Skip to content
Home » காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

சரோஜினி நாயுடு

காந்தியின் படுகொலையால் மனமுடைந்து போன தேசாபிமானிகள், தங்களின் ஆற்றாமையை இரங்கல் உரையின் மூலம் இறக்கிவைத்தனர். கவிஞராகவும் விடுதலைப் போராளியாகவும் நன்கு அறியப்பட்ட காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு, அப்போது உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.

காந்தியை ஏசுவோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட பல கட்டுரைகள் மேற்குலகில் மலைபோல குவிந்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் உதித்த முதல் ஒப்பீடு சரோஜினி பேசிய உரையில்தான் இருக்கிறது. நேருவின் உணர்ச்சிவயப்பட்ட உரைக்குச் சற்றும் சளைத்ததல்ல இது. காந்தியை எதிர்காலத்தின் கரங்களில் ஒப்படைப்பதில் நேருவுக்கு ஈடாக முனைப்போடு இருந்தார் சரோஜினி நாயுடு.

காந்தி இறந்து இரு நாட்களுக்குப் பிறகு, 1 பிப்ரவரி 1948 அன்று ஆல் இந்தியா ரேடியோவில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரை இதோ.

0

முன்பொரு காலத்தில் மக்களின் மரண ஓலங்களுக்குப் பதிலளிக்க; மீண்டும் இந்தப் பூமிக்கு வழிகாட்ட வரமாட்டாரா என்ற கேள்விக்கு விடையளிக்க; அன்பும் அக்கறையும் நிறைந்த இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மகாத்மா பிரிந்த மூன்றாவது நாள் இது. இவரை பெருமதிப்போடு நேசித்தவர்களும் தனிப்பட்ட முறையில் உறவாடியவர்களும் இன்று கண்ணீர் விட்டு கரைந்து கொண்டிருக்கிறோம். மகாத்மா என்ற பெயரின் மகோன்னதம் புரிந்த சிலரும், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவார் என்று அழுது வடிகிறோம். சோகத்திற்கு இடமில்லை. யாரும் வருத்தப்பட வேண்டாம்.

சதைப் பிண்டத்தைவிட, ஆன்ம சக்தியே பெரிது என்ற ஞானி அவர். அதையே வாழ்க்கையாகவும் வாழ்ந்து காட்டினார். உலகின் ஒட்டுமொத்த ராணுவப் படையும் ஒன்றிணைந்து, யுகாந்திரத் திரளின் அனைத்துமட்ட சக்தியும் அணிதிரண்டால்கூட அவருடைய ஆன்ம சக்தியைத் துளியாவது அழிக்க முடியுமா?

பலகீனமான, சிறிய மனிதர்தான். அவர் கையில் பணம் காசு இல்லை. உடுத்தும் துணியும் உடம்பு மறைக்கப் போதமானதாய் இருக்காது. தன் பெயரில் குந்துமணி இடம்கூட இல்லாத ஒருவரால், இத்தனை வலிமையான ஆயுதங்களை எப்படி எதிர்கொள்ள முடிந்தது? சிம்ம சொப்பனமாக உட்கார்ந்து கொண்டு, உலகப் பேரரசையே நடுநடுங்க வைக்க எப்படி முடிந்தது? கோடிக்கணக்கான ஏழைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள இந்தச் சிறிய மனிதரால், குழந்தை மேனி பொருந்திய இந்தக் குட்டி உருவத்தால், பட்டினியின் விளிம்பில் எப்படி இத்தனை விருப்பமாய் வாழமுடிகிறது? பேரரசர்களே பயன்படுத்த முடியாத விஷேச சக்தியை, தன்னைத் தூற்றுபவருக்கும் போற்றுபவருக்கும் ஒரே மேஜையில் வைத்து இவரால் எப்படிப் பரிமாற முடிகிறது?

ஏனென்றால் காந்தி கரகோஷத்தையும் கண்டனத்தையும் பொருட்படுத்தாத மனிதர். சத்தியத்தின் வழியே சரியான வழியென்று நம்பினார். வன்முறையும் இச்சையும் மிகக் கொடூரமாய் இவ்வுலகை தத்தளிக்கச் செய்யும் போதும், போர்க்களத்தில் வறண்டுபோன பூக்குவியலாய், காய்ந்துபோன சருகின் கூட்டமாய் இத்தேசத்தின் எதிர்காலம் துண்டாடப்படும்போதும் அகிம்சையின் லட்சியத்தில் அவர் அணுவளவும் மாறவில்லை.

உலகம் தன்னையே கொன்றுப் புதைத்து, தன்மீதே தன் ரத்தத்தை வாரிப் பூசிக் கொண்டாலும் உலகில் தோன்றவிருக்கும் புதிய நாகரிகத்திற்கு அகிம்சைதான் அடித்தளம் அமைக்கும் என போதித்தார். வாழ வேண்டும் என்பவன் அகிம்சையைத் தொலைக்கிறான். வாழ்க்கையை இழந்தவன் அகிம்சையைத் தேடுகிறான் என நம்பினார்.

1924இல் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தன் முதல் முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதில் நானும் பங்கெடுத்திருந்தேன். அவர் தியாகத்திற்குத் தலைவணங்கி, இந்தத் தேசம் முழுக்க அனுதாபப்பட்டது. அவரின் கடைசி விரதம்கூட இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகத்தான். ஆனால் ஒருவர்கூடப் பரிதாபம் கொள்ளவில்லை, ஒருவர்கூட உறுதுணையாய் நிற்கவில்லை. மகாத்மாவின் விரதம் கசந்து போனது.

சிலருக்கு இதில் வெறுப்பும் சந்தேகமும் வளர்ந்தது. மதங்களுக்கு இது மிகவும் பொய்த்துப்போன கொள்கை எனத் தோன்றியது. அவரைப் புரிந்து கொண்டவர்களில் ஒரு சிலருக்கே அதன் உண்மை ஆழம் புலப்பட்டது.

தன் சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, காந்தியின் உண்ணாவிரதத்தைத் தேசம் பந்தாடியது. வேறெந்த சமூகமும் அல்ல, காந்தியின் சொந்த இந்து மதமே அவரின் உண்ணாநோன்பைத் தகிக்க முடியாததாய் கோபத்தையும் வெறுப்பையும் மிகக் கொடூரமாய் உமிழ்ந்து தள்ளியது.

அய்யோ, என் இந்து சமூகமே! உங்களில் மிகச் சிறந்த இந்துவை, இந்து மதக் கொள்கையை அப்பழுக்கற்ற வகையில் பின்பற்றி வாழ்ந்த நமது காலத்தின் ஒரே ஒரு இந்துவை உங்கள் கரங்களே கொன்றுவிட்டதே, பார்த்தீர்களே! மத உரிமை என்ற போர்வையில் தங்களின் உன்னதமான மனிதரைக் கொன்று, புதைப்பதுதான் இந்துமதக் கொள்கை போலும்.

விடுங்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாய், அவருடன் நெருங்கிப் பழகியிருப்பதால் சிலருக்கு தினந்தினம் இழப்பு; வருடாவருடம் சோகம். இது அவர்களின் தனிப்பட்ட வருத்தம். நம் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒருவர் இனி இல்லை. சிலர் அவரின் விசுவாசத்தைப் பெறத் தவறிவிட்டோம். இழை, தசை, நரம்பு, இதயம், ரத்தமென அவர் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்ததால், சிலர் அவரின் மரணத்தின்மூலம் செயலிழந்து கிடக்கிறோம்.

சோகம் தாளாமல் விரக்திக்கு அடிபணியாதீர்கள், அது நம் மனதை நம்பிக்கையற்ற நாடோடியைப் போல் பலவீனப்படுத்தும். அவர் இறந்துவிட்டார்; இனி எல்லாம் முடிந்துவிட்டது; காலம் கைமீறிச் சென்றுவிட்டது என்று நாம் நம்பத் தொடங்கினால், அவர்மீது கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்ன அர்த்தம்? அவர் உயிர் நம் பெருந்திரளுக்கு மத்தியில் பிரிந்துவிட்டது என நம்பத் துணிந்தால், அவருக்கு நாம் விசுவாசமாக இருப்பதால் என்ன பலன்? நாம் அவரின் வாரிசுகள் இல்லையா? அவரது ஆன்மிக வழித்தோன்றல்கள் இல்லையா? அவர் விட்டுச் சென்ற மகத்தான பணிகளின் முழுமுதற் பொறுப்பு இல்லையா?

அதை மேம்படுத்தவும் அவர் விட்டுச்சென்ற தட்டையான பணிகளை பலப்படுத்தவும், அவரைவிட மேலான நம் கூட்டுமுயற்சியால் வென்றுகாட்டவும், உறுதி படைத்தவர்கள் அல்லவா நாமெல்லோரும்? அதனால்தான் சொல்கிறேன், நாம் தனிமையில் புழுங்கி வருவது போதும். மாரடித்து மன்றாடியது போதும். தலைவிரிக் கோலமாய் ஒப்பாரி பாடியது போதும்.

‘மகாத்மாவை எதிர்த்தவர்கள் நீங்கள்தானே? உங்கள் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்று நாம் எழுந்து நிற்கும் காலம் இதோ வந்துவிட்டது. நாம் அவரின் வீரர்கள். அகிம்சையின் சின்னத்தை ஏந்தி நிற்கிறோம். குழப்பமான உலகத்தின் முன் அவர் தத்துவங்களைத் தாங்கி நிற்கிறோம். கொல்லாமையே நமது கவசம். நமது போர்வாள் குருதி குடிக்காமல் படையெடுக்கும்.

இந்திய மக்களே, எழுச்சிப் பெறுங்கள்! உங்கள் கண்ணீரைத் துடைத்தெறிய எழுச்சிப் பெறுங்கள். ஏக்கங்கள் ஈடுபெற எழுச்சிப் பெறுங்கள்! நம்பிக்கையான மனதோடு மனமகிழ்ச்சியுடன் எழுந்து நில்லுங்கள். அவர் சொந்த ஆளுமையின் உள்ளொளியைக் கொஞ்சம் கடன்வாங்கிக் கொள்வோம். கடனென்ன கடன், அதை அவர் நம்மிடந்தான் ஒப்படைத்துள்ளார். வலிமை பொருந்திய அவர் தைரியம், காப்பியப் பண்புள்ள அவர் குணநலம், இவையெல்லாம் நமக்கே விட்டுச்சென்றுள்ளார்.

நம் ஆசானின் அடிச்சுவட்டில் பயணிக்க வேண்டாமா? நம் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டாமா? அவர் தொடங்கிய போரை, அவரது வீரர்கள் வெற்றிபெறச் செய்யாமல் ஒதுங்கிக்கொள்வது நியாயமாகுமா? மகாத்மா காந்தியின் முழுமையான செய்தியை இவ்வுலகிற்குக் கொண்டுசேர்க்க வேண்டாமா?

அவரது குரல் மீண்டும் ஒலிக்காது. அதனாலென்ன? அவரது செய்தியைக் சமகாலத்திற்கு எடுத்துச் சொல்ல, குறைந்தது ஒரு மில்லியன் குரல்கள் இல்லையா நம்மிடம்? அடுத்துவரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் காந்தியைக் கொண்டு சேர்க்க நம்மிடம் ஒரு மில்லியன் குரல்கள் இல்லாமல் போய்விடுமா? சொல்லுங்கள். அவர் செய்தத் தியாகங்கள் வீண்போக வேண்டுமா? சிந்திய புனித ரத்தம் வெறுமனே நம் அழுகைக்கு எரிபொருள் சேர்க்க வேண்டுமா? கூடாது.

அந்த ரத்தத்தை நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, உலக அமைதி பேணும் நம் படையின் துருப்புச் சின்னமாக வைக்கக் கடவது அல்லவா அது! என் நடுங்கும் குரலைக் கேட்கும் இந்த உலகத்திற்கு நான் உறுதியளிக்கிறேன். மகாத்மாவின் சேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன் என்னை எப்படி அர்ப்பணித்தேனோ, உங்களையும் அப்படி அர்ப்பணிக்கவேண்டி உறுதியளிக்கிறேன்.

மரணம் என்றால் என்ன? ‘உண்மையில் இறப்பும் இல்லை. பிறப்பும் இல்லை. உண்மையின் உயரிய நிலைகளை அடுத்தடுத்து அடையும் ஆன்மா மட்டுந்தான் உய்க்கிறது’ என்று மரணப் படுக்கையில் கிடந்த என் தந்தை சொன்னார்.

இந்த உலகில் உண்மைக்காக வாழ்ந்தவர் காந்தி. ஒரு கொலையாளியின் கையால், அவர் தேடிய உண்மையின் உயர்ந்த நிலை உலகம் அறிய வெளிப்பட்டிருக்கிறது. அவருடைய நிலைக்கு நாம் செல்ல வேண்டாமா? அவரின் உயரிய செய்திகளை உலகுக்குப் பிரச்சாரம் செய்ய, நமது ஒன்றுபட்ட படைபலம் வலுவாக இருக்க வேண்டாமா?

அவருடைய வலிமை தாங்கிய படையில் மிகவும் இளையவள் நான். ஆனால், ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற அவரின் அன்பிற்குரிய சீடர்கள் எனக்கு எப்போதும் பக்கபலமாய் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மார்பில் இருக்கும் புனித ஜான் போல, காந்தியின் நம்பிக்கைக்குரிய ராஜேந்திர பாபு இருக்கிறார். இன்னும் இவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியாவின் இடுக்குகளிலிருந்து பறந்து வந்த லட்சோபலட்ச சீடர்கள் இருக்கிறார்கள். அவரின் நிராசையை நாமெல்லோரும் சேர்ந்து நிறைவேற்ற முடியாதா?

அவரின் பல உண்ணாவிரதங்களைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டது உண்டு. அவருக்குச் சேவை செய்யவும் ஆறுதல்படுத்தவும் சிரிக்க வைக்கவும், எனக்கு பெரும் பாக்கியம் வாய்த்திருந்தது. கூட்டத்தார் சிரிப்பதை மனம் இசைந்து ரசிப்பார்.

ஒருமுறை திகைத்துப்போய் நான் ஒன்று யோசித்தேன். சேவாகிராமிலோ, நவகாளியிலோ, இல்லை ஏதோவொரு தொலைதூரப் பிரதேசத்திலோ காந்தி இறந்துபட்டால் நாம் அவரை எப்படிச் சந்திப்பது? நல்லவேளையாக அவர் தில்லியில் இறந்தார். கம்பீரம் வாய்ந்த மன்னர்களின் நகரத்தில், இந்துப் பேரரசுகளின் புராதன பூமியில், முகலாயர்களின் பெருமை பொங்கிய வீதியில் அவர் இறந்துபோனார். இங்கு இறந்தது ஒருவகையில் சரிதான்.

மன்னர்களின் நடுவில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டதும் சரிதான். ஏனென்றால் அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக வாழ்ந்தவர்.

சமாதானத் தூதுவராக இருந்தவரை, ஒரு சிறந்த போர்வீரனின் அனைத்துவித மரியாதைகளுடனும் தகன மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டது சரிதான்; படைகளைப் போர்க்களத்திற்கு வழிநடத்திய மாவீரர்களைவிட, இந்தச் சிறிய மனிதர் துணிச்சல்காரர்தான். அவர்கள் அனைவரையும்விட வெற்றிகரமானவரும் கூட.

இதுநாள்வரை சொல்லப்பட்ட ஏழு ராஜ்ஜியங்களின் வரலாற்று நகரமாக மட்டும் இனி தில்லி இருக்கப்போவதில்லை. அந்நியரிடம் அடிமைப்பட்ட இந்நாட்டின் சுதந்திர விலங்கை, சுதந்திரக் கொடி கொண்டு மீட்ட மாபெரும் புரட்சியாளரின் நினைவு மையமாகவும் சரணாலயமாகவும் அது விளங்கும்.

என் தலைவர். என் ஆசான். என் பேரன்பிற்குரிய தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டாம்! தயவு செய்து சாந்தி அடைய வேண்டாம். சந்தனமேனியாய் எரிந்து போன அவரின் சாம்பல், சாந்தி அடைய வேண்டாம். அவர் எலும்பு மஜ்ஜையிலிருந்து உதிர்ந்து கொட்டும் தூள், இந்தத் தேச மக்கள் சுதந்திரப் போதையில் மிக யதார்த்தமாய் வாழும்வரை உத்வேகம் அளிக்கட்டும்.

எங்கள் தந்தையே, சாந்தி அடையாதீர்கள். எங்களையும் சாந்திபெற அனுமதிக்காதீர்கள். எங்கள் சத்தியத்தை நிறைவேற்ற வலிமை கொடுங்கள். உங்கள் வாரிசுகள், உங்கள் சந்ததிகள், உங்கள் காரியதரிசிகள், உங்கள் கனவுகளின் காவலர்கள் எங்கள் எல்லோருக்கும் வலிமை கொடுங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்ததோ, அதைவிட உங்கள் மரணத்தை வலிமைப் பொருந்தியதாய் மாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பிய ஒன்றுக்காக, நீங்கள் ஈந்தத் தியாகம் மரணத்தைத் தாண்டியும் உங்களைக் கிடத்திவிட்டது.

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *