Skip to content
Home » காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

ஜோசப் ஸ்டாலின்

ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் 1924இல் மறைந்தார். புரட்சிக்குப் பின்பு சொற்ப காலமே உயிரோடிருந்தாலும் மக்களின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தார். அவருக்குப்பின் யார் என்ற கேள்வி எழுந்தது. டிராட்ஸ்கியா, ஸ்டாலினா? கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி 1923லேயே ட்ராட்ஸ்கியை ஓரங்கட்டி, ஸ்டாலின் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

லெனினுக்குப் பின் ரஷ்யாவின் முழுமுதல் அதிகாரம் ஸ்டாலினின் கைகளுக்குள் கட்டுண்டு கிடந்தது. பின்னர் மிகுந்த விமரிசனங்களை எதிர்கொண்டது அவர் அமைத்த சர்வாதிகார ஆட்சி. 1928இல் சோஷலிச சமுதாயம் அமைக்க, சிறப்பான ஐந்தாண்டு திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கட்டி முடிக்கப்பட்டன. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமும் புத்தம் புதிய தொழில்நுட்பக் கட்டுமானங்களும் அவற்றுள் அடக்கம். சில ஆயிரக்கணக்கில் சாலைகள் அமைத்து, கால்வாய்கள் வெட்டி, புதிய நகரங்களை நிர்மாணித்து, பூதாகர பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். இவையனைத்தும் மனித உயிர்களைப் பணயம் வைத்து உருவாக்கப்பட்டது என்று மேற்குலகம் சொல்லும்.

மலையளவு சாதனைகளை செய்து முடித்தாலும் ஸ்டாலினுக்கு மனம் ஒப்பவில்லை. வேகம் போதாது என்றார். ரஷ்ய தேசியவாதத்தை கட்டியெழுப்பி தொழிற்சாலை மேலாளர்களுக்கு அவர் பேசிய இந்தச் சிறு உரையில் ரஷ்யப் பெருங்கனவு எட்டிப்பார்க்கிறது.

1931ஆம் ஆண்டு, பிப்ரவரி 4ஆம் தேதி மாஸ்கோ நகரில் ஸ்டாலின் கர்ஜித்தார். ‘நாம் முன்னேறாவிட்டால் மேற்குலகம் நம்மை நசுக்கிவிடும்’ என்ற சிறு ஊசியை வைத்துக்கொண்டு எழுச்சியூட்டும் தேசியவாத உரையொன்றை அவர் நெய்தார்.

0

இந்த இயக்கம் சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறதா என்பதை அறிய, நாம் ஏன் கொஞ்சம் நிதானமாக பயணிக்கக்கூடாது என்று சிலசமயம் கேட்கிறார்கள்.

முடியாது தோழர்களே! அது சாத்தியம் அல்ல. துளியளவும் நிதானத்தைப் பின்பற்றமுடியாது. மாறாக அதே அளவு வேகத்தை அதிகரிக்க வேண்டும். நம் பலத்தைப் பெருக்குவதிலும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதிலும் மென்மேலும் வேகமெடுக்க வேண்டும். சோவியத் யூனியனின் ஒவ்வொரு விவசாயக் குடியும், அடிநிலையில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் இந்தக் கடமையை மனமுவந்து ஏற்கவேண்டும். ஒட்டுமொத்த உலகின் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் இந்தக் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வளர்ச்சி போக்கில் நிதானத்தைக் கொஞ்சம் இழந்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான். நம்மைக் கீழே தள்ளி சரமாரியாய் தாக்குவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாம் அடிவாங்க விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், தண்டிக்கப்படுவதை வெறுக்கிறோம்.

தன் மந்தமான சோம்பேறித்தனத்தால் ரஷ்யாவின் பழங்காலம் தொடர் தோல்விகளால் சூழப்பட்டிருக்கிறது. மங்கோலியக் கான்களும் துருக்கியர்களும் ஸ்வீடன் நாட்டு நிலவுடைமைப் பெருமுதலைகளும் ரஷ்யாவைத் துண்டாடினார்கள். போலிஷ் நாட்டவரும் லித்துவேனியா வீரர்களும் பிரித்தானிய, பிரெஞ்சு பெருமுதலாளிகளும் ஜப்பானிய கோமான்களும் நம்மை நாசம் செய்தார்கள்.

எல்லோரும் ரஷ்யாவை பந்தாட என்ன காரணம்? அதன் பின்தங்கிய நிலை. ராணுவ ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அரசியல், விவசாய மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் ரஷ்யா மிகவும் பின்தங்கியிருக்கிறது. மேலும் நம்மைத் தாக்குவது அவர்களை லாபம் அடையச் செய்வதோடு, எந்தவொரு நஷ்டமும் ஏற்படுத்தாது என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள்.

புரட்சிக்கு முன்பு கவிஞர் ஒருவர் சொன்ன வார்த்தைகளை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘ரஷ்ய தாயே, நீ ஏழையாக இருந்தாலும் எல்லாம் படைத்தவளாய் இருக்கிறாய்; சகல சக்திகளும் பொருந்தியிருந்தாலும் செயலற்றுக் கிடக்கிறாய்.’

ரஷ்யர்களைவிட ரஷ்யாவை அடித்து நொறுக்கிய கனவான்களுக்கு இந்த வரிகளில் நல்ல பரிச்சயம் இருக்கும். நம்மிடமிருந்து செல்வங்களைப் பறித்துச் செல்லும்போது, ‘நீர்தான் எல்லாம் படைத்தவள் ஆயிற்றே கொஞ்சம் நாங்களும் எடுத்துக்கொள்கிறோம்’ என்று சொல்வார்கள். ‘நீங்கள் சகல சக்திகள் பொருந்தியிருந்தாலும் செயலற்றுக் கிடக்கிறீர்கள்’ என்று நம்மை ஒடுக்கக் காரணம் சொல்லி யாதொரு தீங்குமின்றி ரஷ்யச் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள்.

நலிந்துபோனவர்களையும் பிற்பட்டோரையும் அடித்துப் பிழைப்பதுதான் சுரண்டல்காரர்களின் எழுதப்படாத சட்டம். முதலாளித்துவம் ஏற்றுக் கொண்டிருக்கும் காட்டுத்தனமான விதி! நீ பின்தங்கியும் நலிந்துபோயும் இருப்பதால், உன்னிடம் ஏதோ குறையிருக்கிறது. ஆக உன்னை அடிமைப்படுத்துவதிலோ அடித்து துவம்சம் செய்வதிலோ கொஞ்சமும் தவறு கிடையாது. நாங்கள் வலிமைப் பொருந்தி இருப்பதால், எங்களுக்குப் பயந்து நடக்கவேண்டியது உன் கடமை என்று சொல்வார்கள்.

அதனால்தான் சொல்கிறேன், இனியும் நாம் பின்தங்கிய நிலையில் நிற்கக்கூடாது.

கடந்தகாலத்தில் நமக்கு தாய்நாடு என்று எதுவும் கிடையாது. உண்மையில் இருந்திருக்கவும் முடியாது. ஆனால் இப்போது முதலாளித்துவத்தை நாம் தூக்கியெறிந்து விட்டோம். அதிகாரம் நம் கையில் இருக்கிறது. மக்கள் அதன் ருசியை உணர்கிறார்கள். நமக்கென்று ஒரு தாய்நாடு இருக்கிறது. அதன் சுதந்திரத்தை நாம்தானே காப்பாற்ற வேண்டும்!

இந்த சோஷலிசப் பூமியை துண்டு போட்டு தாரை வார்ப்பதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லை என்றால் உடனே ஒன்று சேருங்கள். இதன் பின்தங்கிய நிலைக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள். நேர்மையான போல்ஷ்விக் ஆட்சி அமைய, சீரான வேகத்தில் தொடர்ந்து முன்னேறி சோசலிசப் பொருளாதாரம் ஏற்படுத்துவோம்.

இதைத்தவிர வேறு வழி கிடையாது. அதனால்தான் அக்டோபர் புரட்சிக்கு முன், ‘முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை முறியடிக்க முயல்வோம் இல்லையென்றால் செத்து மடிவோம்’ என்று லெனின் சொன்னார்.

முன்னேறிய நாடுகளைக்‌ காட்டிலும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் நாம் பின்தங்கியிருக்கிறோம். இந்த வேற்றுமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் குறைக்கவேண்டும். நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள். சோவியத் ஒன்றியம் அதன் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்வைக்கும் ஒரே கடமை இதுதான்.

நமக்கும் முன்னேறிய நாடுகளுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணிசமாகக் குறைக்க இன்னும் பத்து ஆண்டுகள்தான் இருக்கின்றன. இதற்கான எல்லாவிதச் சாத்தியங்களும் ஒன்றுகூடியிருக்கின்றன. ஆனால் சாத்தியங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவதில் மட்டும் குறைபடுகிறோம்.

இந்தக் குறை நம்மிடந்தான் இருக்கிறது. வாய்ப்புகளை சரிவர பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உற்பத்தியில் தலையிட மாட்டேன் என்ற அழுகிய மரபுகளை இன்றே அழிக்க வேண்டும். ‘எல்லாவற்றிலும் தலையிடுவேன்’ என்ற நவீனத்தை நோக்கி புதிய மரபுகளை ஏற்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒரு தொழிற்சாலையின் மேலாளராய் இருந்தால், தொழிற்சாலையின் எல்லா விவகாரங்களிலும் தலையிடுங்கள். அனைத்து மட்டத்திலும் ஒரு பார்வை இருக்கட்டும். உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தவறக்கூடாது. திரும்பத் திரும்பப் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். போல்ஷ்விக்குள் தொழில்நுட்பத்தில் மன்னராய் இருக்கவேண்டும். போல்ஷ்விக்குகள் இனி இந்த உலகில் நிபுணராய் இருக்க காலம் வாய்த்துவிட்டது.

நமது இந்தச் மறுசீரமைப்பு காலத்தில் தொழில்நுட்பமே எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லும் ஒரு தொழில் நிர்வாகி எனக்கு வேடிக்கையாய் தெரிகிறான்.‌

தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் அடைவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்று சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது உண்மை அல்ல. போல்ஷ்விக்குகளால் கைப்பற்ற முடியாத கோட்டை என்று எதுவும் உண்டா?

மிகக் கடுமையான கடல்களை நாம் தாண்டி இருக்கிறோம். முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்திருக்கிறோம்‌. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி சோஷலிச தொழிற்சாலைகள் திறந்திருக்கிறோம். நடுத்தர விவசாயக் குடிகளை சோஷலிசப் பாதையில் வழிநடத்திச் செல்கிறோம்.

நிர்மாணிப்புப் பணிகளில் ஏராளமானவற்றைச் செய்துமுடித்து விட்டோம். இனி எஞ்சி இருப்பது ஒன்றிரண்டு வேலைகள்தான். தொழில்நுட்பம் படித்து அறிவியலை ஆட்டிப்படைக்க வேண்டும். இதைமட்டும் செய்துவிட்டால், நாம் இப்போது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தை அடைந்துவிடலாம். இதன் தேவை நிச்சயம் என்றால் நாம் செய்தே தீருவோம்!

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *