12 அக்டோபர் 1956. வழிந்து கொண்டிருக்கும் மக்கள் திரளை ஏற்றிக்கொண்டு பம்பாய் நகருக்குள் நுழைந்தது அந்த ரயில் வண்டி. நாகபுரி நோக்கிச் செல்லும் இருபதாவது ரயில் அது. பல சிறப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் முன்னரே செய்திருந்தாலும், நாகபுரிக்குச் செல்லும் நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. திருவிழாக் கூட்டம் போல் படையெடுத்துச் சென்றனர் பட்டியலின மக்கள்.
நாகபுரி வந்து சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்குப் பள்ளி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்வு நடைபெறவிருக்கும் திறந்தவெளி மைதானத்தில் மூங்கில் விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்த. 3,000 மின்சார விளக்குகள் தயார் நிலையில் இருந்தன. இந்த மகத்தான வெளிச்சத்தின்கீழ் ஆண்டாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த இனம், தன் அடிமை விலங்கிலிருந்து விடுபெற காத்திருந்தது.
அக்டோபர் 14ஆம் தேதி காலை மதமாற்ற நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தபோது, சுமார் 6 லட்சம் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்த மதத்தைத் தழுவியிருந்தனர். இந்து மத வரலாற்றில் அழிக்கமுடியாத கரும்புள்ளி அது. ஆனால் வரலாறு அத்தோடு நிற்கவில்லை. அடுத்த நாள் காலைவரை கண்ணியமாகக் காத்திருந்தது.
‘பாபாசாகேப்… பாபாசாகேப்…’ என்று பெருந்திரளின் முழக்கத்துக்கு மத்தியில் அமைதி பூத்த முகத்தோடு அம்பேத்கர் வந்தார். இந்து மதத்தின் இடியாப்பச் சிக்கலை அடியோடு பெயர்த்தெறிந்த வெற்றி அவர் கண்களில் தெரிந்தது.
தன்மேல் வீசப்பட்ட அம்புகளை எல்லாம் மிக லாவகமாகப் பிடுங்கி, பதில் தாக்குதல் செய்ய ஆயத்தமானார். இந்து மதத்தின் கொடுமைகளையும்; பெளத்த மதத்தின் பெருமைகளையும்; பட்டியலின மக்களின் கடமைகளையும் மடமடவென்று அவர் பேசியதை 3 மணி நேர சொற்பொழிவு என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. மூவாயிரம் ஆண்டுகால அடிமை வரலாறு அது. டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் உத்வேகமூட்டும் அந்த உரை கீழே.
0
என் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் பெளத்தச் சகோதரர்களே, நண்பர்களே வணக்கம்!
இந்த மாபெரும் மதமாற்றச் சடங்கை (தீக்ஷை) நாம் ஏன் இங்கே (நாகபுரி) நடத்தினோம் என்ற மிக முக்கியமான குழப்பம் பலருக்கும் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இன்றைய சொற்பொழிவை நேற்றும்; நேற்று நடந்திய சடங்குகளை இன்றும் நடத்தியிருக்க வேண்டும். இந்தக் கனமான கடமைகளை நாம் ஏன் தலைமேல் சுமத்திக்கொண்டோம்; இதனால் என்ன சாதித்துவிடப் போகிறோம் என்பதை மிக நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதை அறிந்து கொள்வதில்தான், இன்றையப் பொழுதின் அத்தனை உழைப்பும் அடங்கியிருக்கிறது.
இந்தச் சடங்கு, இதன் தேவை, இவை பற்றியெல்லாம் உங்களுக்கு முன்னரே நான் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன செய்ய? நாட்கள் ஓடுவதைத் தவிர, எல்லாம் நிச்சயமற்றுதான் இருந்தன.
‘மதமாற்றம் செய்ய நீங்கள் ஏன் நாகபுரியைத் தேர்ந்தெடுத்தீர்கள்? வேறெந்த ஊரையும் தேர்ந்தெடுக்காமல் போக என்ன காரணம்?’ என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். ‘ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கம்) அமைப்பின் திடகாத்திரமான மக்கள் பலம் நாகபுரியில் இருப்பதால், அதைத் திக்குமுக்காடச் செய்யவே இந்நிகழ்ச்சி இங்கு நடக்கிறது’ என மேலும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஒரு பிறப்பே போதாதபடி நம்முன் பிரம்மாண்ட கனவுகள் இருக்கும்பொழுது, வெறுமனே மூக்கைச் சொரிந்தபடி இவர்களை உசுப்பேத்த நமக்கு நேரமில்லை.
நாகபுரியை தேர்ந்தெடுக்க வேறொரு காரணம் இருந்தது. இந்தியாவில் பெளத்த மதத்தை பரப்பிய பெரும் பெருமை உடைய நாகர்களை, பெளத்த வரலாறு படித்த ஒரு சிலரே அறிவர். ஆரியர்களை எதிர்த்த புரட்சிகரமான வரலாறு இவர்களுக்கு உண்டு. ஆரியருக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் நடைப்பெற்ற எண்ணிலடங்காத போர்கள் புராணம் முழுக்க சிதறிக்கிடக்கின்றன. அப்படிப்பட்ட நாகர்களை உயிரோடு எரித்த ஆரியர் பற்றிய செய்திகள் நிறையவே உள்ளன. அகத்திய முனிவரால் கூட ஒரே ஒரு நாகரைத்தான் காப்பாற்ற முடிந்ததாம். அந்த நாகரின் வழிவந்தவர்கள் நாம்.
ஆண்டாண்டுகளாக நசுக்கப்பட்ட நாகர்களுக்கு, தன்னை உயர்த்த ஒரு ஏணி தேவைப்பட்டபோது, இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்தவர்தான் மகான் கெளதம புத்தர். மானசீகமாக புத்தரை ஏற்றுக்கொண்ட இவர்கள், அவரின் தம்மபதத்தை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்தனர். அப்பெருமைக்குரிய நாகர்கள், நாம் கூடியிருக்கின்ற இந்த நாகபுரியின் சுற்றுவட்டாரத்தில்தான் வாழ்க்கை நடந்திவந்தனர். அதனாலேயே இந்நகரமும் ‘நாக-புரி’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கிருந்து 27 மைல் தூரத்தில் நாகர்ஜுனா மலை இருக்கிறது; அதனருகில் நாக-நதி ஓடுகிறது. நாகக் குடியிருப்பின் காரணத்தால்தான் இந்நகர் இப்பெயர் பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. இதுதான் நாகபுரியைத் தேர்ந்தெடுக்க எனக்கு மூலக்காரணமாய் இருந்ததே ஒழிய யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. உண்மையில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய நினைப்புக் கூட எனக்குத் தோன்றவில்லை.
இப்படியொருக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிந்ததும் பல நாளிதழ்கள் என்னை வசமாக விமர்சிக்கத் தொடங்கின. சில விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. அவர்கள் சொல்கிறார்கள், ‘தீண்டத்தகாத என் பாமர மக்களை, நான் தவறாக வழிநடத்துகிறேனாம்.’ இன்னும் சிலர், ‘தீண்டத்தகாத நீங்கள், என்ன செய்தாலும் தீண்டத்தகாதவர்கள்தான். தேவையில்லாமல் மதம் மாறி, நீங்கள் அனுபவிக்கும் சலுகைகளை இழந்துவிடாதீர்கள்’ என்று ஏய்க்கப் பார்க்கிறார்கள். பட்டறிவில்லாத நம் பாமரர்களை மீண்டும் பழைய புராணத்தையே பின்பற்றச் சொல்கிறார்கள்.
இந்த நயவஞ்சகப் பேச்சு நம்மின் வயது முதிர்ந்தோரையும், இளையோரையும் ஓரளவு வசீகரித்துவிடும். எப்படியோ, நம் மக்களிடம் சந்தேகத் தீ கொழுந்துவிடத் தொடங்கி விட்டது. அறிவைக் கொடுத்து அறியாமைப் போக்கும் கடமை என்மேல் விழுந்துள்ளது. எரிந்து கொண்டிருக்கும் நம் மனதை அதுவே சாந்தப்படுத்தும், அதுவே சாந்திப்படுத்தும்!
மாமிசம் உண்பதைத் தவிர்க்க, நாம் ஓர் இயக்கத்தைக் கடந்தகாலத்தில் நடத்திவந்தோம். தீண்டத்தகாதவர்கள் தன்மேல் விழுந்த இடியாக அதைக் கருதினார்கள். உயிரோடு இருக்கும் ஒரு எருமை மாட்டின் உடம்பிலிருந்து வேண்டியமட்டும் அவர்கள் பாலை உறிந்து கொள்வார்களாம்; ஆனால் செத்துப்போன பின் அதன் பிணத்தை நாம் இடுப்பில் கட்டி அலையவேண்டுமாம்! என்ன ஒரு முட்டாள்தனமான பழக்கமிது, சொல்லுங்கள்.
நான் கேட்கிறேன், ‘இறந்து போன விலங்குகளைச் சுமக்க அனுமதிக்கும் அவர்கள், இறந்தபோன தம் தாயாரை நாம் தூக்குவதற்கு மட்டும் ஏன் அனுமதித் தர மறுக்கிறார்கள்?‘ சவத்தைத் தீண்டுவதற்கு கூட நமக்கு உரிமையில்லையா?
ஒருமுறை ’கேசரி’ இதழில் ஒரு கட்டுரை வந்தது. குறிப்பிட்ட கிராமத்தில் ஆண்டொன்றுக்கு 50 கால்நடைகள் இறந்துபோகின்றன. அதன் தோல், கொம்பு, எலும்பு, மாமிசம், வால் பகுதிகளை விற்றால் சுமார் 500 ரூ. பெறும். தன் தேவையில்லாத கொள்கைகளால் இந்தத் தீண்டத்தகாதவர்கள் ஆண்டொன்றுக்கு 500ரூபாயை இழக்கிறார்கள் என துக்கக் கண்ணீர் விட்டு அந்தக் ’கேசரி‘ இதழின் அபிமானி எழுதியிருந்தார். இம்மாதிரியான போலிப் பிரசாரத்திற்குப் பதில் சொல்ல வேண்டி என்ன கடமை இருக்கிறது? ஆனால் நம் மக்கள், ‘இந்தப் பிரசாரத்திற்கு எல்லாம் ஏன் நம் சாகிப் பதில் சொல்ல மறுக்கிறார்கள்?‘ என ஏங்குகிறார்கள்.
ஒருமுறை சங்கநேரியில் ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இரவு விருந்தும் அங்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அங்கு வந்த கேசரி இதழின் நிருபர் ஒருவர் தன் கேள்வியை காகிதத்தில் எழுதிக் கொடுத்தனுப்பினார். ‘உங்கள் மக்களிடம் இறந்த விலங்குகளைச் சுமக்க வேண்டாம் எனச் சொல்லி வருகிறீர்கள். உண்மையில் அவர்கள் எத்தனை வறுமையில் வாழ்கிறார்கள் தெரியுமா? பெண்களுக்கு சேலையும் ரவிக்கையும் உடுத்தக் கூட வசதியில்லை. அவர்களிடம் சொந்தமாக நிலமும் இல்லை, உண்ண உணவும் இல்லை. பாவப்பட்ட வாழ்க்கை வாழும் அவர்கள், செத்த விலங்குகளை சுமந்து ஆண்டொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்தார்கள். ஆனால், உங்களின் தலையீட்டால் அதையும் இழந்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள், சாகிப்?’
நான் கேட்டேன், ‘இதற்கு எங்கு பதிலளிக்க வேண்டும்? இந்த வளாகத்திலேயே சொல்லிவிடவா, இல்லை கூட்டம் கூட்டிச் சொல்லவா?’ எனக்கு மக்களிடம் சொல்வதே சரியெனப்பட்டது. ‘இந்தக் கேள்வி மட்டும்தானா, இல்லை வேறேதும் இருக்கிறதா?’ என்றேன். ‘இல்லை..இல்லை. இது மட்டுந்தான்’ என்றார். ‘சரி, உங்கள் குடும்பத்தில் எத்தனைப் பேர், உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்?’. ‘எனக்கு ஐந்து குழந்தைகள். என் சகோதரருக்கு ஒரு ஆறு – ஏழு குழந்தைகள்.’
‘ஓ! அப்போ உங்கள் குடும்பம் மிகப் பெரியது. ஒன்று செய்யுங்கள், செத்துப் போன விலங்குகளை சுமந்து கொண்டுபோய் அதன் கொம்பு, எலும்பு, மாமிசத்தை விற்று 500 ரூபாய் சம்பாதித்து உங்கள் குடும்பத்தை கரைசேர்க்கும் வழியைப் பாருங்கள். என் மக்களின் நலனைக் கவனிக்க, என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் சுமந்தால் எங்களுக்கு லாபம் என்றால், நீங்கள் சுமந்தால் உங்களுக்கும் லாபம் தானே? போய் செத்தச் சவங்களை தூக்கித் திரியுங்கள்!’
நேற்று ஒரு பிராமணச் சிறுவன் என்னிடம் வந்து, ‘நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் உங்களுக்குத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதே, அதை ஏன் வேண்டாமென மறுக்கிறீர்கள்?’ என கேட்டான். நான் சொன்னேன், ‘நீங்களே ஒரு மகராகி அந்த இடங்களை நிரப்புகிறீர்கள். பணித்துறையில் உள்ள இடங்களும் இவ்வாறே நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு எத்தனை எத்தனையோ பிராமணர்களும் ஏனையோர்களும் விண்ணப்பித்து வருகிறார்கள். பணித்துறைகளில் நடப்பது போல, பிராமணராகிய நீங்களே ஏன் ஒரு மகராகி இந்த இடங்களையும் நிரப்பக்கூடாது?’
என் கேள்வியெல்லாம் ஒன்றுதான். ‘எங்களின் இழப்புக்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?’ எங்களுக்கு மிக நெருக்கமான தேவை சுய மரியாதையே தவிர பொருளாதார ஆதாயமல்ல. ஒழுக்கமுடைய ஒரு பெண்ணுக்குத்தான் ஒழுக்கக்கேட்டின் சாபம் என்னவென்று தெரியும்.
நமது பம்பாய் மாகாணத்தில் விலைமாதர்களுக்கு என்றொரு தனி நகரம் இருக்கிறது. அவர்கள் 8 மணிக்கு எழுந்து அருகிலிருக்கும் ஹோட்டலில் காலை உணவை ஆர்டர் செய்கிறார்கள். ‘ஓ சுலைமான், ஒரு தட்டுக் கொத்துக்கறியும் ரொட்டியும் கொண்டுவா‘ என பணிக்கிறார்கள். சுலைமான் கொத்துக்கறியோடு தேநீரும், கேக்கும் கொண்டுவந்து தருகிறார். ஆனால் என் தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்கு சாதாரண ரொட்டியும் சட்டினியும் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் தன் சுயமரியாதையையோ தன்மானத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.
நாம் கெளரவத்திற்கும் சுய மரியாதைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில் வெற்றியடைய நாம் எதை வேண்டுமானாலும் துறப்பதற்குத் தயார். கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பத்திரிகையாளர்கள் என்னை ஒரு பாடுபடுத்தியிருக்கிறார்கள். தயவுசெய்து இனியாவது இந்தக் குழந்தைத்தனத்தை விட்டொழித்து, மனிதத்தன்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள்!
பெளத்த மதத்திற்கு மாறினாலும் என்னால் எப்போதும் அரசியல் உரிமைகள் பெற முடியும். ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என உறுதிபடக் கூற முடியாது. அதற்கு முன்பே இந்த இயக்கம் நம்மிடம் அயராத உழைப்பை எதிர்பார்க்கிறது. நாம் பெளத்தத்தைத் தழுவுவதால் என்னென்ன சிக்கல் வரும், அதை எப்படிக் கையாள்வது, என்னென்ன வாதங்களை முன்வைக்க வேண்டும் என எல்லாம் கரைத்துக் குடித்துவிட்டேன்.
அவர்களின் எல்லாக் கேள்விக்கும் என் சட்டைப்பையில் பதில் இருக்கிறது. நான் பெற்ற இந்த உரிமைகள் என் மக்களுக்கானவை. இதைப் பெற்ற என் மக்களும் நிச்சயம் பாதுகாக்கவே செய்வர். இந்த உரிமைகளைப் போராடி பெற்றவனாக நான் இருந்தால், அவற்றை மீண்டும் பெறும் நம்பிக்கை எனக்கு உண்டு. இனியாவது என்னை முழுவதுமாக நம்புங்கள். எதிர்ப் பிரசாரத்தில் கடுகளவும் உண்மையில்லை.
ஒரு விஷயத்தால் நான் வியப்படைகிறேன். மூலைமுடுக்கெல்லாம் இந்த மதமாற்றம் குறித்து விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், நான் ஏன் பெளத்தத்தை தழுவினேன்; வேறெந்த மதத்தையும் நாடாமல் பெளத்தம் நோக்கிச் செல்ல என்ன காரணம் என ஒருவரும் கேட்கவில்லை. எந்த ஒரு மதமாற்ற இயக்கத்திலும் இந்த ஒரு கேள்வியே மிக முக்கியமானது. மதம் மாறும்போது எந்த மதத்திற்கு மாறுகிறோம்; ஏன் மாறுகிறோம் என்பதை மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
1935-ல் இயோலில் ஏற்ற தீர்மானத்தைத் தொடர்ந்து, இந்து மதத்தைத் துறக்கும் ஓர் இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். நீண்ட நாட்களுக்கு முன்பே, ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாகச் சாக மாட்டேன்’ என உறுதி எடுத்திருந்தேன். அதை நேற்று நிரூபிக்கவும் செய்தேன். எத்தனைப் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தெரியுமா, வானுக்கும் பூமிக்கும் குதிப்பதாக உணர்கிறேன். நரகத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன்!
கண்ணை மூடிக்கொண்டு என்னைப் பின்பற்றுபவர்களை நான் விரும்பவில்லை. பெளத்த மதத்தைத் தழுவ விரும்பினால், அதை முற்றிலுமாக உணர்ந்து முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
மனித குலத்தின் வளர்ச்சிக்கு மதம் இன்றியமையாதது. கார்ல் மார்க்ஸைப் படித்த பின்பு ஒரு சாரார் தோன்றினர். அவர்களைப் பொறுத்தவரை மதம் ஒரு தேவையில்லாத பொருள். அதை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதினார்கள். காலையில் எழுந்ததும் ரொட்டி, வெண்ணெய், கோழி இறைச்சி எனச் சகலமும் உண்பார்கள். மதியம் நெருங்கியதும் வயிறார உண்டுவிட்டு, குறட்டை விட்டுத் தூங்குவார்கள். எழுந்ததும் சினிமா, பின் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து. இதுதான் அவர்களின் வாழ்க்கை. இதை நான் ஏற்க மறுக்கிறேன்.
என் தந்தை பரம ஏழை. என்னால் கனவிலும் அவற்றை அடைய முடியாது. என்னைப் போல் கொடுமைகளை சுமந்துகொண்டு, யாரும் தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டார்கள். சுகபோகங்கள் இல்லாத வாழ்க்கையின் வழி என் போன்றவர்களுக்குத்தான் தெரியும். பொருளாதார மேம்பாட்டிற்கான இந்த இயக்கத்தின் தேவையை நான் அறிகிறேன். மனிதன் பொருளாதாரத்திலும் உயர்வடைய வேண்டும்தான். நான் இந்த மார்க்சிய இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல. ஆனால் சிறு மாறுபாட்டை அதில் காண்கிறேன்.
எருமைக்கும் காளைக்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. எருதுக்கும் காளைக்கும் தீவனம் தேவை. மனிதனுக்குக்கூட உணவு தேவை. ஆனால் முன் இரண்டுக்கு மனம் இல்லை. மனிதனுக்கோ திடகாத்திரமான உடலோடு பலவீனமான மனதும் இருக்கிறது. ஆகவே இவ்விரண்டைப் பற்றியும் நாம் அக்கறைக் கொள்ள வேண்டும். மனதைப் பக்குவப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும்.
உணவைத் தவிர பண்படுத்தப்பட்ட மனமெல்லாம் மனிதனுக்குத் தேவையில்லை என்று வாதிடும் எந்த ஒரு நாட்டாரிடமும் உறவு வைத்துக்கொள்ளும் ஆசை எனக்கு அறவே இல்லை. ஏனைய மனிதர்களோடுப் பழகி சக மனிதனாக வாழ ஆரோக்கியமான உடலோடு, ஆரோக்கியமான மனமும் அவசியம். இதுவே மனித சமுதாயத்தை மேம்படுத்தும்!
மனதளவிலோ, உடலளவிலோ மனிதன் அடிக்கடித் துன்பப்பட என்ன காரணம்? ஒருவேளை அவன் உடல் பலவீனப்பட்டிருக்கலாம்; இல்லை மனம் உற்சாகமற்று இருக்கலாம். இந்த உற்சாகம் இல்லை என்றால் நாம் உயர்வடைய வழியில்லை. ஆனால் ஆயிரமாண்டுகளாக ஏன் இந்த உற்சாகம் நம்மிடம் தோன்றவில்லை?
முதற்காரணம், எந்தவகை சலுகைகளும் வசதிகளும் பெற்றுவிடாதபடி நம் மக்கள் உந்தப்பட்டுள்ளனர். நாளைக்கான எந்தவித நம்பிக்கையும் நம்மிடம் துளிர்வதில்லை. நம்பிக்கை இல்லாத நம்மிடம் உற்சாகம் எங்கு பிறக்கும்? நம் உழைப்பைச் சுரண்டுபவர்கள், நம்மால் உற்சாகம் அடைகிறார்களே ஒழிய அவர்களால் நாம் ஒருநாளும் ஆனந்தம் அடைவதில்லை.
ஓர் ஆசிரியர் கேட்கிறார். ‘ஏய். யார் நீ? மகர் தானே? முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெறுவாயா? இல்லை. தேர்ச்சிப் பெற்றுதான் என்ன செய்யப் போகிறாய்? அதெல்லாம் பிராமணக் குழந்தைக்கு உண்டான வேலை. நீ மூன்றாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றாலே போதும், போ!’ இந்தச் சூழலில் அவன் எப்படி உற்சாகம் அடைவான்; அந்தக் குழந்தை எப்படி தேர்ச்சிப் பெறும்? உற்சாகம் ஊட்டும் எல்லா வித்துக்களும் நம் மனதில்தான் பொதிந்துள்ளன. எவனது உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறதோ, எவன் தைரியசாலியாக வாழ்கிறானோ, தன் அவமதிப்பை எல்லாம் அழித்தெறிய எவன் முற்படுகிறானோ, அவனே உற்சாகமுடையவன் ஆகிறான். அவனே மேன்மையடைகிறான்.
(தொடரும்)