முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில் அடைக்கப்பட்டு, போராடி அரசுரிமைப் பெற்றவர்.
திருமணம் செய்துகொள்ளாமல் 45 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தையும் அதன் அண்டைய ராஜ்ஜியமான அயர்லாந்தையும் அரசியாக இருந்து ஆட்சி செய்தவர்.
இவரது ஆட்சி காலத்தில் ஸ்பானிய கப்பற்படைக்கு எதிராக டில்பரியில் நிகழ்ந்த போர் மிக முக்கியமானது. 130 கப்பல்களில் 17,000 வீரர்கள் அதிபயங்கர ஆயுதங்களோடு இங்கிலாந்தில் கரை இறங்கினர்.
ஒரு பெண், போர்முனையிலிருந்து எழுச்சிப் பொங்கும் உரையாற்றியதாய் அதுவரை வரலாற்றில் பதிவுகள் இல்லை. தீர்மானங்கள் ஏற்று, பெண்களுக்கே உரிய தைரியத்திலிருந்து மென்மேலும் வலுப்பெற்று வீரதீரமிக்க உடல்மொழியில் தன் படைகளை வழிநடத்திச் சென்றார் எலிசபெத்.
1588ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, போர் வீரர்களுக்கு மத்தியில் வெள்ளிக்கோல் ஏந்திக்கொண்டு வெள்ளைக் குதிரைமேல் அமர்ந்து அவர் பேசிய அந்தச் சிறு உரைதான், உலக வரலாற்றில் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுத்தந்தது.
ஸ்பானிய கப்பற்படை கடலில் மூழ்கிவிட்டது என்பதை பிரான்சிஸ் டிரேக் உறுதிசெய்யும் வரை, அவர் அந்தக் குதிரைப் பூட்டிய வண்டியில் அமர்ந்துகொண்டு போர்களத்தியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தான் பெண் என்பதை முன்னிறுத்தியும், அஃதொன்றும் தடையில்லை என்பதை விளக்கிக் கூறியும் வெற்றிக்கு வழிவகுத்த முதல் பெண்ணின் குரல் இது.
O
எனதன்பு மக்களே,
நம் எதிரிகள் பல ரகமான ஆயுதங்களைச் சுமந்து வருகிறார்கள். துரோகத்தின் பிடியால் ஏமாற்றப்பட்ட நமக்கு, பாதுகாப்பை மனதிலிறுத்தி வெற்றிபெறும் வழியைச் சிலர் வலியுறுத்துகிறார்கள்.
உங்களிடம் ஒன்றை உறுதிபடச் சொல்கிறேன். எனது அன்புக்குரிய மக்களை நம்பாமல் வாழும் வாழ்வை நான் அறவே வெறுக்கிறேன். அதை நான் விரும்பவில்லை. இனி நம்மை எதிர்க்கும் கொடுங்கோலர்கள் அஞ்சட்டும்.
நான் எப்போதும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டவளாக, இறைவனுக்கு அடிபணிந்தே வாழ்ந்திருக்கிறேன். என் முழுமுதலான பலத்தையும் பாதுகாப்பையும் நல்லெண்ணம் பொருந்திய உங்கள் விசுவாசமான இதயத்தில்தானே வைத்துள்ளேன். அதனால்தான் உங்களைச் சந்திக்க வந்தேன்.
நான் இங்கு வந்திருப்பது பொழுதுபோக்கிற்காகவோ கேளிக்கைக்காகவோ அல்ல. உஷ்ணம் பொருந்திய போரின் நடுமத்தியில் இறைவனுக்கு அடிபணிந்து, ராஜ்ஜியத்தையும் மக்களையும் மீட்டுக்கொணர, ரத்தமும் சதையுமாய் போராடி, உயிர்ப்பித்தாலும் சரி இறந்துபட்டாலும் சரி என தீர்மானித்துவிட்டேன்.
நானொரு நலிந்துபோன பலகீனமான பெண்ணின் உடலைச் சுமந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னிடம் பேரரசனுக்கான இதயமும் வயிறும் இருக்கின்றன. இங்கிலாந்து மன்னருக்குரிய எல்லாச் சக்திகளும் நிரம்பப் பெற்றிருக்கிறேன்.
நமது ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட எல்லையை பார்மா, ஸ்பெயின் அல்லது ஐரோப்பிய இளவரசன் எவனொருவன் நெருங்க நினைத்தாலும், அப்படிப்பட்ட கொடும் பாதாகச் செயல் நடப்பதாய் கேள்வியுற்றாலும், அது என் கௌரவத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழுக்கு.
நானே ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, போர்த் தளபதியாகவும் நீதிபதியாகவும் களத்தில் அரும்பாடுபட்ட உங்களெல்லோருக்கும் வெகுமதி வழங்குவேன். நீங்கள் இதுவரை சிந்திய ரத்தத்திற்கே பல வெகுமதிகளும் கிரீடங்களும் காத்திருக்கின்றன. மன்னர் சாட்சியாய் அவையெல்லாம் உங்களுக்குச் சரியாக வழங்கப்படும்.
நமது ராஜ்ஜியத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் சமர் செய்பவர்களை அசகாய வீரத்தோடு, துணிந்து போர் செய்கிறீர்கள். உங்களின் வீரத்தால் நாம் இந்த வெற்றியை வெகுவிரைவில் அடையப்போகிறோம்.
0