Skip to content
Home » காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

லெனின்

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இதற்கு காரணகர்த்தாவாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் பதுங்கி இருந்தார்.

ரஷ்ய ராணுவத்தின் துப்பாக்கிகள் உலகப் போரிலும் உள்ளூர் போரிலும் மாறி மாறி வெடித்தன‌. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மென்ஷ்விக் கட்சியினர், சோவியத்தைக் கைப்பற்றினார்கள். வாராது வந்த மாமணியை அப்படியே ஜார் கைகாட்டிய இளவரசரிடம் தூக்கிக் கொடுத்தனர்.

லெனினுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படியாவது பெட்ரோகிரேட் செல்ல வேண்டும் என்று இருந்தது அவருக்கு. இம்முறை ஜெர்மனி உதவி செய்தது. அடைக்கப்பட்ட ரயில் பெட்டியில் யாருக்கும் தெரியாமல் தன் மனைவி நதேஷ்தாவுடன் லெனின் பெட்ரோகிரேட் வந்து சேர்ந்தார்.

பின்லாந்து ஸ்டேஷனில், கிரொன்ஸ்டாட் நகரக் கடற்படை வீரர்கள் கோடு போட்ட சட்டையும் சிகப்பு நிற குல்லாவும் அணிந்து லெனினுக்கு சிறப்பு மரியாதை அளித்தனர். அங்கிருந்து பேரரசுக்கான காத்திருப்பு அறைக்கு லெனின் அழைத்துச் செல்லப்பட்டார்.

அடர்த்தி மிகுந்த பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் லெனின் பேசுகையில், போல்ஷ்விக்குகள் இனி ஒருபோதும் மென்ஷ்விக்குகளுக்கு ஆதரவாய் இருக்க மாட்டார்கள் என்று போட்டு உடைத்தார். உடனடியான உள்நாட்டுப் போருக்கு அழைப்பு விடுத்ததோடு, சர்வதேசப் புரட்சிக்கும் உரம் வீசினார்.

இந்தக் காலகட்டத்தில் லெனின் பேசிய மூன்று உரைகளின் தேர்ந்தெடுத்த பகுதிகள் குறிப்புகளுடன் இங்கே இடம்பெறுகின்றன. முதல் ரஷ்ய புரட்சி ஏற்பட்டு மென்ஷ்விக் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மூன்றாவது புரட்சி ஏற்பட்டு சோவியத் அரசாங்கம் அமையும் வரை இடைக்கால வரலாற்றை லெனினின் உரைகளின் ஊடாக பார்ப்பது, தொழிலாளர் புரட்சியின் அடிமட்டத்திலிருந்து வரலாறு படிக்கும் லயத்தை ஏற்படுத்தும்.

0

லெனின்

அன்பு தோழர்களே, போர் வீரர்களே, கடற்படை வீரர்களே, எனதருமை தொழிலாள நண்பர்களே!

ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துச் செய்தியைத் தனித்தனியாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகப் பாட்டாளி வர்க்கப் பெருந்திரள் ராணுவத்தின் அசைக்கமுடியாத துருப்புகளாய் நீங்கள் இருந்திருக்கிறீர்கள் . . . ஐரோப்பா முழுதும் ஏற்பட்டுவரும் மொத்த உள்நாட்டுக் கலவரங்களுக்கும் கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போரே தொடக்கக் காரணியாக இருக்கிறது . . .

சுரண்டிக் கொண்டிருக்கும் தன் முதலாளிக்கு எதிராய் ஆயுதங்களை ஏந்த மக்களுக்கு வெகுகாலம் தேவைப்படாது . . . பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய சோசலிசப் புரட்சி ஏற்கெனவே உதயமாகிவிட்டது . . . ஜெர்மானியர்கள் இப்போது கொதித்துக் கொண்டிருப்பார்கள் . . . எப்போது வேண்டுமானாலும் ஐரோப்பாவில் முதலாளித்துவம் சுக்குநூறாக உடைந்துபோகலாம். நீங்கள் வெற்றியடையச் செய்த ரஷ்யப் புரட்சி புதிய சாளரத்தைத் திறந்திருக்கிறது; புதிய சகாப்தத்தைப் பெற்றெடுத்திருக்கிறது. உலகளாவிய சோசலிசப் புரட்சி நீடூழி வாழ்க!

0

(லெனின் அந்த அறையை விட்டு வெளியேறிய போது, ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. குத்துவாள் ஏந்திய துப்பாக்கியுடன் வீரர்கள் பின்வர, வாட்டசாட்டமான அதிகாரி ஒருவர் லெனினுக்கு வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தினார்.

பெட்ரோகிராட்டில் இருந்து லெனினை வாழ்த்துவதற்காக வந்த ஆயிரக்கணக்கான புரட்சிகரத் தொழிலாளர்களும் கடற்படை வீரர்களும் விண் அதிர ஆர்ப்பரித்தனர். வீரர்கள் தங்கள் ஆயுதங்களைப் போர் தளபதியிடம் கொடுக்க, அதை அவர்கள் லெனின் வசம் ஒப்படைத்தனர். லெனின் பேச மாட்டாரா என்று மக்கள் கிசுகிசுத்தனர். சில அடிகள் எடுத்து வைத்த பின்னர், தன் போலர் தொப்பியை கழட்டிவிட்டு லெனின் பேசத் தொடங்கினார்).

0

தாற்காலிக அரசு உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சர்க்கரைப் பாகுபோல் இலகுவாகப் பேசி, வாக்குறுதிகளால் கோட்டை கட்டி மேடை அமைத்தபோதே ஒட்டுமொத்த ரஷ்ய மக்களையும் இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்பதை நான் அறிந்தேன். மக்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிலமும் ரொட்டித் துண்டும் தேவை.

ஆனால் இவர்கள் பஞ்சமும் பசியும் உண்டாக்கி, போர்கள் ஏற்படுத்தி, நிலக்கிழார்களிடம் எஞ்சிய சொற்ப நிலத்தை மக்களுக்கு வழங்குகிறார்கள். வீரர்களே எனதருமை தோழர்களே, இறுதிவரை புரட்சிக்காகப் போராடுங்கள்.

0

(ஜூலை 18 வரை லெனின் பெட்ரோகிரேட்டில் இருந்தார். அதற்குப்பின் மென்ஷ்விக்குகளைக் காலி செய்ய அவர்கள் ரகசியமாய் தீட்டிய திட்டம் தோல்வியில் முடிந்ததால், பின்லாந்துக்கு தப்பிச் சென்றார். அக்டோபர் 23இல் மீண்டும் பெட்ரோகிரேட் திரும்பிய லெனின், அங்கிருந்தபடியே போராட்டத்தை நெறிப்படுத்தினார்.

எல்லா அரசு அலுவலகங்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அக்டோபர் 25இல் இருந்து போஷ்விக்குகளின் ஆட்டம் தொடங்கியது. நகரின் முக்கிய இடங்களைத் தன்வயப்படுத்தினர். மென்ஷ்விக் உறுப்பினர்கள் தப்பி ஓடினார்கள், மிஞ்சியவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்.

தொழிலாளர் மற்றும் வேளாளர் புரட்சி வெற்றியடைந்ததை அடுத்து, அன்றைக்கு மதியம், பெட்ரோகிரேட் ஒன்றியத்தில் மாபெரும் கூட்டமொன்றை லெனின் ஏற்பாடு செய்தார்).

0

தோழர்களே, போல்ஷ்விக்குகள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் தொழிலாளர் மற்றும் வேளாளர்களின் புரட்சி நன்றாகச் சூடுபிடித்திருக்கிறது.

இதன் முக்கியத்துவம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் சோவியத் அரசின் எல்லாவித அதிகாரங்களும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பூர்ஷ்வாக்களுக்கு இதில் துளி பங்கு கிடையாது. ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களுக்கென்று ஓர் அதிகாரத்தை நிர்மாணிக்கும். பழைய அரசு இயந்திரங்களை அடிமட்டத்திலிருந்து பெயர்த்து, புதிய ஆட்சியதிகாரத்தை சோவியத் ஒன்றியங்களாக உருவாக்குவோம்.

இப்போதிருந்து ரஷ்ய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.‌ சோசலிசத்தை நிலைநிறுத்திய பிறகுதான் இந்த மூன்றாவது ரஷ்யப் புரட்சிக்கு முடிவு வரவேண்டும்.

(உலகப்) போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இது இந்தக் கணத்தின் அவசியத் தேவையாக இருக்கிறது. முதலாளிகளோடு தொடர்புடைய இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் பெரும் சேதங்கள் ஏற்படலாம். இதற்காக நாம் முதலாளித்துவத்தையே எதிர்த்துப் போரிட வேண்டும்.

இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்கெனவே தோன்றியிருக்கும் மாபெரும் புரட்சி அலை, நமது போராட்டத்திற்கு பெரும் பலம் சேர்க்கும்.

உடனடியாக அமைதி திரும்ப, சர்வதேச அளவில் ஜனநாயகம் பூக்க நாம் முன்னெடுத்திருக்கும் இந்தப் போராட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும். எல்லா ரகசிய ஒப்பந்தங்களையும் இப்போதே அம்பலப்படுத்தி, பாட்டாளி மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவோம்.

‘நாங்கள் நெடுங்காலம் முதலாளிகளோடு பயணித்துவிட்டோம். இனி வரும் சொற்ப காலத்தையாவது பாட்டாளிகளோடு பகிர்ந்து கொள்கிறோம்’ என்று ரஷ்யாவிலிருக்கும் பெரும்பாலான குறுநில விவசாயிகள் சொல்கிறார்கள்.

நிலவுடைமை சொத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்று ஒரே ஒரு ஆணை பிறப்பித்துவிட்டால் போதும், பாட்டாளிகளுக்குத் தெம்பு கிடைத்துவிடும். உழவர்களோடு சமாதானம் பேசாத வரை, குறுநில விவசாயச் சண்டைகள் ஓயாது. தேர்ந்த உழைப்பாளிகளைக் கொண்டு உற்பத்தியின் மீது நியாயமான கட்டுப்பாடு விதிக்கலாம்.

நாம் இப்போது ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள கற்றுக்கொண்டு விட்டோம். இப்போது ஏற்பட்ட புரட்சி ஒன்றே அதற்கு முழுமுதல் சான்று. நம்மிடம் இப்போது பெருவாரியான மக்கள் பலம் இருக்கிறது.‌ இதனைக் கொண்டு சகலமும் கைப்பற்றலாம். உலகப் புரட்சிக்குப் பாட்டாளிகளை அழைத்துச் செல்ல, இந்த மக்கள் பலம் ஒன்றே போதுமானது.

ரஷ்யாவில் இப்போது பாட்டாளி வர்க்க சோசலிச அரசை நாமெல்லாரும் அமைக்க வேண்டும். உலகளாவிய சோசலிசப் புரட்சி நீடூழி வாழ்க!

0

(அன்று மாலையே, அனைத்து ரஷ்ய சோவியத் கூட்டமைப்பு ஒன்றுகூடியது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தொழிலாளர், போர்வீரர் மற்றும் விவசாயப் பெருமக்களிடம் ஒப்படைப்பதாய் அந்த அமைப்பு அறிவித்தது. லெனின் மேடையில் நின்றிருந்தார். பெருத்த கரவொலிகளால் மக்கள் அவரை வாழ்த்தினார்கள். கைகள் ஓய்ந்த பிறகு சன்னமான குரலில், ‘நாம் இனி சோசலிச அரசை கட்டமைக்கும் பணிகளில் இறங்குவோம்’ என்று லெனின் சொன்னார். மீண்டும் பலத்த ஆரவாரம்.

அமைதி மற்றும் போர் சமாதான ஆணைகளை அனைத்து ரஷ்ய சோவியத் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. மக்கள் ஆணையர் குழுவில் இன்னின்னார் இருக்கலாம் என்று அன்றைக்கே ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்படித்தான் உலகின் முதல் தொழிலாளர் மற்றும் குறுநில விவசாயிகளின் அரசாங்கம் உருவானது).

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *