(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்)
ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க இந்த மதம் வேலை செய்து கொண்டிருக்கிறது. வயிற்றை நிரப்பும் சாதாரண எழுத்தர் பணியைத் தவிர, விளிம்பில் தள்ளப்படும் நம்மவர்கள் வேறு என்ன செய்யமுடியும்? இந்தச் சிறிய எழுத்தர்களை வேலைவாங்க ஒரு பெரிய எழுத்தர். இதுதான் நம் உச்சபட்ச சாதனை.
மனிதனின் உற்சாகத்திற்கு மூலக் காரணமே அவனது மனம்தான். நமது மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்த, நாங்கள் ஓர் இயக்கத்தை நிறுவி கற்பிக்கத் தொடங்கினோம். வெறும் இடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டுதான் நான் என் பள்ளிக் கல்வியைத் தொடங்கினேன். அங்கு எனக்குத் தண்ணீர் தர மறுத்தார்கள். பள்ளி வளாகத்தில் தண்ணீர் அருந்தாமலே என் பெரும்பாலான நாட்கள் கழிந்தன. பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே நிலை நீடித்தது. இது மாதிரியான சூழலில் வளரும் நம் சமூக மக்களில் ஒரு எழுத்தரை தவிர வேறு யாரை நாம் எதிர்பார்க்க முடியும்?
தில்லி நிர்வாகக் கவுன்சிலில் நான் இடம்பெற்றிருந்தபோது, லின்லித்கோ பிரபுதான் வைசிராயாக இருந்தார். நான் அவரிடம், ‘சராசரி பட்ஜெட் தொகையை விடுத்து, முஸ்லிம் மக்களின் கல்விக்காக அலிகர் பல்கலைக்கழகத்திற்கு 3 லட்சம் ரூபாயும் அதேபோல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்திற்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கியிருக்கிறீர்கள். எங்களுக்கும் ஏதாவது செய்ய நினைத்தால், இதுபோல 1000 மடங்காவது நீங்கள் நிதி ஒதுக்க வேண்டும். அவ்வளவு வேண்டாம், முஸ்லிம்கள் பெறும் தொகையாவது எங்களுக்கும் ஒதுக்குங்கள்’ என்றேன். உடனே அவர், ‘நீங்கள் என்ன சொல்ல நினைத்தாலும், அதைக் கடிதமாக எழுதிக் கொடுங்கள்’ என்றார்.
நானும் அப்படியே ஓர் அறிக்கை தயாரித்தேன். அது இன்னும் என்னிடம் உள்ளது. ஐரோப்பியர்கள் மிகப் பரிவானவர்கள். என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்தப் பணத்தை எதற்குச் செலவிடுவது? மீண்டும் குழப்பம். நமது சிறுமிகள் கல்வி கற்கவில்லை. பெண்களின் கல்விக்காகவும், உணவு தேவைக்காகவும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். ஆனால் நமது பெண்கள் கல்வி கற்று நன்கு படித்தவர்கள் ஆகும்போது அவர்களின் உணவுத் தேவைக்கு செலவு செய்ய, என்ன வசதி இருக்கிறது நம்மிடம்? அவர்கள் கல்வி கற்பதன் இறுதி பலன்தான் என்ன? அரசாங்கமும் கல்விக்குச் செலவிடுவதை நிறுத்திக் கொண்டு இதர துறைக்கு நிதி அளிக்கத் தொடங்கிவிட்டது.
மீண்டுமொருமுறை லின்லித்கோவைச் சந்தித்தேன். ‘நீங்கள் கோபப்படவில்லை என்றால், ஒன்று கேட்கட்டுமா? நான் ஒருவன் மட்டுமே 50 பட்டதாரிகளுக்கு சமமானவன், இல்லையா?’
அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
‘அதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டேன்.
‘எங்களுக்குத் தெரியவில்லை’ என்றார்.
‘நான் அதிகம் படித்திருக்கேன். நான் நினைத்தால் இந்த அரசின் மணிமுடி தரித்து, ராஜ சிம்மாசனத்தில்கூட அமர முடியும்’ என்றேன்.
இத்தகையவர்கள்தான் எனக்கு வேண்டும். அங்கிருந்து ஒட்டுமொத்தமாக நாம் கண்காணிக்க முடியும். நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இத்தகு கூரிய நோக்கு கொண்ட மனிதர்கள் நமக்கு வேண்டும். ஒரு சாதாரண எழுத்தரால் என்ன செய்ய முடியும்? நான் இதைக் கேட்ட மறுகணமே 16 மாணவர்களை உயர் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அந்த 16 பேரில் சிலர் அரை வேக்காடாகவும், சிலர் முழுவேக்காடாகவும் இருந்தது என்னவோ ஒரு தனிப்பட்ட விஷயம்! ஆனால் பின்னர் வந்த ராஜகோபாலாச்சாரி, இந்த உயர்கல்வித் திட்டத்தையே முற்றிலுமாக ஒழித்துவிட்டார்.
இந்த நாட்டில் இன்னும் பாகுபாடு நிகழ்கிறது. அடுத்து வரும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நம் நிலை மாறாது. இந்த நிலை நீடித்தால், நாம் உத்வேகம் பெற உற்சாகம் கிட்டாது. இந்த மதத்திலேயே இருந்து வந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. மனு ஸ்மிருதியில் இருக்கும் சதுர்வர்ண முறை, நம் மனிதக் குலத்திற்கே தீங்கானது என பலமுறை சொல்லியிருக்கிறேன். பிற வர்ணத்தார் ஏவும் வேலை மட்டுமே சூத்திரர்கள் செய்ய வேண்டுமென மனுஸ்மிருதி சொல்கிறது.
பிராமணர்கள் மட்டும் கல்வி கற்பார்களாம்; சத்திரியர்கள் போர் புரிவார்களாம்; வைசியர்கள் வியாபாரம் செய்வார்களாம்; சூத்திரர் மட்டும் இவர்கள் எல்லோருக்கும் தொண்டு செய்ய வேண்டுமாம்! இந்த முறையால் யாருக்கு என்ன லாபம்? பிராமண, சத்திரிய, வைசியர்களாவது ஓரளவு பயன் பெறுகிறார்கள். சூத்திரர்களின் நிலை என்ன? மூன்று வர்ணத்தாரைத் தவிர யாராவது இங்கு உற்சாகம் பெற முடியுமா? இந்தச் சதுர்வர்ண முறை தற்செயலானது அல்ல; சொருகப்பட்ட சரக்கும் அல்ல; இந்து மதத்தின் மூல வேறே இதுதான். இந்துமதத்தில் சமத்துவம் இல்லை!
ஒருமுறை நான் காந்தியைச் சந்தித்தபோது, தனக்குச் சதுர்வர்ண முறையில் நம்பிக்கை இருக்கிறது என்றார். ‘உங்களைப் போன்ற மகாத்மாக்கள் சதுர்வர்ணத்தை நம்புகிறீர்களா? சரி சதுர்வர்ணம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நெட்டையாக இருக்குமா இல்லை தட்டையாக இருக்குமா? அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?’ என்றேன்.
காந்தி பதில் பேசவில்லை. அவரால் என்ன சொல்ல முடிந்திருக்கும்? காரணமின்றி இந்து மதத்தை நான் குற்றம் சாட்டவில்லை. இந்து மதத்தால் யாரும் வாழ முடியாது. அது ஒரு சீரழிந்த மதம்.
நமது நாடு ஏன் அந்நியரின் ஆட்சிக்குச் சென்றது தெரியுமா? 1945 வரை ஐரோப்பாவில் போர் நிகழ்ந்தது. எத்தனை வீரர்கள் இறந்து போனார்களோ, அத்தனை வீரர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது அந்நாட்டு ராணுவம். நாம் போரில் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்று யாராலும் சொல்ல முடியாத சூழல். நமது நாட்டில் எல்லாமே வேறுபட்டதாக இருந்தது. சத்திரியர்கள் தோற்கடிக்கப்பட்டால் நாடு வீழ்ந்துவிடும். இதுதான் நம் நாட்டின் நியதி. நமக்கு மட்டும் ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டிருந்தால், இந்த நாடு அடிமைப்பட்டிருக்காது, தெரியுமா? இந்தியாவை ஆளும் தகுதி இந்த உலகில் யாருக்கும் இல்லை.
இந்து மதத்தில் இருப்பதால் யாராலும் வளர்ச்சி அடைய முடியாது. வர்ணாசிரமப் படிக்கட்டில் மேல்சாதி மக்களுக்கே எல்லா உரிமையும், எல்லா வளப்பமும் வந்து சேர்கிறது. ஆனால் மற்றவரின் கதி என்ன?
ஓர் குழந்தையைப் பெற்றெடுக்கும் பிராமணத் தாயின் கண்கள், காலியாக இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் நாற்காலியைத் தேடுகிறது. அதற்கு முற்றிலும் மாறாக, துப்புரவுப் பணிசெய்யும் தாயின் கண்கள் காலியாக இருக்கும் மற்றொரு துப்புரவுப் பணியை நாடுகிறது. இந்த விசித்திரமான சமூகப் பழக்கத்திற்கு இந்து மதத்தின் வர்ணாசிரம முறையே அடிப்படைக் காரணம். இதிலிருந்து கொண்டு நாம் என்ன மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்? பெளத்தத்திற்கு மாறினால் ஒழிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
பெளத்த மதத்தில் 75% பிக்குகள் பிராமணக் குலத்தைச் சார்ந்தவர்கள். 25% பிக்குகளே சூத்திரரும் மற்ற சிலரும். ஆனால் பகவான் புத்தர் அவர்களிடம் சொன்னார், ‘ஓ பிக்குகளே! நீங்கள் வெவ்வேறு தேசத்திலிருந்து வெவ்வேறு சாதி அடையாளங்களோடு வந்திருக்கிறீர்கள். மாகாணங்களில் ஓடும் நதியானது வெவ்வேறு பெயர்களால், வெவ்வேறு வழிகளில் செல்கிறது. ஆனால் கடலை அடையும்போது தன் அடையாளங்களைத் துறந்து ஒற்றை ஆளாக தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கிறது. பெளத்த சங்கம் ஒரு பெருங்கடல். இங்கு எல்லோரும் சமம்.’
கடல் நீரில் கங்கை நதி எது, மகாநதி எது என்று அலசி ஆராய யாரால் முடியும்? அதேபோல பெளத்த சங்கத்தில் இணையும் ஒருவர் தன் சாதி அடையாளங்களைத் துறந்து, அனைவரும் சமம் என்பதை ஏற்க வேண்டும். இந்தப் பூமியல் இத்தகைய சமதர்மத்தைப் போதித்த மகான் ஒருவர்தான். மகான் கெளதம புத்தர்.
‘நீங்கள் ஏன் பெளத்தத்துக்கு மாற இத்தனைக் காலம் எடுத்துக்கொண்டீர்கள்? இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள்?’ எனச் சிலர் கேட்கிறார்கள். இது முக்கியமான கேள்வி. ஒரு மதத்தின் மீது பற்றுக் கொள்வது அத்தனைச் சுலபமான காரியம் அல்ல. இது ஒற்றை ஆள் செய்யும் வேலை அல்ல. மதத்தைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் இதை அறிவர். என்னைப் போன்று இவ்வளவு பொறுப்பேற்றிருக்கும் நபர் இந்த உலகில் வேறு எவரும் இல்லை. என் ஆயுட்காலம் சம்மதித்தால், திட்டமிட்ட எல்லாப் பணிகளையும் முடிந்தவரை செயல்படுத்திவிடுவேன்.
ஒரு மகர் – பெளத்தன் ஆவதால் என்ன மாறிவிடப் போகிறது எனச் சிலர் கேட்கிறார்கள். அது தவறு. செல்வந்தருக்கும் மேட்டுக்குடிக்கும் மதத்தின் தேவை புரியாது. பகட்டான பங்களாக்கள், அவற்றில் வேலை செய்ய பணியாட்கள், சொத்து, செல்வம், மரியாதை, லொட்டு, லொசுக்கு.. இவர்களுக்கு மதத்தைப் பற்றி என்ன கவலை?
ஆனால் ஏழைகளுக்கு மதம் அவசியமானது; தாழ்த்தப்பட்டோருக்கு மதம் இன்றியமையாதது. வாழ்க்கையின் சாரம்சமே நம்பிக்கையில் வேர் பிடித்திருக்கும் போது, அந்த நம்பிக்கைமேல் இடி விழுந்தால் என்ன செய்வது? தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு மதம் நம்பிக்கை அளிக்கிறது. ‘பயப்படாதே! உன் வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் மேம்படும் என்று தெம்பூட்டுகிறது.’ அதனால்தான் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் மதத்தைப் பிடித்துத் தொங்குகிறார்கள்.
கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்தபோது, ரோம சாம்ராஜ்ஜியமும் அதன் அண்டைய பிரதேசங்களும் பஞ்சத்தில் தத்தளித்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அச்சமயம் ஏழை எளிய மக்களுக்குக் கிச்சடி வழங்கப்பட்டது. பின் யார் கிறிஸ்தவர் ஆனார்கள்? ஐரோப்பாவின் ஏழை எளிய மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும்தான். கிறிஸ்தவ மதமே பிச்சைக்காரர்களின் மதம் என்று கிப்பன் கூறினார். ஆனால் அந்தக் கிறிஸ்தவ மதம் எப்படி ஐரோப்பா முழுமைக்கும் பரவியது என்று சொல்ல அவர் உயிரோடு இல்லை.
பெளத்த மதம் என்பது மகர்கள் மற்றும் மங்கர்களின் மதம் என்று சிலர் சொல்லுவார்கள். மகான் கெளதமரை ‘அரே கெளதம்.. அரே கெளதம்” என்று பழிக்கும் இந்தப் பிராமணர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘ராமர், கிருஷ்ணர், சங்கரர் எல்லோர் சிலைகளையும் வெளிநாட்டில் விற்பனைக்கு வைத்தால் ஒன்றாவது விற்றுத் தீருமா? மாறாக, மகான் புத்தரின் சிலையை விற்பனைக்கு வையுங்கள். ஒன்றுகூட எஞ்சி இராது! இந்தியா இருக்கட்டும். அயல்நாடு சென்று பாருங்கள். இந்தியா பற்றி அவர்களுக்குத் தெரிந்த ஒரே பெயர், பகவான் புத்தர் மட்டும்தான். இத்தனைச் சிறப்பையும் தாண்டி இந்த மதத்தின் பெருமையை இனி யாரால் தடுக்க முடியும்?
நாங்கள் எங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். நீங்கள் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். எங்களுக்குப் புத்தொளி கிடைத்துவிட்டது. ஏற்றம் தரும் ஒரு பாதையை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். இந்தப் பாதை புதிதல்ல; கடன் வாங்கப்பட்ட மார்க்கம் அல்ல இது; இந்தியாவுக்கு முற்றிலும் பழகிப் போன பாதை.
பெளத்த மதம் இங்கு 2000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறது. உண்மையில் நாம் ஏன் முன்னரே பெளத்த மார்க்கத்தை தழுவவில்லை என வருத்தப்படுகிறேன். புத்தரின் தம்மம் என்றென்றைக்கும் உயிர்வாழக் கூடியது. ஆனால் அவர் உரிமைக் கொண்டாடவில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வசதியைப் பெளத்தத்திற்கு வழங்கியிருந்தார். இது வேறெந்த மதத்திலும் கிடையாது.
முஸ்லிம்களின் படையெடுப்புதான் பெளத்த மதம் அழிவதற்குப் பிரதான காரணம். புத்தப் பெருமான் சிலைகள் சிதைக்கப்பட்டன. பெளத்தத்தின் மேல் விழுந்த முதல் இடி இது. இந்தப் படையெடுப்பால் பயந்த புத்த பிக்குகள் ஓடி ஒளிந்தார்கள். சிலர் திபெத்திலும், சிலர் சீனாவிலும் இன்னும் சிலர் முன்பின் தெரியாத அந்நியத் தேசத்திலும் சரண் புகுந்தார்கள். ஒரு மதத்தின் வாழ்நாள் அதன் மக்களைப் பொறுத்தே அமைகிறது.
வட மேற்கு எல்லையில் ஒரு கிரேக்க மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மிலிண்டா. அவனுக்கு விவாதம் செய்வதில் கொள்ளைப் பிரியம். விவாதம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், என்னிடம் வந்து கேள்வி கேட்கலாம் என்று வெகுநாட்களாக இந்துக்களிடம் கூறி வந்தான் . பல பேச்சாளர்களை வாயடைக்கச் செய்தான்.
ஒருமுறை புத்த பிக்குவிடம் விவாதம் செய்ய ஆசைப்பட்டு, பணியாள் ஏவி அழைத்து வரச் சொன்னான். பெளத்த மக்கள் ஒன்றிணைந்து நாகசேனரை அனுப்பி வைத்தனர். நாகசேனர் நன்கு படித்தவர். பிறப்பால் ஒரு பிராமணர். நாகசேனருக்கும் மிலிண்டாவிற்கும் நடந்த இந்த விவாதம் பிற்காலத்தில் உலகமறியும் ஒரு புத்தகமாக வெளிவந்தது. ‘மிலிண்டா பன்ஹா’ என்பது அந்நூலின் பெயர். ‘ஒரு மதம் ஏன் சிதைகிறது?’ என்ற கேள்விக்கு நாகசேனர் மூன்று காரணங்களை அடுக்குகிறார்.
முதல் காரணம். ஒரு குறிப்பிட்ட மதம் போதிய பக்குவம் அடையாமல் இருப்பது, அதன் அடிப்படை சித்தாந்தங்களை ஆழமற்றதாக ஆக்கிவிடுகிறது. அதன் கொள்கைகளை மீறி லெளகீக மதமாக உருவெடுக்கிறது. இத்தகைய சூழலில் அதனால் நெடுங்காலம் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.
இரண்டாவது காரணம். நன்கு படித்துத் தேர்ந்த மதப் போதகர்களே, ஒரு மதத்தை தூக்கிப் பிடிக்கும் முக்கியத் தூண்கள். நன்கு படித்தவருக்கே அம்மதத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களை, மேம்பட்ட கொள்கைகளை பயிற்றுவிக்கும் ஆற்றல் இருக்கும். வாதம் செய்யத் தயங்கி தோல்வியுற்றார் எனில், அந்த மதம் அப்படியே ஒடுங்கிவிடும்.
மூன்றாவது காரணம். மதமும் மதக் கோட்பாடுகளும் படித்தவர்களுக்கு மட்டுந்தான் என்றும், சராசரி மக்களுக்கு கோவிலும் சிலையுமே போதுமென்றும் இருந்துவந்தால் மதத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும்.
பெளத்தத்தைத் தழுவும்போது அதன் கொள்கைகள் லெளகீகமானது அல்ல என்று உணர வேண்டும். 2500 ஆண்டுகள் கழிந்தாலும், ஒட்டுமொத்த உலகும் ஏற்கும்படி அதன் கொள்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 2000 பெளத்த நிறுவனங்கள் உள்ளன. 3 லட்ச ரூபாய் செலவில், பெளத்தக் கோவில் ஒன்று இங்கிலாந்தில் கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுங்கூட 3000 முதல் இருந்து 4000 வரை பெளத்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
புத்தரின் தம்மம் என்றென்றைக்குமானது. அப்படியிருந்தும் அவர் இது கடவுளின் மதம் என்று ஒருபோதும் சொன்னதில்லை. ‘என் தந்தை ஒரு சாதாரண மனிதர், என் தாய் ஒரு சாதாரணப் பெண். உங்களுக்கு சரியெனப்பட்டால் இந்த மதத்தைப் பின்பற்றுங்கள். இந்த மதம் உங்கள் பகுத்தறிவுக்கு ஒத்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். இந்தப் பெருந்தன்மையை நாம் வேறெந்த மதத்ததில் காணமுடியும்!
பெளத்த மதத்திற்கும் ஏனைய மதத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மற்ற மதங்கள் மனிதனைக் கடவுளோடு சம்பந்தப்படுத்துவதால் அதில் மாற்றம் செய்வது அத்தனைச் சுலபமல்ல. கடவுளே இயற்கையைப் படைத்தார். வானம், பூமி, காற்று, சூரியன், சந்திரன் எல்லாம் அவரின் அருளாற்றல். நமக்காக அவர் எதையும் மிச்சம் வைக்கவில்லை. அதனால் அந்தப் புண்ணியவானை வணங்குங்கள் என்கின்றன ஏனைய மதங்கள்.
கிறிஸ்தவ மதத்தின்படி, நாம் இறந்ததற்குப் பின் தீர்ப்பு நாள் என்றொரு தினம் உண்டு. அனைத்தும் அந்தத் தீர்ப்பை பொறுத்தே அமைகிறது. ஆனால் பெளத்த மதத்தில் கடவுளுக்கோ ஆன்மாவுக்கோ வேலை இல்லை. ‘எங்கும் துக்கம் நிறைந்திருக்கிறது. 90 சதவிகித மக்கள் துக்கத்தால் துவண்டு போயுள்ளனர்’ என பகவான் புத்தர் சொன்னார். அந்த மக்களின் துக்கக் கண்ணீரை துடைத்து எறிவதே அவரின் பெளத்த மதக் கொள்கையானது. புத்தர் சொன்னதைவிட கார்ல் மார்க்ஸ் எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை.
சகோதரர்களே, நான் சொல்ல வேண்டிய மட்டும் சொல்லிவிட்டேன். எல்லா விதத்திலும் இந்த மதம் மகத்தானது. துளி களங்கமில்லை. இத்தனை நாட்களாக இந்து மதத்தின் கொள்கை நம் உற்சாகத்தைக் காவு வாங்கி வந்தது. ஆயிரமாண்டுகள் ஆகியும் நம்மில் ஒரு பட்டதாரியைக் கூட இந்தச் சமூகத்தால் உருவாக்க முடியவில்லை.
ஒரு தனிமனிதனாக, இந்த நாட்டில் என்னால் சாதிக்க முடியாதது எதுவுமல்ல. பிராமணர், சத்திரியர், வைசியர் என்று உங்களுக்குள் இருக்கும் இந்த அபிப்பிராயத்தை எப்படி உடைப்பது என்பதே என் அடுத்த சவால். இந்த மதம் பற்றிய அத்தனைப் புரிதல்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். உங்களின் எல்லாச் சந்தேகங்களையும், எல்லாக் குழப்பங்களையும் புத்தகம் எழுதித் தீர்த்து விடுகிறேன். தயவு செய்து இனியாவது என்னை முற்றிலும் நம்புங்கள்.
இந்தப் புதிய பாதை மகத்தான பொறுப்புகள் நிறைந்தது. செய்துக் கொடுத்த சத்தியத்தையும்; நம் இயக்கத்தின் லட்சியத்தையும் இளைஞர்கள் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும். சுயநலக்காரர் ஆகிவிடக்கூடாது. நம் சம்பாத்தியத்தின் இருபதில் ஒரு பங்கையாவது இதற்கு ஒதுக்குவோம். என்னுடன் உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
ஆரம்பத்தில் ததாகதர் ஒருசிலருக்கு தீட்சை வழங்கி, ‘இந்த மதத்தைப் பரப்பிச் செல்லுங்கள்’ என்று வழிகாட்டினார். அதற்குப் பின் யாஷாவும் அவளது நாற்பது நண்பர்களும் பெளத்தத்தைத் தழுவினார்கள். யாஷா பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர்களிடம் இந்த மதம் எப்படிப்பட்டது என்பதை புத்தர் சொல்கிறார், ‘பகுஜன் ஹிதே பகுஜன் சுகே, லோகனுகம்பே, தம்மா அதி கல்யாணம், மத்ய கல்யாணமா, பர்யவாஸன் கல்யாணம்!’
ததாகதர் அந்தக் காலத்திற்கு ஏற்ப பெளத்தத்தை பரப்பும் நெறிமுறையை வடிவமைத்தார். இப்போது நாம் அந்த நெறிமுறையை மாற்றி அமைக்கும் காலம் வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் மற்றவருக்கு தீட்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு பெளத்தருக்கும் தீட்சை அளிக்கும் அதிகாரம் உண்டு என நான் பிரகடனப்படுத்துகிறேன்.
0