Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

வெள்ளிக்கோல் வரையன்

வங்கியில் பணிபுரியும் போது, கட்டாயமாகக் கிராமப்புறக் கிளைகளில் சேவை செய்ய வேண்டும் என்பது அந்நாளைய விதி. தற்போது அது நீர்த்துப் போய் பல மாற்றங்கள் வந்து விட்டன. இதன் காரணமாகத்தான் நான் மஞ்சூர் சென்றேன். நல்ல இயற்கைச் சூழலில் ஓர் இரண்டு, மூன்று வருடங்கள் இருந்து விட்டு வருவதோடு, நீலகிரியின் கால் படாத இடங்களையும் பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணமும் உண்டு! அது பெருமளவு நிறைவேறியது உண்மைதான். ஊசி மலை, கெரப்பாடு, லக்டி முனை, தாய் சோலை, காரிங்க்டன், கிழக்கு வராகஹப்பள்ளம் என்று பல இடங்களில் நடந்தே சென்ற அனுபவங்கள் என் வாழ்நாளில் மறக்க இயலாதவை!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மஞ்சூரை நகரப் பகுதியாக அறிவித்து விட்டனர்! உண்மையில், அது கிராமத்தை விட மோசம் என்பதை அந்த ஊரை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்! ஆனால், அரசின் அளவுகோல்கள் வேறு என்பதோடு, அரசியல் தலையீடும் உண்மை நிலையை மாற்றி விடும்! அது எப்படியோ போகட்டும்! இதன் விளைவாக நான் கிராமப்புறக் கிளைச் சேவையை வேறு ஒரு கிளையில் மீண்டும் செய்ய நேர்ந்தது! நல்லவேளையாக, எனக்கு முன்னுரிமை தந்து அந்தக் கோட்டத்தில் உள்ள மூன்று கிளைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். நான் கோவையின் அருகே உள்ள சின்னத் தடாகத்தை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அது கிராமப்புறக் கிளை என்று அறியப்பட்டது; மஞ்சூர் நகரக் கிளை என்று அறியப்பட்டது! Paradox of error என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதற்கு இதை விட நல்ல எடுத்துக்காட்டு எதுவும் இல்லை!

இப்படியாக நான் நஞ்சுண்டாபுரம் வந்தடைந்தேன்! நஞ்சுண்டாபுரம் ஒரு சிறிய கிராமம், ஆனால் பெரிய ஊரை அடுத்து இருக்கும் சிற்றூர். நகரத்தைப் போல எல்லா வசதிகளும் கொண்ட இடம். பெரிய நகரமான கோவை கூப்பிடு தூரத்தில் இருப்பதால், கிட்டத்தட்ட நகரம் போலத்தான்! ஊரின் பின்புறம், ஆனைகட்டியில் இருந்து பிரியும் ஒரு மலைத்தொடர் குருடம்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை போகும். மிகவும் அறியப்பட்ட பொன்னூத்து மற்றும் பாலமலைக் கோயில்கள் இந்தப் பகுதியில்தான் உள்ளன. ஊரின் கடைக்கோடி மலை அடிவாரம்தான்.

எங்கள் வங்கிக் கிளை ஒரு தென்னந்தோப்பில் இருந்தது. தோப்பின் முன்புறத்தில் ஒரு தார்சுக் கட்டடம் வங்கியாகச் செயல்பட்டது. பின்னே கவுண்டரின் வீடு. அவ்வப்போது காப்பி, டீ போன்றவை கிடைக்கும்! அடுத்து சில ஊர்களுக்கும் சேர்த்து இதுதான் வங்கி. சின்னத் தடாகத்தையும் துடியலூரையும் இணைக்கும் சாலையில் தடாகத்தின் அருகே அமைந்திருந்தது. கோவையில் இருந்து பேருந்து வசதி நன்றாகவே இருந்தது. எனக்கு இந்தக் கிளையும் பிடித்துப் போனது! காரணம், பெரும்பாலும் வெள்ளந்தியான மக்கள், நிறைவான பணி, மலை அடிவாரத்தில் கிளை, சுற்றுமுற்றும் ரம்மியமான சூழல் என்று அற்புதமாக இருந்ததுதான்! மேலும் நினைத்தால் ஆனைகட்டி போகலாம், காரணம், சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் கணக்குகள் எங்கள் வங்கியில்தான் இருந்தன! இப்படி ஜாலியாக எனது பணி அங்குத் தொடர்ந்தது!

அதிகாரிகளாகிய நாங்கள் (மேலாளர், நான் மற்றும் ஒருவர்) சாதாரணமாகக் காலை 9.45 அல்லது 9.50 மணிக்கு வருவோம். 9.30 மணிக்கு வரப்பாளையத்தில் (அருகில் உள்ள சிற்றூர்) இருந்து பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர் மல்லிகா வருவார்; அடுத்தப் பத்து நிமிடத்தில் (வாட்ச்மேன்) ஆயுதக் காவலர் ராஜா வந்து விடுவார். நாங்கள் வரும்போது கிளை சுத்தமாகவும், தயாராகவும் இருக்கும். வெகு சில நேரங்களில் மட்டுமே இந்த நடைமுறை பிறழும். அன்று நான் பேருந்தில் இருந்து இறங்கி கிளையை நோக்கி நடக்கும் போது, எதிரில் வந்த மணிகண்டன், ‘சார், இன்னும் கிளையை திறக்கல்லே’ என்றார். என்னடா இது சோதனை என்று நடையை எட்டிப் போட்டேன்.

தோப்பின் ஆரம்பத்தில் ஒரு சின்னக் கூட்டம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் நான் நெருங்கியதும், ‘சார் வந்தாச்சு. ஏதாவது செய்வார்’ என்று பேசிக் கொண்டார்கள்! அதற்குள் ராஜா வந்து, ‘சார், கிரில் கேட்டு மேல பாம்பு இருக்கு. அதனாலேதான் திறக்கல்லே சார்’ என்றார்! எல்லோரும் ஆவலாக என்னையே பார்த்தனர்! நான் சற்று முன்னேறி, கேட்டின் முன் சென்று நின்று நோட்டம் விட்டேன். இரும்புக் கம்பிகள் கொண்ட இடைவெளி உள்ள இழுக்கும் வகையில் அமைந்த வெளிக் கதவு அது. தமிழில் வலைத்தட்டிக் கதவு என்று சொல்லலாம். அதன் மேல் கம்பியில் பூட்டுக்குச் சற்று மேலே ஒரு இரண்டு மூன்று கம்பிகளை இணைத்தவாறு ஓர் அடி நீளமுள்ள பாம்பு சுற்றிக் கிடந்தது! வெகு கவனமாகச் சென்று மெதுவாகப் பூட்டைத் திறக்க இயலாத நிலை. பாம்பு விஷமுள்ளதா என்று வேறு தெரியாத நிலை! என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதற்குள் மற்ற இணை அதிகாரிகளும் வந்து விட்டனர். அவர்கள் யாராவது பாம்பு பிடிக்கும் நபரை நாடலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

அது நல்ல யோசனை என்றாலும், பாம்பு பிடிப்பவர் வரத் தாமதம் ஆகும். அதுவரை எல்லோரும் வங்கிப் பணியை மேற்கொள்ள இயலாது. நான் இன்னும் சற்று அருகில் சென்று நோக்கினேன். சின்ன பாம்புதான் என்று புரிந்தது. கிரில் வளைவுகளில் பின்னிக் கிடப்பதால், சற்றுப் பெரிதாகத் தெரிகிறது என்று பட்டது. ஒரு நீண்ட கழி அல்லது குச்சி இருந்தால், அப்படியே தட்டி விட்டு, பின்னர் மற்றொருவர் அதைத் தரையில் வைத்துப் பிடித்து விடலாம் என்று பட்டது. ஆனால், தரையில் விழுந்தால், யார் பிடிப்பார்கள்? அதற்கு யாரும் தயாராக இல்லை! இதற்குள் அது நாகப்பாம்பு என்ற புரளியை வேறு கிளப்பி விட்டனர்! நம் மக்களுக்கு எல்லாமே நாகம்தான்! மேலும், மக்கள் பாம்பை அடித்துக் கொன்று விடுவார்கள். முடிந்தவரை நான் அதைக் காப்பாற்ற எண்ணினேன்.

ஒரு நீண்ட கழியைக் கொண்டு வரச் சொன்னேன். எல்லோரையும் நன்றாக விலகி இருக்கச் சொன்னேன். எனது மதிய உணவுப் பை மற்றும் சில கோப்புகளை ராஜாவிடம் தந்தேன். ஒரு வேளை பாம்பு கீழே விழுந்து விட்டால், பதற வேண்டாம் என்று எச்சரித்தேன். நான் அதை எப்படியும் செயலிழக்க வைத்து விடுவேன் என்று தைரியம் சொன்னேன். ராஜாவிடம் யாரையும் என் அருகே வர விட வேண்டாம் என்று கட்டளை இட்டு விட்டு, நான் கிரில் கேட்டுக்கு இணையாக நின்று கொண்டு, பாம்பின் உடல் பகுதியின் நடுவில் மெதுவாகக் குச்சியை வைத்துச் சோதித்தேன். அது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை; லேசாக நெம்பினேன். தலையைத் தூக்கிப் பார்த்தது. தட்டையான உருண்டைத் தலை எனக்குத் தெரிந்தது. அப்பாடா, விஷமுள்ள பாம்பு அல்ல என்று பெருமூச்சு விட்டேன். இதனால், சற்றுத் தைரியம் கூடியது. இன்னும் சற்று முன்னே போய்க் குச்சியைச் சுழற்றும் நிலையில் நின்று கொண்டேன்!

இப்போது பாம்பைத் தெளிவாகக் காண முடிந்தது. அது மெதுவாக நகரத் தொடங்கியது. விட்டால், உள்ளே சென்று விடும் என்று குச்சியை லேசாகச் சுழற்றினேன். பாம்பு சின்ன அசைவுக்குப் பின், மெதுவாகக் கழியில் ஏறியது. அது நல்ல நீளமான ஒட்டடைக் குச்சி போன்ற கழி. ஆகவே பெரிதாக நான் பயப்படவில்லை. ஆனால், அதன் அசைவிலே கண்ணாக இருந்தேன். கிட்டத்தட்ட பாம்பின் முக்கால் உடல் கழியில் வந்ததும், சின்ன இழுப்பு ஒன்றைக் கொடுத்தேன்! என்னுடைய நல்ல நேரம், பாம்பு கழியில் நன்றாகச் சுற்றிக் கொண்டது! என் கைக்கும் பாம்பிற்கும் சுமார் ஆறு அடி தூரம் இருக்கும். கிலேசம் இல்லாமல் நான் ராஜாவிடம் எனக்கு ஒரு வழி ஏற்படுத்தித் தருமாறு கூறினேன். ஏனென்றால், சுற்றிலும் மக்கள் கூட்டம். எனவே நான் கழியைச் சுழற்றி திரும்ப வேண்டும். அருகில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய அரை வட்டம் ஒன்றை ராஜா ஏற்படுத்திய பின் நான் மெதுவாகக் கழியில் பாம்புடன் வங்கி வளாகத்தை விட்டு வெளியேறத் துவங்கினேன்.ஆரம்பம் முதலே எனக்கு அதை அடித்துக் கொல்லுவதில் இஷ்டம் இல்லை. எப்படியாவது அதைச் சேதம் இல்லாமல் மீட்டு, அடுத்துள்ள புதர்களில் விட்டு விட வேண்டும் என்பதுதான் எண்ணம். இவர்களிடம் விட்டால், அதைக் கொன்று விடுவார்கள். அது நல்லதல்ல. மேலும் இது விஷமில்லாத ஒரு சாதாரணப் பாம்பு. அருகிலுள்ள புதர்களில் விடுவதால் எந்தப் பாதகமும் இல்லை. இப்படியாக யோசித்துக்கொண்டு நான் ஊருக்குப் போகும் சாலைப் பிரிவை அடைந்தேன்.

அந்தப் பிரிவின் எல்லையில் ஒரு பெரிய மயில்கொன்றை மரம் இருந்தது. சாதாரணமாக அதை எல்லோரும் குல்மொஹர் என்று சொல்வார்கள். நல்ல கோடைக் காலத்தில் செந்நிறப் பூக்களுடன் ஜாஜ்வல்யமாக இருக்கும்! எனது கண்ணில் அதன் தண்டில், ஏழு அடி உயரத்தில் ஒரு பொந்து இருப்பது பட்டது. ஆகா, புதரை விட இது சிறந்த இடம் அல்லவா என்று தோன்றியது! மிகக் கவனமாகக் கழியை அந்தப் பொந்தில் வைத்து ஓர் உலுக்கு உலுக்கினேன்! பொத்தென்று பாம்பு அதற்குள் விழுந்தது! இனி அதை யாராலும் பிடித்து அடிக்க இயலாது!

அது வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மற்றும் சக ஊழியர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர்! ‘சார், சூப்பர், சார்! எப்படி சார் இப்பிடிப் பிடிச்சீங்க?’ என்று பாராட்டினர். எனக்கும் அவர்களுக்கும் இருந்த வேறுபாடு, நான் அதிகம் பதறவில்லை, அவ்வளவுதான்! மற்றபடி இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை! சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். அந்தப் பாம்பை கழியில் வெகு அருகே பார்த்த போது அதன் அங்க அடையாளங்களை மனதில் குறித்துக் கொண்டேன். உடலின் நிறம்; பட்டைகள்; தலையின் வடிவம் என்று. மென்மையான செதில்களுடன் கரிய அல்லது பழுப்பு நிற உடலில் வெள்ளை நிறக் குறுக்கு வரிகள்; தட்டையான தலை; பளபளப்பான உடல் என்று சில முக்கியமானவற்றை நான் மனதில் இருத்திக் கொண்டேன்.

பின்னர், இந்தியப் பாம்புகள் கையேட்டைச் சரிபார்த்த போது, அது ‘வுல்ப் ஸ்னேக்’ என்று தெரிந்தது. ‘வெள்ளிக்கோல் வரையன்’ என்று தமிழில் சொல்வர். சிலர் ‘திருவிதாங்கூர் ஓநாய் பாம்பு’ என்றும் கூறுவர். இந்த வகைப் பாம்பு சுவர் பற்றி ஏறும் திறன் கொண்டது. இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இரையை வேட்டையாடும். அரணை, பல்லி போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். இது… போதாதா.

இந்தப் பாம்பு ஏன் கிரில் கேட்டில் ஏறியது என்று தெரிந்துகொள்ள எப்படியோ, அன்று முழுவதும் வங்கிக்கு ஏதோ ஒரு சாக்கில் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.சாதாரணமாக வருபவர்களைக் காட்டிலும் கூடுதல் மக்கள், ஆனால் பெரிய அளவில் பரிவர்த்தனைகள் இல்லை. எனக்கு முதலில் புரியவில்லை. பின்னர் பாம்பு பிடித்த மேனேஜரைக் காணத்தான் இத்தனை பேர் வந்து போகிறார்கள் என்று ராஜா சொன்னதும்தான் விளங்கியது! அவர்கள் இது வரை பாம்பு பிடிக்கும் மேனேஜரைக் கண்டதில்லை! கண்டு ஓடும் மேனேஜரைத்தான் பார்த்திருப்பார்கள்! நல்லவேளையாக, அதன் பின் ஊரில் பாம்பு பிடிக்க என்னை யாரும் கூப்பிடவில்லை! அது வரையில் நல்லதுதான்! அதுவே பெரிய நாகம் அல்லது கட்டு விரியனாக இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று கூற முடியாது! ஆனால், கட்டாயம் பதறி இருக்க மாட்டேன். வேறு யோசனையோ அல்லது வனத்துறை உதவியையோ நாடியிருக்கலாம்! தெரியாது! போன மாதம் சத்தியமங்கலத்தில் அடுத்த தெருவில் இதே வெள்ளிக்கோல் வரையன் ஒரு வாளியில் கிடந்து அங்குள்ளவரை எல்லாம் பதறடித்துக் கொண்டிருந்தான்!

0

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *