மகளிர் சேவைக்கான தேசிய சங்கத்தில் பேசுவதற்காக ஜனவரி 21, 1931 அன்று வர்ஜீனியா உல்ஃப் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருடைய இலக்கியத் துறை சார்ந்த அனுபவங்களைப் பேசும்படி சங்கத்தின் செயலாளர் கேட்டுக்கொண்டிருந்தார்.
20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியப் பெண் எழுத்தாளராக அறியப்படும் உல்ஃப் தன் படைப்புகளின்வழி பெண்ணியப் பார்வையை ஆழமாகப் பதிவுசெய்தவர். ‘பெண்களுக்கான தொழில்கள்’ என்ற இவ்வுரை அந்தக் காலச் சமூகத்தின் மகளிர் நிலை குறித்த பிரதிபலிப்பாக மட்டுமின்றி இன்றைக்கும் பொருந்தி வருகிறது.
இந்த உரை நிகழ்த்துவதற்கு முந்தைய நாள் தன் டைரி குறிப்பை எழுதும்போது, ‘இன்று குளித்துக் கொண்டிருக்கும்போது எனக்கொரு எண்ணம் தோன்றியது. A Room of One’s Own என்ற புத்தகத்தின் தொடர்ச்சியாகப் பெண்களின் பாலியல் வாழ்க்கையை மையப்படுத்தி, பெண்களுக்கான தொழில்கள் என்றொரு முழுப் புத்தகத்தை எழுதப் போகிறேன். கடவுளே, மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.’
20ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியப் பெண்ணியம் குறித்துத் தெரிந்துகொள்ளவும் வர்ஜீனியா உல்ஃப் குறித்து ஓர் அறிமுகத்தைப் பெறவும் இந்த உரை உதவும்.
0
நான் பேசுவதற்காக உங்கள் செயலாளர் இங்கு என்னை அழைத்தபோது, மகளிர் வேலை வாய்ப்பிற்காக இந்தச் சங்கம் செய்துவரும் பணிகளை ஒன்றுவிடாமல் எடுத்துக் கூறினார். கூடவே, எனது சொந்தப் பணி அனுபவங்களில் இருந்து மேற்கோளிட்டிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். நான் பெண் என்பது உண்மை; நான் வேலையில் இருப்பதும் உண்மை; ஆனால் என்ன செய்கிறீர்கள், என்ன விதமான தொழில் அனுபவம் இருக்கிறது என்று யாரேனும் கேட்டால் பதில் சொல்வது கஷ்டம்.
எனக்குத் தொழில் இலக்கியம். மற்றெந்த துறையைக் காட்டிலும் பெண்களுக்கு மிகவும் அனுபவம் குறைந்த துறை இது. பெண்களுக்கே உரித்தான அனுபவம் குறைந்த துறைகளோடு இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. இங்கிருந்த நீண்ட மரபுச் சங்கிலி என்றோ அறுபட்டுவிட்டது.
ஃபேனி பர்னி, ஆஃப்ரா பென், ஹரியத் மார்டினோ, ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட் போன்ற புகழ்பெற்ற பெண்களும் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட எண்ணிலடங்காத பெண்களும் நான் செல்லும் பாதையைச் சீராக்கிப் பயணத்தை வழிநடத்தி வருகிறார்கள். ஆகவே எழுதத் தொடங்கியபோது மிகக் குறைந்த தடைகளைத் தாண்டினால் போதுமென்று இருந்தது.
எழுதுவது என்பது மரியாதைக்குரிய தீங்கற்ற தொழில். பேனாவைக் கீறி எழுதியதால் குடும்ப அமைதி ஒன்றும் கெட்டுவிடவில்லை. இத்தனைப் பொருள் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் என்னிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே நாட்டம் இருந்தால் பதினாறு பென்னிகளை வைத்து ஷேக்ஸ்பியரின் ஒட்டுமொத்த நாடகங்களை எழுதுவதற்கான தாள்களை ஒருவர் வாங்கிவிடலாம்.
பியானோக்களும் மாடல்களும் பாரிஸ், வியன்னா, பெர்லின் நகர வீதிகளும் எஜமான, எஜமானியர்களும் எழுத்தாளர்களுக்குத் தேவையில்லை. எழுதுவதற்குத் தேவையான தாள்கள் மட்டமான விலையில் கிடைப்பதால் மட்டுமே, மற்றெந்த துறையைக் காட்டிலும் பெண்கள் எழுத்தாளர்களாக ஜொலிக்க முடிகிறது.
நான் இப்போது என் கதையைச் சொல்கிறேன். மிகவும் எளிமையான ஒன்று. படுக்கையறையில் எழுதுகோலுடன் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் உருவகித்துக் கொண்டால் போதும். பத்து மணியில் இருந்து ஒருமணி வரை வெறுமனே பேனாவை இடம், வலமாக அசைத்துக் கொண்டிருப்பது மட்டுந்தான் அவள் வேலை. அதற்குப்பின் அவளொரு காரியம் செய்தாள். எழுதிய சில பக்கங்களை அஞ்சல் உறையில் கடத்தி, மூலையில் ஒரு ஸ்டாம்ப் ஒட்டி அஞ்சல் பெட்டியில் போட்டாள். அப்படித்தான் நானொரு பத்திரிகையாளர் ஆனேன்.
எனது உழைப்பிற்கு அடுத்த மாதமே வெகுமதி வந்தது. வாழ்வில் மிகவும் மறக்கமுடியாத நாள். பத்திரிகை ஆசிரியரிடமிருந்து ஒரு பவுண்டு பத்து ஷில்லாங் மற்றும் ஆறு பென்னிகளுக்கான காசோலை வந்து சேர்ந்தது. நானொரு தொழில்முறை சார்ந்த பெண் என்று அழைக்கப்படுவதற்கு எத்தனைத் தூரம் தகுதியானவள் என்பதை எடுத்துக்காட்டவும், அந்த வாழ்வின் போராட்டங்களையும் சிரமங்களையும் எத்தனை மடங்கு புரிந்து கொண்டிருந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ளவும் நான் அந்தப் பணத்தை எதற்குச் செலவு செய்தேன் என்று சொன்னால் போதும்.
வெண்ணெய் வாங்கவோ, ரொட்டுத் துண்டுகள் வாங்கவோ, வாடகைச் செலுத்தவோ, காலணி வாங்கவோ, கசாப்புக் கடையின் பாக்கியைச் செலுத்தவோ செலவு செய்யாமல் வெளியே சென்று ஓர் அழகிய பூனைக்குட்டியை வாங்கி வந்தேன். அது ஒரு பாரசீகப் பூனை. சில நாட்களில் அண்டை வீட்டாருடன் அதனால் ஒரு பெரிய பூசல் வெடித்தது.
கட்டுரைகள் எழுதி பாரசீகப் பூனைகளை லாபத்தில் வாங்குவதை விடவும் எளிமையான தொழில் என்ன இருக்கிறது? ஆனால் பொறுங்கள். கட்டுரை எழுத மையப் பொருண்மை தேவை. அப்போது ஒரு புகழ்பெற்ற நாவல் பற்றி எழுதியதாக ஞாபகம்.
நான் அந்த விமரிசனம் எழுதியபோது, இனி புத்தக விமரிசனம் எழுதுவதாய் இருந்தால் மாயையோடு நிச்சயம் மல்லுக்கட்ட வேண்டிவரும் என்று உணர்ந்திருந்தேன். அந்த மாயை வேறெதுவும் அல்ல, பெண். அவளைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டதும், ‘தேவதை தங்கிய வீடு’ என்ற புகழ்பெற்ற கவிதையில் வரும் கதாநாயகியாக அழைக்கத் தொடங்கினேன்.
விமரிசனம் எழுதும்போது பேப்பர் பேனாவிற்கு மத்தியில் அடிக்கடி வந்துபோகும் உருவமாக அவள் இருந்தாள். என்னைத் தொல்லைப்படுத்தி நேரத்தை வீண்செய்த அவள் கதாப்பாத்திரத்தை வேதனை தாங்காமல் கொன்று விட்டேன். மகிழ்ச்சி குடிகொண்ட புதிய தலைமுறை வாசகர்கள் அவளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ‘தேவதை தங்கிய வீடு’ என்பதன் மூலம் நான் சொல்ல வருவதை உங்களால் உத்தேசிக்க முடியாது. உங்கள் புரிதலுக்காக நான் அவளைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன்.
அவளைப் பார்த்தாலே உள்ளூர இரக்கம் குடிகொள்ளும். ஆனால் அதே சமயம் அச்சுப்பிசகாத அழகுப் பதுமை. துளியும் சுயநலமில்லாதவள். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மேலான அறிவைப் பெற்றிருந்தாள். தன்னை அனுதினமும் இதற்கெனவே அர்ப்பணித்தாள். கோழி இறைச்சியாக இருந்தால் அழுக்குப் படிந்த கால் அவளுக்குத்தான்; வறுமை பீடித்தால் மற்றவர்களை சாப்பிடச் சொல்லி தானொருவள் மட்டும் ஏதுமின்றி இருப்பாள். இப்படியாகத் தனக்கென்று ஓர் அபிப்பிராயமும் விருப்பமும் இன்றி, பிறர் அபிப்பிராயங்களால் வாழ்ந்து இரக்கம் சம்பாதித்தாள்.
எல்லாவற்றையும் தாண்டி அவள் மிகத் தூய்மையானவள். ஒருவேளை அது அவளின் உச்சபட்ச அழகுக்குக் காரணமாக இருக்கலாம். வெட்கத்தில் சிவக்கும் கன்னங்களும் உயிர்களிடத்து காட்டும் பரிவு குணமும் ஈடு இணையில்லாதது. விக்டோரியா அரசியின் காலக்கட்டத்தில் இவளைப் போன்று வீட்டிற்கொரு தேவதை இருந்தார்கள்.
நான் எழுதத் தொடங்கியபோது முதலிரண்டு வார்த்தைகளிலேயே அவளைச் சந்தித்தேன். அவள் சிறகின் நிழல் நான் எழுதிய காகிதத்தில் படிந்தது. அவள் அழகுப் பாவாடையை உதிர்க்கும் ஓசை அறையெங்கும் கேட்டது. பேனாவைக் கையில் எடுத்து அந்தப் புகழ்பெற்ற மனிதர் எழுதிய நாவலை விமரிசனம் செய்யும்போது, எனக்குப் பின்னால் உறைந்த தேவதை காதோரமாக வந்து, ‘எனது அன்பிற்கினியவளே, நீ ஒரு குட்டிப் பெண். ஓர் ஆடவன் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாய். தயவு செய்து கருணையோடு அணுகு, சாந்தமாக எழுது, முகஸ்துதி செய், பொய்யாகப் புனை, எல்லா யுக்திகளையும் கையாண்டு பெண்களுக்கே உண்டான தந்திரங்களை கடைப்பிடி. உனக்கென்று சொந்த புத்தி இருப்பதாக காட்டிக் கொள்ளாதே. எல்லாவற்றுக்கும் மேலாகத் தூய்மையாக இரு’ என்று கிசுகிசுத்தது.
இப்படி எழுது, அப்படி எழுது என்று என் பேனாவிற்கு அந்தத் தேவதை கடிவாளம் போட்டாள். நான் பெருமைப்படக் கொண்டாடும் ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். உண்மையில் இந்தப் பெருமை, பெருமளவில் சொத்து சேர்த்து வைத்த எனது மூதாதையர்களுக்கு உரித்தாகும். ஆண்டொன்றுக்கு ஐந்நூறு பவுண்ட்ஸ் வீதம் சேர்த்து வைத்தார்கள். ஆகையால் வாழ்க்கையை நகர்த்த பணம் பின்னால் செல்ல வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
ஆகவே பின்னால் திரும்பி முதுகில் உறைந்திருந்த தேவதையைக் கழுத்தைப் பிடித்துத் திருகினேன். என்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்து கொன்றுப் புதைத்தேன். நீதிமன்றத்தில் கூட்டிவைத்து ஏன் கொலை செய்தாய் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால், தற்காப்பிற்காகக் கொலை செய்தேன் என்ற பதிலையும் தயார் நிலையில் வைத்திருந்தேன். நான் அந்தத் தேவதையைக் கொலை செய்யாவிட்டால், அவள் என்னைக் கொன்றிருப்பாள். எனது எழுத்திலிருக்கும் இதயத்தை விரல்களால் கொய்திருப்பாள்.
அதற்குப் பின்னர் எழுதும்போதுதான் நான் ஒன்றைக் கண்டுபிடித்தேன். உங்களுக்கென்று ஒரு சொந்த புத்தி இல்லாமல், மனித உறவுகள் – அறம் – பாலினம் பற்றி உங்கள் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த முடியாமல் போனால் உங்களால் ஒரு புதினத்தைகூட விமரிசனம் செய்ய முடியாது. வீட்டுத் தேவதையின் கூற்றுப்படி மேற்சொன்ன எல்லா கேள்விகளையும் சுதந்திரமாக எழுப்ப முடியாது. ஆடவர்களைச் சாந்தப்படுத்தி, சமரசம் உண்டாக்கி, பொய்களை அடுக்கினால்தான் நாம் வெற்றிப்பெற முடியும்.
எப்போதாவது தேவையின் சிறகு நிழல் என் காகிதத்தின்மேல் படிந்தாலோ, அவள் ஒளிவட்டத்தின் பிரகாசம் என் காகிதத்தில் படர்ந்தாலோ மைஜாடியை எடுத்து தேவதைமேல் தெறிக்க விடுவேன். அவள் துடித்துத் துடித்துச் சாவாள். கற்பனைக் கதாப்பாத்திரம் என்பதால், தேவதை அதீத பலம் பொருந்தி இருக்கிறாள். அசலாகக் கொல்வதைக் காட்டிலும் கற்பனையைக் கொல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இறந்துவிட்டதாய் எண்ணும்போதெல்லாம் என்னை நோக்கி மீண்டும் மீண்டும் தவழ்ந்து வருவாள். இறுதியில் நான் அவளைக் கொன்றுவிட்டுதாகச் சொல்லி போலிச் சமாதானங்களால் என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் அந்த யுத்தம் ரணமானது. கிரேக்க இலக்கணம் கற்பதைவிடவும், அசாதாரணப் பயணத்தை விரும்பி உலக நாடுகளில் அலைந்து திரிவதைக் காட்டிலும் மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் அது நேரிடை அனுபவம். எல்லாப் பெண் எழுத்தாளர்களும் அந்த நேரத்தில் கடந்து வரவேண்டிய கட்டாயப் பொழுது. ‘வீடுறை தேவதையை’ கொலை செய்வது எல்லாப் பெண் எழுத்தாளர்களுக்கும் உண்டான வேலையின் ஒருபகுதி.
இனி என்னுடைய கதையைத் தொடர்கிறேன். தேவதை இறந்தபிறகு மிஞ்சியிருப்பது என்ன? மைஜாடி கொண்ட இளம்பெண் படுக்கை அறையில் உட்கார்ந்து இருப்பது மட்டுந்தான் மிச்சமென்று நீங்கள் நினைப்பீர்கள். பொய்களில் இருந்து விடுவித்துக் கொண்டு ‘அவள்’ என்ற சுயத்தில் வாழும் பெண் என்று சிலர் சொல்லலாம். ஆனால் ‘அவள்’ என்ற சுயத்தின் அடையாளம் என்ன? அதாவது ‘பெண்’ என்றால் என்ன?
சத்தியமாக எனக்குத் தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று எனக்குத் தெரியும். அனைத்துவிதக் கலைப் புலங்களிலும் தொழில் முறைகளிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தன் சுயத்தை வெளிப்படுத்தும் வரை எந்தவொரு பெண்ணாலும் அதற்கான பதிலை அடைய முடியாது என்று நான் நம்புகிறேன்.
உங்களின் ‘அவள்’ என்ற சுயத்தைத் தேடிய முயற்சிக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாகத்தான் நான் இன்று வந்தேன். உங்கள் தோல்விகளாலும் வெற்றிகளாலும் ‘அவள்’ என்ற அதிமுக்கியமான தகவலை நாளும் வலுப்படுத்தி வருகின்றீர்கள்.
இனி எனது தொழில்முறை அனுபவங்கள் பற்றி மேலும் சொல்கிறேன். முதல் விமரிசனக் கட்டுரைக்காக ஒரு பவுண்டு பத்து ஷில்லாங் மற்றும் ஆறு பென்னிகளைப் பெற்றேன். அதை வைத்துக் கொண்டு பாரசீகப் பூனைகள் வாங்கினேன். அதற்குப்பின் பேராசை பிறந்தது. பாரசீகப் பூனை நன்றாக இருந்தாலும் அதுமட்டும் போதாதல்லவா. எனக்கு ஒரு மோட்டார் கார் வேண்டும். அதற்காகத்தான் நாவல் எழுதத் தொடங்கினேன்.
நீங்கள் ஒரு கதை சொன்னால், மக்கள் உங்களுக்கு மோட்டார் கார் தருவார்கள் என்பது எத்தனை விசித்திரமாக இருக்கிறது. கதை சொல்வதுபோல் இந்த உலகில் உவப்பான வேலையொன்று இல்லையென்பது கூடுதல் விசித்திரமாக இல்லையா? புகழ்பெற்ற புதினங்கள் குறித்து விமரிசனம் எழுதுவது அதைக்காட்டிலும் சௌகரியமான வேலை.
உங்கள் செயலாளர் சொன்னதை மதித்து எனது தொழில்முறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைந்தால், நாவலாசிரியையாக எனக்கு நேர்ந்த ஒரு விசித்திர அனுபவத்தைச் சொல்ல வேண்டும். அதைப் புரிந்துகொள்வதற்கு நாவலாசிரியரின் மனநிலையில் இருந்து நீங்கள் கற்பனை செய்ய வேண்டும். ஒரு நாவலாசிரியர் எப்போதும் சுயநினைவின்றி இருக்கவே பெரிதும் விரும்புகிறார். நிரந்தரமான சோம்பலில் குடிகொள்ள ஆசைப்படுகிறார். நல்லவேளையாக நான் தொழில் ரகசியங்களை வெளியே சொல்லவில்லை என்று நினைக்கிறேன்!
அவர்கள் அமைதியான முறையில் வாழ்வை முன்னகர்த்த விரும்புவார்கள். அதே முகங்களைப் பார்த்து, அதே புத்தகங்களைப் படித்து, அன்றாடம் அதே வேலைகள் செய்து நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் தன் கற்பனை உலகில் சஞ்சரித்து புறத்தால் பாதிப்படையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க ஆசைப்படுவார்கள். திடீர் கண்டுபிடிப்புகளும் அபிலாஷைகளும் புதிர்களும் அங்குமிங்கும் துள்ளிப்பாய்ந்து கற்பனைக் குதிரையை சேதம் செய்யக் கூடாது. இந்த நிலை ஆண் – பெண் இருபாலருக்கும் உண்டு.
அது அப்படியே இருக்கட்டும். சுயநினைவு இழந்து நான் நாவல் எழுதும் முறைமையை நீங்கள் இப்போது கற்பனை செய்யுங்கள். மணிக்கணக்காக பேனாவை மைஜாடிக்குள் நனைக்காமல் வெறித்துப் போய் உட்கார்ந்திருக்கும் பெண்ணை நீங்கள் மனத்திற்குள் வரைந்து பாருங்கள். இதை யோசிக்கும்போது கனவுகளில் மிதக்கும் மீனவன் ஒருவன் ஏரிக்கரையில் உட்கார்ந்து கொண்டு நீண்ட நித்திரையில் மீன்பிடியைக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் உருவம் எனக்குத் தோன்றும். உலகின் ஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொரு பிளவிலும் தன்னுணர்வு இன்றி ஆழ ஒளிந்துகிடக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும்படியாக அவள் கனவு காண்கிறாள்.
இப்படித்தான் அந்த அனுபவத்தை அவள் அடைந்தாள். ஆண் எழுத்தாளர்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த அனுபவம் வெகுவாக வாய்த்துள்ளது என்று நம்புகிறேன். கற்பனை வீச்சுகள் அவள் விரலில் வரிசைக் கட்டி நின்றன. சிந்தனைத் தொட்டியிலிருந்து ஏறிகள் நிரம்பி வழிந்து, பள்ளங்கள் சமன்பட்டு, பெரிய மீன்கள் படுத்துறங்கும் இருண்ட பிரதேசங்களை அடைந்தன. அதற்குப்பின் நொறுங்கும் சத்தம். பின்னர் பெருவெடிப்புச் சத்தம். குழப்பம் அதிகரித்தது. ஏதோ ஒன்றில் பட்டு கற்பனைக் குதிரையின் கால்கள் சரமாரியாக அடிவாங்கின. அந்தப் பெண் கனவிலிருந்து கண் விழித்தாள்.
உண்மையில் அந்தப் பெண் மிகக் கொடிய துன்பத்தில் வாடியிருந்தாள். ஒரு பெண்ணாகப் பேசத் தகாத உணர்வுகள் பற்றியும், அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் மனித உடல் பற்றியும் அவள் சிந்திந்திருந்தாள். அதன் காரணங்களைச் சொல்லியிருந்தால் ஆண்கள் அலறியிருப்பார்கள். பெண்ணின் சுயநினைவு இழந்த அரைமன ஆற்றலில் கிளர்ந்து எழும் எண்ண அதிர்வுகளை உண்மையில் தோய்த்துப் பேசினால், ஆண்கள் என்ன செய்வார்கள் என்ற சுயநினைவு நிறைந்த எண்ணமே இதற்குத் தடையாக அமைந்தது. அவளால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. நினைவிழந்த நிலையிலிருந்து எதார்த்த உலகிற்கு வந்தாள்.
அவளின் கற்பனை உலகம் இதற்குமேல் செயல்படாது. பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் இதைக் கடந்துதான் வந்திருப்பார்கள். மாற்று பாலினத்தின் பாரம்பரிய சிந்தனைகளால் பெண் மைய எழுத்தாளர்கள் தயங்குகிறார்கள். புத்திசாலித்தனமாக ஆண்கள் இந்த விஷயத்தில் ஏகபோக சுதந்திரம் அனுபவிக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு வாய்ந்த இந்தச் சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்கவோ, அதைக் கட்டுப்படுத்தவோ ஆண்கள் முயல்வார்களா என்பது வெளிப்படையான சந்தேகம்தான்.
இந்த இரண்டுமே எனது வாழ்வில் ஏற்பட்ட நேரிடையான அனுபவங்கள். தொழில்முறை வாழ்வில் நான் மேற்கொண்ட சாகசம் என்று கருதுபவை. முதல் அனுபவத்தில் தேவதையைக் கொல்வது ஒருவாறாக ஈடேறிவிட்டது. அவள் இறந்துவிட்டாள். ஆனால் இரண்டாவது சாகசத்தில், எனது உடல் பற்றிய அனுபவங்களை வெளிப்படையாகச் சொல்வதற்கு இன்னும் முழுமையாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை எந்தவொரு பெண்மணியும் அதை செய்யவில்லை என்று உத்தேசிக்கிறேன்.
பெண்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ள எல்லா சாதனங்களும் சக்தி பொருந்தி இருக்கின்றன. அவற்றை வரையறுப்பது முடியாத காரியம். வெளியிருந்து பார்த்தால், புத்தகம் எழுதுவதைத் தவிர சுலபமான வேலை வேறென்ன இருக்கிறது? ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு என்ன பிரச்சினை இருந்துவிடப் போகிறது? என்று தோன்றும். ஆனால் உள்ளிருந்து பார்த்தால், பெண்கள் சமர் செய்ய வேண்டிய பல பூதங்கள் இருக்கின்றன, பல முன்முடிவுகளை மாற்றியமைக்க வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியும். புத்தகம் எழுதத் தயாராகும் பெண்ணொருத்தி வெட்டிச் சாய்க்கும் மாயைகளுக்கு அஞ்சாமல், முட்டி மோதும் பாறைகளைக் கண்டு வியக்காமல் இருக்க இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். பெண்களுக்கான சுதந்திரம் நிறைந்த எழுத்து தொழிலே இப்படி இருக்கிறது என்றால், இன்னும் கால்வைத்திராத பற்பல தொழில்கள் பெண்களை என்ன செய்ய காத்திருக்கின்றன?
நேரம் கிடைக்கும்போது இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனது பணி அனுபவத்தைச் சொல்லும்போது எங்காவது அழுத்தம் அதிகமாக இருப்பதாய் தோன்றினால், அதற்குக் காரணம் இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல, உங்களில் பலரும் இந்த அனுபவத்தை பல்வேறு ரூபங்களில் பார்த்திருக்கலாம். மருத்துவர், வக்கீல், கலெக்டர் என்று பெண்களுக்கான வாய்ப்புகள் தங்குத் தடையின்றி அமைந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், நான் அதை ஏற்க மறுப்பேன். மாயபூதங்களும் தடைக்கற்களும் அவள் பாதையை அடைத்து நிற்கின்றன.
இந்தச் சிரமங்களை விவாதித்து வரையறுப்பதைப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். அப்போதுதான் உழைப்பை சரிபாதியாகப் பிரித்து கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியும். அதைக்காட்டிலும் இதன் முடிவு குறித்தும் நோக்கம் குறித்தும் தெளிவான புரிதலோடு போராட வேண்டும். இல்லையென்றால் வலிமை வாய்ந்த தடைகளைத் தகர்த்தெறிவதால் ஒரு பயனும் இல்லாமல் போகும். ஏனோதானோவென்று பயணிக்காமல் இலக்கை நோக்கிச் சீராக முன்னேற வேண்டும்.
இந்த அரங்கில் அமர்ந்திருக்கும் பெண்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக சில ஆயிரம் தொழில்முறைகளைச் சார்ந்தவராக இருக்கிறீர்கள். இது ஓர் அசாதாரணச் செயல் என்பதை புரிந்துகொள்வோம். இதுநாள்வரை ஆண்கள் மட்டுமே உரிமை கொண்டாடிய இல்லங்களில், உங்களுக்கென்று ஒரு தனி அறையை பெற்றிருக்கிறீர்கள். பெரிய உழைப்பும் முயற்சியும் இல்லாவிட்டால் கூட உங்களால் வாடகைச் செலுத்த முடிகிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்நூறு பவுண்ட்களைச் சம்பாதிக்கிறீர்கள்.
இது வெறும் தொடக்கம் மட்டுந்தான். அறை சொந்தமானாலும், அவற்றின் பெரும்பகுதி காலியாக இருக்கிறது. அவற்றை அறைகலனால் நிரப்ப வேண்டும். அலங்காரம் செய்து பகிர வேண்டும். ஆனால் அறைகலன் வாங்க காசு ஏது? அலங்காரம் செய்ய என்ன வழி? யாரோடெல்லாம் அறையைப் பகிரப் போகிறீர்கள்? அவை எந்தெந்த நடைமுறையில் இயங்கும்? இவையெல்லாம்தான் அதிமுக்கியமான கேள்விகள் என்று நான் நினைக்கிறேன்.
வரலாற்றில் முதன்முறையாக உங்களால் இதைக் கேள்வி கேட்க முடிகிறது. வரலாற்றில் முதன்முறையாக உங்களால் பதில் சொல்ல முடிகிறது. பெரும் ஆசையோடு நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நிச்சயமாக இன்றைக்கு முடியாது. எனது நேரம் கடந்து விட்டது. இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
0