ஒரு வெடிச்சத்தம்! திடீரெனக் கண்கள் இருள ஆரம்பித்தது. நான் சுடப்பட்டேன் என, என் சின்னஞ்சிறு மூளைக்கு நியூரான்கள் செய்திகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டன. முன் உணர்ந்த வலி இப்போது உணரப்படவில்லை. உடல் சற்றுத் தற்காப்பு நிலைக்கு அவசர அவசரமாய் தன்னைத் தயார்ப்படுத்த ஆரம்பித்ததன் விளைவு அது. நிலத்தில் நின்ற இடத்தில் இருந்து சரிய ஆரம்பித்தேன். பொதேர்! விழுந்த வேகத்தில் நினைவு இழந்தேன்.
நினைவு வந்து கண் திறந்தால், ஒருவன் என் வாய்ப்பகுதியை கோடாரிக் கொண்டு வெட்டுவது தெளிவற்றுப் புலப்பட்டது. சதையும் எலும்பும் சேர்ந்து இரத்தத்துடன் வெட்டப்படும்போது எழும் வித்தியாசமான ஒலியை ரசிக்கும் நிலையில் நான் இல்லை. தந்தம்தான் அவர்கள் இலக்கு எனத் தெரிந்தபோது வலித்தது. அவர்கள் இப்போது வெட்டுவதை நிறுத்தி, தந்தத்தை ஆட்டி, வேருடன் பிடுங்க ஆரம்பித்திருந்தனர். இரத்தமும் சதையுடனும் தந்தம் என் கண் முன்னே பிடுங்கப்பட்டது. மயக்கத்தில் வலி தாங்காமல் கத்தினேனா எனத் தெரியாது. ஆனால் நினைவு மட்டும் 46 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.
பொதேர் எனப் பூமியில் வந்து விழுந்தேன். 19 மாதக் கருவறை மயக்கம் தீர்ந்தது. உடல் முழுவதும் இரத்தமும் திரவமுமாய். எழுவதும் விழுவதுமாய்ப் பல முயற்சிகள். அவ்வப்போது தாயின் தீண்டல்களும் சிறுசிறு பிரட்டல்களும். எழுந்து நடக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சி உடலில் பரவப் பரவ சுற்றிச் சுற்றி மீண்டும் விழுந்தேன். என்னை மிகப் பத்திரமாய் என் தாயும் அத்தைகளும் தங்கள் கால்களுக்கிடையே மட்டும் நடக்க விட்டு அழைத்துச் சென்றனர்.
அது முதுமலை சரணாலயத்தில் ஈரம் நிறைந்த பென்னே எனும் பகுதி. எம்மில் சிலர் அங்குள்ள புற்களைப் புடுங்குவதும் திண்ணுவதுமாகவும், சிலர் மரப்பட்டைகளை உறித்து உண்ணுவதாகவும், வேறு சிலர் மரக்கிளைகளை முறித்து உண்ணுவதாகவும் மும்முறமாய் இருந்தனர். நான், பால் குடிப்பதும் விளையாடுவதுமாய் இருந்தேன். அப்படியே சில மணி நேரங்களில் ஒரு பெரிய நீர்நிலையை அடைந்தோம். அதைப் பார்த்தவுடன் பயத்தில் தாயின் கால்களுக்கிடையில் நுழைந்தேன். அவளோ என்னை அப்படியே கால்களுக்கிடையில் நகர்த்தியே நீரில் இறக்கி விட்டாள். உடலில் குளிராய் நீர்ப் பட உற்சாகம் தொற்றியது. அடுத்த ஒரு மணி நேரம் கடந்ததே தெரியாது. எல்லோரும் கரையேறி வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.
என்னுடைய எடை இப்போது 150 கிலோவைத் தாண்டிவிட்டது. நிறைய பால் குடிப்பது மட்டுமன்றி கொஞ்சம் புற்களையும் சேர்த்துத் தின்ன ஆரம்பித்து விட்டேன். என் தாய் நிறைய பழக்கங்களை இப்போதெல்லாம் எனக்குப் பயிற்றுவிக்கிறாள். புற்களை வேரோடுப் பிடுங்கி,அதனுடன் ஒட்டிய மண் போகத் தன் கால்களில் தட்டி, பின் அதைத் தன் வாய்க்குள் அனுப்புகிறாள். இச்செயலை நான் பார்க்குமாறு அவள் செய்வதுதான் அழகு. அவளின் சின்னஞ்சிறு செயல்களையும் என் மனதில் ஆழ ஏற்றுகிறாள். நான் அறியாமலேயே, நானும் அச்செயல்களை அதேப்போல் செய்யவும் ஆரம்பித்து விட்டேன். அதைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம் அதன் நுணுக்கங்களையும் அறிய ஆரம்பித்து விட்டேன்.
கடந்த சில நாட்களாகவே இங்கு நல்ல மழை. இப்பகுதி முதுமலையின் மற்றப் பகுதிகளைப் போலன்றி தென்மேற்கு பருவக்காற்றிலும் மழை பெறும் பகுதி. நடக்கும் இடமெல்லாம் அட்டைகள் நெளிந்து கொண்டிருந்தன. என் கால்களிலும் நிறைய ஒட்டிக் கொண்டன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஓரளவிற்கு எந்த புற்கள், செடிகள் சாப்பிட உகந்தவை என்பதைக் கற்றிருந்தேன். அப்போது என்னை எனது அத்தை ஒருவள் பட்டென இழுத்துத் தன் கால்களுக்கிடையே மறைத்துக் கொண்டாள். நடுங்கி விட்டேன். கருமந்தி ஒன்று கத்த ஆரம்பித்தது. அதோடு மலையணில், மிளா என வரிசையாகச் சப்தமிட, புரிந்து விட்டது. அருகே புலியோ சிறுத்தையோ நடமாடுகிறது.
ஆறேழு மாதம்முன் எனது வயதொத்த என் அத்தையின் மகளைப் புலியொன்று கவ்விச் செல்லும்போது பார்த்தது. மீண்டும் பார்க்க ஒரு ஆசை. மெதுவாய் எனைச் சுற்றிப் பார்த்தேன். தூரத்தில் அழகாய் அது நடந்துபோய்க் கொண்டிருந்தது. புலியின் நிறமே போதும் அதை ரசிக்க! இது போன்ற நிகழ்வுகளும் ஒலிகளும் என் குடும்பத்துக்குப் பழக்கமானதாலோ என்னவோ, விரைவில் பழைய நிலைக்கு எல்லோரும் திரும்பிவிட்டனர். நானும் கால்களுக்கிடையிலிருந்து விலகி வந்தேன். நல்ல இளம் மூங்கில்களை என் குடும்பத்தினர் உணவாக்கிக் கொண்டிருந்தனர்.
மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. தாய்ப் பாலை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன். இடத்திற்கு எற்ப தாவரங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண ஆரம்பித்து விட்டேன். மனிதர்கள் வாழும் இடங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இன்றுவரை குழப்பமாகவே இருக்கின்றது. எம்மவர்கள் சில இடங்களில் பயமின்றி மனிதர்களை எதிர்ப்பதும் சில இடங்களில் போன வேகத்தில் பயந்து திரும்பி வருவதும்தான் அதற்குக் காரணம். காலம் அதை எனக்குக் கற்றுத் தரும் என நினைக்கிறேன்.
நான் தற்போது இருக்கும் இடத்தில் செட்டிஸ் எனும் மலைவாழ் பிரிவினர் குடும்பமாய் வாழ்ந்து வருகிறனர். இவர்கள் குரும்பர், நாயக்கர், பணியாஸ் போலன்றி, விவசாயம் செய்து பொருளாதாரத்தில் அவர்களைவிட சற்று உயர்ந்தே காணப்படுகின்றனர். இவர்களின் விளைநிலம் அடிக்கடி எங்களால் சேதப்படுத்தப்படும். அதனால் எங்களை வயலில் பார்த்தாலே தகர டப்பாக்களைத் தட்டியும் தீப்பந்தம் காட்டியும் விரட்டுவார்கள். அவர்களிடம் பெரும்பாலான நேரங்களில் எம்மவர்கள் பயம் கொண்டதில்லை. இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாய் நடக்கும் ஒன்று.
மீண்டும் போதுமான மழையில்லா, வெப்பம் கொண்ட ஒரு வருடத்தைத் சந்திக்கிறேன். நீர் கண்ட இடத்தில் எல்லாம் அதில் இறங்கி எம்மைக் குளிர்வித்துக் கொண்டேன். உண்ணிகளைத் தவிர்க்கவும் ஈரத்தை வைத்துக்கொள்ளவும் சேற்றை உடல்மீது தேய்ப்பது உண்டு.
“மோயார்”தான் இப்பகுதிக்கு நீராதாரம். அதுவும் ஏப்ரல், மே மாதங்களில் வற்றிவிடும். பல நேரங்களில் தரையோட்ட நீரை அறிந்து, அவ்விடத்தைக் காலால் எட்டித் தோண்டி, நீர் சுரக்க வைத்து, தாகம் தீர்த்துக்கொள்வதும் உண்டு. இதனை மதுரை மருதன் இளநாகனார்,
“நாம்நகை யுடையம் நெஞ்சே-
கடுந்தெறல்வேனில் நீடிய வானுயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொறிபுறம் உரிஞிய நெறியியல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி
உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கணைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே”
என அகநானுற்றில் பதிவுசெய்தும் விட்டார்.
என்ன! பெரும்பாலும் ஆண் யானைகளை ஏழு, எட்டு வயதுக்கு மேல் குடும்பத்தில் வைத்துக் கொள்வதில்லை. அது மட்டுமே இங்கே இடறியுள்ளது.
நான் என் குடும்பத்தாருடன் தெப்பக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென மனித வாசனை. தூரத்தில் என் தாயொத்த வயதில் உள்ள ஒருத்தியின் முதுகில் ஆறு மனிதர்கள் பிரயாணித்துக் கொண்டிருந்தனர். மற்றோருவன் அவளின் இல்லாத கழுத்தருகே உட்கார்ந்துகொண்டு, அவளின் காதுக்குக் கீழே தன் காலால் தட்டுவதும் நிமிண்டுவதுமாக எதோ கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவளின் கண்கள் ஏதோ சொல்ல வருவதுபோல் இருந்தது.
எங்களை தூரத்தில் இருந்து சிறிது நேரம் பார்த்துவிட்டு கட்டளைக்கேற்ப இப்போது வேறு திசையில் நடக்க ஆரம்பித்தாள். அடுத்த கால் மணித்துளியில் ஒரு வாகனம் சுற்றுலாவாசிகளைச் சுமந்துகொண்டு எம் அருகே செல்லும் ரோட்டில் வந்து நின்றது. வனத்துறையின் தொலைத்தொடர்பு கருவிகளால், அவர்கள் மற்றவர்களை எளிதில் தொடர்புகொண்டு, தாம் கண்ட விலங்குகளின் நடமாட்டத்தை தங்களுக்குள்ளேயே பரிமாறுவதன்மூலம் சுற்றுலாவாசிகளை மகிழ்விக்க முடிகிறது.
சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை இப்போதெல்லாம் அதிகம் எனத் தாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவளின் சிறு வயதில், வீரப்பன் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்ததாம். இப்பொழுது அதெல்லாம் தளர்த்தப்பட்டு விட்டதால்தான் இப்படியாம். இருள ஆரம்பித்துவிட்டது. சப்தங்கள் குறைய ஆரம்பித்து விட்டன.
குரும்பர் ஒருவர் நாயனம் இசைக்க, அது அந்த இருளை மின்னலாய் கிழித்தது. குரும்பர்கள் இவ்விசையில் வல்லவர்கள். சில கலாச்சார இரவுகளில் விடிய விடிய வாசிப்பதும் உண்டு. இப்போது இதனூடே காட்டாந்தையின் குரலும் காட்டுப் பக்கியின் குரலும் பக்க வாத்தியமாய்! இதற்காகவே கீழ்கார்குடியிலிருந்து தெப்பக்காடுவரையிலான இரவுநேரப் பயணத்தை நான் இன்றளவும் விரும்புவதுண்டு.
என்தாய் நகைச்சுவையாய் ஒன்று சொல்லுவாள்! இங்கிருக்கும் மலைவாசிகளில் ஒரு பிரிவினர் “மாதன்” என்ற பெயரில் அதீத பற்றுடையவர்களாம். எப்படி எனில், மாதன் எனும் ஒருவருக்கு பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு மாதன் என்றே பெயரிடுவராம். அடுத்தடுத்த ஆண்குழந்தைகளுக்கு ‘கிர்மாதன்’, ‘கிர்கிர்மாதன்’, ‘கிர்கிர்கிர்மாதன்’ எனப் பெயரிடுவராம். என்ன தலை கிர்ருங்குதா! நல்லவேளை குடும்ப அட்டை வழங்குவதிலும் இதர அரசு திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் அரசு ஊழியர்களின் அறிவுரையை ஏற்று இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். இப்பொழுது பழைய பெயர்களை அவர்களிடம் தேட வேண்டியிருக்கிறது.
நடக்க நடக்க நாயன ஓசை மறைந்து விலங்குகளின் ஓசைகளால் நிரம்பியது இரவு. ஆங்காங்கே புள்ளிமான்கள் படுத்துறங்கிக்கொண்டிருந்தன. நன்கு வளர்ந்த என் தாய் போன்றவளுக்கு குறைத்தது 225 கிலோ தாவர உணவுத் தேவையாய் இருப்பதால், எங்களின் உணவு உண்ணும் நேரம் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகம்தான். என்ன, இதில் பாதி அளவு கழிவாகவும் வெளியேறிவிடும். புல், குறுஞ்செடி, கொடி, குறுமரம், மரப்பட்டை, இலை, பழங்கள் என எல்லாவற்றையும் தின்றாலும், அவைகளில் பிடித்தது, பிடிக்காது என்ற வகைகளும் உண்டு. உண்ணுவதும் நடப்பதும் சிறிது தூக்கம் போடுவதுமாய் அவ்விரவு கழிந்தது.
வெளிச்சம் இருளைத் துடைக்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்தால் எம் வழியை எங்களின் கழிவு காட்டிக் கொடுத்தது. இதோ வாழைத்தோட்டம் வந்துவிட்டது. நன்கு வளர்ந்த நான்கு மாமரங்கள்தான் அதற்கு அடையாளம். மாங்கனிகள் பாதையெல்லாம் சிதறிக் கிடந்தன. சிலர் மட்டும் அதைத் தின்றனர். அவ்விடத்தைத் தாண்டி வயல்வெளியில் இறங்கினோம். அப்போது திடீரென ஒரு வெடிச்சத்தம். என் குடும்பத்தில் ஒருவர் வலியில் ஒலமிடுவது தெரிந்தது.
புரிந்துவிட்டது! காட்டுப் பன்றிக்கு வைத்த வெடிபுதைத்த அன்னாசிப் பழத்தை தின்றதால் வெடி வெடித்து ஏற்பட்ட சப்தம் அது. அவளின் வாய் கிழிந்து தொங்கியது. வலியில் அங்குமிங்கும் ஒலமிட்டுக்கொண்டு ஒடி ஒரு இடத்தில் விழுந்துவிட்டது. நேரம் கடக்க ஆரம்பித்தது. சப்தம் கேட்டு மக்களும் கூட ஆரம்பித்து விட்டனர். எம்மவர்களும் அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி வந்தனர். சில மணி நேரங்களில் வனத்துறையும் வந்து எங்களை விரட்ட ஆரம்பித்தனர். வேறு வழியின்றி அவளை விட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டு விட்டோம். அவள் கால்களுக்கிடையில் என்றோ ஒருநாள் செந்நாய்களுக்கும் புலி, சிறுத்தைகளுக்கும் பயந்து நான் ஒளிந்தது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது.
வருடங்கள் கழிந்தன. நான் என் உடலில் ஒரு முழு ஆணுக்கான வேதியியல் மாற்றங்கள் நடந்ததை உணரத் தொடங்கினேன். அதுவே என் குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டது. ஏழரை வயதில் தனிமைப் படுத்தப்பட்டேன். அதாவது குடும்பத்தில் இருந்து துரத்தப்பட்டேன். அதற்கு மதநீர் ஒரு காரணமாகிவிட்டது. மூன்று மாதங்கள் நெற்றிப் பொட்டில் வழியும் மதநீர் மிகப்பெரிய உடலியல் மாற்றத்தினை செய்வதுதான் அதற்குக் காரணம். உளவியலாய் மிகச் சிரமப்பட்டேன். கூட்டாமிலா முதல் இரவு எனை மிகவும் பயமுறுத்தியது. தனிமைக்கு என்னைப் பழக்கப் படுத்தும்போதே கோபமும் முரட்டுத்தன்மையும் என்னிடம் வளர்ந்ததையும் நான் கவனித்தேன். எம் கூட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம் அது கொஞ்சம் அதிகரித்தது.
மதநீர் ஒழுக ஆரம்பித்து ஒரு மாதமாகிறது. உடலில் இனம்புரியா மாற்றம். அச்சுரப்பி வேறு வளர்ந்து, கண் இருக்கும் இடத்தில் வலியைத் தருவதால் அதுவும் ஒரு எரிச்சலைத் தருகிறது. இதெல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்க, வளைந்த பாதையில் திரும்பினால் எதிரே மனிதனொருவன். அது ஒரு முட்புதற்காடு. காற்று எதிர்பக்கம் வீசிக் கொண்டிருப்பதாலும் வலியிலும் அவனைக் கவனிக்கத் தவறிவிட்டேன். பட்டென என் துதிக்கையால் அவனைத் தட்ட, சொத்தென்று மரத்தில் வீசப்பட்டுக் கீழே விழுந்தான்.
நான் ஏன் செய்கிறேன் எனத் தெரியாமலேயே அவனைக் காலால் எத்துவதும் தூக்கி அடிப்பதுமாய் செய்துவிட்டு, அந்த இடத்தை விட்டு நடந்தேன். நான் குடும்பத்துடன் இருந்தபோது பலமுறை என் தாய் மனிதர்களை பயமுறுத்தி ஒட விட்டிருக்கிறாள். ஆனால் நான் செய்ததுபோல் அவள் செய்ததில்லை. எனக்கே என் செயல் வியப்பாய் இருக்கிறது! யாரிடமும் கல்லாத ஒன்று! யார் மீதோ வரவேண்டிய கோபம் யார் மீதோ திரும்பியிருக்கிறது. உளவியல் பிரச்சனை!
இரண்டு நாட்களாகியும் மனித இரத்த வாசனை எனை இன்னமும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வேறொரு வாசனை எனைக் கிளர்ச்சியுரும் வகையில் வரத் தொடங்கியது. அந்த வாசனையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் எம்மவர் கூட்டம் ஒன்று. அதிலிருந்துதான் வருகிறது. அதற்கு முன்பே என் மதநீர் வாசனையும் அடிவயிற்றில் இருந்து நான் எழுப்பும் வினோத ஒலியும் அக்கூட்டத்தை அடைந்திருப்பதால் அவை சற்று சுதாரிப்புடன் எனை எதிர்கொள்ளத் தயாராய் இருந்தன. ஆகவே நான் சற்றுத் தூரத்திலேயே இருந்தேன். ஆனால் அக்கூட்டத்தில் ஒருத்தியிடம் இருந்துதான் அவ்வாசனை வருகிறது.
யார் அவள்? எங்கே அவள் எனத் தேட நேரமில்லாமல் பயத்தில் பின் வாங்கினேன். இருப்பினும் இரு நாட்கள் அக்கூட்டத்தைத் தூரத்தில் வைத்தே என் வேலையை செய்துகொண்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! அந்த ஒருத்தி கூட்டத்திடமிருந்து விலகி இதோ என்னை நோக்கி! மனம் கிளர்ச்சியடைய ஆரம்பித்தது. இதோ என்னை அடைந்து விட்டாள். வேதியியல் எங்களை இணைத்து விட்டது. இருவரும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகி இருப்பதுதான் அது. முதன்முதலாய் என் பருவ ஆசையை தீர்த்துக்கொண்டேன். இரண்டு வாரத்தில் மதநீர் ஒழுகல் எனக்குப் பெருமளவில் குறைந்துவிட்டது. வீக்கமும் குறைந்ததால் நெற்றிப் பொட்டு வலியும் இப்பொழுது இல்லை. மீண்டும் அதே நடை, உணவு தேடல் என பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.
தந்தத்தின் நீளம் இப்போது அதிகரித்துவிட்டது. தந்தம் வெட்டும் பற்களின் நீட்சிதான். ஒரு குறிப்பிட்ட நீளம் வரை அது ஒரு ஆயுதம். அதற்கு மேல் வளர்ந்தால் அது ஒரு சுமை. அதோடு மட்டுமல்லாது அதுவே எங்களை வேட்டையாடவும் பிரதான காரணமாகிறது. என் உணவுத் தேடலும் பழக்கம் காரணமாய் இலகுவாகிவிட்டது. ஆனால் அவ்வப்போது மனிதனின் இட ஆக்கிரமிப்புகள் மட்டும் என் தடத்தை தேடுவதிலும் புது இட அபாயங்களை ஆராய்வதிலும் நேர விரயத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது.
தாது உப்புகளின் அளவு என் உணவில் குறையும்பொழுது நான் செய்யும் செயல்கள் எனக்கே சிரிப்பு வரவழைக்கும். வீட்டுச் சுவற்றின் சுண்ணாம்பிற்காக அதை தின்று இருக்கிறேன். கார்குடியில் ஒருமுறை ஆராய்ச்சியாளர் கழற்றி வைத்த வியர்வை வாசனை நிறைந்த காலணியைத் தின்று வயிறுக்கு சிரமத்தையும் கொடுத்திருக்கேன். நல்லவேளையாக அதைக் கழிவில் வெளியேற்றிவிட்டேன்.
இப்போது பென்னே துவங்கி தெங்குமரகடா வரையான இடத்தை எனக்கானதாக்கிக் கொண்டேன். சில காலங்களில் இது வயநாடு முதல் தளமலை வரை விரிவதும் உண்டு.
அப்போதுதான் மற்றொருவனின் வாசனை வர ஆரம்பித்தது. புரிந்து விட்டது. என் வயதொத்த மற்றொருவன் அதுவும் மதத்தில். வேறு வழியில்லை. அவனுடைய முதல் முட்டில் தடுமாறித்தான் போனேன். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு நன்கு தயாராகி நானும் நன்கு முட்டினேன். பெரும்பாலும் முட்டும்போது துதிக்கையைப் பின் அழுத்திதான் மோதுவோம். அதுவே ஓடும்போது ‘S’ வடிவில் துதிக்கையை வைத்துக்கொள்வது வழக்கம்.
இம்முறை இருவரும் சற்று அதிர்ந்தே விட்டோம். மீண்டும் ஒரு முறை. இம்முறை சற்றே கோணம் மாற என் தந்தம் அதன் உடலில் இறங்கியது. பெரிய பிளிரலுடன் அவன் விலகி நடக்க ஆரம்பித்துவிட்டான். நானும் சண்டையிடும் ஆர்வமில்லாததால் விட்டுவிட்டேன். அருகே இருந்த ஆலமர நிழலில் அப்படியே ஒதுங்கினேன். வெகு நேரம் நின்று விட்டேன். தூங்கியும் விட்டேன். எங்களின் கால்களின் அமைப்பு நின்று கொண்டும் தூங்குவதற்கு வசதியாய் இருப்பதால் அதில் சிரமம் ஏதும் இருக்காது. என் அத்தை ஒருத்தி தூங்கும்போது குரட்டையும் விடுவாள்.
கண் விழித்தேன். என் அருகே உள்ள மரத்தில் ஓர் இறந்த மான் அழுகித் தொங்கிக்கொண்டிருந்தது. சிறுத்தை வேட்டையாடி மரத்தில் வைத்துத் தின்ற ஒன்றாய் இருக்க வேண்டும். நா வறள ஆரம்பித்தது. நீரைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். ஒரு சிறு குட்டை தென்பட்டது. அத்தண்ணீரை குடித்துவிட்டு நகர்ந்தேன்.
இந்த முட்புதர் காட்டுப் புற்கள் அளவில் சிறிதாய் இருப்பதால் காலால் உதைத்துதான் பிடுங்க முடியும். அதுவே பென்னேயில் கிடைக்கும் பெரிய புற்களை, துதிக்கையால் வளைத்துப் பிடுங்கி, காற்றில் ஓரிரு சுழற்றில் மடக்கி வாயில் செருகி விடலாம். துதிக்கை ஒரு மூக்கும் மேலுதடும் சேர்ந்த அமைப்பு. ஏறத்தாழ 40,000 தசைகளைக் கொண்டது. அதனால் நிறைய செயல்களை எளிதாய் செய்ய முடியும். நன்றாய் தின்றுவிட்டு நடையைக் கட்டினேன். தூரத்தில் பாரு கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எதோ இறந்து கிடக்கிறது என நினைத்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன். தூரத்தில் எம்மினத்தவர் ஒருவர்தான் இறந்து கிடந்தது. பார்க்கும் ஆர்வமிலாமல் நடக்க ஆரம்பித்தாலும் உள்ளுணர்வுச் சொல்ல, நானும் திரும்பிப் பார்க்க! அதென்ன தாய் மாதிரியல்லவா இருக்கிறது! இருக்கக் கூடாது! தாயேதான்! மனது வலித்தது.
இரு வருடங்கள் வயிற்றில் சுமந்தவள். அவளைச் சுற்றி எம்மவர்களின் கால்தடங்கள். சுற்றிலும் யாரும் இல்லை. வயது மூப்பில் இறந்திருக்கலாம் எனத் தோன்றியது. அவளுடனான நினைவுகளுடன் நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்னால் வளர்ப்பு மாடுகள் போய்க் கொண்டிருந்தன. இவற்றால் எங்களுக்கும் அவைகளுக்கும் இடையே நோய்ப் பரிமாற்றம் நடைபெறும் கேடும் உண்டு. வயநாட்டில் சிறுவயதில் ஒருமுறை குடும்பத்துடன் இருந்தபோது என் அத்தையின் மகன் மனிதனிடம் இருந்து எலும்புறுக்கி நோய் பெற்று இறந்துவிட்டான். நல்ல வேளையாக வேறு யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அதன்பின் வயநாடு சென்றது நான் தனியாய் இருக்கும் போதுதான்.
முட்களுடன் கூடிய கொடிகளை அதிகம் உண்டதால் என் கழிவு முட்களால் நிறைந்திருந்தது. நான் தாவரங்களை உணவிற்காக அழித்தாலும் அதற்கினையாய் விதைப்பரவல் மூலம் நன்மையும் செய்வதுண்டு. என்தாய் காலத்தில் வீரப்பன் இருந்ததால் என் போல ஆண்கள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது உண்டாம். அவன் இறந்த பின் இந்நிகழ்வுகள் குறைந்து விட்டதாய் சொல்லுவாள். ஆனாலும் நான் அவ்வப்போது வேட்டையாடுபவர்களை இரவில் ஆங்காங்கே கண்டதுண்டு.
நாங்கள் அளவில் பெரிதாய் இருப்பதால் எங்களுக்கு எதிரிகள் பெரும்பாலும் இல்லை. ஆனாலும், மூன்று வயதை அடைவதற்குள் எங்களில் பெரும்பாலோர் புலி, சிறுத்தையால் கொல்லப்படுவதுண்டு. அந்த வயதைத் தாண்டினால் பெரிய பயமொன்றுமில்லை. பென்னே நோக்கி மீண்டும் பயணம் தொடங்கியது. என் காதின் மேற்பகுதி நன்கு மடிய ஆரம்பித்துவிட்டது. வயது 12ஐ தாண்டி விட்டது என்பதற்கு அறிகுறி. முதுமலையில் எல்லாம் பழகிவிட்டது. சுற்றுலாவாசிகள் எம்மாதம் அதிகம் வருவார்கள், மோயாரில் நீர் எம்மாதம் வற்றும் என அனைத்தும்! சுற்றுலாக் காலங்களில் கூடலூர்-மைசூர் சாலையை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். என் கோபமும் மக்களின் பொறுப்பின்மையும் உயிர்ச்சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருந்தேன்.
அன்று மாலை ஆற்றோரப் புற்களை பிடுங்கிக் கொண்டிருந்தேன். வேகமாய் மிளாக்கூட்டம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஓர் இளம் மிளாவை ஆறு செந்நாய்கள் மிக அழகாய் தனிமைப்படுத்தி ஆற்றில் இறக்கின. ஒரு குறுப்பிட்ட ஆழத்தில் ஒவ்வொரு செந்நாயும் தனித்தனியே மிளாவை கழுத்து, தொடை எனத் தாக்கி அரை மணித்துளியில் அதை இரையாக்கி விட்டன. செந்நாய் வேட்டையை இன்றுதான் நேரில் பார்த்தேன். இந்நிகழ்வை மற்ற மிளாக்களும் மிரட்சியுடன் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன.
வருடங்கள் ஓடி விட்டன. நாற்பத்தி ஆறு வருடங்களில், இருப்பிடங்களில் நிறைய மாற்றங்கள். வழித்தடங்கள் முற்றிலும் மாறி விட்டன. மனிதர்களின் வாழிடங்களில் அதிகம் இப்பொழுதெல்லாம் செல்கிறேன். துரத்தப்படுகிறேன். எல்லாவற்றிற்கும் பழகி விட்டேன். இதோ ஒரு நல்ல மழைக்கால இரவில், மின்மினிப் பூச்சிகளின் மினுக்கல்களில் மனதைப் பறிகொடுத்து நின்று கொண்டிருந்தேன். காற்று எதிர் திசையில் வீசிக் கொண்டிருந்தது. டுமீல்! டுமீல்! வெடிச்சத்தம்!
(தொடரும்)