1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார்.
மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அதன் ‘ஊம்கோன்டொ வீ சிஸ்வே’ என்ற ராணுவ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். இந்த அமைப்பின் முதல் தீவிரவாதத் தாக்குதல் 1961இல் அரங்கேறியது. ஜொகனஸ்பர்க், டர்பன், எலிசபெத் துறைமுகம் பகுதிகள் குண்டு மழையில் நனைந்தன.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் தடைசெய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு மண்டேலா கைது செய்யப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனையோடு ராபென் தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரிவோனியா வழக்கு விவகாரமாய் 1963இல் அவரது ஐந்தாண்டு சிறைத்தண்டனையில் தடை ஏற்பட்டது. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைமையிடத்தை மையமாய் வைத்து நடந்த இவ்விசாரணையில், மண்டேலா மீது கம்யூனிச ஒழிப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1963, அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கு விசாரணையில் மண்டேலா முதல் குற்றவாளியாக அடையாளம் கொள்ளப்பட்டார். இந்தமுறை மரண தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மண்டேலா தாக்கல் செய்த பதில் வழக்கு ஏப்ரலில் தொடங்கியது.
1964ஆம் ஆண்டு 20 ஏப்ரலில் நீதிமன்ற வளாகத்தில் மண்டேலா ஆற்றிய நெடிய உரைதான் பின்னர் பட்டி தொட்டியெங்கும் அவர் புகழைக் கொண்டு சேர்த்தது. தான் கம்யூனிஸ்ட் அல்ல என்பதை மண்டேலா அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்கிறார். ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் கொள்கையும் தேவையும் பேசும் மக்கள் மேடையாக நீதிமன்றம் மாறியது.
மொத்தம் நான்கு மணிநேரம் நீண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் தேர்ந்தெடுத்த பகுதி இது.
0
நான்தான் முதல் குற்றவாளி. என்னிடம் ஓர் இளங்கலைப் பட்டம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஜொகனஸ்பர்க்கில் ஆலிவர் டாம்போவுடன் சேர்ந்து பல வருடங்கள் வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்கிறேன். முறையாக அனுமதி பெறாமல் நாட்டைவிட்டு வெளியேறியதற்காகவும், 1961இன் மே மாத இறுதியில் மக்களைப் போராடத் தூண்டியதற்காகவும் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன்.
முதலில் அரசு சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு நான் பதிலளிக்கிறேன். தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்து வரும் போராட்டத்தை அந்நியர்களும் கம்யூனிஸ்டுகளும் தூண்டிவிடுகிறார்கள் என்று அவர்கள் சொல்வதில் துளியளவும் உண்மை இல்லை. ஒரு சாதாரண மனிதனாகவும், மக்களின் தலைவனாகவும் நான் செய்தவற்றிற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.
எனது தென்னாப்பிரிக்க அனுபவங்களின் ஊடாக பரந்துபட்ட என் ஆப்பிரிக்கப் பின்னணியும் இந்தப் போராட்டத்திற்குத் துணை நின்றது. இதை மறுத்து அந்நியர்களால் போராட்டம் மடைமாற்றப்பட்டது என்று சொல்வதில் நியாயம் இல்லை.
ஊம்கோன்டொ வீ சிஸ்வே (ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் துணை ராணுவப்படை) உருவாவதற்கு நானும் ஒரு முக்கியக் காரணியாய் இருந்திருக்கிறேன். 1962 ஆகஸ்ட் மாதத்தில் நான் கைதாகும் முன்புவரை பல முக்கிய முடிவுகளில் அதில் அங்கம் வகித்திருக்கிறேன். நானும் என் நண்பர்களும் இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
அரசின் கொள்கைகளால் ஆப்பிரிக்க மக்கள்மீது கட்டுப்பாடின்றி வன்முறை ஏவப்பட்டது, முதல் காரணம். சரியான தலைமை இல்லையென்றால், எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் காயத்திற்கு மருந்துபோடவும் யார் வருவார்? சமூகத்தில் வன்முறை வெடித்து வெவ்வேறு இனத்துக்கு இடையே கசப்புணர்வு தோன்றி, போரைவிட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, ஆப்பிரிக்கர்களின் வெற்றியைப் பதிவு செய்ய வன்முறையை விட்டால் வேறு வழியில்லை. இதுவே இரண்டாவது காரணம். எதிர்ப்பைப் பதிவு செய்ய, சட்டப்பூர்வமான எல்லா வழிகளையும் முயன்று பார்த்தோம். அரசு அடைத்துவிட்டது. அப்போது எங்கள் முன் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, வெள்ளையினத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்நாள் முழுதும் ஒடுங்கிப்போய் கிடப்பது. இரண்டு, அரசாங்கத்தோடு முரண்பட்டு அநியாயத்திற்கு எதிராய் கேள்வி கேட்பது. நாங்கள் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தோம்.
இருந்தாலும் எடுத்த எடுப்பில் வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. அமைதியான முறையில் சட்டத்தை மீறினோம். இதைப் பொருட்படுத்தாத அரசாங்கம் எதிர்ப்பு அரசியலை நொறுக்குவதற்குப் படைபலங்களை ஏவிவிட்டது. அந்தக் கணத்தில்தான் வன்முறையை வன்முறையால் கையாளவேண்டும் என்று முடிவு செய்தோம்.
நாங்கள் கைக்கொண்ட வன்முறையில் துளியளவும் தீவிரவாதம் கிடையாது. ஊம்கோன்டொவை உருவாக்கிய எல்லோரும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் உறுப்பினராய் இருந்தவர்கள். காங்கிரஸின் அகிம்சைக் கொள்கையில் நம்பிக்கை வைத்து, அரசியல் தகராறுகளைச் சுமுகமான பேச்சு வார்த்தையில் தீர்க்க முயல்பவர்கள். வெள்ளையரோ கறுப்பரோ எந்தவொரு தனிநபருக்கும் ஆப்பிரிக்கா உரிமை கிடையாது. இங்கு வசிக்கும் எல்லோரும் அதில் பொதுவுடைமை காணலாம்.
இனங்களுக்கு எதிரான போரை நாங்கள் விரும்பவில்லை. இறுதிவரை அதைத் தவிர்க்கவே முயற்சி செய்தோம். ஆனால் நம்புவதற்கு நெருடலான விஷயம் என்னவென்றால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் அடக்குமுறையான சட்டத்திட்டத்தையும், அற்ப சொற்பான உரிமைகளையும் தாண்டி அகிம்சையால் அடைந்தது வேறெதுவும் கிடையாது. வன்முறையில் நான்கு நிலைகள் இருக்கின்றன. நாசம் செய்தல், மறைந்திருந்து தாக்குதல், தீவிரவாதம், கிளர்ச்சி. நாங்கள் முதல் முறையைத்தான் தேர்ந்தெடுத்தோம். சூழல் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள் முடித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணியிருந்தோம்.
எங்களது முதல் திட்டத்தை ஆப்பிரிக்காவின் அரசியல், பொருளாதார நிலையைத் தீவிரமாக ஆய்வு செய்து உறுதி செய்தோம். பெருமளவில் அந்நிய முதலீடுகளும், வெளிநாட்டு வணிகங்களும்தான் தென்னாப்பிரிக்காவை வாழ வைக்கின்றன. மின் ஆலைகளைத் துவம்சம் செய்து, ரயில்வே மற்றும் டெலிபோன் தொடர்புகளைத் திட்டமிட்டு நாசம் செய்தால் முதலீடு செய்யப் பயப்படுவார்கள் என்று கணித்தோம்.
பண்டங்களைத் தொழில் நகரங்களிலிருந்து தொலைதூர துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வது சவாலான விஷயமாகிவிடும். இதையே தொடர்ந்து செய்தால் நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் செல்லும். வாக்களிக்கும் மக்கள் தங்கள் நிலை குறித்துச் சிந்திக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.
நாட்டின் பொருளாதார நாடியைச் சிக்கலுக்கு உள்ளாக்குவது என்பது, அரசுக் கட்டடங்களைச் சேதாரப்படுத்தி நிறவெறியைக் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். இந்தத் தாக்குதல்கள் மக்களை உத்வேகப்படுத்திப் போராடத் தூண்டலாம். மேலும் நமக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கதிகலங்க வைக்கலாம். நம்மை நம்பி போராட்டத்தில் குதிப்பவர்கள், இந்தப் பாதை சரியானது, நாம் பலசாலியாய் இருக்கிறோம் என்று இனி திடமாய் நம்புவார்கள். கூடவே பெரிய அளவில் நாம் போராடும்போது, அதை ஒடுக்க மிதமிஞ்சிய அளவிலான வஞ்சனையை அரசு கையாண்டால், அந்நிய நாடுகளில் அனுதாபம் பெருகி நமக்கு ஆதரவு அதிகரிக்கும். அவ்வளவு நெருக்கடியான நிலவரத்தைத் தென்னாப்பிரிக்க அரசால் கையாள முடியாது என்று திட்டமிட்டோம்.
இந்தத் திட்டத்தையே செயல்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். ஊம்கோன்டொ நாசக்கார வேலை செய்யத் தயாரானது. அதே சமயம் மக்களைக் காயப்படுத்தவோ, கொலை செய்யவோ கூடாது என அழுத்தம் திருத்தமாய் உறுதியெடுத்துக் கொண்டோம்.
கிளர்ச்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவோம் என்ற பெயரில் அப்பாவி ஆப்பிரிக்கர்களைப் பாரபட்சமின்றி வதைப்பதற்கு அரசின் இரும்புக்கரங்கள் எப்போதும் தயாராய் இருப்பதை, நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் ஏற்கெனவே இந்த மண்ணில் எக்கச்சக்கமான அப்பாவிகள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். குருதி தோய்ந்த மண்ணிலிருந்து அடுக்குமுறைக்கு எதிரான வன்முறைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இதுவே எங்கள் கடமை. இதுவே சரியான பாதை.
ஒருவேளை தவிர்க்கமுடியாத பட்சத்தில் போர் ஏற்பட்டால், அதை மக்களுக்குச் சாதகமான முறையில் வழிநடத்தலாம் என்று சொல்லிக் கொண்டோம். அப்படிப் பார்க்கையில் எங்களுக்கு ஏதுவானதாய், இருபக்கமும் பெரிய அளவில் உயிர் இழப்புகள் நேராதபடி கொரில்லா போர்முறை இருந்தது. எதிர்காலத்தில் போருக்கான முகாந்திரம் தெரிந்தால், கொரில்லா போர்முறைக்குத் தேவையானவற்றைத் தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். வெள்ளையர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. கொரில்லா தாக்குதல்கள் நடந்தால், வீரதீரப் பயிற்சி பெற்ற திடமான வீரர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாததாய் இருக்கும்…
இப்போது என்னைப் பற்றிப் பேசுகிறேன். நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதை முன்னரே சொல்லிவிட்டேன். சில நேரங்களில் நான் யார், எனது அரசியல் சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லிவிடத் தோன்றும். எல்லாவற்றையும் விட ஆப்பிரிக்கா மீது தேசபக்தி மிகுந்த மனிதனாகவே நான் என்னை அடையாளப்படுத்த விரும்புகிறேன். மார்க்சியப் படிப்பினைகளும் பழங்கால ஆப்பிரிக்க சமூகங்களின் நிர்வாக அமைப்புகளும் வர்க்கப் பேதமற்ற சமுதாயம் அமைவதில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின. உற்பத்தியை நம்பியிருந்த ஆதி சமூகத்தில், நிலம் பழங்குடியினருக்குச் சொந்தமாக இருந்தது. அங்கு ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை. சுரண்டல் இல்லை.
மார்க்சியத் தத்துவத்தால் நான் உந்தப்பட்டது உண்மைதான். இருந்தாலும் காந்தி, நேரு, இங்க்ரூமா, நாசர் போன்றோரின் தத்துவங்களும் என்னை வெகுவாகப் பாதித்தன. இன்றைக்கு உலகில் இருக்கும் முன்னேறிய நாடுகளோடு நம் நாட்டு மக்களும் ஒத்திசைந்து செயல்பட, சோசலிசத்தை நாம் ஓரளவேனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சம் நிரம்பிய நம் வரலாற்றுப் பக்கங்களை அதுதான் மாற்றி எழுதும். அதற்காக நாம் கம்யூனிஸ்ட் என்றோ மார்க்சிஸ்ட் என்றோ அர்த்தமாகாது.
உண்மையில் இந்தத் தருணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கடமையாற்ற வேண்டிய பிரத்தியேக பணி என்று எதாவது இருக்கிறதா? இந்தக் கேள்வியை நான் விவாதத்திற்கு உட்படுத்துகிறேன். இந்தக் கணத்தில் நாம் இரண்டு வேலைகள் செய்யவேண்டும். ஒன்று, இனப் பாகுபாட்டை ஒழிப்பது. மற்றொன்று, சுதந்திர சாசனத்தின்படி அடிப்படை உரிமைகளைக் கோருவது. கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்லும்வரை நான் அதை வரவேற்கிறேன். இந்தமுறையைப் பின்பற்றினால்தான் எல்லாச் சமூக இன மக்களும் ஒன்றுதிரண்டு போராட வருவார்கள்…
அரசு வழக்கறிஞர் சொல்வதுபோல் நாமொன்றும் கற்பனை இன்னல்களை எதிர்த்து கலகம் செய்யவில்லை. நமது போராட்டம் உண்மையானது. தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களின் முத்திரை குத்தப்பட்ட இரண்டு அம்சங்களை எதிர்த்து நாம் போராடுகிறோம். இந்த அரசியல் சட்டங்களால் மக்கள் வாழ்க்கையில் பஞ்சம் படிந்து, சுயமரியாதை கேள்விக்கு உள்ளாகிறது. இதைச் சொல்லித் தருவதற்கு கம்யூனிஸ்ட்களோ கலகக்காரர்களோ நமக்குத் தேவையில்லை.
வெள்ளையர்கள் உல்லாசமாய் பொழுதுபோக்க உலகின் சகல வசதிகளும் கைமேல் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்கர்கள் பஞ்சத்திலும் பாவத்திலும் காலம் கழிக்கின்றனர். 40 சதவீத ஆப்பிரிக்கர்கள் கூட்ட நெரிசல் மிகுந்த வீதிகளிலும் வறட்சி தாக்கிய நீர் தேக்கங்களிலும் மண் அரிப்பு ஏற்படும் உறுதியற்ற நிலப்பரப்பிலும் வசிக்கின்றனர். 30 சதவீத மக்கள் தொழிலாளர்களாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் வெள்ளையர்கள் பண்ணையில் முறையின்றித் தங்கிவரும் இடைக்கால அடிமைகளைப் போல் நாட்களை நகர்த்துகின்றனர். மீதமிருக்கும் 30 சதவீத மக்கள் மட்டும், வெள்ளையர்களுக்கு இணையாய் பொருளாதாரத்திலும் சமூகப் பழக்கவழக்கங்களிலும் முன்னேறிய நகரங்களிலும் வசித்து வருகின்றனர். இன்னும் ஜொகனஸ்பர்க்கில் வசிக்கும் 46 சதவீத ஆப்பிரிக்கர்களுக்கு, தங்கள் வாழ்வை நகர்த்திச் செல்ல போதுமான சம்பாத்தியம் கிடையாது.
கறுப்பர்கள் ஏழையாகவும் வெள்ளையர்கள் செல்வந்தராகவும் இருப்பது எங்கள் பிரச்சனை அல்ல. ஆனால் இந்த வரைமுறையைப் பாதுகாக்கும்படி வெள்ளையர்கள் உருவாக்கும் சட்டம்தான் எங்கள் எதிரி. அதையே நாங்கள் கேள்விகேட்கிறோம். வறுமையைப் போக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, முறையான கல்வி வழங்குவது. மற்றொன்று, செய்யும் தொழிலில் சூட்சமங்களைக் கற்றுக்கொடுத்து சம்பாத்தியத்தைப் பெருக்குவது. ஆப்பிரிக்கர்கள் அறிந்தவரை, இந்த இரண்டு வழிகளும் அரசியல் சட்டத்தால் அவர்களுக்கு வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
இப்போதுள்ள அரசாங்கம், ஆப்பிரிக்கர்கள் கல்வி கற்க தடையாக இருக்கிறது. ஏழையாக இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும், வெள்ளையர்களின் குழந்தையென்றால் அவர்களிடம் பணம் எதிர்பார்க்காமல் கட்டாயக் கல்வி வழங்குகிறார்கள். ஆனால் அதே வசதிகள் இங்குள்ள ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை. 1960-61 காலக்கட்டத்தில், ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்காக தலா 12.46 ராண்ட்களை (ராண்ட் – ஆப்பிரிக்கப் பணம்) அரசு செலவு செய்தது. ஆனால் அதே ஆண்டில் வெள்ளையர் குழந்தைகளுக்காக 144.57 ராண்ட்கள் செலவு செய்யப்பட்டன.
1953இல் பாண்டு கல்வி மசோதா மீதான விவாதத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அங்கு, ‘உள்ளூர் மக்களின் கல்வித் திட்டங்களை மாற்ற எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், குழந்தைப் பருவத்திலிருந்தே ஐரோப்பியர்களும் உள்ளூர்வாசிகளும் எந்த விதத்திலும் சமமானவர்கள் அல்ல என்று போதிக்கும்படி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவேன் . . . சமத்துவம் பேசுபவர்களுக்கு ஆசிரியர் ஆகும் தகுதியே கிடையாது. உள்ளூர் மக்களுக்கு என்ன தரத்தில் உயர்கல்வி போதிக்க வேண்டுமென்றும், அது அவர்கள் எதிர்காலத்திற்குப் பயன்படுமா என்றும் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறை முடிவுசெய்யும்’ என்று சொன்னார்.
ஆப்பிரிக்க மக்களின் மற்றொரு இம்சையாக இருப்பது பொருளாதாரத் தடை. தொழிற்சாலையில் உள்ள எல்லா முக்கியப் பொறுப்புகளும் நிற அடிப்படையில் வெள்ளையர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. தொழிற்சாலை சமரச் சட்டம் அனுமதிக்கும் ‘தொழிற்சங்கங்கள்’ நடத்தக் கூட ஆப்பிரிக்கத் தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லுங்கள் என்று அரசை மன்றாடினால், ‘வெளியிருந்து வந்தவர்களைவிட உள்ளூர்வாசிகள் செல்வத்தில் கொழிக்கிறீர்கள்’ என்று பதில் வரும். நாங்கள் குடியேறியவர்களோடு ஒப்பிட்டுக் கேட்கவில்லை, நமது நாட்டில் வசிக்கும் வெள்ளையர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பல தூரம் பின்தங்கி இருக்கிறோம். அதற்கேற்றாற்போல் இந்தச் சட்டமும் இதைச் சமன் செய்யவிடாமல் தடுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கடவு சட்டங்களால் (கடவு சட்டம் என்பது ஆப்பிரிக்காவில் புழக்கத்தில் இருந்த உள்ளூர் கடவுச்சீட்டு முறைமைகளில் ஒன்று. இதன்மூலம் ஒன்றபட்ட மக்கள் தொகையை தங்கள் இஷ்டப்படி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அரசால் மாற்றமுடியும். நகர நிர்மாண காரணங்களை முன்னிறுத்தி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது) ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தனித்து விடப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், கணவனும் மனைவியும் வெவ்வேறு இடத்திற்குப் பிரித்து அனுப்பப்பட்டு குடும்பங்கள் உடைந்துபோவதும் உண்டு.
இதற்குப் பிறகு பஞ்சமும் குடும்பப் பிளவும் இரண்டாம் நிலை சிக்கலைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் நகர வீதிகளில் சுற்றித் திரிவார்கள். அவர்கள் கல்வி பயில பள்ளிக்கூடம் கிடையாது, அப்படியே இருந்தாலும் படிப்பதற்குப் பணம் கிடையாது, இவையிரண்டும் இருந்தால் இவர்கள் பள்ளி செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க பெற்றோர் கிடையாது. அவர்கள் இருவர் இருந்தாலும், குடும்பத்தை உயிர்ப்போடு வைக்க பணம் சம்பாதிக்கும் பொருட்டு வேலைக்குச் செல்ல வேண்டுமே!
சமூகத்தின் அறக் கோட்பாடுகளுக்கு இது விரோதமாகிவிடும். சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்கவும், வன்முறை மேலோங்கவும் இடங்கொடுக்கும். நகர வாழ்க்கை நரகமாகலாம். ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தவும், தாக்கிக்கொள்ளவும் நாளா நாளைக்குச் சச்சரவுகள் அதிகரிக்கும். வெள்ளையர்கள் வசிக்கும் பகுதிக்கு வன்முறை இடம்பெயரும். வீதியில் தனியாகச் செல்லும் கறுப்பரைக் கண்டு மற்றொருவர் அஞ்சுவார். வீட்டை உடைத்து திருட்டுத் தொழில் செய்பவர்கள் அதிகரிப்பார்கள். இம்மாதிரியான சிறுசிறு தண்டனைக்கும் இப்போது கொலை தண்டனை வழங்கப்படும்.
எங்கள் மனதில் சீழ்வடியும் காயங்களை, மரண தண்டனை என்ன செய்யும்? இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்னவென்றால், இப்போதிருக்கும் எல்லா அசௌகரியங்களையும் நீக்கி ஆப்பிரிக்கர்களை மனிதராய் வாழ, சட்டம் இடம் கொடுக்கவேண்டும்.
எங்களுக்குச் சேரியில் அடைபட விருப்பமில்லை, பொதுமக்களில் ஒருவராய் வாழ ஆசைப்படுகிறோம். ஆப்பிரிக்க ஆண்கள், தாங்கள் வேலை செய்யும் இடத்திலேயே மனைவி மக்களோடு வாழ அனுமதிக்கப்பட வேண்டும். விலங்குகளைப் போல் அவர்களை விடுதியில் அடைத்துவைப்பது நியாயமா?
எங்கள் பெண்கள் தன் கணவன்மாரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நிரந்தரமாக விதவை கோலம் பூண்டிருக்கச் செய்வது நியாயமாகாது. நாங்கள் ஒன்றும் குழந்தை அல்ல. இரவு 11 மணிக்கு மேல் வெளியே நடமாட எங்களை அனுமதிக்க வேண்டும். தொழிலாளர் முகமை குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தைத் தாண்டி, எங்கள் சொந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை வேண்டும். பிடித்த வேலையைச் செய்ய சுதந்திரம் வேண்டும். ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவில் எங்களுக்குச் சேரவேண்டிய ஒரு நியாயமான பங்கைக் கொடுத்துவிடுங்கள். சமூகத்தில் எங்களுக்குரிய பங்கும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
கனம் நீதிபதி அவர்களே, எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்குச் சரிசமமான அரசியல் உரிமை வேண்டும். அது இல்லையென்றால், எங்கள் குறைபாடுகள் என்றைக்கும் தீராது. பெருவாரியான வாக்காளர்கள் ஆப்பிரிக்கர்களாய் இருப்பதால், இது வெள்ளையர்களுக்குப் புரட்சிகரமாய் தோன்றலாம். இதனால் வெள்ளையர்கள் ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சலாம். ஆனால் இன ஒற்றுமைப் பூத்து, எல்லோரும் சுதந்திரம் அடைய வரலாறு தந்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை வெள்ளையர்களின் அச்சம் கண்டு ஒதுக்கிவிடக் கூடாது.
வாக்குரிமை அளிப்பதால், இனத் துவேஷம் ஏற்பட வாய்ப்பில்லை. நிற அடிப்படையிலான அரசியல் பிளவுகள் முற்றிலும் செயற்கையானது. அவை ஒழிந்தால், ஒரு நிறம் மற்றொரு நிறத்தை அடிமை செய்யும் போக்கும் ஒழிந்துவிடும். கடந்த 50 ஆண்டுகளாக இனவாதத்திற்கு எதிராய் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. இது நிச்சயம் வெற்றிபெறும். வெற்றிபெற்ற பிறகும் கொள்கையில் மாற்றம் இருக்காது.
இதற்காகத்தான் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் போராடுகிறது. எங்களது போராட்டம் தேசியமயமானது. எங்கள் துயரத்திலும் வேதனையிலும் ஆப்பிரிக்க மக்களின் எதிர்காலக் கனவு குடிகொண்டிருக்கிறது. எல்லோரும் சமமாய் வாழ்வதற்கான உரிமைப் போராட்டம் இது.
எனது வாழ்வை ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருக்கிறேன். கறுப்பின ஆதிக்கத்தையும் வெள்ளையின ஆதிக்கத்தையும் சேர்த்தே எதிர்க்கிறேன். ஜனநாயகப் பூர்வமாய் எல்லோரும் ஒன்றிணைந்து சமத்துவமாய் வாழும் நாளை உச்சிமுகர்ந்து வரவேற்கிறேன். எல்லோர்க்கும் சரிசமமான வாய்ப்புகள் ஏற்படவேண்டும். இந்த ஒரு கொள்கை நிறைவேறுவதைக் காணத்தான் நான் உயிர்வாழ ஆசைப்படுகிறேன். எனதன்புக் கடவுளே, இந்த ஒரு சித்தாந்தம் மட்டும் நிறைவேறும் என்றால், நான் இப்போதே செத்து மடியத் தயார்.
0