பச்…சக்க்! லாரியின் முன்சக்கரம் சரியாய் என் இடுப்புக்கு மேல் ஏறி..இல்லை! இல்லை! ஏறும் அளவுக்கு என் உடல் பெரிதல்ல!.. படர்ந்து கடந்தது. அடுத்த சில நொடிகளில் பின் சக்கரமும். ஏறத்தாழ அதே கோணத்தில்! தலையைத் தூக்கித் திரும்பி என் உடலைப் பார்த்தால்… அங்கு என் தோல் மட்டும் பரந்து விரிந்து! என் தோல் இதுவரை மூடியிருந்த அனைத்தும் லாரி டயரின் அடிபாகத்தில் ஒட்டிக்கொண்டு, சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் ரோட்டில் தடயங்களாய் என் கண் முன்னே!
தோகைமலையை ஒட்டிய ஒரு கிராமம்தான் கீழவெளியூர். கரூர் மாவட்டத்தின்கீழ் வருவது. வானம் பார்த்த பூமிதான். ஆனாலும், இன்னமும் விவசாயம் நடக்கிறது. கிராமத்தினர் சமீபகாலமாய் சூரியகாந்திப் பக்கம் சாய்ந்து விட்டனர். ஊரைச் சுற்றி விளை நிலங்களுடன் காப்புக் காடுகளும் உள்ளன. ஊரிலிருந்து திருச்சி செல்லும் ரோடு எப்போதும் சற்றே பரபரப்புடன் காணப்படும். இரு மாவட்டங்களை இணைக்கும் சாலையல்லவா! அதன் இருபக்கங்களிலும் நன்கு வளர்ந்த வேப்பம், புளிய மரங்கள் அச்சாலையை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு மரத்தில்தான் என் தாயின் அடிவயிற்றைப் பற்றிக்கொண்டு நான் தூங்கிக்கொண்டு இருக்கிறேன். என் தாய் குந்துகாலிட்டு முன்னங்கால்களைக் (ஆமாம், அது கைகளா இல்லை கால்களா?) குறுக்கே வைத்துத் தலையை முன்னங்கால்களிடையே புதைத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் ஏதோ ஒரு பஞ்சு உருண்டை கிளைகளுக்கிடையே சிக்கி இருப்பதுபோல் இருக்கும். எங்களின் உரோமமும் அப்படி! பெரும்பாலும் பகல் பொழுதை இப்படித்தான் தூங்கிக் கழிக்கிறோம். நாங்கள் இரவாடிகளாம்! அதனால் அப்படியாம்!
இதுவரை இருகுட்டிகளை ஈன்ற என் தாய் இம்முறை என்னை மட்டுமே. கரிச்சான் குருவியின் அசத்தலான பாடல் ஒன்றில் விழித்து வைத்தேன். அக்குருவி தன் குரலில் மட்டுமன்று வேறு பறவைகளின் குரல்களையும் அப்படியே ஒலிக்கும்.
தட்டாண் பூச்சிகள் நிறையப் பறக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றைப் பச்சைப் பஞ்சுருட்டான் வானிலேயே பிடித்துண்ணுவதும் பறப்பதுமாய்! ஒவ்வொரு முறை இரையைப் பிடிக்கும்போதும் பட்பட்டென அதன் அலகுகள் எழுப்பும் ஒலி எனக்கு நன்றாய்க் கேட்டது. நாங்கள் இருக்கும் புளிய மரம் இளம் பிஞ்சுகளால் நிறைந்து இலைகளால் போர்த்தியிருந்தது. இருப்பினும் அந்த மாலைக் காற்றில் அம்மரம் சிணுங்கத்தான் செய்தது. கண் விழித்த என் தாய், விழித்தவுடன் வழக்கமாய் செய்யும் செயல்களைச் செய்ய ஆரம்பித்தாள்.
தன் இரு கைகளால் முகம் முழுவதும் மாறி மாறித் துடைத்தாள். பின் தன் கீழ்த் தாடையில் உள்ள சீப்புப் போன்ற பற்களால் உடல் முழுதும் கோதிக்கொண்டாள். என்னையும் சற்று அப்படிச் செய்தாள். பின் அப்பற்களை அதற்கென்றே அமைந்த நாக்கின் ஒரு பகுதியால் சுத்தமும் செய்துகொண்டாள். பின் என்னைச் சுமந்துகொண்டு மெதுவாய் கொம்புகளூடே நடக்க ஆரம்பித்தாள். நான் அவளின் அடிவயிற்றைப் பற்றிக்கொண்டும், தேவைப்படும்போது தாய்ப்பாலைக் குடித்துக்கொண்டும் இருந்தேன். என் தாயோ ஆங்காங்கே நின்று சிறு சிறு பூச்சிகளைப் பிடிப்பதும், உண்பதும், பின் நடப்பதுமாய் சென்றுக்கொண்டிருந்தாள். அவள் சிறிய பூச்சிகளை அப்படியே வாய்க்குள் அனுப்பினாள். சற்றுப் பெரிய பூச்சிகளைக் கைகளால் பிய்த்து பின் வாய்க்குள் அனுப்பினாள். சாலையில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்ல ஆரம்பித்து விட்டன. இது அப்படியே இரவு ஒன்பது மணி வரை தொடர்ந்து பின் குறையும்.
சுமார் 160 நாட்கள் தாயின் வயிற்றில் இருந்து, பிறந்து, பின் மூன்று வாரங்கள் கழித்துதான் கண் திறந்தேன். வெண் நிற முடிகளுடன் மனதை அள்ளும் அழகோடு இன்று இருக்கிறேன். சில நேரங்களில் என் தாய் என்னை நான் பிறந்த மரத்திலேயே விட்டு விட்டுச் சிறிது நேரங்கழித்து வந்து என்னைச் சுமந்தும் செல்கிறாள். இது சுமார் நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்தது. வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள் அது. இதோ என் தாய் இப்போது என்னைத் தவிர்க்க ஆரம்பிக்கிறாள். புரிந்து விட்டது! நான் தனியே வாழத் தயாராகி விட்டேன் என்பதை என் தாய் எனக்கு உணர்த்துகிறாள். ஆசையுடன் அவளையும் அம்மரத்தையும் பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
பகல் முழுதும் உறங்கி பின் இரவில் விழித்து உணவு தேடும் வழக்கம் என்றாகி விட்டது. அனைத்து விதமான பூச்சிகளையும் உண்ணத் தொடங்கி விட்டேன். சில விசமுற்று இருப்பதை அதைத் தின்று, தெரிந்து, பின் தவிர்த்தும் வருகிறேன். நான் இப்போது இருப்பது சாலையோர வேப்பமரமொன்றில். மரம் பெரிதாய் இல்லை எனிலும் தொடர்ச்சியாய் இருபக்கங்களிலும் மரங்களுடன் தொடர்புகொண்டு காணப்படுகின்றன. என்னை நாடோடி என இப்போது அழைக்கலாம். இந்நிலை இணை ஒன்றை நான் அடையும் வரைத் தொடரும். இதனால் என் உரிமைக் கோரும் இடம் அந்த அளவுக்குத் தனித்தன்மையுடன் இருக்காது. இதுநாள் வரை எக்காரணத்துக்காகவும் மரத்தை விட்டு கீழ் இறங்கியதில்லை. எனக்கும் அவ்வாசை இல்லை. உண்மையில் தரையில் நடப்பதற்கான உடலமைப்பு என்னிடம் இல்லை. கொம்புகளைப் பற்றிக்கொண்டு அதன்மேல் நடக்கத்தான் பரிணமித்திருக்கிறது என்னுடல்.
வீய்ய்ய்ய்ங்…என ஒரு குரல் அருகே ஒலிக்க, அதனைத் தொடர்ந்து வெவ்வேறு இடங்களிலிருந்தும் வெவ்வேறு தூரங்களிலிருந்தும் அதே ஒலிகள். தங்களின் இருப்பிடத்தைப் பறைசாற்ற எம்மவர்களின் முயற்சிகள் அவை. நான் இன்னமும் அதுபோன்ற ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வொலி அல்லாது ‘கிரிக்’ என்றும் மூச்சிறைப்புப் போன்ற உறுமல் ஒலிகளையும் நாங்கள் எழுப்புவது உண்டு.
வேப்பங்கொம்பிலிருந்து தலைகீழாய் தொங்கிக்கொண்டு முன்னங்கால்களால் அருகில் இருந்த கருவேல மரக்கொம்பைப் பற்றிக் அம்மரத்துக்கு இடம் பெயர்ந்தேன். மற்ற குரங்குகள்போல தாவுகின்ற உடலமைப்பும் எம்மிடம் இல்லை. அதனால் இப்படித்தான் இடம் பெயருவோம். அது ஒரு பரந்து விரிந்த கருவேல மரங்கள் அடங்கிய காப்புக் காடு. இம்மரங்களில் பூச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. இம்மரப் பழங்களும் பிசினும் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதாவது அம்மரங்களில் காணப்படும் எறும்புகளையும் பிடித்து உண்ணுவது உண்டு.
அக்காப்புக் காட்டில் இன்றும் இறங்கினேன். நல்ல பௌர்ணமி வெளிச்சம் காடெங்கும் பரவி, பயம் காட்டியது. மறைந்து மறைந்தே உணவு தேடினேன். தேடித் தேடிப் பூச்சிகளைப் பிடித்து உண்டேன். தூரத்தில் அவள் இருப்பது தெரிந்தது. நான் இவளுக்காகவே இங்கு அலைகிறேன் போல! கடந்த இரண்டு நாட்களாய் அவளை அணுக முயற்சித்தும் அவளின் உறுமலும் எதிர்ப்பும் என்னை நெருங்க விடாது தடுத்தது. இதோ இன்றும் அவளை அணுகுகிறேன். ஒவ்வொரு அடியையும் ஆசையுடன் எடுத்து வைக்கிறேன்! இதோ அவளின் கையெட்டும் தூரத்தில் நான்! அவள் கண் மூடி ஓய்வில் இருந்தாள்.
இரவிலும் நாங்கள் இப்படி ஓய்வெடுப்பதும் உண்டு. நான் பற்றிய கொம்பு ஒன்று எழுப்பிய சப்தத்தில் கண் விழித்தாள். அவள் அருகே என்னைப் பார்த்ததில் அவளின் உடலில் ஒரு மெல்லிய அதிர்வுப் பரவி அது கண்களில் ஆச்சர்யமாய் விரிந்தது. அவளிடமிருந்து உறுமலும் இல்லை! பற்களைக் காண்பித்தலும் இல்லை! சில நிமிடங்கள் அசைவில்லாமல் கடந்தது.
நான் மெதுவாய் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பே அவள், தன் உடலை வளைத்து எங்களிடைத் தூரத்தைக் குறைத்தாள். நான் அவளை ஆசையுடன் தடவிக் கொடுத்தேன்! கால் நகம் கீர சொறிந்தும் விட்டேன்! அதற்கெனவே அவள் தன் உடலை வளைத்தும் நெளித்தும்! இவள் ‘இன்று’ எனக்கானவள் என உறுதிப்படுத்தி அவளுடன் இணையத் தயாரானேன். இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே வாசம். கொம்புகளில் நின்றுகொண்டு புணர்வதைவிட கொம்பைப் பற்றித் தொங்கிக்கொண்டு அவளைப் புணர்வது அவளுக்கு எளிதாய் இருப்பதுபோல் பட்டது. உடல்வாகு அப்படி!
நான் அவளை விட்டு விலகிய பின், வேறு இருவருடன் அவள் புணர்வதையும் பார்த்திருக்கிறேன். எங்களில் இது சாதாரணம். ஃபட்டட்.. டட்.. எனச் சத்தத்துடன் தீப்பொறி பறந்தது. எம்மவர்களில் ஒருவன் மின்சாரக் கம்பிகளில் அடிபட்டுத் தூக்கி வீசப்பட்டான்! ரோட்டோர மரங்கள் அருகேயே மின்சாரக் கம்பங்கள் இருப்பதால் இது நடக்கிறது. அவன் அனேகமாய் இப்பகுதிக்குப் புதியவனாய் இருக்க வேண்டும். நான் சற்றுத் தாமதமாகத்தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
இன்று அதிசயமாய் ஓணான் குட்டி ஒன்று என் எதிரே தூங்கிக் கொண்டிருந்தது. அதைக் கையால் பிடித்து வாயில் வைக்கும் முன்னே என் விரலை நன்றாய் கடித்துவிட்டது. பின் அதைப் பிய்த்துதான் உண்ண வேண்டியிருந்தது. விரலில் இரத்தம் வர ஆரம்பித்திருந்தது. ஓணான் என்னுடைய மெனுகார்டில் இல்லைதான்! அவ்வப்போது சில உயிரினங்கள் இது போல புதிதாய் சேருவதுண்டு. ஓய்வு, உணவுத் தேடல், உணவு உண்ணல், சுயசுத்தம் பேணல் என இவைதான் என் அன்றாடப் பணிகள். இதனூடே இணைத் தேடல், அறிதல், பின் அதனுடன் இணைதல், இருப்பிடப் பாதுகாப்பு, அரிதாய் சமூக வாழ்க்கை (கூட்டமாய் தூங்குவதுதான் பெரும்பாலும்) இவைகளும் தேவைப்படும் காலங்களில் நடக்கும்.
இன்று இருட்டும் முன்பே இரைத் தேடக் கிளம்பிவிட்டேன். ஒரு சில மணித்துளிகளில்! இதென்ன நான் தனியே நகர்வதுபோல் இருக்கிறது! நான் இருந்த கொம்பை ஒரு சிறுவன் சப்தம் வராது ஒடித்துவிட, நான் அதன் உச்சியில்! கைகளை நீட்டி மற்றொரு கொம்பைப் பிடிக்கும் முன்பே நான் கொம்புடன் தனித்துச் சிக்கி விட்டேன். அதற்குள் மற்றொரு சிறுவன் என் பிடரியைப் பிடித்து இழுக்க, அவனின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாது கொம்பிலிருந்து அவன் கையில் சிக்கினேன். இஸ்..இஸ் என உறுமியும் பயனில்லை. சிறார்கள் இச்செயலில் பழக்கமானவர்கள் போல!
‘டேய்! சூப்பர்டா!’
‘டேய்! அந்த டப்பாவை எடு, சீக்கிரம்!’
பின்னவன் கேட்டதற்கு ஏற்ப முன்னவன் ஒரு டப்பாவினை எடுத்து மூடியைத் திறந்தான். என்னைவிட உயரமான டப்பா அது. அதற்குள் என்னைப் போட்டு மூடிவிட்டனர். அம்மூடியில் சிறுசிறு துளைகள் போடப்பட்டிருந்தன. காற்றுக்காகப் போலும்! டப்பாவின் இருட்டு பயம் தந்தது!
ஓரிரவு முழுதும் அதில் இருந்திருப்பேன் போல! பசி மயக்கம் வேறு! டப்பாவின் மூடி திறக்கப்பட்டது. அதேச் சிறுவர்கள்! எதிர்க்கும் திறன் முற்றிலும் இல்லை. ஒருவன் அழகாய் என் பிடரியைப் பிடித்துத் தூக்க, மற்றவன் என் கழுத்தில் சங்கிலி ஒன்றைக் கட்டினான். பின் அச்சங்கிலியின் மற்றொரு முனையை அங்கே தரையில் அடித்திருந்த கொம்பு ஒன்றில் கட்டினான்.
‘என்னடா! விட்டுடட்டா?’
‘கொஞ்சம் இரு… ஆங்ங் இப்ப விட்டுரு.’
பட்டென என்னைத் தரையில் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டான் அச்சிறுவன்.
நல்லவேளை, சங்கிலி சற்றுப் பெரிதாகவே இருந்தது. சற்று நடமாடச் சுதந்திரம் தந்தது. கோயில் யானை மாதிரியல்ல எனப் பெருமைப் பட்டுக்கொண்டேன். ஒரு தட்டில் நீரையும் ஒரு தக்காளியையும் என்னருகே வைத்துவிட்டு அவ்விருவரும் சென்றுவிட்டனர். நான் சுற்றுவதும் சங்கிலி என்னைத் தடுப்பதுமாய் ஏறக்குறைய இரண்டு மூன்று மணி நேரங்கள் கடந்தன.
திடீரென, ‘டேய்! இந்தச் சனியனை யார்ரா கொண்டு வந்தது?……. டே துரை! டேய்!’ என அங்கு வந்த வயதான பாட்டி ஒருவள் கத்த! சிறுவர்கள் வேகவேகமாய் ஓடிவந்தனர்.
‘அப்பாயீ! கத்தாத அப்பாயீ! அது ஒன்னும் செய்யாது,’ என்றான் ஒருவன்.
‘டேய்! நான் போறதுக்குத்தான் இதைக் கொண்டாந்தியா? நாசமாய் போவ!’
‘இதைக் கொண்டுபோறியா? இல்ல, இந்தக் கல்லை மண்டைல போட்டு கொண்டு போடட்டுமா?’ என அவள் கத்த.
‘இரு! இரு! அப்பாயீ’ என்றவாறே ஒருவன் மீண்டும் எனை லாவகமாய் பிடித்தான். சங்கிலியைப் பிரித்தெடுத்து மூலையில் விட்டெறிந்தான்.
இதையனைத்தையும் பார்த்த அப்பாட்டி, ‘டேய்! எடுத்த இடத்திலேயே வுட்டுடுங்க! கொன்றாதீங்க’ என்றாள்.
‘போ! போ! வேலைய பாரு’ என்றவாறே அச்சிறுவர்கள் எனைக் கைகளில் ஏந்தியவாறே நடக்க ஆரம்பித்தனர்.
சிறிது தூரத்திலேயே ரோடு வந்தது. அதனருகே உள்ள ஒரு மரத்தின் மீது என்னை என் பிடரியைப் பிடித்தவாறு வைத்தான். என் கால்கள் மரத்தைப் பற்றியது தெரிந்தவுடன் பட்டெனப் பிடரியில் இருந்து கையை எடுத்தான். நான் வேக வேகமாய், ஆம்! என்னாலும் வேகமாய் இயங்க இயலும். சரசரவென ஏற ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் ஒரு பாதுகாப்பான உயரத்தில்! கீழேப் பார்த்தேன். சிறுவர்கள் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.
இதைத்தான்,
‘மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாம்
சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றினம்’
எனச் சீவக சிந்தாமணி (1902) கூறியதோ!
தேவாங்கை “மகண் மா”யென்று அழைத்த காலம் அது!
அவசர அவசரமாய் உணவு தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் கவனித்தேன் அது ஒரு மொட்டை மரமென்று! இருப்பினும் இருக்கும் சிறு பூச்சிகளைத் தேட ஆரம்பித்தேன். ஏதோ கிடைத்தது! கிடைத்ததை உண்டுவிட்டு ஒரு மறைவான இடத்தில் உறங்க ஆரம்பித்தேன்.
பேருந்து ஒன்றின் சப்தத்தில் கண்விழித்தேன். நன்றாய் இருட்டியிருந்தது. அவசர அவசரமாய் என்னைத் தயார் செய்துகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி மரத்திலிருந்து கீழே இறங்கினேன். வேறு வழியில்லை! இம்மரம் மற்ற மரங்களுடன் தொடர்பற்றுக் காணப்படுகிறது. வேறு மரத்துக்குச் செல்வதுதான் உகந்தது. சாலையின் எதிர்புறம் மரங்கள் தொடர்ச்சியாய் இருக்கின்றன.
கீழே இறங்கி விட்டேன். சாலையின் இருபுறமும் எதுவும் செல்லாமல், அமைதியாய், இருளாய் இருந்தது. நடக்க ஆரம்பித்தேன். தரையில் நடப்பதின் சிரமம் தெரிந்தது. எதிரே இருந்தது ஒரு புளியமரம். ஏனோ நான் பிறந்த அம்மரம் ஞாபகத்துக்கு வந்தது! இளம் பிஞ்சுகளுடன் அழகாய்! சாலையின் பெரும்பகுதியைக் கடந்துவிட்டேன். திடீரென ஒளி வெள்ளம் என் மேல்! அவ்வெளிச்சத்துக்கு ஈடுகொடுக்க முடியாது சட்டென நின்று விட்டேன். லாரி ஒன்று வேகமாய்! பச் சக்க்.
(தொடரும்)