Skip to content
Home » காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைன் கோட்பாடு விளக்கியிருந்தது. அதை மேலும் ஆய்வு செய்த இயற்பியலாளர் லியோ சில்லார்ட் 1933இல் அணுக்கருவின் தொடர் சங்கிலி விளைவுகளைக் கண்டறிந்தார். இதனைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யலாம் என்று அந்த இரண்டு பக்கக் கடிதத்தில் ஐன்ஸ்டைன் விவரமாக எழுதினார்.

அபரிமிதமான ஆற்றல், ரேடியம் போன்ற கனிமங்கள் விளையும் என்பதைத் தாண்டி பேரழிவு ஏற்படுத்தும் பிரம்மாண்ட அணுகுண்டுகள் தயாரிக்கலாம் என்ற யோசனையும் அந்தக் கடிதத்தில் இருந்தது. ஆனால் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் $6000 ஒதுக்கி, ‘யுரேனியம் கமிட்டி’ ஒன்று ஏற்பாடு செய்துவிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சி மந்தநிலையில் இருந்தது. 1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவின் பர்ல் துறைமுகத்தை ஜப்பானியர்கள் தாக்குவதற்கு ஒருநாள் முன்புதான் ஆராய்ச்சி நிலையில் இருந்த இந்தத் திட்டம் ‘மன்ஹாட்டன்’ திட்டமாக வலுப்பெற்றது.

அதற்கடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பதில் தாக்குதல் செய்த அமெரிக்க ராணுவம், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை நாசமாக்கியது நாமெல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாய் இருந்தது ஐன்ஸ்டைன் அனுப்பிய கடிதம். ஆனால் அழிவு ஏற்படுத்த வேண்டும் என்பது அவர் எண்ணம் அல்ல.

1930களின் இறுதியில் ஜெர்மனி அணுகுண்டுகள் தயாரிப்பதாக ஒரு செய்தி கசிந்து உலகையே அச்சுறுத்தியது. முந்திக்கொண்டு கண்டுபிடித்தால் பேரழிவைத் தடுக்கலாம் என்று யோசித்த ஐன்ஸ்டைனின் எண்ணம் பின்னாளில் அவர் பெயருக்கே களங்கம் சேர்த்தது.

பேரழிவைத் தடுக்கச் சொன்ன யோசனை, பேரழிவிற்கே காரணமானதை எண்ணி நொந்துபோனார் ஐன்ஸ்டைன். ஹிரோஷிமா தாக்குதல் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு 1945ஆம் ஆண்டின் டிசம்பர் 10ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஆஸ்டர் ஹோட்டலில் கூடிய நோபல் பரிசு நிறுவனம், இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐன்ஸ்டைன் இயற்பியலாளர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என சகலருக்கும் சொல்லும் விதமாக உலகம் அமைதி நோக்கி பயணிக்க வேண்டும் என்று தன் சோசலிச சமத்துவக் கனவை வெளிப்படுத்தினார்.

0

கனவான்களே, பெண்மணிகளே!

இந்த வருடம் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு மற்றொரு சிறப்பம்சம் கூடியிருக்கிறது. ஆண்டுக் கணக்கான கொடிய போராட்டத்திற்குப் பிறகு நாம் இப்போது நிம்மதியாக வாழ்கிறோம். இல்லையெனில் நிம்மதியாக வாழ்வதாய் எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். தெரிந்தோ தெரியாமலோ, அணுகுண்டுப் பிரயோகத்தில் முக்கிய அங்கம் வகித்த பல இயற்பியலாளர்களை இன்றைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கவேண்டும்.

இந்த இயற்பியலாளர்கள் யாருக்கும் ஆல்பிரட் நோபல் போல் கனிவோடு வாழ வரலாறு இடம் கொடுக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில், உலகின்‌ மிக சக்திவாய்ந்த வெடிமருந்தை அவர் கண்டுபிடித்தார். அதனால் அசகாய அழிவுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதற்குப் பிராயச்சித்தம் தேடும் பொருட்டு, மனித குல மேன்மைக்காக அமைதியை முன்னிறுத்தி தன் பெயரால் உலக அமைதிப் பரிசுகளை வழங்க விரும்பினார்.‌

இன்றைக்கு உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை உருவாக்க‌ துணைநின்ற இயற்பியலாளர்கள், ஆல்பிரட் நோபலைப் பற்றி கேள்விப்படும்போது உடைந்து போவார்கள். இதனால் அவர்கள் குற்றவாளி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்யும் குற்றத்தின் விளைவுகளையாவது நாம் எடுத்துச் சொல்லவேண்டும் அல்லவா? புரியும்வரை மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்.

சொல்லொணாப் பேரழிவுகளை ஏற்படுத்தி, எதிர்காலத்தை இருட்டடிக்கும் எண்ணவோட்டத்தில் இருந்து உலக நாடுகளை திசை திரும்பி, அன்பின் பாதையில் அழைத்துச் செல்வோம். அதுவரை நம் முயற்சிகள் தளர்ந்து போகாமல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.

மனிதகுலத்தின் எதிரிகள் நமக்கு முன்னால் இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதை உருவாக்குவதில் நாங்கள் முனைப்போடு வேலை பார்த்தோம். ஒருவேளை நமக்கு முன்பே, நாஜிகள் இதைக் கண்டுபிடித்திருந்தால் நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத பேரழிவு ஏற்பட்டிருக்கும். உலகின் பிற பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த உலகின் பாதுகாவலராய் நினைத்து, அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களிடம் நாங்கள் இந்த ஆயுதத்தை ஒப்படைத்தோம். அவர்கள் அமைதிக்காகவும் விடுதலைக்காகவும் போராடுவார்கள் என்று நம்பினோம். ஆனால் அட்லாண்டிக் சாசனத்தில் சொன்னபடி, அமைதி பரப்புவதற்கோ அடிமை தேசங்களுக்கு விடுதலை வழங்குவதற்கோ இதுநாள் அவர்கள் எதுவும் செய்யவில்லை.

போரில் ஜெயித்துவிட்டோம். ஆனால் அமைதி பூப்பது எப்போது? சண்டைப் போடுவதில் ஒன்றிணைந்த உலகப் பேரரசுகள், சமாதானம் நாட்டுவதில் சமரசம் அடையாமல் பிளவுப்பட்டு இருக்கின்றன.‌

அச்சுறுத்தல் இல்லாமல் உலக மக்கள் நிம்மதியாய் வாழ்வார்கள் என்று உறுதியளித்தார்கள். ஆனால் போர் முடிந்த பின்னர் உலகமே பீதியில் உறைந்துவிட்டது. தேவைகளில் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிறைவாய் வாழ்வார்கள் என உறுதியளித்தார்கள். ஆனால் போர் முடிந்த பிற்பாடு பலர் பசியில் வாடுவதும், சிலர் அளவுக்கு அதிகமாய் சொத்து சேகரித்து உல்லாசமாய் வாழ்வதும் கண்கூடாகத் தெரிகிறது.

உலக நாடுகளுக்கு விடுதலை தந்து நீதியை நிலைநாட்டுவதாய் உறுதி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் பாஷையில் ‘விடுதலை’ என்பது எத்தனைக் கோரமானது என்பதை நாம் பார்த்துவிட்டோம். இன்றும் பார்க்கிறோம். சுதந்திரம் வேண்டும், சமத்துவம் வேண்டும் என்று யாராவது கேட்டால், அவர்களை ஈவிரக்கமின்றி துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுவார்கள்.

தங்கள் இஷ்டப்படி ஆட்டிவிக்க ஏதாவது ஒரு கட்சியோ, அதிலுள்ள ஆட்சியாளரோ இசைவு தெரிவித்தால் படைபலங்கள் கொடுத்தணுப்பி ஆதரவு தருவார்கள். தேச எல்லைப் பற்றிய குழப்பங்களும் அதிகார வாதங்களும் வழக்கொழிந்து போனாலும் பொதுநலன் மற்றும் நீதி குறித்த அத்தியாவசிய கோரிக்கைகளைத் தாண்டி அவை மேலெழும்பி நிற்கின்றன.

ஒரே ஒரு நிகழ்வை முன்னிறுத்தி இன்னும் தெளிவாகச் சொல்ல என்னை அனுமதியுங்கள். இதுதான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொதுவான சூழல். என் சொந்த, யூத இன மக்களைப் பற்றி நான் சொல்கிறேன்.

யூதர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாஜி படையும் வன்முறையைக் கையாண்டபோது மூன்றாம் உலக நாடுகள் வெறுமனே வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. அது போதாதென்று ஜெர்மனியை ஆளும் அப்பட்டமான குற்றப் பிண்ணனி உடைய அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன.

ஹிட்லர் ருமேனியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற நினைத்தபோது, மஜ்டனேக், ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாம்கள் நேச நாடுகளின் கையில் இருந்தன. எனவே ஹிட்லரின் விஷவாயுத் தாக்குதல் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் ருமேனியா மற்றும் ஹங்கேரியில் வசித்த யூதர்களைக் காப்பாற்றும் பொருட்டு நிலையான ஒரு முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. யூதக் குடியானவர்களுக்கு பாலஸ்தீனத்தின் எல்லாக் கதவுகளையும் பிரிட்டன் அடைத்துவிட்டது. கைவிடப்பட்ட இந்த யூதக் குடிகளுக்கு ஆதரவு தருவார் ஒருவரும் இல்லை. ருமேனிய மற்றும் ஹங்கேரிய யூதர்களும் ஏற்கெனவே இறந்துபோன தங்கள் சகோதர சகோதரிகளைப் போலக் கேட்பாரற்று இறந்து போனார்கள்.

யூதர்களைக் காப்பாற்றி தன்னால் இயன்ற உதவிகளைச் செய்த டச்சு, ஸ்விஸ் போன்ற ஸ்கேண்டிநேவிய நாடுகளின் வீரதீரமிக்கச் செயல்களை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது. நாஜிப் படைகள் போலந்தைச் சுற்றி வளைத்தபோது, யூத மக்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டி தன் தேச எல்லைகளைத் திறந்துவிட்ட சோவியத் ஒன்றியத்தின் மனிதாபிமான செயலை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. யூதர்களுக்கு உதவி செய்த ஒரே பெருந்தேசம் சோவியத் மட்டுந்தான். ஆனால் இத்தனை உதவிகளுக்குப் பிறகும், எதுவும் நடக்காமல் தடுக்க முடியவில்லை. இன்றைக்கு என்ன ஆனது?

யூத மக்களின் விருப்பத்தைத் துளியும் சட்டை செய்யாமல் ஐரோப்பிய பிராந்தியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இடம் ஒதுக்கினார்கள். போருக்கு முந்தைய யூத மக்களில் ஐந்தில் ஒரு பங்குதான் உயிர் பிழைத்திருந்தனர். ஆனால் அவர்களும் பாலஸ்தீனத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, பசியில் வாடி, குளிரில் நடுக்குற்று விரோதத்துடன் வாழ எத்தனிக்கப்பட்டார்கள்.

இன்றைக்கும் கூட யூத மக்கள் நிம்மதியோடு, பாதுகாப்பாக வாழ எந்தவொரு தேசமும் இடமளிக்க முன்வரவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட பல யூதர்கள் இன்னும் நேசநாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள சித்திரவதை முகாம்களில் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஒன்றே யூதர்களின் அவமானகரமான, நம்பிக்கையற்ற நிகழ்கால சூழலை எடுத்துரைக்கிறது.

யூத மக்கள் பாலஸ்தீனத்தில் நுழைய ஜனநாயக அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், வெள்ளை அறிக்கையைத் தடை செய்ய மும்முரமாக இருந்த மேற்கத்திய நாடுகள், அரேபியப் பகுதியின் பரந்து விரிந்த, மக்கள்தொகை அடர்த்தி குறைந்த ஐந்து நாடுகளின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டியிருந்தது.

ஏழை யூதர்கள் ஐரோப்பாவிலேயே குடியேற வேண்டும். அவர்களின் அறிவாளித்தனத்தை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகச் சொன்னார். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், யூதர்கள் நான் வருகிறேன், நீ வருகிறேன் என்று முன்டியடித்துக் கொண்டு சண்டைப் போடக்கூடாதாம். அவ்வாறு நேர்ந்தால் மீண்டும் வெறுப்புக்கு உள்ளாகி துன்பப்பட நேரலாம் என்று எச்சரித்தார்.

பிரிட்டன் மந்திரியால் எங்களுக்கு உதவமுடியாது என்று நான் பயப்படுகிறேன். ஏனென்றால் அறுபது லட்சம் மக்களை இழந்த யூதர்கள், இயற்கையாகவே உயிர் பயத்தால் மல்லுக்கட்டி நிற்பார்கள். தாமாக விரும்பாவிட்டாலும், நாஜி படையிடம் இருந்து உயிர் தப்பிய மக்கள் கூட்டத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

போருக்குப் பிந்தைய எங்கள் உலகம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. நாங்கள் வெறும் இயற்பியலாளர்கள்தான், அரசியல்வாதிகள் அல்ல. அரசியலில் தலையிடும் விருப்பமும் எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்குத் தெரியாத சில விஷயங்கள் எங்களுக்குத் தெரியும். ஆகவே அந்தப் பொறுப்பான வேலைகளை நினைவூட்டுவது எங்கள் கடமை. அத்தியாவசியங்களைத் தள்ளிப்போட்டு நிலையில்லா எதிர்காலத்தில் சிறிது சிறிதாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் நகர்த்தவும் நமக்கு நேரமில்லை. வெட்டிப் பேரங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

தைரியமாகச் செயல்படச் சொல்லி சூழல் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. நமது ஒட்டுமொத்த அரசியல் பார்வையிலும் தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். இந்த மாபெரும் நிறுவனத்தை ஆல்பிரட் நோபல் நிர்மாணிக்கும்போது எவ்வித உத்வேகத்தில் பயணப்பட்டாரோ, நம்மை வேலை வாங்கும் மனிதர்களிடத்தும் அதே விதமான உத்வேகத்தில் நம்பிக்கையும் உண்மையும் பெருந்தன்மையும் சகோதரத்துவமும் மலரட்டும். இல்லையென்றால் மனிதச் சமூகமே அழிந்துவிடும்.

0

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *