Skip to content
Home » காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

மால்கம் எக்ஸ்

மால்கம் எக்ஸ். விநோதங்களும் கோபங்களும் நிறைந்த மனிதர். அமெரிக்காவில் கறுப்பின உரிமை கோருவதே பெரும்பாடு எனும் நிலையில் கறுப்பின முஸ்லிம் பிரதிநிதியாகப் போராடிய பெருவீரர்.

இவரது இயற்பெயர் மால்கம் லிட்டில். மால்கம் என்பது அவருடைய எஜமானனின் பெயர். அவரது அடிமை என்பதைக் குறிக்கவே மால்கம் லிட்டில் என்று தான் அழைக்கப்படுவதாக உணர்ந்ததும் ‘மால்கம் எக்ஸ்’ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மால்கம் எக்ஸ் என்றால், முன்னாள் குடிகாரன், முன்னாள் கிறிஸ்தவன், முன்னாள் அடிமை எல்லாமும்தான்.‌

எலிஜா முகமதோடு சேர்ந்து பல ஆக்கப்பூர்வ காரியங்களைக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகவும் முஸ்லிம் விடுதலைக்காகவும் செய்துவந்தார். ஆனால் 1963இல் ஏற்பட்ட முரண்பாட்டால் அவரிடமிருந்து விலகி மெக்கா சென்றார்.

எலிஜாவோடு பணியாற்றிய ‘கறுப்பின முஸ்லிம்’ இயக்கத்தில் தான் அறிந்த ஓட்டைகளை இப்போது செப்பனிட்டார். ‘வெள்ளைக்காரப் பேய்’ என்று கொக்கரித்த குரல் இப்போது ‘ஆப்பிரிக்க – அமெரிக்க’ ஒற்றுமைக்காக ஒலித்தது. ஆனால் மால்கமின் இந்த மனமாற்றத்தை எலிஜாவாலும் அவர் இயக்கத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1964ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி மால்கமின் வீட்டில் குண்டு வீசினார்கள். குண்டு வீசியதன் புழுதி அடங்குவதற்குள், அதே நாள் மாலையில் ஆஃப்ரோ – அமெரிக்க ஒளிபரப்பு நிலையத்தில் அவர் பேசிய காரசாரமான உரை இது. கறுப்பின மக்களின் ஒற்றுமை குறித்தும், வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சி குறித்தும் அவர் ஆற்றிய இந்த உரை, இன்றளவும் இன அரசியலைப் புரிந்துகொள்ள நுணக்கமாக நமக்கு உதவுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அடுத்த ஒருவார காலத்தில் நியூ யார்க் நகரத்தில் மற்றொரு உரையாற்றுவதற்காகச் சென்ற மால்கம் எக்ஸ் விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

0

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வந்த பிறகும் கறுப்பர்கள் ஏன் தங்கள் நிலை குறித்துக் கவலைப்பட வேண்டும்? ஏன் நாம் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்? கறுப்பர்களுக்கு ஏற்படும் சிக்கலால் நமக்கு இங்கு என்ன தாக்கம் ஏற்படப் போகிறது?

1959 வரை ஆப்பிரிக்கக் கண்டம் காலனிய ஆட்சியின் கோரப் பிடியில் இருந்ததை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஐரோப்பாவின் அந்தக் காலனிய சக்திகள், ஆப்பிரிக்கா பற்றிய தவறான பிம்பத்தை வெளியுலகிற்கு ஏற்படுத்தினார்கள். காட்டுமிராண்டிகள் என்றும் நரமாமிச உண்ணிகள் என்றும் கொஞ்சமும் நாகரிகம் அடையாத காட்டுவாழ் மனிதர்கள் என்றும் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை எப்போதும் சொல்லி வந்தார்கள்.

இப்படி இயற்கையாகவே போலி விமர்சனங்களைக் கட்டியெழுப்பி, நீங்களும் நானும் வெறுக்கும்படி செய்துவிட்டார்கள். நம்மை ஆப்பிரிக்கர்கள் என்று அழைப்பதையும், ஆப்பிரிக்கா பற்றி இவர்கள் சொல்வதையும் நாம் விரும்பவில்லை. ஆப்பிரிக்காவை வெறுப்பதிலும், ஆப்பிரிக்கர்களை வெறுப்பதிலும் நாம் நம்மையே வெறுத்துப் பழகிவிட்டோம் என்பதுதான் உண்மை.

அது அறியாமல் நடந்தது. ஏனென்றால் வேரை வெறுத்துவிட்டு, மரத்தைப் பிடிக்கிறது என்று ஒருவரால் சொல்ல முடியுமா? அதுபோல் உங்கள் பூர்வீகத்தை மறந்துவிட்டு, உங்களை நேசிப்பது என்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதனால்தான் சொல்கிறேன், ஆப்பிரிக்காவை வெறுத்த பின்னர் ஒருவரால், தன் சுயத்தில் பற்றுக்கொண்டு வாழமுடியாது.

முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆப்பிரிக்காமீது தவறான பார்வை கொண்டிருக்கும் ஒருவரை இங்கு எனக்குக் காட்டுங்கள். தன்‌ மீதே தவறான விமர்சனம் கொண்டிருக்கும் மற்றொருவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களால் ஒரே சமயத்தில் ஆப்பிரிக்கா மீது தவறான அபிப்ராயத்தையும் உங்கள்மீது நேர்மறையான எண்ணத்தையும் வைத்திருக்க முடியாது.

ஆப்பிரிக்கா பற்றிய புரிதலும் அபிப்ராயமும் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு கோணத்தில் மாறுபடலாம்; அங்கிருந்துதான் உங்கள் மீதான பார்வையும் மாறுபடுகிறது. வாழ்க்கை சீராகிறது. வெள்ளைக்காரனுக்கு இந்தத் தந்திரங்கள் எல்லாம் மிக நன்றாகத் தெரியும். அதனால்தான் நீங்களும் நானும் ஆப்பிரிக்காவை விரும்பிடாதபடி, நம் அடையாளத்தின் மீதும் மூதாதையர்கள் மீதும் போலி கட்டுமானங்களை ஏற்படுத்துகிறான்.

நீங்கள் உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதுநாள்வரை ஆப்பிரிக்கப் பண்புகளை அடியோடு வெறுக்கும் மனிதர்களாய் நாம் வாழ்ந்திருக்கிறோம். நமது வடிவமற்ற தலையை வெறுத்தோம். மூக்கை வெறுத்தோம். நாய்போன்ற நீண்ட மூக்குகள் கிடைக்காதா என்று ஏங்கினோம். நமது நிறத்தை வெறுத்து, நரம்பில் ஓடும் ஆப்பிரிக்க ரத்தத்தையும் கூட அருவருப்பாய்ப் பார்த்தோம். தோலையும் ரத்தத்தையும் வெறுக்கத் தொடங்கிய நாம், இறுதியில் நம்மையே முழுமையாய் வெறுத்துவிட்டோம்.

நமது நிறமே நமக்குச் சங்கிலியானது. நம்மை முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நின்றது. அங்குமிங்கும் நகர முடியாமல் தடைப்படுத்தி வைக்கும் சிறைச்சாலையாய் மாறியது. இத்தனை தடைகளும் நிறத்தால் விளைந்தது எனத் திடமாய் நம்பினோம். கறுப்பு நிறமும் கறுப்பின ரத்தமும் கறுப்பின அம்சங்களும் நம்மை முன் செல்லவிடாதபடி சிறைப்படுத்தி வைக்கின்றன என்ற எண்ணவோட்டத்தால், உளவியல் ரீதியாய் உந்தப்பட்டு, நம்மை நாமே வெறுக்கத் தொடங்கினோம். கறுப்பும் கறுப்பினம் சார்ந்த எல்லாவற்றையும் நாம் எதிர்த்தோம், ஒதுக்கினோம்.

நம்மைக் கீழாக நினைக்க வைத்து, முழுமைப் பெறாத மனிதனாய் உலகிற்கு உருவகப்படுத்தி, உதவியற்றவர்களாய் தெருவில் திரிய வைத்தது. உதவிக்கும் போதாமைக்கும் ஆட்பட்டு, யாராவது ஒருவர் வழிகாட்ட வரமாட்டாரா என்று காத்துக்கிடந்தோம். நம் சகக் கறுப்பினத்தவனே கலங்கரை விளக்கம் ஆவான் என்பதை நாம் ஏற்க மறுத்தோம். அந்த நாட்களில் நம்மீதே நமக்கு நம்பிக்கையில்லை. கொம்புகளால், ஊது கருவிகளால், வித்தியாசமாக ஒலியெழுப்பிப் பாட்டுப் பாடுவதைத் தவிர, கறுப்பின மக்களுக்கு வேறென்ன தெரியப் போகிறது என்று நாம் நினைத்தோம்.

ஆனால் உணவு, உடை, வீடு, கல்வி போன்ற தீவிரமான விஷயங்களில் நாம் அவர்களை அப்படியே நம்பினோம். இந்த விஷயங்களை நமக்காக நாமே கொண்டுவர வேண்டுமென ஒருபோதும் சிந்திக்கவில்லை. இதுவரை நமக்காக என்ன செய்தோம்? உதவியற்றவர்களாய் நாதியின்றி கிடக்கிறோம். இதற்கெல்லாம் அடிப்படை நம்மீது நாம் அடைந்த அருவருப்புதான். சுய வெறுப்பின் வடிவம் நெருப்பாய் படர்ந்து ஆப்பிரிக்க வெறுப்பாய் வலுப்பெற்றது…

கறுப்பின முஸ்லிம் இயக்கம் நன்றாய் வளர்ந்ததற்கு, அது தன் குரலை ஆப்பிரிக்கப் பண்பாட்டிற்கு அழுத்தமாய் பதிவுசெய்ததுதான் காரணம். இந்த இயக்கத்தின் விஷேச வளர்ச்சிக்கு இதுதான் உசாத்துணையாய் இருக்கிறது. ஆப்பிரிக்க ரத்தம், அதன் பூர்வாங்க தொடர்பு, ஆழவேரூன்றிய கலாசாரப் பிணைவு இவையெல்லாம்தான் நமக்குத் துணைசெய்கின்றன.

நீங்கள் ஆச்சரியப்படும்படி நான் ஒன்று சொல்கிறேன். இந்நாட்டு மக்களின் ஆழ்மனத்தில் தானொரு ஆப்பிரிக்கன் என்ற எண்ணம் இன்னும் நீடிக்கிறது. அவர்களைப் போலவே நடனமாடுவதால், தினமும் ஏமாற்றப்படுவதால் தானொரு அமெரிக்கன் என்பதைவிட ஆப்பிரிக்கன் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

‘நீ ஓர் அமெரிக்கன். நீ ஓர் அமெரிக்கன்’ என்று அவர்கள் எல்லோரிடமும் சொல்கிறார்கள். ஆனால் பொறுங்கள். ‘அமெரிக்கருக்குக் கிடைக்கும் எந்தவொரு உபசரிப்பும், நமக்கு இல்லாதபோது நாம் எப்படி அமெரிக்கர்களாய் மாறமுடியும்?’ நாம் எப்போதும் அமெரிக்கர்கள் அல்ல. பத்து பேர் உண்ணும் இடத்தில் நானும் ஒருவராய் உட்காரலாம். எனக்கும் ஒரு தட்டு தருவார்கள். ஆனால் அதில் ஒன்றும் இருக்காது.

எல்லோரும் சரிசமமாய் உட்கார்ந்து விடுவதாலேயே, நானும் விருந்தினர் ஆகிவிடுவேனா? நீங்கள் உபசரிக்காதவரை, நான் விருந்தினன் அல்ல. அவர்களோடு ஒன்றாக அமர்வதாலேயே, நானும் விருந்தினன் ஆகிவிட மாட்டேன். இந்நாட்டில் அவர்களோடு சேர்ந்து வாழ்வதாலேயே, நாம் அமெரிக்கப் பிரஜை ஆகிவிட முடியாது.

அமெரிக்கப் பிரஜை ஆகுவதற்கு முன்னால், நாம் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அமெரிக்கவாதத்தின் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும். இதுவரை அமெரிக்கப் பழத்தின் சுவையை நீங்கள் ருசித்ததில்லை. முட்களைதான் மிதித்திருக்கிறீர்கள்.‌ நெருஞ்சியில்தான் நடந்து பழகினீர்கள். வெள்ளைக்காரரைவிட இந்தப் பழத்திற்கு அரும்பாடுபட்டு உழைத்தவர்கள் நீங்கள்தான்.

ஆனால் சுவைக்கும்போது மட்டும் உங்களை ஒதுக்கிவிட்டார்கள். சீருடை மாட்டிவிட்டு வெளிநாட்டில் போய் சண்டை செய்து வா என்று அனுப்பிவைத்தால் அசமஞ்சமாய் நிற்காமல் அதகளப்படுத்துவீர்கள். எனக்குத் தெரியும், அவர்களுக்காகச் சண்டைப் போடும்போது மட்டும் உங்களால் எல்லாமே முடிகிறது.

மக்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்கி தெருவில் இறங்கினேன். எனது அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அவர்கள் நிம்மதியாய் இல்லை, ஏமாற்றத்தில் துவண்டு கிடக்கிறார்கள். வாழ்க்கையின் உச்சநிலை வெறுப்பிற்கு ஆட்பட்டு, ‘நம்மிடம் இழப்பதற்கு இனி என்ன இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மிக அபாயகரமான சூழலை உருவாக்கவும் தயங்கமாட்டார்கள். நமது சுற்றுப்புற மக்கள் இந்தக் கதியில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நீக்ரோக்கள் நிம்மிதியாய் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கணிப்பை ‘நியூஸ் வீக்’ பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஆமாம், கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதில் ‘நியூஸ் வீக்’ ஒரு பிரபலமான பத்திரிகைதான். ஒருவேளை அவர்கள் சந்தித்த நீக்ரோக்களை நான் இதுவரை பார்த்ததில்லை போல‌.

அதேசமயம் நான் சந்தித்த நீக்ரோக்களையும் அவர்கள் சந்திக்கவில்லை. இதில்தான் அபாயம் ஒளிந்திருக்கிறது. இங்குதான் வெள்ளைக்காரன் தன்மேல் மண்ணைவாரிப் போட்டிக்கொள்கிறான். புள்ளியியலைக் கண்டுபிடித்து, அதன்மூலம் கருத்தைத் திணித்து, அதை உண்மையாக்கப் பார்க்கிறான்.

அவர்கள் ஏன் நீக்ரோக்களைச் சோம்பேறி என்று சொல்கிறார்கள் தெரியுமா? ஏனென்றால் நீக்ரோக்கள் சோம்பேறியாய் இருக்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நீக்ரோக்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்று சொல்வதும் அதே தேவைக்குத்தான். நாம் ஒன்றிணைவதை அவர்கள் விரும்பவில்லை. இதை நம் மனத்தில் ஆழப் பதித்துவிட்டால் போதும், கற்பனை செய்தபடி எல்லாம் நடந்துவிடும் என்று துடிக்கிறார்கள். நீக்ரோக்கள் ஒன்றுசேர மாட்டார்கள் என்ற கருத்து பொதுப்புத்தியில் இருக்கும்போது, நாமாக முயன்று கூட்டத்தைக் கூட்டினாலும் ஒருத்தரும் ஒத்துழைக்க மாட்டார்கள். இந்த உளவியல் காரணத்தை வைத்துதான் வெள்ளைக்காரர்கள் வேலை செய்கிறார்கள்.

பெருங்கிளர்ச்சி வெடிக்கும்படி சூழல் உருவானால் மீண்டும் பத்திரிகையின் காதைப் பிடித்துத் திருகி நீக்ரோக்கள் நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று சமத்துவ மழைப் பொழிவார்கள். பத்து பேரில் நீங்கள் ஒருவர் மட்டும் முரண்பட்டவராய் இருந்தால் பொறுமையாகவும் அடக்கமாகவும் காய்களை நகர்த்துவீர்கள். அதுவே பத்து பேரும் மாறுபட்டவராக இருந்தால்? பத்து பேருமே நிம்மதி இழந்தவராய் இருந்தால் என்ன செய்வது?

நீக்ரோக்கள் எத்தனைத் தூரம் நிம்மதி இழந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துவிட்டால், டாம் அங்கிள்கள் (அங்கிள் டாம் என்பது அடிமைப்பட்டே பழகிப்போன கறுப்பினக் கற்பனை கதாப்பாத்திரம்) கூட வேதனைப்பட்டு வெகுண்டெழுந்தால், வெள்ளையர்களின் பாடு அதோகதிதான். இதற்குத்தான் அவர்கள் அஞ்சுகிறார்கள். பிரான்சிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இதுதான் அவர்களை நடுங்க வைக்கிறது.

இதற்குத்தான் நாம் எல்லோரும் ஒன்றுகூடி இணைய வேண்டும். ‘இப்படி நடந்தால் என்ன செய்வது? இனி இதை தவிர்க்க என்ன செய்யலாம்? இதிலிருந்து மீள என்ன வழி?’ என்ற அறிவார்ந்த கருத்துகளை நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக உங்கள் முதலாளியிடம் சென்று, ‘இங்கு பாருங்கள். இதுதான் நான். இப்படித்தான் இருப்பேன்’ என்று சொல்லவேண்டாம். ஒப்பந்தம் முடிந்தபிறகு, அவர் பார்வையில் நீங்கள் என்னைப்போலவே இருப்பீர்கள். இது காரியத்தை மேலும் கடினமாக்கிவிடும். ஒப்பந்தம் முடிந்தபிறகு என்மீது விழுந்த அதே மோசமான அபிப்பிராயந்தான் உங்கள் மீதும் விழும்…

நான் மீண்டும் சொல்கிறேன். எந்த விதத்திலும் நான் இனவெறியோடு செயல்படவில்லை. பிரிவினையின் எந்த ரூபத்தையும் நான் வரவேற்கவில்லை. எல்லோரிடமும் சகோதரத்துவத்துடன் வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் சகோதர எண்ணம் இல்லாதவர்களிடம் வற்புறுத்தி உறவு கொண்டாட முடியாது. முதலில் நமக்குள் சகோதர உணர்வைக் கொண்டு வருவோம். விருப்பப்பட்டால் வெளியில் இருந்து வருபவர்களை அரவணைக்கலாம். ஆனால் நம்மை விரும்பாதவர்களாய், சகோதர உணர்வால் கட்டியிழுத்து அன்பு பாராட்ட வேண்டும் என்பதில் எனக்குத் திருப்தியில்லை.

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *