Skip to content
Home » காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட்

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.

1913இல் வன்முறையைத் தூண்டியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு ‘எலியும் பூனையும்’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் உண்ணாநோன்பு இருந்து உடலை வருத்தி, கவலைக்கிடமான நிலைக்குச் சென்றார். வேறுவழியில்லாமல் அரசு அவரை விடுதலை செய்தது. அதற்குப் பின்னும் 12 முறை கைது செய்யப்பட்டார். இத்தனைப் போராட்டமும் உடல்வலியும் எதற்கு? மகளிர் வாக்குரிமை வேண்டித்தான்!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த எம்மலின், மகளிர் வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்த முதல் பெண்ணாக அறியப்படுகிறார்.‌ 20ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த 100 மனிதர்களுள் இவரும் ஒருவரென டைம் வார இதழ் மகுடம் சூட்டியுள்ளது. தன் தள்ளாத உடல்நிலையிலும் ஸ்ட்ரெச்சரில் சென்று பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இவரின் இடைவிடாத போராட்டத்தால் 1918 தேர்தலில் பெண்கள் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 1928இல் முழு வாக்குரிமைப் பெற்றனர். அந்த ஆண்டே எம்மலினும் இறந்துபோனார்.

எம்மலின் 1909 மற்றும் 1911இல் நிதி திரட்டும் பொருட்டு ஏற்கெனவே அமெரிக்கா சென்றிருக்கிறார். ஆனால் இந்தமுறை அவரின் அமெரிக்கப் பயணம் வித்தியாசமாக அமைந்தது. 1913ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஹார்ட்போர்டில் பேசுகையில், ‘தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலையில் மிகக் கொடுமையான உடல் வேலைகளை தாங்கிக் கொள்ளும் அளவு தான் ஏன் அத்தனை அபாயகரமான பெண்மணி’ என்று விளக்கியுள்ளார்.

0

எம்மலின் பான்கர்ஸ்ட்

நான் இங்கு விவாதம் செய்ய வரவில்லை. அமெரிக்காவில் வாக்குரிமைக்கான போராட்டம் எப்படி இருந்தாலும் அது இங்கிலாந்தில் வாக்குவாத நிலையைத் தாண்டி நடைமுறை அரசியலுக்கு வந்துவிட்டது. மக்கள் இயக்கமாகவும் புரட்சிப் பொருளாகவும் வாக்குரிமைப் போராட்டம் வலுப்பெற்று விட்டது. ஆகவே நான் இன்றிரவு பெண்கள் வாக்குரிமைப் பற்றி பேசப்போவதில்லை. அமெரிக்க வாக்காளர்களே அதை மிக நன்றாகச் செய்வார்கள்.

களத்திலிருந்து தற்காலிகமாய் வெளியேறிய ஒரு வீராங்கனையாக, உள்நாட்டுப் போரின் தீவிரத்தை எடுத்துக்கூற வந்திருக்கிறேன்; பெண்களால் நடத்தப்படும் உள்நாட்டுப் போர் எத்தனை வித்தியாசமானது என்பதை உங்களுக்குச் சொல்லிப்போக வந்திருக்கிறேன். இதைக்கூட ஒருவர் முன்வந்து சொல்லவேண்டும் என்பது வேடிக்கையாக இல்லையா?

களத்திலிருந்து தாற்காலிகமாய் வெளியேறிய வீராங்கனையாக மட்டும் நான் வரவில்லை. எங்கள் நாட்டு சட்ட மன்றங்கள் சொல்வதுபோல, சமூகத்திற்குத் துளியும் பயனில்லாத நபர் என்று முத்திரைக் குத்தப்பட்ட பெண்ணாக வந்திருக்கிறேன். அந்த வகையில் எனது வரவு கொஞ்சம் வித்தியாசமானது.

தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலையில் மிகக் கொடுமையான உடல்வேலைகளை தாங்கிக் கொண்டு, அபாயகரமான பெண் என்று அறியப்பட்ட ஒருவர்தான் உங்களிடம் இன்றைக்கு உரையாற்றப் போகிறார். ஆகவே இந்த உரையை காது கொடுத்து கேட்பதில் உங்களுக்கு ஓர் ஆர்வம் உண்டாகும்.

உங்களில் பலருக்கும் இப்போது ஒரு கேள்வி எழும்.‌ நான் ஒரு கைதியா, வீராங்கனையா? என்னைக் கேட்டால், இரண்டுமே. இந்தச் சிறிய உறுத்தலை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான் பேசத் துணிகிறேன்.

பெண்கள் கையாண்டு வரும் போர்நெறிகளை அவ்வளவு சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் செய்து வரும் காரியத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘போர்நெறி’ என்ற வார்த்தையால் விவரிக்கத் தொடங்கிவிட்டோம். நாங்கள் மேற்கொண்ட முதல் போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறிவிட்டது. உண்மையில் அது போர் தாக்குதல் கூட இல்லை. அதை எதிர்த்தவர்கள் மீது போர்த் தாக்குதல்களை தூண்டிவிட்டோம், அவ்வளவுதான்.

அரசியல் பொதுக் கூட்டங்களில் பெண்களின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போனாலும், அதை முன்னிறுத்தி அவர்கள் போரிடவில்லை. பொதுவாக அரசியல் கூட்டங்களில் கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எங்கள் நாட்டில் பல ஆண்டுகளாக ஆண்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அமெரிக்காவிலும் கூட ஆண்கள் இந்தச் சலுகையை அனுபவிக்கிறார்கள் என்று அறிகிறேன்.

நாளைக்கு சட்டமன்றத்தில் நுழையப்போகும் ஆட்சியாளரிடம் நீங்கள் ஒன்றிரண்டு கேள்விகளைக் கூட உதிர்க்கவில்லை என்றால், குடியுரிமை வழங்கிய அடிப்படை குடிமக்கள் கடமையை நீங்கள் மீறியதாகத்தானே பொருள்? எது எப்படி இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாளும் நபர்களையும் கேள்வி கேட்பதென்பது பிரிட்டனில் மரபுவழிப்பட்ட வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் வாக்குரிமை பற்றிய விவாதம் எழுவதற்கு முன்புவரை, எந்தவொரு தனிநபரும் கேள்வி எழுப்பியதற்காக பொதுக்கூட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதில்லை. அவ்வாறு முதன்முதலில் தூக்கியெறிப்பட்டவர்கள், பெண்கள். அவர்களைக் கொடூரமான முறையில் பலிதீர்த்து, அடுத்த 24 மணிநேரத்திற்குள் சிறையில் அடைந்து துன்புறுத்தினார்கள்.

துன்புறுத்தப்படும் பெண்கள் மீது பச்சாதாபம் தோன்றி, அநியாயத்திற்கு துணைப்போன அதிகார மட்டத்திற்கு எதிராய் போரிடத் தயாராகுங்கள் என்று சொல்ல வேண்டிய பத்திரிகைகள், பெண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் போர்க்குணம் மிக்க குற்றவாளிகள் என்றும் அபாண்டமாகக் குறை சொன்னார்கள். பெரும்பாலான பத்திரிகைகள் அரசியல்வாதிகளிடம் விலை போயிருந்தன.‌

கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்த அரசியல்வாதிகளும், கூட்டத்தில் இருந்த மக்களும்தான் நொந்துகொள்ள வேண்டியவர்கள். ஆனால் அவர்களை வசதிப்படி விட்டுவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு வீதியில் இறங்கி கண்டனக் கூட்டம் கூட்டிய அப்பாவிப் பெண்களை அவர்களின் முட்டிக் காயங்களை பொருட்படுத்தாமல், சிராய்ப்புகளுக்கு மருந்து பூசாமல் சிறையில் அடைத்து வதைப்பது எந்தவகையில் நியாயம்?

அத்தோடு எங்களை வன்முறை வீரர் என்று அடையாளப்படுத்தினார்கள். நாங்களும் அதை உவந்து ஏற்றுக் கொண்டோம். ஏனென்றால் மரபுவழிப்பட்ட தேவலாய வீரர்களுக்கு, ஆன்மீகப் பார்வையில் பார்க்கும்போது நாங்கள் அதிதீவிர வன்முறையாளராகத் தோன்றுவது இயல்புதானே? பெண்களின் வாக்குரிமை பற்றிய வாதத்தை அரசியல்வாதிகள் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காக கடந்த ஐம்பது வருடங்களாக இந்தக் கேள்வியை அழுந்தம் திருத்தமாக பதிவு செய்துவருகிறோம். அதற்கிடைப்பட்ட காலத்திலும், எப்படியாவது வாக்குரிமை பெற்றுவிட மாட்டோமா என்று அமைதியான முறையில் முயற்சிக்காத நாளில்லை.

உண்மையிலேயே நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், செயற்கையாக அனுதாபம் தோன்றும்படி நடப்பதைத் தவிர்த்து விடுங்கள். இயற்கையாகவே அனுதாபம் தோன்றாவிடில் எடுத்த காரியம் திருப்தியளிக்காது. ஒருபோதும் பயனளிக்காத செயற்கையான அனுதாபங்கள் வாக்குரிமை போராளிகளை எந்த அளவும் அசைத்துப் பார்க்க முடியாது.

நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள், அதை அனுதாபத்தால் சாதிப்பதா – பயத்தால் சாதிப்பதா – இல்லை சமூகத்தில் மீண்டும் வசதியாக இருக்கவேண்டி சாதிப்பதா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். குறிப்பாக நீங்கள் விரும்பிய மாற்றத்தை அடையும் நாள்வரை இதுகுறித்து சிந்திக்காதீர்கள்.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக போதுமான அனுதாபத்தைச் சம்பாதித்து விட்டோம். அதனால் என்ன மாறிவிட்டது? ‘பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத நீங்கள், எங்கள் வாழ்விலும் தலையிடாதீர்கள்! அதை நாங்கள் வெறுக்கிறோம்’ என்று சொல்லும் உரமான ஆண்மக்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.‌ அதைவிட்டு வருடா வருடம் மேடையில் ஏறி பெண்கள் வாக்குரிமைப் பற்றி எங்களோடு அனுதாபம் பகிர்ந்து கொள்ளும் கனவான்களால் என்ன பிரயோஜனம்?

‘இவர்களைச் சிறையில் தள்ளுங்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘இந்தப் போராட்டங்களை அவை மட்டுப்படுத்தும்’ என்று எண்ணினார்கள். ஆனால் உண்மையில் இந்தப் போராட்டங்கள் அத்தோடு ஓயவில்லை. காமன்ஸ் சபையின் கதவுகளைக் கோரிக்கை மனுக்கள் ஏந்தி அணுகினால், நாம் அவர்களை தொல்லை செய்வதாய் வழக்கு தொடுத்து நெடுங்காலம் சிறையில் வைத்தார்கள். சிறைக்கு அனுப்பி, நாள் முழுவதும் கடுங்காவலில் வைத்தால் எல்லாத் தொல்லைகளும் முடிந்துவிடும் என்று நம்பினார்கள். ஆனால் ஒருபோதும் அப்படி நிகழவில்லை.

விட்டுக் கொடுப்பதற்குப் பதில் நாளாநாளைக்கு எண்ணிக்கை அதிகமானது. நூறு, இருநூறு என்று ஒரேநேரத்தில் முந்நூறு பெண்கள் அணிதிரண்டார்கள். அரசியல்வாதிகள் சொன்னதைப் போல், ‘தங்களை தொந்தரவு செய்ததைக் காட்டிலும்’ வேறு எந்தச் சட்ட திட்டத்தையும் இவர்கள் மீறவில்லை.

‘மனிதர்களின் சம்மதம் இன்றியே நீங்கள் அவர்களை ஆளமுடியும்’ என்பதுதான் வாக்குரிமை வேண்டாம் என்போரும், பெண் வாக்குரிமையை விமர்சிப்போரும் சொல்லும் மேம்போக்கான வாதம். ‘அரசாங்கம் அதிகாரத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வலிமையற்ற பெண்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்’ என்றார்கள்.

ஆனால் நாங்கள் சொல்கிறோம், ‘அரசாங்கம் அதிகாரத்தினால் அல்ல மக்கள் வழங்கும் நம்பிக்கையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.’ பெண்கள் அநியாயமாய் ஆளப்படுவதை ஏற்றுக்கொள்ளும் வரை அவர்கள் வைப்பதுதான் சட்டம்.

இப்போது பெண்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ‘நியாயமான அரசு அமையும்வரை நாங்கள் எங்கள் சம்மதத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்’ என்கிறார்கள். உள்நாட்டில் கலகம் உண்டாக்கி பலம் குன்றிய பெண்களை ஆட்சி செய்யலாம் என்று நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது. உங்களால் அந்தப் பெண்ணை கொலை செய்ய முடியும். ஆனால் ஆட்சிச் செய்ய முடியாது. அதிலிருந்து அவள் தப்பித்து விடுவாள். அதற்குத்தான் மிகப்பெரிய ஆர்பாட்டக் கூட்டத்தை உலகின்முன் ஏற்படுத்தி வருகிறோம்.

பெண்களால் வெற்றிப் பெற முடியாது என்று நினைத்தவர்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.‌ இங்கிலாந்து அரசாங்கத்தையே அதுவா இதுவா என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு கொண்டுவந்து விட்டோம். இங்கிலாந்து அரசுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று பெண்களைக் கொலை செய்ய வேண்டும் இல்லையெனில் வாக்குரிமை வழங்க வேண்டும். இங்குக் கூடியிருக்கும் அமெரிக்க ஆண்களை நான் கேட்கிறேன். இதே மாதிரியான சூழலில் நீங்கள் எந்த முடிவை தேர்ந்தெடுப்பீர்கள்?

உங்கள் வாழ்வின் இன்றியமையாத இடத்தை ஆக்கிரமித்து, பெரிதும் மதிக்கும் பெண்களைக் கொலை செய்வீர்களா இல்லை வாக்குரிமை வழங்கி நிம்மதியாக வாழ அனுமதிப்பீர்களா? தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லாவிட்டாலும் உங்கள் சமூகத்தோடு ஒன்றி வாழும் பெண்களை, சுதந்திரம் வேண்டி அலையும் அப்பாவிப் பெண்களை, பொதுத்துறையில் அதிகாரம் செலுத்த விரும்பினால் அலைக்கழித்து கொலை செய்வீர்களா இல்லை வாக்குரிமை வழங்குவீர்களா?

இந்தக் குழப்பத்திற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. நாகரிகம் அடைந்த பின்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் பின்னோக்கிதான் நான் சிந்திப்பேன் என்றால், தயங்காமல் கொலை செய்யலாம். இல்லையென்றால் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைத் தவிர வேறு வழி கிடையாது. இந்த வழியைத்தான் உள்நாட்டிப் போரில் நாங்கள் அடைந்திருக்கிறோம்.

மனித வாழ்வை பணயம் வைத்து, ரத்தம் சிந்தி புரட்சி செய்தபோது நீங்கள் அமெரிக்காவில் சுதந்திரம் பெற்றீர்கள். நீக்ரோக்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராடிய போதும் மனித வாழ்வைத் துச்சமென்று கருதி தெருவில் இறங்கி உள்நாட்டுப் போரில் கலந்து கொண்டீர்கள்.

நாகரிகம் அடைந்த சதா மூன்றாம் தேச ஆண்களைப்போல, பெண்களின் உரிமையை அவர்களே முன்வந்து போராடி அடையவேண்டும் என்று நீங்களும் கைவிரித்து விட்டீர்கள். அந்த வழியில்தான் இங்கிலாந்து பெண்களாகிய நாங்களும் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை மனித உயிர் புனிதமானது. மரித்துப்போகும் ஒவ்வொரு உயிரும் நமக்குச் சொந்தமானது. ஆகவே தற்கொலை செய்யும் முடிவை நாமே கையில் ஏந்தவேண்டாம். விடுதலையோ வீரமரணமோ நம் எதிரிகளே முடிவுசெய்யட்டும்.

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *