Skip to content
Home » காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

சுபாஷ் சந்திர போஸ்

கல்கத்தா வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து 1941இல் ஜெர்மனிக்குச் சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அங்கு இந்தியப் பெருந்திரள் ஒன்றைக் கட்டியெழுப்பினார். ஆனால் ஜெர்மனியிலும் நெருக்கடிகள் அதிகரிக்க, நீர்மூழ்கிக் கப்பல்மூலம் ஜப்பான் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூர் சென்றார்.

அங்கு நாடு கடந்த இந்திய அரசையும் (ஆஸாத் இந்த்) இந்திய தேசிய ராணுவத்தையும் ஒருங்கிணைத்து கட்டியமைத்தார். அந்த ராணுவம் 1944ஆம் ஆண்டு மார்ச், ஜூன் மாதங்களில் ஜப்பான் ராணுவத்தோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்து இந்திய மண்ணில் போர் புரிந்தது.

இந்தப் படையெடுப்பு பெருமளவில் தோல்வியுற்றாலும், போஸ் விட்டுக்கொடுப்பதாக இல்லை. பிரித்தானியர்கள் உலகப் போர் முனையில் தோல்வியுறுவதாகவும், அது விடுதலைக்குப் போராடும் இந்தியர்களுக்குப் பொன்னான வாய்ப்பு என்றும் உரையாற்றினார். இப்போது வாசித்தாலும் உத்வேகம் கொள்ளச் செய்கின்றன அவர் சொற்கள். குறிப்பாக, கடைசி பத்தியைப் படிக்கும்போது உடல் முழுக்க ஒருவித வெப்பத்தை உணரமுடிகிறது.

1944ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் போஸ் ஆற்றிய பிரபலமான உரை இதோ.

0

நண்பர்களே! கிழக்காசிய இந்தியர்கள் அனைவரும் மொத்தமாக அணிதிரண்டு பெரும் தியாகம் செய்யும்படியான திட்டம் ஒன்றை ஓராண்டுக்குமுன் அவர்களிடம் ஒப்படைத்திருந்தோம். அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கடந்த 12 மாதங்களில் என்னவெல்லாம் சாதித்தார்கள் என உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

இனி வரும் ஆண்டுகளில் நம்முடைய தேவை என்ன, அதற்கு நாம் எப்படியெல்லாம் ஆயத்தமாக வேண்டுமென அதன்பின் சிந்திப்போம்.

ஆனால் இவையெல்லாம் பேசுவதற்கு முன், நாம் சுதந்திரம் பெற கிட்டியிருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நீங்கள் உணரவேண்டும். உலகப்போரின் கோரப்பிடியில் பிரிட்டன் சிக்கியுள்ளது. தான் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தேசத்திலும் அடிமேல் அடிவாங்கி பலகீனப்பட்டுக் கிடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதபடி எதிரியின் பலம் உருக்குலைந்து போயிருப்பது நம் விடுதலைப் போராட்டத்தை மேலும் எளிமையாக்கியுள்ளது. நூற்றாண்டிற்கு ஒருமுறை மட்டுமே வாய்க்கும் இந்த அரிய வாய்ப்பு கடவுளால் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பிரிட்டன் கடிவாளத்திலிருந்து தாய்நாட்டை விடுதலை செய்ய இந்த வாய்ப்பை நாம் முழுமூச்சுடன் பயன்படுத்த வேண்டுமென நிர்பந்திக்கிறேன்.

எனக்கு இந்தப் போராட்டத்தின் தாக்கம் குறித்து திடமான நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் இருக்கிறது. வெறுமனே 30 லட்சம் கிழக்காசிய இந்தியர்களை நம்பி இந்தக் களத்தில் நான் குதிக்கவில்லை. அதற்கப்பாலுள்ள இந்தியாவில் பூதாகரமான இயக்கம் ஒன்று பல லட்ச இந்தியர்களின் சகிப்பையும் தியாகத்தையும் தாங்கிக் கொண்டு விடுதலைக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறது. அதை நான் நம்புகிறேன்.

1857ஆம் ஆண்டில் நடந்த பெரும் போருக்குப் பின்னர் இந்தியர்கள் நிராயுதபாணியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதற்குப்பின் நம் எதிரிகள் பலம் பொருந்திய ஆயுதங்களை ஏந்தினார்கள். இந்த நவீன காலத்தில் ஆயதங்களும் போர் வீரர்களும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்று ஒரு தேசத்திற்கு விடுதலை பெற போராடுவது என்பது நடக்கவே இயலாத காரியம்.

பெருந்தன்மை வாய்ந்த ஜப்பானும் கடவுளின் கருணையும் ஒன்றுகூடி வந்து நம் மேல் பரிவு காட்டியுள்ளன. கிழக்காசிய இந்தியர்களை ஒன்றிணைத்து ஆயுதம் பொருந்திய நவீன மக்கள் ராணுவமாக கட்டியெழுப்ப இவர்கள் செய்த உதவியை நம்மால் என்றும் மறக்க முடியாது.

சுதந்திரம் பெறும் மகோன்னத காரணத்தை முன்னிறுத்தி ஒற்றை ஆளின் பின்னால் கிழக்காசிய இந்தியர்கள் அணிதிரண்டார்கள். இந்தியாவிற்குள் பிரிட்டன் ஏற்படுத்திய எந்தவொரு மதவாதப் பிரிவினை தகிடுதத்தமும் கிழக்கில் இல்லை. நம் வெற்றிக்கு ஏதுவான களமும் காலமும் வாய்த்திருக்கின்றன. இந்தியர்கள் மனமுவந்து முன்வந்து சுதந்திரத்திற்கான விலையைச் செலுத்தி, தங்கள் விடுதலையை வாங்கிச் செல்வதே இப்போதைய தேவை.

‘ஒருங்கிணைந்த அணிதிரட்டல்’ திட்டத்தின்படி நமக்கு மனிதபலமும் பணபலமும் ஆயுதமும் வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அதில் போதுமான ஆட்களை நாம் ஏற்கெனவே பணியமர்த்திவிட்டோம். சீனா, ஜப்பான், இந்தோ-சீனா, பிலிப்பைன்ஸ், ஜாவா, போர்னியோ, செலிபீஸ், சுமத்ரா, மலாய், தாய்லாந்து, பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளின் மூலை முடுக்கிலிருந்து பலர் பணியில் சேர்ந்துள்ளார்கள்.

மனிதர்கள், பணம், பொருள் என எல்லாவற்றையும் முன்னைவிட அதிதீவிரமாக சேகரம் செய்யுங்கள். குறிப்பாகப் பண்டமாற்றத்தையும் போக்குவரத்தையும் நுணுகி ஆராய்ந்து அதிலுள்ள சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

சுதந்திரம் பெற்ற பகுதிகளை நிர்வாகம் செய்யவும் புனரமைக்கவும் அனைத்து வகைப்பட்ட ஆண்களும் பெண்களும் பெருமளவில் தேவை. எதிரிகள் பர்மாவில் குடியானவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்குப் பலனிக்கும் அனைத்தையும் அழித்துப் பின்வாங்கும் திட்டத்தை (Scorched Earth Policy) செயல்படுத்தியதுபோல், இரக்கமின்றி எந்நேரத்திலும் எந்த இடத்திலும் அத்திட்டத்தை கையாளுவார்கள். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

போர் நடக்கும் இடத்திற்கு அவ்வப்போது ஆட்களையும் ஆயுதங்களையும் அனுப்பி வலுசேர்க்கும் பிரச்னை தலையானது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், வெற்றி நம்மை விட்டு நழுவிவிடும். இந்தியாவிற்குள் ஆழ ஊடுருவ முயற்சி செய்யும் நம் கனவு மொத்தமாய் கலைந்துவிடும்.

நம் குடியானவர் பகுதியை பாதுகாத்து பணிசெய்யும் வீரர்கள், கிழக்கு ஆசியாவும் பர்மாவும் நம் விடுதலைப் போருக்கான தங்கு தளமென்று எப்போதும் மறக்கக் கூடாது. இந்தத் தளங்கள் ஆட்டம் கண்டால், சமர் செய்யும் இந்தப் போர் வெகு சிக்கலாகிவிடும்.‌ தயவு கூர்ந்து ‘ஒருங்கிணைந்த அணிதிரட்டல்’ என்பதன் வீரியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு ராணுவப் படைக்கு இடையே எப்போதும் நடக்கும் காரசாரமற்ற போர் அல்ல இது. கடந்த ஒருவருட காலமாகப் பட்டைத் தீட்டி, மெருகேற்றி, மிகுந்த அழுத்தம் கொடுத்து, இந்தக் ‘கட்டுக்கடங்காத போரை’ நான் வலியுறுத்தி வருகிறேன்.

நம் கட்டுப்பாட்டில் உள்ள சொந்த ராணுவத் தளத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. போர்க்குழு நண்பர்கள் சிலரோடு சேர்ந்து இன்னும் சில மாதங்களில் போர் நடைபெறும் தளங்களுக்கு நேரடியாகச் செல்ல இருக்கிறேன். புரட்சியை வலுப்படுத்தும் காரணமாக இந்தியாவிற்கும் பயணப்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அந்தச் சமயத்தில் எங்கள் இல்லாமையிலும் கூட, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் போர் காரியங்கள் சுமூகமாய் நடைபெற விரும்புகிறோம்.

நண்பர்களே, ஓராண்டுக்கு முன் சொல்லும்போது ‘ஒன்றிணைந்த அணிதிரட்டலை’ எனக்குச் சாத்தியப்படுத்தினால், மற்றொரு போர் முனையை உங்களுக்குப் பரிசளிப்பதாய் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்தச் சத்தியத்தை நான் காப்பாற்றிவிட்டேன். நம் இயக்கத்தின் முதற்கட்ட வேலைகள் முடிந்துவிட்டன. ஜப்பான் ராணுவத்தோடு ஒன்றிணைந்து சமர் செய்துகொண்டிருக்கும் நம் வெற்றி வீரர்கள், திரும்பி ஓடும்படி எதிரிகளைத் துரத்திவிட்டார்கள். இப்போது நம் தாய்நாட்டை மீட்பதற்காக, அந்தப் புண்ணிய பூமியில் போர் செய்து வருகிறார்கள்.

நம் முன் இருக்கும் இந்த அசாத்திய பணியை மேற்கொள்ள முழுமூச்சுடன் தயாராகுங்கள்.‌ உங்களிடம் மனிதபலம், பணபலம், பொருட்பலம் வேண்டும் என கேட்டிருந்தேன். அவையெல்லாம் அளவுக்கு மீறி சேர்ந்து விட்டன. இப்போது வேறொன்றைக் கேட்கிறேன். மனிதபலமோ பணமோ ஆயுதமோ மட்டும் விடுதலையும் வெற்றியும் தந்துவிடாது. துணிச்சலோடு போராட நெஞ்சுரம் பொருந்திய பலமான இதயம் வேண்டும்.

வெற்றி இப்போது கைக்கு எட்டும் தருவாயில் இருப்பதால், இந்தியாவை நீங்கள் சுதந்திர பூமியாகக் காண்பதும்; அங்கு சுதந்திரமாய் வாழ நினைப்பதும் கொடும் தவறு.‌ சுதந்திரத்தை அனுபவிக்க இங்கு யாருக்கும் ஆசை இருக்கக்கூடாது. ஒரு பெரும் போரை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வேண்டுமானால் இந்தியா வாழ்வதன் பொருட்டு சாக வேண்டும் என்று ஆசைப்படுங்கள். ஒரு வீரத் தியாகியின் உதிரத்தால், இந்தத் தேசத்தின் விடுதலைக்கான வழி அலங்கரிக்கப்பட வேண்டுமென்று, ஒரு தியாகியாக மடிந்துபோக ஆசைப்படுங்கள்!

நண்பர்களே! இந்த விடுதலைப் போரில் உற்ற துணையாய் நிற்கும் என் தோழர்களே! எல்லாவற்றையும்விட இன்றைக்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றைத்தான். எனக்கு உங்கள் உதிரம் வேண்டும். பகைவன் சிந்திய ரத்தத்தை ஈடு செய்ய, ரத்தம் ஒன்றையே நாம் பதிலீடு செய்ய வேண்டும். விடுதலையின் விலைக்கு ஒப்ப நம்மிடம் இருப்பது உதிரம் மட்டும்தான். என்னிடம் உதிரம் கொடுங்கள், நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்.

0

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *