(முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்)
மற்ற நாடுகளைப் போல், இந்திய அரசும் தொல்லியல் ஆராய்ச்சியில் தனிப்பட்ட முனைப்பில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பங்களிப்பாலும் தனியார் ஊக்குவிப்பாலும் மெல்ல நடந்தேறிய பெரும் மாற்றம் இது. எப்போதும் தாமதமாய் கற்கும் திறனுடைய அரசு, கொஞ்சம் கொஞ்சமாய் சுவீகரித்து தொல்லியல் துறையைத் தன் பாதுகைக்குள் கொண்டு வந்திருக்கிறது.
வங்காள ஏஷியாடிக் சொஸைட்டியின் நிறுவனர்களாவும் முன்னோடியாகவும் திகழ்ந்த ஜோன்ஸ், கோல்ப்ரூக், வில்சன், பிரின்ஸிப் மற்றும் புகழ்பெற்ற இன்னும் சில மனிதர்கள் எல்லோரும் இலக்கிய ரீதியான முகாந்திரம் உள்ளவர்கள். எழுத்துகளைச் சீரமைப்பதிலும், கையெழுத்துப் படிகளை மொழிபெயர்ப்பதிலும், கல்வெட்டு எழுத்துக்களைப் படிப்பித்து பதிப்பதிலுமே வேலை செய்தனர். சமஸ்கிருதப் புலமை என்பது அந்தக் காலத்தில் மெச்சக்கூடிய தகுதியாக இருந்தது. அவர்கள் எந்த அளவிற்கு வேலை செய்தார்கள் என்பதை, ஓர் உண்மையைச் சொன்னால் புரிந்துகொள்வீர்கள். பிரின்ஸிப்பும் கிட்டோவும் வேலைப்பளு தாங்காமல் நாற்பது வயதில் இறந்துபோனவர்கள்.
அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் கட்டடங்களையும் நினைவுச் சின்னங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்தனர். பின்னர் களத்திற்கு மண்வெட்டியோடு பேனாவும் கொண்டு சென்றார்கள். அதைக் கொண்டு பத்தி எழுதினார்கள், உருவப்படங்கள் வரைந்தார்கள், ஓவியம் தீட்டினார்கள், அங்கிருந்த வேலைப்பாடுகளைப் புகைப்படம் எடுத்து ஐரோப்பியக் கண்களுக்கு விருந்தளித்தார்கள். புதையுண்டு கிடந்த இந்துஸ்தானத்தின் விலைமதிப்பற்ற கலைச் சின்னங்கள் இப்படித்தான் உலகிற்கு தெரிய வந்தன.
இந்தத் தலைமுறை அகழாய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் இரண்டு பேருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் முதலாமவர், ஜேம்ஸ் ஃபெர்குசன். இவர் தன் முதல் புத்தகத்தை 1845இல் வெளியிட்டார். இந்தியக் கட்டடக்கலையை அறிவார்ந்த ரீதியில் ஆய்வு செய்த முதல் நபர் இவர்தான்.
இரண்டாவது, அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். ஃபெர்குசனுக்குச் சில ஆண்டுகள் கழித்து பில்சா டோப்ஸை அறிவியல் முறையில் ஆய்வு செய்தார். இவ்விருவர் மட்டுமல்ல, இதே துறையில் உள்ள மற்ற சில அறிஞர்களும் வெகுமதிகளை எதிர்பார்க்காமல் விடாமுயற்சியுடன் உழைத்தவர்கள். ஆனால் இது தனிநபரால் செய்து முடிக்கும் அளவு மிகச் சிறிய பணி அல்ல. ஆய்வின் பெரும்பகுதி அவமானகரமாய், துண்டு துண்டாய், முழுமையடையாமல் இருந்தது.
ஆனால் இதே வேளையில் புதிய பேரரசின் அஸ்திவாரத்தை நிலைநிறுத்தி, அதன் எல்லைகளை விஸ்தரிக்க இந்திய அரசு முழு கவனம் செலுத்தியது. புராதனங்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த அளவில் அக்கறை காட்டியது. விதிவிலக்காக வந்த ஒரு சில தலைமை ஆளுநர்கள், தங்கள் பெருந்தன்மையால் ஒன்றிரண்டு காசுகளை செலவுசெய்து புராதனக் கட்டங்களை செப்பனிட்டார்கள்.
தாஜ்மகாலை புணரமைக்க மின்டோ பிரபு ஒரு கமிட்டி உருவாக்கினர். சிக்கந்தராவிலும் பத்தேப்பூர் சிக்ரியிலும் சீரமைப்பு பணிகள் செய்ய ஹாஸ்டிங்ஸ் பிரபு ஆணையிட்டார். ஆம்ஹர்ஸ்ட் பிரபு குதுப் மினாரில் சில மறுசீரமைப்பு பணிகள் செய்தார். இந்தியப் புராதனங்களைப் பார்வையிட்டு, வரையறை செய்து, ஆவணப்படுத்த வேண்டும் என்று ஹார்டிங்க் பிரபு இயக்குனர் மன்றத்தை வற்புறுத்தினார்.
புகைப்படங்களை ஒன்றுதிரட்டி ஆவணம் சேகரிப்பதைவிட, இந்த ஒழுங்கற்ற முயற்சியால் சில முன்னேற்றங்கள் இருந்தன. சிறிய அளவிலான புளிப்புத்தன்மை முழு மாவையும் சாரமேற்றுவது போல், காட்டுமிராண்டித் தனமான ஓரிருவரின் செயல்கள் மொத்த அழகியலையும் குலைத்துப் போடுவது போலான சம்பவங்கள் அவ்வப்போது காலாகாலத்தில் நடந்தேறின.
பளிங்குக் கற்களின் மதிப்புக்காக, தாஜ் மஹால் முழுதும் சூறையாடப்படும் சந்தர்ப்பம் வில்லியம் பென்டிக் பிரபு காலத்தில் இருந்தது. ஆக்ராவில் இருக்கும் ஷாஜஹான் மாளிகையில் பளிங்கு கற்களை அவர் ஏலத்தில் விட்டார். அதை ஹாஸ்டிங்ஸ் பிரபு பெயர்த்து எடுத்து ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு அன்புப் பரிசாக அனுப்ப முயன்றார். ஆனால் என்ன காரணத்தாலோ அது நிறைவேறவில்லை. சிக்கந்தராவில் உள்ள தோட்டங்களை, ஆக்ராவைச் சார்ந்த செயல் பொறியாளர் ஒருவருக்கு குத்தகைக்கு விட்ட சம்பவம் ஒன்று அதே காலக்கட்டத்தில் பென்டிக் பிரபுவின் ஆட்சியாண்டில் நடைபெற்றது.
1857ம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, தில்லியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஜும்மா மசூதியை தரைமட்டமாக்கும் திட்டத்தைச் சிலர் முன்மொழிந்தனர். நல்லவேளையாய் சர் ஜான் லாரன்ஸ் தலையிட்டு, முறியடித்தார். 1868ல் சாஞ்சி ஸ்தூபங்களை இடித்துத் தள்ளவேண்டும் என்று குரல் எழும்பியபோது மீண்டும் அவர் முன்நின்று பாதுகாத்தார். அலிகரில் உள்ள 600 ஆண்டுகள் பழைமையான முகமதிய தூண் பற்றி நான் படித்திருக்கிறேன். அதை அழித்து, முனிசிபாலிடி கட்டடங்களும் வணிகக் கடைகளும் கட்டியுள்ளனர்.
அன்றைய வைஸ்ராய் கம்பீரமாய் கடந்து செல்ல, அஜ்மீரில் இருந்த இந்து – முசல்மான் மசூதியிலிருந்து சில சிற்ப வேலைபாடுகளை அப்புறப்படுத்தி நினைவு வளைவு ஒன்றை ஆர்வக்கோளாறான அதிகாரி ஒருவர் அமைத்திருக்கிறார். ஜேம்ஸ் ஃபெர்குசனின் புத்தகங்கள் ராணுவ முகாம் கட்டுபவருக்கும் ராணுவப் பொறியாளருக்கும் எதிரான உணர்ச்சிமிக்க எதிர்ப்பின் குரலாய் ஒலிக்கின்றன. இந்த நபர்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இருந்திருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இருந்தாலும் இவர்கள் செய்த பாவம் தீவிரமானது.
குவாலியர் மலை உச்சியில் ஏறி பிரிட்டிஷ் ராணுவ முகாமையும், அவர்கள் ஆக்கிரமித்த அரண்மனைக் கட்டடங்களையும் பாருங்கள். ஷாஜஹானின் எழில் கொஞ்சும் ஓய்வறையும் நீதிமன்ற வளாகமும் தோட்டங்களும் இப்போது ராணுவ முகாம்களாய் அவர்களுக்கான உணவகங்களாய் மாற்றப்பட்டுள்ள பயங்கரத்தைத் தெரிந்துகொள்ள தில்லி வழிகாட்டி புத்தகங்களைப் புரட்டுங்கள். துருப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தில்லி கோட்டையின் போர்முனைகளைத் துண்டிக்கும்படி ராணுவ மருத்துவர்கள் இந்திய அரசை எச்சரித்து முப்பது ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆனால் மலேரியா காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக மட்டுமே, மருத்துவ விதிகளின் படி துருப்புகளை குவிப்பதை இந்திய அரசு தவிர்த்திருக்கிறது.
தாஜ் தோட்டத்தில் கேளிக்கை விருந்து நடைபெறும் காலத்தில், அங்கு பங்குகொள்பவர்கள் சுத்தியல் உளியோடு வருவது அத்தனை அசாதாரண காரியம் அல்ல. பேரரசர் மற்றும் அவர் புலம்பல் ராணியின் கல்லறைமேல் இருந்து அகேட் கற்களும் கார்னிலியன் மணிகளும் சுரண்டி எடுத்துக்கொண்டு போவார்கள். ஷாஜஹான் கல்லறைமேல் இருந்த பளிங்கு கல்லில் பல துகள்கள் காணாமல் போனதை, ஆக்ரா சென்றபோது நானே நேரில் பார்த்தேன். அவற்றைச் செப்பனிட கையோடு உத்தரவிட்டேன்.
காழ்ப்புணர்ச்சி நிறைந்த காலகட்டம் முற்றிலுமாய் ஒழிந்துவிட்டது என்று சொல்வதற்கு இல்லை. சமீபத்தில் எனக்கு நடந்த சம்பவமே சாட்சி. ஃபெர்குசன் தன் புத்தகத்தை எழுதும்போது, தில்லி மாளிகையில் உள்ள திவான்-இ-ஆம் (பொது மக்கள் கூடும் அரங்கம்) பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதக் கிடங்காக இருந்தது. அதன் வெளிப்புறத் தூண்கள் செங்கல் வளைவுகளால் கட்டப்பட்டு, இங்கிலாந்து ஜன்னல்கள் பொருத்தி ஒளியேற்றப்பட்டு இருந்தன. பின்னர் ஒருகாலத்தில் இவையெல்லாம் அகற்றப்பட்டன. 1876ல் வேல்ஸ் நாட்டு இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இந்த அரங்கில்தான் தர்பார் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மையில் இது ஒரு நல்ல தேர்வு. ஔரங்கசீப்பின் தர்பார் மண்டபம் முழுக்க வெள்ளையடிக்கப்பட்டு, அஸ்திவாரத்திலிருந்து தூண்கள் வரை மெருகேற்றப்பட்டன. இதுவும் ஒருநாள் அகற்றப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
மரியாதை தாங்கிய இளவரசர் தில்லியில் இருந்தபோது, ஷாஜஹான் மாளிகையின் வெவ்வேறு இடங்கள் விருந்திற்காகவும் நடனத்திற்காகவும் அலங்கரிக்கப்பட்டன. 250 ஆண்டுகளுக்கு முன் பளிங்கு மற்றும் பிளாஸ்டரில் வரைந்த முகலாய ஓவியங்கள் மங்கிய நிலையில் இருந்தன. அவற்றைப் புணரமைக்க உள்ளூரில் இருந்து ஓவியமாக்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வரைந்த ஓவியம் பார்க்க சகிக்காமல், மிகக் கொடூரமாய் இருக்கிறது.
ஏப்ரல் மாத கடைசியில் லாகூரில் இருந்தபோது, ஜஹாங்கிர் கட்டிய கோட்டையில் இருந்த சிறிய அளவிலான மோடி மஸ்ஜித் அல்லது முத்து மசூதியை கண்டடைந்தேன். 300 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட கட்டடம் இன்றும் புழங்குநிலையில் இருக்கிறது. ஆனால் ரஞ்சித் சிங் என்பவரால், அரசு கஜானாவாக மாற்றம் கண்டுவிட்டது. வளைவுகள் செங்கற்களால் அமைக்கப்பட்டு, தரையில் பளிங்கு கற்கள் பெயர்த்து பாதாளம் அமைத்து இரும்பு காசுகள் சேகரம் செய்ய ஏதுவாக இருந்தது.
லாகூருக்குச் செல்லும் நூறில் ஒருவர்கூடக் கண்டிராத இந்த அரிய கட்டடத்தை மீண்டும் தன் இயல்புக்கு மாற்றும்படி மன்றாடினேன். ரஞ்சித் சிங் தன் முஸ்லிம் மூதாதையரின் ரசனைக்கு துளியும் செவி சாய்க்கவில்லை. அரை நூற்றாண்டாக ஆட்சி செய்து வரும் பிரிட்டிஷ் ராணுவமும் அதன் பொதுப் பணித்துறை பொறியாளரின் தேவைகளும், மனம் வருந்தாமல் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மனநிறைவு தராத இந்த எதிரிகளிடம் இருந்து முகலாயக் கட்டடங்களைப் பாதுகாக்க, சமீப ஆண்டுகளில் சில விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அகமதாபாத்தில் நான் சிக்தி சையத் மசூதியைப் பார்த்தேன். அங்கிருந்த கற்களில் துளையிடப்பட்ட திறந்தநிலை சட்டகத்தால் ஆன அரைவட்ட வடிவிலான ஜன்னல்கள் இந்தியாவின் அரும்பெரும் பெருமைகளில் ஒன்று. தற்போது அது வருவாய் அதிகாரியின் பொதுத்துறை அலுவலகமாய் செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டர் கலை நுணுக்கங்கள் சிதைந்துபோய், அறை முழுக்க வெள்ளையடித்து சின்னாபின்னம் ஆக்கி இருக்கிறார்கள். இந்தக் கட்டடமும் புணரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
மரத்தினால் இழைக்கப்பட்டு, பர்மியக் கலைக்கு சால உதாரணமாய் திகழும் மண்டாலே மன்னர் மாளிகையை எடுத்துக் கொள்ளுங்கள். 1835ல் நடந்த போரில் பர்மாவின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றிய பிறகு, நமது ராணுவம் அந்த மாளிகையைச் சமுதாய விடுதியாகவும், அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும் மாற்றிவிட்டது.
இந்த மிதமிஞ்சிய மனிதர்களை அகற்றுவதில் நான் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளேன். மீண்டும் வராத ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது என் எண்ணம் கிடையாது. மாறாக தீ, நிலநடுக்கம், அழிவு போன்றவற்றுக்கு ஆளாகும் தன்மையுடையை ஒரு கலையை, என்றென்றும் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும் கலையைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவிலுள்ள வேறு சில இடங்களிலும் வேறு சில சின்னங்களிலும் எனக்கு ஒரு கண் இருக்கிறது. காலம் அனுமதித்தால், இறப்பதற்குள் நேரில் சென்று அதன் கொடிய விதியிலிருந்து காப்பாற்றி புணரமைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
இவைதான் தொல்லியல் ஆராய்ச்சியின் இருண்டுபோன வருந்தத்தக்க அம்சங்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக, தன் கடமைகளை உணர்ந்துகொள்ள அரசு நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியானது ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ரீதியான சிக்கல்களாலும்; உரிமைக் கோரல்களாலும்; மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளின் மீதான விவாதங்களாலும் சில சமயங்களில் தாமதப்படுகிறது. உறங்குவதற்கும் செயல்படுவதற்கும் அதற்குண்டான நேரம் உள்ளது.
அரசு தன் கடமையை முடித்துவிட்டதாகவும், அல்லது அதற்கு எவ்விதக் கடமையும் இல்லை என்றும் வாதிட்ட காலம் உண்டு. எல்லா நினைவுச்சின்னங்களும் வகைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தியபோது, நாம் கூப்பிய கைகளுடன் உட்கார்ந்து அவை மெதுவாகவும் அழகாகவும் சிதைந்து போவதை வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் உள்ளனர்.
ரயில்வேயும் நீர்ப்பாசனமும் உலகின் மிகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிட ஆண்டுக்கு அரை லட்சம் ரூபாய் கூட விட்டு வைக்கவில்லை என்று வாதிட்டவர்கள் உள்ளனர். ஆனால் மீண்டும் இந்தக் குறுக்கீடுகளும் விதிவிலக்குகளும் ஒருபோதும் நிகழக்கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன். முன்னேற்றம் எப்போதும் நேர்மறையானது. அது தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் தன்மை உடையது. இந்தியாவில் முதன்முதலாக 1860ல் அரசு நிதி நல்கையோடு, வட இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் என்ற பெயரில் தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுமதித்தவர் கானிங் பிரபு அவர்கள். 1862ல் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்-கு அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வாளர் என்ற பதவி வழங்கினார்.
அந்தக் காலகட்டத்திலிருந்து இந்தியத் தொல்லியல் துறையின் வெளியீடுகள் வெவ்வேறு வடிவம் பெற்றன. மேலும் அவை பல்வேறு அளவிலான புலமையும் தகுதியும் பெற்று வெளியே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தின. ஒட்டுமொத்தமாக ஓர் உன்னதமான தகவல் சுரங்கமாய் அறியப்பட்டது. ஆனால் இதிலுள்ள குற்றங்களை கண்டுபிடிக்க, மாணவர்கள் பெருமளவில் ஆய்வுசெய்ய வேண்டியிருந்தது.
இந்த அசாத்திய பணியை ஜெனரல் கன்னிங்ஹாம் இருபது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தார். மறக்கமுடியாத பல ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதேவேளையில் இந்தியா முழுக்க வரலாற்றுச் சின்னங்களைப் பதிவு செய்யவும், பாதுகாக்கவும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆளுகைக்கு உட்பட்டிருந்த சில மாகாணங்களில், உள்ளூர் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கன்னிங்ஹாமை அடியொற்றிய திரு. பர்கீஸிடம் பம்பாய் ஆய்வு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இறுதியில் அவர் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பதவி வகித்தார். சின்னஞ் சிறு மாகாணங்களும் இதே வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கின. ஒன்று அரசு தொல்பொருள் ஆராய்ச்சியாளருக்காக காத்திருந்தனர், இல்லையென்றால் அவர்களுக்கென்று தனியொரு தொல்பொருள் ஆய்வு மையத்தை சிறிய அளவில் நிறுவி கொண்டார்கள்.
மாகாணங்களில் கவர்னர் மற்றும் துணை நிலை ஆளுநரின் ரசனைக்கு ஏற்றபடி முடிவுகளும் முக்கியத்துவங்களும் மாறுபடும். மத்தியில் ஆட்சியாளர்களின் உத்வேகமும் அடுத்தடுத்த வைஸ்ராய்க்கு ஏற்றபடி மாறுதல் அடையும். கலைப்புலத்தில் பெருந்தன்மை வாய்ந்த புரவலராய் இருந்த நார்த்ப்ரூக் பிரபு, தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது உள்ளூர் அரசின் கடமை என்று 1873இல் ஆணை பிறப்பித்தார். அதையொட்டி சர் ஜான் ஸ்ட்ராக்கே என்ற துணைநிலை ஆளுநர் முதன்முறையாக ஆக்ராவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டார். ஷாஜஹான் மாளிகையில் பளிங்கு மேடை அமைத்ததற்காக இன்றும் இவர் நினைவுகூரப்படுகிறார்.
இதைப்பற்றி பேசும்போது லிட்டன் பிரபு மேற்கொண்ட கவித்துவமான கற்பனை வளம் பொருந்திய திட்டத்தை நம்மால் மெச்சாமல் இருக்க முடியாது. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள புராதனச் சின்னங்களை பாதுகாக்க 1879இல் 33.4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். அத்தோடு ‘புராதனச் சின்னங்களின் பாதுகாவலர்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்கவும் சட்ட வரைவு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் காலத்தில் அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. ரிப்பன் பிரபு வரும்வரை அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1880 முதல் 1883 வரை மேஜர் கோல் பதவி வகித்த மூன்று ஆண்டு காலமும் முறையாக அறிக்கை தாக்கல் செய்து, அவற்றை வகைப்படுத்தி செம்மையாக பணியாற்றினார்.
இந்திய அரசும் பெரும் அளவில் நிதி வழங்கியது. அவற்றைக் கொண்டு குவாலியர் கோட்டைகளும் சாஞ்சி ஸ்தூபிகளும் பழுது பார்க்கப்பட்டன. ஆனால் இந்த நேரத்தில் ஓர் எதிர்வினையான முடிவு வெளிப்பட்டது. ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பதோடு மத்திய அரசின் பணி முடிந்துவிடுகிறது. எதிர்காலத்தில் உள்ளூர் அரசாங்கங்கள் மிதமான சில பணிகளை மேற்கொள்ள வேண்டிவரும். அது சுலபமானது என்று என்னால் சொல்ல முடியாது. புராதனச் சின்னங்களை பாதுகாப்பது அத்தனை எளிமையா என்ன?
மிகச் சமீபத்தில் எல்ஜின் பிரபுவின் கருணையால், அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மேலும் உறுதியாக வரையறுக்கப்பட்டன. ஒட்டுமொத்த நாடும் சில வட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு சர்வேயர் இருப்பார். ஏகாதிபத்தியத்தின் பொறுப்பில், ஒவ்வொரு வட்டமும் உள்ளூர் அரசாங்கப் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. மாகாணங்களின் வளங்களாலும் அந்தந்த மாகாண ஆளுநரின் தனிப்பட்ட அனுதாபங்களாலும் நிதி நல்கை பெறப்பட்டு பணிகள் நடைபெறும்.
சமீபத்தில் வடகிழக்குப் பகுதியில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, சர் ஜான் ஸ்ட்ராச்சியால் உருவாக்கப்பட்ட மரபுகளை, பெருந்தன்மையாக பாகுபாடு காட்டும் அனுதாபத்தின் அடிப்படையில், சர் ஏ. மெக்டோனல் நிலைநாட்டி வருவதைக் கண்டேன்.
என்னைப் பொறுத்தவரை, அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருப்பதை விட அல்லது இதுவரை ஒப்புக்கொண்டதைவிட ஒரு நல்ல ஒப்பந்தத்தை உருவாக்க முடியுமா என்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. இந்த நாட்டில் அரசின் கடமைகள் தீர்ந்து போகும் நாளையோ, அல்லது தொல்பொருள் ஆய்வுகளும் பாதுகாப்பு முறைமைகளும் அரசாங்க வழிகாட்டுதலை கைவிட்டு, தனித்து செயல்படும் நாளையோ என்னால் உறுதியாக எதிர்பார்க்க முடியாது என்று நம்புகிறேன்.
இன்னும் பலனளிக்கக்கூடிய பல துறைகளை நாம் அடையாளம் காணவில்லை. திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள் நிறைய இருக்கின்றன. சமன் செய்ய வேண்டிய இடைவெளிகளை ஏராளமாகப் பார்க்கிறேன். மறுசீரமைப்புக்கும் அறிவார்ந்த ஆராய்ச்சிக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
என் கருத்துப்படி, இந்தநாட்டில் வரிசெலுத்தும் மக்கள் ஓரளவுக்கு அதிக செலவினங்களை எதிர்க்க வாய்ப்பில்லை. மேலும் அகழ்வாராய்ச்சிக்கு சில ஆயிரங்கள் இருந்தாலே போதுமானது. அவற்றைக் கொண்டே நெடு நாட்கள் ஆய்வு செய்யலாம். மொத்தச் செலவும் குறைவு. அவர்களும் நம்மைப் போலவே இந்தத் துறையில் ஆர்வமோடு இருப்பதால் எளிமையாக முடிந்துவிடும்.
எனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற பொக்கிஷங்களின் பாதுகாவலனாய் இருந்து இந்தியத் தொல்பொருட்கள் குறித்து ஏகாதிபத்திய அரசின் கடமையை எனது ஆட்சியாண்டு காலத்தில் நன்கு வலியுறுத்தி தெரியப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.
0