சொத்தென ஒரு கல் என் முடிகளற்ற நெற்றியினைத் தாக்க, நிலைத்தடுமாறிப் போனேன். அதற்குள் என் பின்புறத்தில் வேகமாய் ஒரு அடி இறங்கியது. நெற்றிப் பிளந்து அதிலிருந்து இரத்தம் கண்ணில் சொட்டத் தொடங்கும்போதே அவ்வடியால் முன்னால் தூக்கி எறியப்பட்டேன். உருண்டு எழும் முன்பே என் உடலை மரக் கம்புகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பல பதம் பார்த்தன. இப்பொழுது ஊர்மக்கள் பயமின்றிக் கத்திக்கொண்டே என்னை நெருங்கி தாக்க ஆரம்பித்தனர். எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அடங்கி விட்டேன். ஆம் நான் போராடவே இல்லை. இரத்தம் சொட்டிய இடங்களில் எல்லாம் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டுமா என்ன?
முண்டந்துறை என்னைப் பொறுத்தவரை ஒரு அழகிய காடு. காரையாறு சேர்வலாறு என்ற இரண்டு ஆறுகளும் கதகதப்பை ஒவ்வொரு அங்குலத்திலும் ஏற்றும். என் தாயின் முதுகில் நானும் என் சகோதரனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காகவே அவளின் தோளில் மயிர்கள் கற்றைகளாய் இருக்கின்றன. அதை இறுக்கமாகப் பற்றிக்கொண்டுதான் பயணிக்கிறோம். அது ஓர் உலர் இலையுதிர்க் காடு. வெள்ளநாகை, தான்றி, தேக்கு ஆகிய மரங்களூடே கொன்றை மரங்களையும் கொண்ட ஓர் இடம். நெருக்கமாய் உண்ணிச் செடிகளும் வளர்ந்திருக்கும். இருநூறுக்கும் சற்றே கூடுதலான நாட்கள் எம் தாயின் கருவறை கதகதப்பில் இருந்துவிட்டு, ஐந்து வாரங்கள் முன்தான் இவ்வாறுகளின் கதகதப்பில் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறோம்.
“டெடி பியர்” க்கு பழகிய நீங்கள் என்னையும் அது போன்று இருப்பேன் என நினைத்தால் அது தவறு! அவ்வுருவம் 1902ல் கிளிஃபர்ட் பெர்ரிமேன் எனும் நையாண்டிச் சித்திரம் வரைபவர் “வாஷிங்டன் போஸ்ட்”டில் வரைந்த உருவத்தின் மேன்படுத்தப்பட்ட, எல்லோராலும் விரும்பப்படும் ஒர் அழகிய உருவம். நவம்பர் 14, 1902 அன்று, மிசிசிப்பியின் கவர்னர் ஆண்ட்ரூ எச். லாங்கினோவின் அழைப்பிற்கு இணங்க அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் மிசிசிப்பியின் ஆன்வார்டுக்கு அருகே கரடி வேட்டையாடும் ஒரு பயணத்தில் கலந்து கொண்டார். ஆனால் தியோடரின் நேரமோ என்னமோ! அவரால் ஒரு கரடியைக் கூட கண்டுபிடிக்கவில்லை. இதனால் கலக்கமுற்ற ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்கள், ஹோல்ட் கோலியர் தலைமையில், ஒரு கருப்புக் கரடியைப் பிடித்து வில்லோ மரத்தில் கட்டி, ரூஸ்வெல்ட்டை வரவழைத்து அதைச் சுடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதை மிகவும் விளையாட்டுத் தன்மையற்றதாகக் கருதிய ரூஸ்வெல்ட், அக்கரடியைச் சுட மறுத்தார். இந்த நிகழ்வு பற்றிய செய்தி நாடு முழுவதும் செய்தித்தாள்கள் மூலம் வேகமாகப் பரவியது. கிளிஃபோர்ட் பெர்ரிமேன் என்னும் கேலிச்சித்திரக்காரர், இதை அரசியல் நையாண்டிச் சித்திரமாய் நவம்பர் 16, 1902இல் வாஷிங்டன் போஸ்ட்டில் வரைந்திருந்தார். அக்கார்ட்டூனைப் பார்த்த புரூக்ளின் மிட்டாய் கடை உரிமையாளரான மோரிஸ் மிக்டோம், அதில் வந்த கரடியைப்போல பொம்மைக் கரடியை உருவாக்கி, அதைச் சுட மறுத்த ஜனாதிபதிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அவர் அதை ‘டெடி பியர்’ என்று அழைத்தார் (டெடி என்றும் ரூஸ்வெல்ட்டினை அழைப்பதுண்டு).
அவரது பெயரைப் பயன்படுத்த ரூஸ்வெல்ட்டின் அனுமதியைப் பெற்ற பிறகே மிக்டோம், பொம்மைக் கரடிகளை உருவாக்கினார். அவை மிகவும் பிரபலமாகவே, ஐடியல் டாய் என்னும் நிறுவனத்தை நிறுவி டெடி பியரை உலகிற்கு அளித்தார். ஆனால் நாங்களோ பிறந்த நான்கு வாரங்கள் உடலில் முடிகளின்றி, கண் திறக்காமல், அட ஆமாங்க! அப்படித்தான் பிறந்தோம். பின்னர்தான் முடிகள் வளர்ந்து ஒரளவிற்குத் “டெடி பியர்” உருவத்தை ஒத்துக் காணப்படுவோம்.
தாய்ப்பால் மட்டுமே உணவாய் இருந்த எங்களுக்கு இரண்டு மூன்று நாட்களாய் என் தாய்தான் சாப்பிட்டதையும் கக்கி உணவாய்த் தருகிறாள். அதையும் நாங்கள் சேர்த்து உண்ணுகிறோம். தாய் எங்குச் சென்றாலும் எங்களைச் சுமந்து செல்கிறாள். ஒரு பெரிய மரத்தின் அடிவேரிடையே இயற்கையாக அமைந்த பெரிய பொந்து போன்ற அமைப்பில் பகலில் தூங்குவதும், அந்தி மயங்கும் வேளையில் வெளியே செல்வதுமாய் இருக்கிறோம்.
என் தாயின் நடைவேகம் திடீரெனக் குறைகிறது. அவள் உணவைக் கண்டு விட்டாள் என என் உள்ளுணர்வு சொல்லியது. தலையை உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். நன்கு வளர்ந்த கரையான் புற்றொன்று தெரிந்தது. இருவரையும் இறக்கி விட்டாள். அவள் புற்றைத் தன் வளைந்த கூரிய நகங்களால் சிதைத்தும், வாயால் ஊதியும், கரையான்களைத் தேடிக் கொண்டிருந்தாள். கரையான்கள் வர வர அவற்றை நாக்கால் உறிஞ்சி உண்ணத் தொடங்கி விட்டாள். திடீரென ஏதோ என் மனதில் தோன்ற, நானும் என் தாய் செய்தது போல் செய்து, சிலபல கரையான்களை மண்ணுடன் சேர்த்து உண்டேன். வித்தியாசமான உணர்வும் சுவையும்! என் தாயும் இதைக் கவனித்தாள். பயத்தாலோ என்னவோ அச்செயலை மறுமுறை அன்று செய்யவில்லை. என் சகோதரனோ இதை ஆரம்பிக்கவே இல்லை. என் தாய் ஊதும், உறிஞ்சும் சப்தங்கள் சற்றுத் தூரம் வரை கேட்கும் அளவிற்கு சப்தமாகவே இருந்தது. சப்தத்தோடு சாப்பிடுவதுதான் எங்கள் நாகரீகம் போல! சிறிது நேரத்தில் அவள் மீண்டும் எங்களை முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
பாலையும், தாய் கக்கிய உணவையும் மறந்து இப்போதெல்லாம் பூச்சிகள், புழுக்கள், பழங்கள் என தாயைப்போல் உணவு உண்ண ஆரம்பித்துவிட்டேன். அதோடு மட்டுமின்றி தாய் முதுகையும் தவிர்த்து அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். “பக்கல்ஸ் பாத்” வழியே சென்று கொண்டிருக்கிறோம். சிறுத்தை நடமாட்டம் எப்போதும் இங்குச் சற்று அதிகமாய் இருக்கும். அதிசயமாய் இன்று எங்கள் முன்னே ஒரு யானைக் கூட்டம். யானைகளை அடிக்கடி இங்குப் பார்க்க இயலாது. வருடத்தில் இரண்டொரு மாதங்களில் இப்பகுதியில் காணலாம். அதற்குள் கூட்டத்தில் இருந்த யானை ஒன்று எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது. நாலு கால் பாய்ச்சலில் சிதறினோம். அதிக தூரம் நாங்கள் ஓடவும் இல்லை! யானையும் அதிக தூரம் எங்களைத் துரத்தவுமில்லை! இருப்பினும் இத்திடீர் நிகழ்வில் நான் சற்று பதட்டமாகிவிட்டதுதான் உண்மை. மற்ற மிருகங்களைத் தன் அருகே அனுமதிக்கும் யானை, எங்களை மட்டும் அவ்வாறு செய்வதில்லை. எங்களின் உடல் வாசனை இதற்குக் காரணமோ என்னமோ தெரியவில்லை.
யானைக் கூட்டத்தை தவிர்க்க, நானும் தாயுடன் இணைந்து வேறு திசையில் பயணித்தேன். உண்ணிப் பழங்களையும் இலந்தைப் பழங்களையும் கரையான்களையும் நன்றாக உண்டேன். நாய்கள் குரைக்கும் சப்தங்கள்! “லோயர் டேமை” நெருங்கி விட்டோம் என நினைக்கிறேன். அது சிறிய மக்கள் குடியிருப்புப் பகுதி. அப்பகுதிக்குள்ளும் சில நேரங்களில் சென்றது உண்டு. இதுவரை எந்த ஓர் அசம்பாவிதமும் நடந்தது இல்லை.
அது ஒரு மழைக்கால இரவு. திடீர் திடீரென மின்னும் மின்னலும், இடிக்கும் இடியும் அவ்விருளை ரம்மியாக்கிக் கொண்டிருக்கிருந்தன. மின்னலின் மினிமலிசமாய் மின்மினிப் பூச்சிகளின் ஆட்டங்கள். நானும் என் தாயும் ஒரு புற்றைத் தோண்டிக் கொண்டிருந்தோம். இதை அப்படியே அகநானூற்று பாடல்,
“இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்”
எனப் பதிவு செய்கிறது. சங்ககாலத்தில் எங்களின் பெயர் “பெருங்கை”.
அநேகமாய் நான் தாயுடன் சேர்ந்து உண்ணும் கடைசி இரவாய் இன்று இருக்கப் போகிறது. நான் தனியே செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த மூன்று வருடங்களில் தனியே வாழத் தேவையான அனைத்தையும் கற்று விட்டேன். நான் சந்தித்த ஒரே இழப்பு, என் சகோதரனை ஒரு சிறுத்தையிடம் இழந்ததுதான். மற்றபடி அனைத்தும் மகிழ்ச்சியான நினைவுகள்தான்.
சரசரவென ஏறி விட்டேன். நல்ல பெரிய தேனடை. முன்னங்காலால் ஒரு விசிறு. நகங்கள் கத்திபோல் செயல்பட்டுத் தேனடையைக் கீழேத் தள்ளியது. முன்னங்காலில் வழிந்த தேனை ஒரு சுவை சுவைத்துப் பின் கீழே இறங்க ஆரம்பித்தேன். இறங்குவது பெரும்பாலும் சற்றுச் சறுக்கல்களுடன்தான் இருக்கும். மரம் ஏறுவது பெரும்பாலும் உணவுக்காகவே அன்றி வேறு எக்காராணத்திற்காகவும் இல்லை. தப்பிக்க ஒடும்போதுகூட மரமேறும் பழக்கமில்லை. கீழே கிடந்த தேனடையைப் புழுக்களுடனும் தேனீக்களுடனும் நன்றாய் உண்டேன். தேன் எவ்வளவு தின்றாலும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் கொன்றைப் பழங்களைத் தின்றால் மட்டும் கருந்திரவமாய்தான் என் கழிவிருக்கும். அதுவே மற்றெதெனில் திடமாய், உருளை வடிவில், பழுப்பு நிறத்தில் இருக்கும். அட! தேன் சாப்பிட்ட உடன் இது ஏன் நினைவுக்கு வர வேண்டும்!
சற்றே இளைப்பார அருகில் இருந்த பாறையில் உட்கார்ந்தேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பேன் எனத் தெரியவில்லை. அவள் என்னருகே வரும்போதுதான் இவ்வுலகிற்கே வந்தேன். தேனின் போதை. இது அடுத்த ஒரு போதை. நான் இருந்ததைக் கவனிக்காமல்தான் வந்திருக்கிறாள். எனைப் பார்த்து சற்று அதிர்ந்தாலும் அவளும் பருவத்தில் இருந்ததால் நான் சில நாட்களாய் ஏங்கிய தருணத்திற்கு வாய்ப்பளிக்க தயாரானாள். இரண்டு மூன்று நாட்கள் அவளுடனே கழித்தேன். அவளுக்கெப்படியோ அது எனக்கு முதல் அனுபவம்.
நல்ல பனிப் போர்த்திய அதிகாலை. புற்றில் கரையானைத் தேடிக் கொண்டிருக்கிறேன். திடீரென பனி அழித்து கானி ஒருவன்! அதிர்ந்தே விட்டேன்! பட்டென இருகாலில் எழுந்து ஓடிவிடு என உருமினேன். பாவம் என் மொழி தெரியாத அவனோ வேகமாய் தன் வெட்டருவாளால் ஒரு விசிறு விசிற, நானும் என் முன்னங்காலால் விசிற! அவனைவிட என் கை வேகமாய் அவன் முகத்தின் சதைகளைக் கிழிக்க! அதனால் அவன் வெட்டு பலமற்றதாய் என் மூக்கில் இறங்கியது. இருப்பினும் அது ஆழமான வெட்டுதான்! அது எற்படுத்திய எரிச்சலில் அவனை மேலும் கீறியும் கடித்தும் வைத்துவிட்டு ஒடத்தொடங்கினேன்.
அவனுடைய அடுத்தடுத்த வெட்டுகள் அடர்த்தியான மயிர்கள் மிகுந்த என் தோள் பகுதிகளில் விழுந்ததால் தப்பித்தேன். என் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அவனுடைய காட்டுக் கூச்சலும் நான் ஓட ஒரு காரணமாயிருந்தது. உறுதியாய் அவனுக்கு சேதம் அதிகம் இருக்கும்.
காரையாற்றங் கரையில் உள்ள சொரிமுத்தனார் கோவில் பகுதி அத்திப் பழங்களும் பலாப்பழங்களும் அதிகம் காணப்படும் ஓர் இடம். அடிக்கடி புலி நடமாட்டமும் உண்டு. வருடத்திற்கு ஒரு முறை இங்கு நடக்கும் திருவிழாவை என்னால் மறக்க முடியாது. அப்போது எண்ணற்ற வாகனங்கள் காட்டிற்குள் மக்களோடு வர அனுமதிக்கப்படும். இருமுறை வாகனத்தில் அடிபட்டுப் பிதுங்கியிருப்பேன். நல்லவேளையாய் தப்பித்து இன்னமும் உயிரோடு இருக்கிறேன். அவ்விழா முடிந்து, இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவ்விடம் சென்று, மனிதர் விட்டுச் சென்றதை நன்றாய் தின்று அடுத்த ஒரு மூன்று நாட்கள் உப்பிய வயிறோடு அலைவதுண்டு. மூக்கில் ஒரு பெரிய தழும்பாகி விட்டது. என் போன்றோர்க்கு வெட்டும் பற்கள் இல்லாததால் (கரையான்கள், எறும்புகளை ஊதி உறிஞ்சு சாப்பிட ஏதுவாக பரிணமித்தது), இந்தத் தழும்புடன் என் முகமே வேறு மாதிரி இருந்தது.
எங்களை இரண்டு காரணத்திற்காக வேட்டையாடுவார்களாம். தெருவில் நடனமாடவைத்தும், தாயத்து விற்பனை செய்தும் பணம் சம்பாதிக்க ஒரு வகை. இதில் எங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. என்ன, கோரைப் பற்களை உடைத்தும், நகங்களை மொக்கையாக்கியும் வைத்திருப்பார்கள். மற்றொன்று பாரம்பரிய வைத்தியதிற்காக. இதில் எங்களைக் கொன்றுதான் எங்களது உறுப்புகளை எடுக்க முடியும். முன்னது 2000ஆம் ஆண்டில் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. பின்னது வனப்பாதுகாப்புச் சட்டத்தால் பெரும்பாலும் தடுக்கப்பட்டுவிட்டது. இப்போது எங்களுக்கு ஆபத்தாய் இருப்பது மனிதனுடனான நேரடி மோதல்தான். இதில் இருவருக்குமே சேதங்கள்தான்! இதற்குக் காரணமே எங்களின் வாழிடம் மனிதர்களால் ஆக்ரமிக்கப்படுவதுதான்.
இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் இருக்குமிடம் செல்கிறேன். ஏன் எனப் புரியவில்லை! முண்டந்துறையின் அடிவாரம்தான் கடந்த இரு வருடங்களாய் நான் இருப்பது. நல்ல தேனடைகள், புற்றுகள், கொன்றை மரங்கள் என எதற்கும் பஞ்சம் இல்லை. அருகிலேயே மனிதர்கள் இருக்கும் இடம். பெரும்பாலும் இரவில் சென்று இரவிலேயே திரும்பி விடுதலால் மனிதர்களுடன் மோதல் இதுவரை இல்லை. இதோ இன்றும் அங்குதான் செல்கிறேன். வாழைத் தோட்டம் ஒன்றில் நுழைந்து உணவுத் தேடிக்கொண்டிருந்தேன். இன்று உணவு அப்படி ஒன்றும் எளிதில் கிடைக்கவில்லை. நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. கிடைத்த உணவும் பசி போக உதவவில்லை. சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பிக்க, அப்போதுதான் எனக்கு அந்த இடத்தை விட்டுவிட்டு உடனே புறப்பட வேண்டும் எனத் தோன்றியது. அவசர அவசரமாய் கிளம்ப ஆயத்தமானேன். அட இந்நேரம் பார்த்தா ஒரு வயதான பெண் என்னை நோக்கி வரவேண்டும்! நான் ஒதுங்கி விடலாம் என நினைக்கும் முன்னே என்னை நெருங்கி விட்டாள். என்னை இன்னும் பார்க்கவில்லையா? இல்லை. அவளுக்குப் பார்வை கோளாறா? வேறு வழியின்றி நான் உரும, அவள் பயத்தில் தடுமாறி கீழே விழ, நான் அவள் மேலே ஏற, அவள் கூச்சலிட, நான் கால்களால் பிராண்டிவிட்டு ஒட முயல, சொத்தென ஒரு கல் என் மயிரற்ற நெற்றியைத் தாக்கியது!
(தொடரும்)