Skip to content
Home » காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) கருப்பின மக்களின் பாதுகாவலன். இனப் பகையை எதிர்த்த போதகர். அமெரிக்காவின் காந்தியவாதி. அடிமைப்பட்டுக்கிடந்த அமெரிக்கவாழ் ஆப்பிரிக்கர்களைப் புரட்சித் தீ கொண்டு விழிப்படையச் செய்த மகான். இருளை ஒளி கொண்டு விரட்டுவதுபோல, வெறுப்பை அன்பு கொண்டு அரவணைத்தவர். நீதியின் கரங்கள் நீக்கமற நிறைந்திருந்தாலும், துளியளவு அநீதி அதை கேள்விக்குள்ளாக்கும் என்ற தத்துவஞானி.

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவின் அழுக்குகளைத் முன்னின்று சுட்டிக்காட்டியவர். சுத்தப்படுத்தியவரும்கூட. இத்தனைப் பாரங்களையும் தலைமேல் போட்டுக்கொண்டு, பெரும் கனவு ஒன்றை சுமந்துகொண்டிருந்தார்.

28 ஆகஸ்ட் 1963 அன்று வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தின் முன்னால் மார்டின் லூதர் கிங் பேச்சைக் கேட்க 2,50,000 மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். அதில் 60,000 பேர் வெள்ளையினத்தவர்கள்.

உரத்தக் குரலில் தொடங்கிய மார்ட்டினின் பேச்சு இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது தழுதழுத்தது. உலகின் தலைசிறந்த உரைகளின் வரிசையில் அசைக்கமுடியாத இடத்திலிருக்கும் கிங்கின் பெருங்கனவுப் பேச்சு இதோ.

0

நம் தேசத்தின் வரலாற்றில் விடுதலைக்கான மிகப் பெரும் எழுச்சியாக இந்நாள் நிலைத்திருக்கப்போகிறது. உங்களில் ஒருவனாக இங்கே இணைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

ஒரு அசாத்திய மனிதரின் (ஆபிரகாம் லிங்கன்) நினைவிடத்தின் முன்னால் நாம் விடுதலைக்குப் போராட ஒன்றுகூடி நிற்கிறோம். நூற்றாண்டுகளுக்கு முன்னர், அவர் கையெழுத்திட்ட விடுதலைப் பிரகடனம்தான் லட்சோபலட்ச நீக்ரோ மக்களைச் சக மனிதராக அங்கீகரித்தது. அநீதி இருளில் உழன்று கொண்டிருந்த நம் கருப்பின மக்களுக்கு ஒளிக் கீற்றாய் மிளிர்ந்து நம்பிக்கை அளித்தது. சிறையில் அறையப்பட்ட நம் நீண்ட இரவை முடிவுக்கு கொண்டுவந்த மகிழ்ச்சியான விடியல் அது.

ஆனால் 100 ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட நீக்ரோக்கள் இன்னும் சுதந்தரம் அடையவில்லை என்பதை நாம் துக்கத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிவரும். நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் பிரிவினையின் சூழ்ச்சியாலும் பாகுபடுத்தும் நிறவெறியாலும் நீக்ரோக்கள் பழி தீர்க்கப்படுகின்றனர். நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தச் செல்வம் கொப்பளிக்கும் பெருங்கடலின் மத்தியில் வறுமை வாட்டும் ஒரு பாழடைந்த தீவில்தான் அனலிடைப் புழுவாய் மெலிந்து வருகிறார்கள். நூறாண்டுகளுக்குப் பின்னும் இத்தேசத்தின் மூலை முடுக்குகளில்தான் மூச்சிறைக்கிறார்கள். தாய் நாட்டிலேயே ஓர் அகதியைப் போல் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். இனி இந்தக் கொடுமையை உலகிற்கு உரக்கச் சொல்வோம். அதற்கே இந்தக் கூட்டம்.

அமெரிக்கா நமக்கு அளித்த ஒரு காசோலையைப் பணமாக்குவதன் பொருட்டே, அதன் தலைநகர் நோக்கி நாம் படையெடுத்திருக்கிறோம். இந்தப் பிரம்மாண்ட தேசத்தின் குடியாட்சியைக் கட்டமைத்து, அதன் சட்டப் புத்தகத்தை எழுதி அமல்படுத்தும் முன் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஓர் உறுதிமொழி பத்திரத்தை நம் முன்னோர்கள் எழுதிக் கொடுத்தார்கள். அதன்படி கண்ணியமாக வாழும் உரிமை, சுதந்தரமாக நடமாடும் உரிமை, மகிழ்ச்சியை நோக்கி நகரும் உரிமை இம்மண்ணின் ஒவ்வொரு பூர்வக்குடிக்கும், அவர்தம் சந்ததிக்கும் மிகப் பத்திரமாய் வழங்கப்பட்டிருக்கிறது. கறுப்போ சிகப்போ எல்லோருக்கும் நியதி ஒன்றுதான்.

ஆனால் அந்த உறுதிமொழிப் பத்திரத்தைச் சொன்னபடி செயல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது. தன் குடிமக்களுக்கு உரிமைகள் மீதான உத்தரவாதத்தை நிறத்தின் அடிப்படையில் தருவதே முறையென இந்நாடும் இந்நாட்டு மக்களும் கருதுகின்றனர் போலும்.

அமெரிக்க அரசு கொடுத்த அந்தக் காசோலைப் பத்திரம், ‘போதுமான பணம் இல்லை‘ என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நீதி வழங்கும் வங்கி, நிதி இல்லையெனச் சொல்லி திவால் ஆவதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்தத் தேசத்தின் நம்பகத்தன்மையான பெரும் வாய்ப்புக் களஞ்சியத்தில் நிதி இல்லையென்பதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.

அதனால்தான் நீதியின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் அடகு வைக்கப்பட்ட இந்தக் காசோலையை அமைதியான முறையில் மீட்டெடுக்க முன்வந்திருக்கிறோம்.

இந்த நொடிப்பொழுதின் முக்கியத்துவத்தை அமெரிக்கருக்கு நினைவூட்ட இந்தப் புனிதமான இடத்தைத் தவிர வேறொன்று இருக்க முடியாது. பொங்கி எழும் நம் கோபத்தை நீரூற்றி அணைப்பதற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் இது நேரமல்ல. மாறாக குடியாட்சி அளித்த உத்தரவாதங்களை மீட்டுக் கொணர்ந்து விரைந்து செயல்படுத்த வேண்டும். இருளிலிருந்து எழ இதுவே சரியான நேரம். சூரிய ஒளிப் படர்ந்த சமத்துவப் பாதையில், சரிநிகர் சமானமாக செல்ல இதுவே சரியான நேரம். கடவுளரின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் வாய்ப்பின் வாசற்கதவைத் திறக்க இதுவே சரியான நேரம். நம் தேசத்தின் புதைமண்ணிலிருந்து இனத் துவேஷத்தை தோண்டியெடுக்கவும் வலிமையான பாறைகளில் சகோதரத்துவத்தை கீறி எழுதவும் இதுவே மிகச் சரியான நேரம்!

இந்தத் தருணத்தில் நீக்ரோக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்துவதும் – இந்தப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் நம் தேசத்திற்கே பெரும் ஊறு விளைவிக்கலாம். சமத்துவமும் விடுதலையும் வசந்தகாலப் பூக்களாய் இம்மண்ணில் பூத்துக்குலுங்கும் நாள்வரை, நீக்ரோக்களுக்கு அநீதி இழைக்கும் கோரமான கோடை காலம் இம்மண்ணை நீங்காது. நம் போராட்ட வாழ்வின் இறுதி அத்தியாயம் 1963ஆம் ஆண்டோடு நிறைவுபெறுவதாக சிலர் எண்ணுகிறார்கள். இது வெறும் தொடக்கப்புள்ளி மட்டுந்தான். நீராவியைப் போல் நம் நீக்ரோக்களை ஊதித் தள்ள உத்தேசித்து, மீண்டும் இந்த அமெரிக்கர்கள் சொந்த அலுவலில் மூழ்கிப்போக முற்பட்டால் இந்தப் போராட்டம் ஒரு முரட்டுத்தனமான எச்சரிக்கையாக இருக்கும்.

நீக்ரோ மக்களுக்குக் குடியுரிமை மீதான சலுகைகள் தரப்படாதவரை அமைதியோ ஓய்வோ அமெரிக்காவில் நிலைத்திருக்காது. நீதியின் விடியல் அநீதியை அழித்து எரியட்டும். அதுவரை இந்தப் புரட்சிப் போராட்டத்தின் சூறைக்காற்று தேசத்தின் அடித்தட்டு ஆன்மாவை ஆட்டம் காணவைக்கும்!

நீதிதேவன் மாளிகைக்குச் செல்லும் இந்தச் சூடான வாயிலில் நிற்கும் என் அன்பிற்கினிய மக்களே! உங்களிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும். உரிமையின் பொருட்டு நாம் அடையவிருக்கும் இந்த மாபெரும் லட்சியத்தின் பெயரால், எந்தவித குற்றத்திற்கும் நாம் ஆட்பட்டுவிடல் ஆகாது. சுதந்தரத் தாகத்தை தணிக்க முடியாமல் போகும்போது குவளை நிறைய கசப்பும் வெறுப்பும் பருக நேரலாம், உடன்படாதீர்கள் தோழர்களே! நம் நெடிய போராட்டத்தின் பயணம் முழுக்கக் கண்ணியமும் கட்டுப்பாடுமே கடிவாளமாய் கட்டியமைக்க அரிதில் முயலவேண்டும்.

நம் ஆக்கப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவுசெய்ய எவ்விதமான வன்முறைக்கும் இடம்கொடுக்கக்கூடாது. உடல் ரீதியான உணர்ச்சிகள் வன்முறைக்கு மேலோங்கும் போதெல்லாம் ஆன்ம சக்தியோடு ஒன்றிணைந்து அமைதியான வழியில் கம்பீரமான உயரத்திற்கு நாம் சென்றடைய வேண்டும்.

நம் நீக்ரோ மக்களைத் தன்வயப்படுத்தும் போர்க்குண எண்ணங்களுக்கு செவிமடுக்காதீர்கள். வெள்ளையின மக்கள் எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். இருவர் விதியும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளதை அவர்கள் மெல்ல மெல்ல உணர்கிறார்கள். கருப்பின விடுதலையும் வெள்ளையின விடுதலையும் ஒன்றென கருதும் வெள்ளையின மக்கள் இன்று வெகுவாக வளர்ந்திருக்கிறார்கள். அதற்குச் சாட்சியாகவே பல வெள்ளையின மக்களை இங்கு நாம் காண்கிறோம். நம்மால் தனித்துப் பயணிக்க முடியாது.

முன்னோக்கிச் செல்லும் இந்த நெடிய பயணத்தில் பின்வாங்கும் எண்ணம் துளியும் கூடாது. உண்மையைச் சொன்னால், நம்மால் பின்வாங்கவும் முடியாது.

சமூக நலனில் அக்கறைக் கொண்ட சிலர், ‘நீங்கள் எப்போது திருப்தியடைவீர்கள்?‘ எனக் கேட்கிறார்கள். காவல்துறை கொடுங்கோன்மையால் எங்கள் கருப்பின மக்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆட்படும்போது, நாங்கள் எப்படி திருப்தியடைவது? பயணக் களைப்பால் சோர்வு தங்கிய எங்கள் உடலை – அவர்களின் நெடுஞ்சாலை ஹோட்டல்களும், நகர்புற லாட்ஜ்களும் உள் நுழைய அனுமதிதர மறுக்கும்போது எங்களால் எப்படி திருப்தியடைய முடியும்? பட்டிக்காட்டுச் சாலையிலிருந்து பட்டணம் போய் சேரும்வரை ஒரு ஜான் அளவுகூட எங்களால் திருப்தியடைய முடியாது என்பதை எப்படிச் சொல்வேன் இவர்களுக்கு!

மிசிசிப்பியில் வசிக்கும் நீக்ரோவிற்கு வாக்கு செலுத்த உரிமை இல்லாதபோது, நியூயார்க் நகர நீக்ரோவிற்கு வாக்குச் செலுத்த தேவையான எந்தவொரு அடிப்படை அடையாளமும் இல்லையென அவன் நம்பும்போது நாங்கள் எப்படித் திருப்தியடைய முடியும்? முடியாது! முடியாது! எம்மால் திருப்தி அடையவே முடியாது. நீதியின் ஆட்சி வெள்ளப்பெருக்கெடுத்து வீதியில் வழிந்து ஓடும் வரை எங்களால் திருப்தியடையவே முடியாது!

உங்களில் சிலர் கொடிய இன்னலுக்கு உள்ளானதையும் நிதீமன்றத்தில் விசாரணை முடித்த கையோடு இப்போராட்டத்திற்கு ஓடிவந்ததையும் நான் அறிவேன். சிலர் சிறையிலிருந்து விடுதலையானதும் நேரே இங்குதான் வந்திருக்கிறீர்கள். இன்னும் சிலர் தான் வசிக்கும் வீதிகளில் விடுதலை கேட்டுப் போராடியபோது காவல்துறை தாக்கிய பூட்ஸ் வடு ஆறாத கையோடு நீதி கேட்க வந்திருக்கிறீர்கள். கொடுங்கோன்மை பூதத்தின் எல்லாவித தொல்லைக்கும் ஆளான பெருவீரர்கள் நீங்கள். உலகறியாத துன்பம் நம்மை மீட்பரின் வழியில் கூட்டிச்செல்லும் நண்பர்களே, நம்பிக்கையைக் கைவிட வேண்டாம்.

மிசிசிப்பிக்குச் செல்லுங்கள். அலபாமாக்கு செல்லுங்கள். தென் கரோலினா, ஜார்ஜிய, லூசியானா.. செல்லுங்கள் — செல்லுங்கள்! இந்த நவீன நகரத்தின் ஒருபாதி மூலையிலுள்ள நம் சேரிக்கும் பட்டிக்காட்டுக்கும் திரும்பிப் படையெடுத்துச் செல்லுங்கள். நம் நிலை ஒருநாள் மாறும். நம்மால் மாற்றமுடியும். எந்தவொரு நிர்க்கதியான நிலையிலும் விரக்தியின் பள்ளத்தாக்கில் கால்வைத்து வீழ்ந்து விடாதீர்கள்!

நான் இன்று சொல்கிறேன், கேளுங்கள். இத்தனை மனக்குமுறலுக்கு மத்தியிலும், இத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் எனக்கு ஒரு கனவு இருக்கிறது தோழர்களே! அமெரிக்க ஆசையில் வேரூன்றிய கனவு அது.

ஒரு நாள் இந்தத் தேசம் எழுச்சிப் பெறும். அப்போதிந்த மதத்தின் அடிப்படைக் கொள்கையால், மனிதர்கள் எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டனர் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

ஜார்ஜியாவின் செங்குன்றத்தில் முன்னாள் அடிமைகளின் புதல்வர்களும் முன்னாள் முதலாளிகளின் புதல்வர்களும் ஒற்றுமையாகக் கைக்குலுக்கி சகோதரத்துவத்தின்பால் சரிசமமாக உட்கார்ந்திருப்பார்கள் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் பெயர்போன மிசிசிப்பி மாகாணத்தில் கூட சுதந்தர கீதம் பாடுவதாக எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நான்கு சிறுகுழந்தைகளும் நிறத்தின்பால் அல்லாமல் அவர்தம் குணத்தின்பால் மதிப்பிடும் மிகக் கண்ணியமான தேசத்தில் ஒரு நாள் வாழ்வார்கள் என்று ஒரு கனவு இருக்கிறது எனக்கு.

ஆம். கனவு இருக்கிறது எனக்கு.

சமுதாயச் சிக்கலால் நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயர் வெளியில் கள்ளமெளனம் சாதிக்கும் அலபாமா மாகாணத்தின் ஆளுநரே! இதே அலபாமா வீதியில் கருப்பினச் சிறுவர்களும் கருப்பினச் சிறுமியரும் வெள்ளையினச் சிறுவர் சிறுமியரோடு அண்ணன் – தங்கை உறவுமுறையில் கைக்கோர்த்து நடக்கும்படியாக எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

தாழ்ந்த மலைச்சரிவுகள் ஓருநாள் மேலெழும்பும். மலைகளும் குன்றுகளும் பள்ளமாகும். மூர்க்கமான நிலங்கள் சமவெளியாகும். வளைந்து நெளிந்த சாலை முகடுகள் இனி நேர்சீராகும். எல்லாம் வல்ல கடவுளின் கிருபையால் மண்ணில் வாழ்பவர்களே! நீங்கள் சமத்துவத்தைப் பார்க்கும்படி எனக்கு ஒரு பிரம்மாண்ட கனவு இருக்கிறது.

இது என் நம்பிக்கை. இதை நம்பித்தான் தென்னகம் வந்தேன். இந்த அசாத்திய நம்பிக்கையால் விரக்தியின் மலைமேட்டில் இருந்து நம்பிக்கையின் கற்களைப் பெயர்த்தெடுப்போம் தோழர்களே. ஆம், நம் தேசத்தின் குழப்பமான முரண்பாடுகளைச் சகோதரத்துவத்தால் சிம்பொனி அமைத்து சரிசெய்வோம். இந்த நம்பிக்கையின் பெயரால் ஒன்றிணைந்து உழைப்போம்; ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்; ஒன்றிணைந்து போராடி விடுதலை கேட்போம்; தேவைப்பட்டால் ஒன்றிணைந்து சிறைக்குச் செல்லவும் தயங்க மாட்டோம்; ஒரு நாள் வெற்றிப் பெறுவோம்!

அமெரிக்கா ஓர் உன்னத தேசமாக உருவெடுக்க வேண்டுமானால் இவை சாத்தியப்பட வேண்டும். நியூ ஹாம்ஷயர் மலைகளில் சுதந்தர கீதம் ஒலிக்க வேண்டும். நியூ யார்க் நகர மலையுச்சிகளில் விடுதலைக் கனல் வெந்துத் தணிய வேண்டும். பென்ஸல்வேனியா மாகாண அலிகேனிஸ் மலையுச்சியில் எட்டுத்திக்கும் இனி இந்த சுதந்தர சத்தம் எதிரொலிக்க வேண்டும்! ஆம், எதிரொலிக்க வேண்டும்.

பனி படர்ந்த ராக்கி மலைத்தொடரில் விடுதலை கீதம் ஒலிக்கட்டும். வளைந்து நெளிந்த கலிபோர்னியா சிகரத்தில் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

டென்னிஸி மலையிலும், ஜார்ஜியா மாகாண கற்பாறையிலும், மிசிசிப்பி மாகாணத்தின் குட்டிக் குட்டிக் குன்றுகளிலும் இனி இந்த விடுதலை கீதம் அதிர ஒலிக்கட்டும்.

சுதந்தரக் காற்றை நாம் சுவாசிக்கத் தொடங்குவோம். ஒவ்வொரு கிராமத்திலும் கைவிலங்கு அவிழ்க்கப்படும். குக்கிராமம் முதலாக அனைத்து நகரங்களும் அனைத்து மாகாணங்களும் சுதந்திரம் பெறத் தொடங்குவார்கள்.‌ இறுதியாகக் கருப்பின ஆண், வெள்ளையின ஆண், யூதர், சீர்திருந்த கிறிஸ்தவர், கத்தோலிக்கர் என கடவுளரின் அனைத்துக் குழந்தைகளும் ஒற்றுமையாகக் கைகோர்த்துக் கொண்டு, ‘சுதந்திரம் பெற்றுவிட்டோம். இறுதியாக சுதந்திரம் வாங்கிவிட்டோம்! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, இறுதியாக நாம் விடுதலை அடைந்தே விட்டோம்!’ என்று நீக்ரோக்களின் பண்டைய ஆத்ம மரபில் உள்ள வரிகளை மகிழ்ச்சிகரமாகப் பாடுவோம்.

(தொடரும்)

 

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

5 thoughts on “காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது”

  1. வாசிக்கும் போதே, நம் முன் மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் பேசுவது போன்ற ஓர் உணர்வு! மிக அருமையான வரிகள். பிடித்தது: “முன்னோக்கிச் செல்லும் இந்த நெடிய பயணத்தில் பின்வாங்கும் எண்ணம் துளியும் கூடாது. உண்மையைச் சொன்னால், நம்மால் பின்வாங்கவும் முடியாது.”

  2. “உடல் ரீதியான உணர்ச்சிகள் வன்முறைக்கு மேலோங்கும் போதெல்லாம் ஆன்ம சக்தியோடு ஒன்றிணைந்து அமைதியான வழியில் கம்பீரமான உயரத்திற்கு நாம் சென்றடைய வேண்டும்”.
    ❤❤

  3. ரொம்பவும் மனதுக்கு நெருக்கமான, உருக்கமான பதிவு. அருமை. நன்றி

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *