Skip to content
Home » காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

கெட்டிஸ்பர்க் உரை

அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதாலோ என்னவோ அமெரிக்கா கடந்து உலகையும் அது வசப்படுத்திவிட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட லிங்கன், தன் எல்லைக்குட்பட்ட மாகாணங்களில் அடிமை முறையை ஒழிப்பேன் என்று பல ஆண்டுகளாக சூளுரைத்து வந்திருந்தார். வட மாநிலங்கள் அடிமைமுறை ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தன. தென் மாநிலங்களோ அடிமை முறையை ஒழிக்கக்கூடாது என்றும் மீறி ஒழித்தால் அமெரிக்கக் கூட்டாட்சியிலிருந்து விலகிவிடுவோம் என்றும் அச்சுறுத்தின.

அடிமை முறையை எதிர்த்த காரணத்தால் ஆட்சியேற்ற நிமிடம் தொடங்கி எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார் லிங்கன். வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான அடிப்படையான முரண் நாள்பட நாள்பட வலுத்துக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் உள்நாட்டுப் போராக வெடித்தது. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று கிட்டத்தட்ட லிங்கன் பதவியிலிருந்த 1503 நாட்களில், 1458 நாட்கள் போரில் கழிந்துவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் 1863ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி கெட்டிஸ்பர்க்கில் லிங்கன் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். சில நாட்களுக்கு முன்பு அதே கெட்டிஸ்பர்க்கில் நடந்த கலவரத்தில் 51,000 எதிரிப் படையினரைக் கொன்றுவிட்டு, மூவாயிரத்து சொச்சம் அமெரிக்கர்கள் இறந்துபட்டிருந்தனர். அவர்களுடைய கல்லறைத் திறப்புக்குதான் லிங்கன் அழைக்கப்பட்டிருந்தார்.

லிங்கன் பேசியது 2 நிமிடங்கள் மட்டுமே. அந்த இரு நிமிடங்களை அசாத்தியமான நம்பிக்கையால் அவர் நிரப்பியிருந்தார். லிங்கனின் புகழ்ப்பெற்ற மக்களாட்சி விளக்கமும் இந்த உரையில்தான் இடம்பெற்றுள்ளது.

அடிமை முறை ஒழிப்புக்கு இத்தனை விலை கொடுக்க வேண்டுமா? இறந்துபோன வீரர்களுக்கு நாம் செய்யும் பதிலீடு என்ன? ஓயாத இந்தப் போர் முடிவுக்கு வருவது எப்போது? ஐக்கிய அமெரிக்காவின் விடியல் என்றைக்கு? எல்லாக் கேள்விகளுக்கும் லிங்கனின் சிறு உரை விடையளித்தது.

போரின் முடிவில் இறுதி வெற்றி லிங்கனின் அமெரிக்காவுக்கே கிடைத்தது. அடிமைமுறை இன்று இல்லை என்றாலும் நிறவெறி மறைந்துவிட்டது என்று சொல்லமுடியுமா? இன்றைய அமெரிக்கா மட்டுமல்ல பிளவுண்டிருக்கும் முழு உலகமும் லிங்கனின் சொற்களை ஊன்றி கவனிக்கவேண்டிய தருணம் இது.

0

ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை

‘சுமார் 87 வருடங்களுக்கு முன்பு, இந்தக் கண்டத்தில் ஒரு புதிய தேசத்தை நம் மூதாதையர்கள் நிர்மாணித்தார்கள். சுதந்தரத்தால் உருப்பெற்ற அத்தேசத்தில் மனிதர்கள் அனைவரும் சரி சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெருவிருப்பம்.

ஆனால் நாம் இப்போது அத்தேசத்தின் கடும் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சுதந்தரமும் சமத்துவமும் ஆழ வேரூன்றிய ஒரு நாடு, இந்தப் பூமியில் நிலைத்திருக்குமா என்ற கேள்விக்கு விடை காண முற்பட்டிருக்கிறோம். யுத்தம் நடந்துகொண்டிருக்கும் அதே களத்தில்தான் இந்தச் சந்திப்பும் நடந்து கொண்டிருக்கிறது.

தேசம் வாழும் பொருட்டு, தன் உயிர் துறந்து உறங்கிக் கொண்டிருக்கும் வீரர்களை உங்கள் மனதில் நிறுத்துங்கள். இந்தப் போர்க்களத்தின் ஒரு மூலையை அவர்களின் கல்லறைக்காக அர்ப்பணிக்கவே நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறு. ஒருவகையில் இதுவே பொருத்தமானதும் சரியானதும்கூட.

ஆனால் பொருள் பொதிந்துப் பார்த்தால் வேறொன்றும் தோன்றுகிறது. நம்மால் இந்தப் போர்க்களக் கல்லறையை அவர்களுக்காக அர்ப்பணிக்கவோ புனிதப்படுத்தவோ கௌரவப்படுத்தவோ முடியாது. வாழ்ந்து மடிந்த வீரர்கள் நம் சக்திக்கு மேலாகவே இந்தப் போரைப் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். கெட்டிக்காரர்கள்!

இங்கே நாம் என்ன சொல்கிறோம் என்பதை இந்த உலகம் ஒருவேளை மறந்துபோகலாம். அல்லது கொஞ்சமேனும் குறிப்பு வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒருபோதும் மறக்காது.

இதுவரை உன்னதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் போர், வாழும் நமக்காக இவர்கள் செய்த தியாகம் என எண்ணத் தோன்றும். அதற்காகவேனும் நாம் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறோம்.

எஞ்சியிருக்கும் பெரும் பணிக்கு முன்னால் அர்ப்பணிப்போடு இருப்பதைக் காட்டிலும் மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் இறுதி மூச்சைப் பிடித்து நிறுத்தியபோது இவர்கள் கொண்ட தேசாபிமானமே, நம்மை அவர்பால் மரியாதை செலுத்த வைக்கிறது.

இவர்களின் இறப்பு வீணானது அல்ல என்றும் இந்தத் தேசம் சுதந்தரத்தின் புதிய பிறப்பை பெற்றெடுக்க வேண்டும் என்றும்; மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தி வரும் அரசாங்கம் இம்மண்ணில் என்றென்றைக்கும் அழியாது என்றும் உளமார உறுதியளிப்போம்.’

0

(தொடரும்)

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts