் சில தின்பண்டங்களை (பிஸ்கட், முறுக்கு போல) வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். எப்போதும் என்னிடம் ஒரு தண்ணீர் குடுவை பையில் இருக்கும், அதனால் நீர் ஒரு பிரச்னை இல்லை. அவர்களை ஈடுபடுத்தும் வகையில் எனக்குத் தெரிந்த வகையில் பேச்சை நடத்திக் கொண்டு போனேன்.

‘எந்த பக்கம் போகலாம் தம்பிகளா?’ என்று கேட்டேன். ‘சார், பவர் ஹவுஸ் பின்னாலே மலை அடிவாரம் வரை போகலாம். நல்ல பாதை இருக்கு; சின்ன ஓடையும் வரும். நல்லா இருக்கும். நீங்க பாக்கிற பறவையெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுங்க,’ என்றனர். அது நான் போகாத இடம் என்பதோடு, காட்டின் தன்மையும் அடர்த்தியும் தெரியாது. ஆனால், இவர்கள் அங்கு அடிக்கடி சென்றிருக்கலாம். ஏனென்றால், வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லாத இடம் இது. திட்டப்பணிக் களம் (ப்ராஜெக்ட் ஏரியா). எனவே, விளையாடுவது அல்லது வெறுமனே காட்டில் அலைவதுதான் அவர்களுக்குப் பொழுதுபோக்கு! இருந்தாலும், நீண்ட தூரம் செல்வதை, பாதுகாப்பு காரணமாகத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் நான் நடக்கத் தொடங்கினேன்.

பவர் ஹவுஸ் தாண்டியதும் அவர்கள் சென்ற வேகம் மற்றும் தெளிவான அணுகுமுறை, இது அவர்களுக்குப் புதிய வழி அல்ல என்பதைக் காட்டியது. பல இடங்களில், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது, எந்தத் திசையில் செல்வது என்பதில் தயக்கம் இல்லாமல் சென்றனர். காரணம், விறகு வெட்ட மற்றும் பழங்கள், பட்டைகள் சேகரிக்கக் காட்டுக்குள் வருவது சாதாரணச் செயல்தான். ஆயினும் நான் தூரத்தைக் கவனத்தில் வைத்திருந்தேன். எக்காரணம் கொண்டும் வெகுதூரம் செல்லக் கூடாது என்று என்னை நானே ஞாபகப்படுத்திக் கொண்டேன்!

தொடக்கத்திலேயே சிலம்பன்கள் அல்லது பூணியல்கள், கரிச்சான்கள், தேன்சிட்டுகள், புல்புல்கள் என்று வாடிக்கையாகக் காணக்கூடிய பறவைகள் தென்பட்டன. சற்று தூரம் சென்றதும் ஒரு தேன் பருந்து வட்டமிடுவதைப் பார்த்தோம். அதனுடன் ஒரு ஷிக்ராவும் பறந்து கொண்டிருந்தது. அவர்கள் இப்படிப் பல பெயர்களில் பறவைகள் உண்டு என்றறிந்து மகிழ்ந்தனர். நான் இது சாதாரணமாக யாரும் கற்கக் கூடிய கலைதான் என்று தெளிவு படுத்தினேன். என்ன, கொஞ்சம் முயன்று படிக்க வேண்டும்; தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான்! அவர்கள் தங்களது சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலும் யானைகள் அந்தக் குடியிருப்பில் வந்து சென்ற கதைகள்தான். எப்போதோ ஒரு சிறுத்தை வந்த நிகழ்வையும் விவரித்தனர்.

நல்ல வேளையாக, மூன்றாவது (உத்தேசமாக) கிலோ மீட்டரில் ஓர் ஓடை குறுக்கிட்டது. நான் அங்கே சாப்பிட்டு விட்டு ஓர் அரை மணி நேரம் பறவை நோக்கல் செய்து விட்டுத் திரும்புவது என முடிவு செய்தேன். கோடைக் காலமாதலால், ஓடை வறண்டு கிடந்தது. ஓரிடத்தில் மட்டும் சின்னக் குட்டையாக நீர் தேங்கி இருந்தது. அந்த இடத்துக்கு வந்ததும், ஒரு வித்தியாசமான வாடை வீசுவதை என்னால் உணர முடிந்தது. மிருகக் காட்சிச் சாலையில் ஊனுண்ணி விலங்குகள் இருக்கும் கூண்டிற்கு அருகில் சென்றால் ஒரு வகை வாடை வீசும். காரணம், மாமிசத் துணுக்குகளும், அதன் உடலில் இருந்து வரும் ஒரு வாடையும் கலந்த நெடி அது.

காட்டில், ஊனுண்ணி விலங்குகள் நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றாலோ அல்லது இருந்தாலோ அந்த வாடையை நுகர அல்லது உணர முடியும். என்ன, மூக்கு நல்ல திறன் உள்ளதாக இருக்க வேண்டும்! அதே போல யானை அருகில் இருந்தால் ஒரு பச்சை இலை வாடை வீசும்! அதை, பழங்குடி மக்கள் வெகு விரைவாக நுகர்ந்து விடுவார்கள்! எனக்கு அங்கு எந்த விலங்கு இருக்கலாம் என்ற யோசனையை விட எங்கு இருக்கலாம் என்பதுதான் பிரச்னை! ஒரு வேளை ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம். ஏனெனில், அந்த இடம் அடர்ந்த காடு இல்லை; திறந்த வெளியில் ஓடையோரம் ஒரு சில மரங்கள்; குத்துச் செடிகள் நிறைந்த தரைக் காடு. எனவே பெரிதாக ஏதும் பயப்படத் தேவையில்லை. இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பிரச்னை என்னவென்றால், அந்த வாடை விட்டு விட்டு வந்தது. அதாவது, காற்று சற்று வேகமாகவும் எங்கள் பக்கம் வீசும் போதும் அதன் நெடியை உணர முடிந்தது. மற்ற நேரங்களில் பெரிதாக ஏதும் இல்லை. எனக்கு வெகு ஆண்டுகளுக்கு முன் முண்டந்துறைக் காட்டில் தாமிரபரணி நதிக் கரையோரம் ஒரு சிறுத்தையை இது போன்ற நெடியை வைத்துக் கண்டுபிடித்தது ஞாபகம் வந்தது.

கோயில்களில் வவ்வால்கள் இருக்கும் இடங்களை நெருங்கும்போது இது போன்ற ஒரு நெடியை உணரலாம்; கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்திலும் ஒரு வகை நெடியை உணரலாம்; பாம்புப் பண்ணைகளில் அந்த கூடுகளுக்கருகே செல்லும்போது ஒரு வகை நெடியை உணரலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை நெடியாக இருக்கும். பிரித்தறியப் பெரும் பயிற்சி வேண்டும்.

எனக்குச் சிறுவர்கள் இருந்ததால் சற்றுக் கவலையாக இருந்தது. அவர்களைப் பத்திரமாக வீடு சேர்க்க வேண்டுமே! எனவே, இருவரையும் சுற்றுமுற்றும் கவனமாகப் பார்க்கச் சொன்னேன். எந்த அசைவைக் கண்டாலும் உடனே என்னிடம் தெரிவிக்குமாறு கூறினேன். நானும் ஒரு பத்து நிமிடம் எல்லாப் பக்கமும் நோட்டம் விட்டேன். சற்றுப் பரபரப்பு அடங்கிய பின், எங்கே சிற்றுண்டி அருந்தலாம் என்று யோசித்தேன்.

ஓடையின் நடுவில் ஒரு பெரிய பாறை இருந்தது. அது இரு கரைகளிலிருந்து விலகி எல்லாப் பக்கமும் பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது. நான் அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்துக் கொண்டே சிற்றுண்டியை முடிக்கலாம் என்று முடிவு செய்தேன். மூவரும் ஒவ்வொரு திசையில் பார்த்தவாறு அமர்ந்து கொண்டோம். ஏதேனும் அசைவு தென்பட்டால், பதட்டப் படாமல் என்ன என்று கண்டுபிடித்து, பின்னர் என்ன செய்யலாம் என்று முடிவு செய்வது என நான் அறிவுறுத்தினேன். காரணம், யானை, காட்டெருமை, கரடி போன்ற பெரிய விலங்குகள் நாங்கள் பார்ப்பதற்கு முன்பே வர வாய்ப்புகள் வெகு குறைவு. செந்நாய் போன்ற சிறிய விலங்குகளால் பெரிய அபாயம் கிடையாது. இருந்தாலும், அந்த வாடை அங்கு ஏதோ இருப்பதை எனக்கு உணர்த்தியது.

குத்துச் செடிகளின் மேல் அதிகக் கவனம் செலுத்தியவாறு நான் எனது காலை உணவை முடித்தேன். சிறுவர்களும் அவர்களது நொறுக்குத் தீனியை முடித்தனர். நான் கை கழுவப் பாறையில் இருந்து இறங்கும் போது, ஒரு சிறுவன் என்னைப் பார்த்தவாறு இருந்தான். திடீரென்று அவன், ‘சார், பாம்பு, பாம்பு பாத்து காலை வைங்க,‘ என்று கூவினான்! நான் ஒரே தாவாகத் தாவி, பாறையில் இருந்து 10 அடி தள்ளிக் குதித்தேன்!

எங்கே பாம்பு என்று நான் பார்த்தால், பாறையின் அடியில் ஒரு சுமாரான அளவில் (10 அடி) ஒரு மலைப் பாம்பு சுருண்டு கிடந்தது! இதை நான் எதிர்பார்க்கவே இல்லை! நல்ல வேளையாக, ஏறும் போது அதைத் தொந்தரவு செய்யாமல் ஏறி விட்டோம். நான் உன்னிப்பாக அதை நோட்டம் விட்டேன். அதற்குள் எங்களது கலாட்டாவினால் அது மெதுவாக நகர்ந்து, எதிர் புறம் இருந்த புதரை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதன் நடு வயிறு பெரிதாக உப்பி இருந்தது. நல்ல இரை எடுத்த ஒரு மலைப் பாம்பு என்பது தெளிவானது. ஆகவே மிகவும் பயப்படத் தேவையில்லை என்றும் புரிந்தது. ஏனெனில், அதன் செயல்பாடுகள், இரை எடுத்த பின். மிகவும் மந்தமாகத்தான் இருக்கும். ஆயினும், அதனுடன் விளையாட முடியாது! ஆனால், பெரிதும் கிலேசம் கொள்ளத் தேவையில்லை.

இந்திய மலைப் பாம்பு (Python Molurus) இது போன்ற வறண்ட பிரதேசங்களில்தான் காணப்படும். சிறிய முயல் போன்ற விலங்குகள், மான் குட்டி ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். அன்று அதிகாலையிலோ அல்லது முன்தினம் இரவிலோ இரை எடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன். அமைதியாகப் பாறையின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மலைப் பாம்பை நாங்கள் தொல்லை செய்து விட்டோம்! சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்! காரணம், ஓர் அரிய விலங்கைக் கண்ட மகிழ்ச்சி, அதுவும் கைக்கெட்டும் தொலைவில்!

இப்போது எனக்குப் புரிந்தது, ஏன் அந்த வாடை என்று! இரையுண்ட பாம்பு பாறையின் கீழ் இருந்ததால், அதன் உடலில் இருந்து வந்த மணம் அது என்று! எங்களுக்குக் கீழே பார்க்கத் தோன்றவில்லை! புதர்களில் ஏதோ ஊணுண்ணி மறைந்திருக்கிறது என்ற ஓர் எண்ணம். அந்தப் பையன் பார்க்கவில்லை என்றால், அதன் மேலேயே காலை வைத்திருப்பேன்!

அதன் பின் அதை நாங்கள் தொல்லை செய்யாமல், ஒரு பத்தடி தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். மிக மெதுவாக அது புதருக்குள் நுழைந்து இலை தழைகள் நிறைந்த காட்டுத் தரையில் சற்று ஓய்வெடுத்தது. பின்னர், மீண்டும் மெதுவாக ஒரு மரத்தடியை நோக்கிப் போகத் தொடங்கியது. நான் அதற்குள் அதை நன்றாகப் படம் எடுக்க எண்ணி அன்று என்னிடம் இருந்த பிலிம் காமிராவில் சில படங்கள் எடுத்தேன். சில மிக அருகில் இருந்து! காரணம், அது அத்தனை மந்தமாகிவிட்டது, மிகுதியான செரிமானமாகாத உணவால்! அதை இந்தக் கட்டுரையுடன் வெளியிட்டுள்ளேன்.

உணவு செரிமானமாக அவற்றுக்கு ஒரு வாரம் முதல் இருபது நாட்கள் ஆகலாம். செரிமானத்தை ஊக்குவிக்க அவை சற்றே வெதுவெதுப்பான அல்லது சூடுள்ள இடத்தை நாடலாம். அது பாறையின் அடியில் மணலில் கிடந்தது இதன் காரணமாக இருக்கலாம்! இதெல்லாம் நான் பின்னர் படித்துத் தெரிந்து கொண்டது! எது எப்படியோ, அன்றைய பயணம், மறக்க இயலாத பயணமாக முடிந்தது. சிறிய தொலைவே சென்று வந்தாலும், பெரிய மன நிறைவைத் தந்த ஒரு சில நடைப் பயணங்களில் இதுவும் ஒன்று!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *