Skip to content
Home » காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

ஒளி மறைந்துவிட்டது

காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர் பதிவு செய்வதுபோல், ‘தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு, சிறுபிள்ளைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் நேரு.’

வெறுமனே உச்சரிப்பில் மட்டுமல்ல, முழுமனதாகவே நேருவிற்கு அவர் ‘பாப்பு’தான். காந்திக்கு இவர் ‘தமையன்’தான். இறந்தது நேருவின் தந்தை மட்டுமல்ல, இந்தியாவின் தந்தை; அழுது வடிப்பது காந்தியின் மூத்த மகன் அல்ல, இந்தியாவின் மூத்த மகன், முதல் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு. தன் கண்ணீரோடு ஊர்க் கண்ணீரும் துடைக்க வேண்டும்.

சில மணிநேரங்களுள், மவுண்ட்பேட்டன் அங்கு வந்தார். கண்ணீர் வடித்த நேருவை ஆசுவாசப்படுத்திவிட்டு கையில் மைக்ரோபோன் கொடுத்தார்.

காந்தி இறந்த செய்தியை முன்தயாரிப்பே இல்லாமல் மனதில் இருந்து பேசினார். ‘சுட்டுக் கொன்றவன் யார், சொல்வாரா? அவனை இரும்புக் கரம் கொண்டு அடக்குவாரா? நம்மை ஆயுதம் ஏந்திப் போராடச் சொல்வாரா?’ எனக் காத்துக் கிடந்தார்கள் மக்கள்.

ஒட்டுமொத்த தேசத்தின் மறக்க முடியாத ரணத்தை, மெள்ள மெள்ள இறக்கி வைத்தார் நேரு. அழுது தோய்ந்த குரலோடு, தேர்ந்த வார்த்தைகளால் நேரு பேசிய ‘ஒளி மறைந்துவிட்டது’ என்ற இந்தச் சிறு உரை முன்தயாரிப்பு இல்லாத பேச்சாய் வரலாற்றில் பதிவானாலும், முக்கியத்துவம் பெறுகிறது.

0

தோழர்களே! அந்த ஒளி நம் வாழ்விலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது. இருள் சூழ்ந்த இடத்தை நாம் அடைந்துவிட்டோம். உங்களிடம் என்ன சொல்வது, எப்படிச் சொல்வதென ஒன்றும் புரியவில்லை.

நாம் எல்லோரும் ‘பாப்பு’ என்று அழைக்கும் நம் பேரின்பிற்குரிய தலைவர், இந்தியத் தேசத்தின் தந்தை இனி நம்மோடு இல்லை. இனி ஒருபோதும் இல்லை. ஒருவேளை இதை நான் தவறாகக் கூடச் சொல்லியிருக்கலாம். ஆனாலும்கூட இத்தனை ஆண்டுகளாய் மிக நெருக்கமாய் நாம் அவரைச் சந்தித்தது போல, இனி ஒருபோதும் பார்க்க முடியாது. ஆறுதலுக்கோ – அறிவுரைக்கோ இனி அவரை ஒருபோதும் ஓடிச்சென்று அணுகமுடியாது.

நிச்சமாய், இது என்னைப்போன்ற லட்சோப லட்ச இந்திய மக்களுக்கு நெஞ்சில் விழுந்த பேரிடி. இந்த இடி விழுந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மட்டுமல்ல, எவராலும் அவ்வளவு சுலபத்தில் வெளிவர முடியாது.

ஒளி மறைந்துவிட்டது என்று நான் சொல்லியிருந்தேன். நான் சொல்வது இன்னும்கூடத் தவறாக இருக்கலாம். ஏனென்றால் நான் சொல்லி வந்த ஒளி சாதாரணமானது அல்ல. இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருள் அகற்றி வந்த அவ்வொளி, இனி வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் பிரகாசமான வெளிச்சத்தை இப்பூமியில் உமிழ்ந்து தள்ளும் பேறு பெற்றது. இதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது.

எண்ணிலடங்காத இதயங்களுக்கு அறிவுரை சொன்னபடியோ, காற்றில் படர்ந்தபடியோ இந்த ஒளி அங்குமிங்குமாய் நம்முன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த ஒளி, துரிதமான நிகழ்காலத்தை விட வேறொன்றை அதிகமாய் சார்ந்திருக்கிறது. அது நம் வாழ்வைக் குறிக்கிறது. அதன் சத்தியத்தைக் குறிக்கிறது. தவறான பாதையிலிருந்து சரியான பாதையை நமக்கு நினைவூட்டுகிறது. முற்கால இந்தியாவை முற்போக்கான சுதந்திரப் பாதைக்கு அழைத்து வந்திருக்கிறது.

அவர் செய்வதற்கு இன்னும் அடுக்கடுக்கான பணிகள் காத்திருக்கும்போதே, இவை எல்லாம் அரங்கேறிவிட்டன. அவருக்கான வேலை முடிந்துவிட்டதென்றோ, இனி அவரின் தேவை இல்லையென்றோ நாம் ஒருபோதும் உத்தேசிக்க முடியாது. குறிப்பாகத் தேசம் துண்டாடப்பட்டு, இத்தனைத் துயரங்களை நேர்கொண்டிருக்கும்போது, அவரின் இல்லாமை நம்மால் தகிக்க முடியாத பேரிடியாய் வந்து விழுகிறது.

காந்தியின் வாழ்வு ஒரு பைத்தியக்காரனால் முற்றுப் பெற்றிருக்கிறது. ஆம், இந்த முட்டாச் செயல் செய்தவனை, வேறு எப்படிக் குறிப்பிட முடியும்? கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தத் தேசத்தை சீர்குலைக்கும் அளவிலான நஞ்சு, அதன் பிடரி மயிற்றில் ஏறிப் பீடித்திருக்கிறது. மக்கள் மனங்களை அது மாற்றி இருக்கிறது. நாம் அந்த நஞ்சை எதிர்கொண்டு, வேறோடு கருவறுக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்த வரும் கணைகளை முட்டாள்தனமாகவோ விஷமத்தனமாகவோ அணுகாமல், நம் பேரன்பிற்குரிய காந்தி பிதா சொன்னபடி சத்தியத்தின் வழி எதிர்கொள்ள வேண்டும்.

அவர் கோபமாக இருந்ததால்தான், நாம் எந்தவொரு அசம்பாவிதம் நடக்கவும் துணிந்து செயல்படவில்லை. முதலில் இதை நினைவில் கொள்ளுங்கள். மனவலிமைப் பொருந்திய, தீர்க்கமான மனிதனாய் நாம் நடந்துகொள்ள வேண்டும். நம்மைச் சுழ்ந்துள்ள பேராபத்துகளைக் கடந்து செல்லும்போது, பாப்புவின் ஆன்மா நம்மை மேல்நின்று கவனிக்கும். அவர் சொல்லித்தந்த வழியிலிருந்து விலகி, கடுகளவு வன்முறையை நாம் கைத்தூக்க நினைத்தாலும், காந்தியின் ஆன்மா சாந்தி அடையாது என நான் நம்புகிறேன்.

நாம் அதைச் செய்யக்கூடாது. ஆனால் அதற்கு நாம் வலிமைக் குன்றியவர்கள் என அர்த்தம் அல்ல. அதற்கு மாறாய், நம்முன் இருக்கும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள, இந்த வலிமையும் ஒற்றுமையும் நமக்குப் பக்கபலமாய் துணை செய்யும் என உறுதி கொள்வோம். நாம் ஒன்றுபடவேண்டும் தோழர்களே!

நம்மை இம்சித்து வரும் குட்டிக் குட்டித் தொல்லைகளும் – சிரமங்களும் – முரண்பாடுகளும் ஒரு பேரழிவின் முகாந்திரத்தில் மறைந்து போகின்றன. நம்மைக் குத்திக்கொண்டிருக்கும் குட்டிக் குட்டிச் சிந்தனைகளை மூட்டைக்கட்டி எறிந்து, வாழ்வின் மகத்தான விஷயங்களை உற்று நோக்க நமக்கு ஒரு பேரழிவு தேவைப்படுகிறது.

தனது மரணத்தின் மூலம், வாழ்வின் மகத்தான நொடிகளை காந்தி நினைவுபடுத்துகிறார். வாழ்வின் உண்மையை நினைவுபடுத்துவதன் மூலம், அதை இந்தியாவோடும் இந்தியரோடும் தக்க வைக்கிறார்.

‘லட்சக்கணக்கான இந்திய மக்கள், காந்தியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். பேசாமல் காந்தியின் உடலைப் பதப்படுத்தினால் என்ன?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றைச் செய்துவிடவே கூடாதென காந்தி, நம்மிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் தன் உடலைப் பதப்படுத்தி பாதுகாப்பதை முற்றிலும் வெறுத்தார். ஒவ்வொருவருக்கும் தனித்த அபிப்ராயம் இருந்தாலும், இதில் அவர் இஷ்டப்படியே நாம் செயல்பட விரும்புகிறேன்.

ஆகவே வரும் சனிக்கிழமை அன்று தில்லியில் உள்ள யமுனை நதிக்கரையில், காந்தியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. சுமார் 11.30 வாக்கில் பிர்லா மாளிகையிலிருந்து கிளம்பி, யமுனை நதியை அடைவோம். அங்கு 4.00 மணிபோல, அன்னாரது உடல் தகனம் செய்யப்படும். பத்திரிகைச் செய்தியிலும், வானொலி அறிக்கையிலும் இன்னபிற தகவல்கள் பின்னர் தெரியப்படுத்தப்படும்.

இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் தில்லி நகர்வாசிகள் இந்த இடைப்பட்ட சாலை நெடுக இருமருங்கிலும் காத்திருக்க வேண்டுகிறேன். எல்லோரும் நேரடியாக பிர்லா மாளிகைக்கே கூட்டம் கூடி வர வேண்டாம். இங்கிருந்து யமுனை நதிசெல்லும் வழியின் இருமருங்கிலும் கண்ணியத்தோடு காத்து நில்லுங்கள். அங்கு எவ்வித ஆர்பாட்டமும் செய்யாமல் அமைதிகாக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இந்த உயரிய ஆன்மாவை இறுதி அஞ்சலி செலுத்தி ஈடேற்ற, அதுவே சரியான வழியாக இருக்கும். கூடவே சனிக்கிழமை அன்று உண்ணாநோன்பு இருந்து, வழிபாடு செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

தில்லிக்கு புறம்பாக, இந்தியாவின் வெவ்வெறு மூலையில் வசிக்கும் ஏனையோரும் இதே போன்று இறுதி ஊர்வலக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். நீங்களும் நோன்பு மேற்கொண்டு வழிபாடு செய்யுங்கள். தகனம் செய்யப்படும் 4.00 மணி வாக்கில், அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று பிரார்த்தியுங்கள். சத்தியத்திற்காகவே வாழ்ந்து, அதற்காகவே மடிந்துபோன இந்த மகத்தான மனிதருக்கு நம்மால் இயன்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை அன்பின்வழி ஒருங்கிணைப்போம்.

காந்திக்கும் அவர் நினைவுக்கும் நாம் அளிக்கும் மிகச் சிறந்த மரியாதை அதுதான். நமக்கும் நம் இந்தியாவிற்கும் நாம் அளிக்கும் மிகச் சிறந்த வழிபாடு அதுதான்.

ஜெய் ஹிந்த்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *