Skip to content
Home » காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்

காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்

தெரிந்துவிட்டது! எல்லாம் இந்த ரேபிஸ் வைரசால் வந்தது. இரண்டு, மூன்று நாட்களாய் எதுவும் உண்ண முடியவில்லை. தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற ஒரு நிலை. சற்றேறக்குறைய வாதம் வந்தது போன்ற உடல் நிலை. அது என் மனநிலையிலும் வெளிப்பட்டது. எந்நேரத்திலும் நான் கோமா நிலைக்குச் சென்று இறக்கலாம். அதற்குமுன் என்னுடைய எட்டு வருட வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்துவிடுவோம்.

தாயின் வயிற்றில் 62 நாட்கள் இருந்துவிட்டு, 280 கிராம் எடையில், கண்களை மூடிக்கொண்டு வெளியுலகம் தேடி வந்தேன்! என் தாய் எனக்கு முன்பே ஆறு பேரைப் பிரசவித்திருந்தாள். நான்தான் இறுதி! நான் வெளியே வந்தவுடன் என் தந்தை என்னைக் கழுத்தில் கவ்வி, சற்று உயரே தூக்கி மெதுவாய் அசைத்துப் பார்த்தார். வலியில் நான் எழுப்பிய ஒலியில் எனக்கு உயிர் இருப்பதை என் தந்தை உறுதிசெய்து என்னைக் கீழே விட்டுவிட்டார். ஒலி இல்லை எனில் உயிர் இல்லை எனக் கருதி குகைக்கு வெளியில் கொண்டு போடுவார்! சமயத்தில் தின்றும் விடுவார்! ஆரம்பத்தில் பழுப்பு நிறத்தில் நாங்கள் காணப்பட்டாலும் பத்து மாதத்தில் சிகப்புக் கலந்த பழுப்பு நிறம் அடைந்துவிடுவோம்.

என் தாய் என்னை நன்றாகத் தன் நாவால் நக்கிச் சுத்தப் படுத்தினாள். என்னையும் அறியாமலேயே சிறிது நேரத்தில் தாய்ப்பாலை உறிஞ்ச ஆரம்பித்தேன். யார் இதைக் கற்றுக் கொடுத்தது? நாங்கள் ஏழு பேரும் ஒரே நேரத்தில் பால் குடிக்க வசதியாய் அவளிடம் 16 காம்புகள்! கொஞ்சம் கொஞ்சமாய் என்னுடன் பிறந்தவர்களுடன் மேல் ஏறி, விழுந்து, விளையாடப் பழகிவிட்டேன். எனக்குக் கண் திறக்கவும், மேல் கீழ் தாடைகளில் வெட்டும் பற்கள் தோன்றவும் பத்து நாட்களாகின. ஒரு மாதத்தில் பற்கள் முழுவதும் தோன்றிவிடும்.

நாங்கள் இப்போது இருப்பது பாறைகளுக்கு இடையே அமைந்த இயற்கையான சிறிய குகைப் போன்ற ஓர் அமைப்பில்! மேற்பகுதிப் பாறைகளால் இருப்பினும், தரை என்னமோ பெரும்பகுதி மணலாய்த்தான் இருந்தது. மழை நீர் உள்ளே வந்தால் தேங்காமல் மணல் உறிஞ்சி விடும். சுமாராக 120 செமீ அகலமும், 3 மீட்டர் நீளமும், என் தாய் உயரத்திலுமான குகையது. என்னையும் மற்றவர்களையும் எந்தாய் கழுத்தில் கவ்வி, குகையில் சில நேரங்களில் இடம் மாற்றி வைப்பதும் உண்டு. வலி இல்லாக் கவ்வல் அது! காதலிலும் தாய் பாசத்திலும் இந்தக் கவ்வல் தனிச் சுகம் தருகிறது

நாங்கள் பிறந்து மூன்று வாரங்கள் வரை என் தாய் வெளியே எங்கும் செல்லாமல் எங்களுடனே இருந்தாள். அவளுக்குத் தேவையான உணவுகளை மற்றவர்கள் வேட்டையாடி வந்து கொடுத்தனர். மூன்று வாரங்களாய் தாய்ப்பாலை மட்டுமே பருகிப் பசியாறுகிறோம். இன்று வெளியே சென்று திரும்பிய தாய், எங்கள் முன்னால் தான் தின்றதைக் கக்கி வைத்தாள். அது நன்றாய் கூழாக்கப்பட்ட அவள் உண்ட ஏதோ ஓர் உணவு! என் முன்னால் பிறந்தவர்களில் மூத்தவன் பட்டென அதை உண்ண ஆரம்பித்தான். பின்னர் நாங்களும் அதையே செய்தோம். அப்படி ஆரம்பித்ததுதான் இந்தக் கக்கியதை உண்ணும் பழக்கம். அதன்பின் வெளியே சென்று திரும்பும் தாயின் வாயை நக்குவதன் மூலம் அவளை அச்செயலை செய்யத் தூண்டி பழக்கி விட்டோம். இந்நிகழ்வில் சில நேரங்களில் சண்டைகள் எங்களிடையே எழுவதுண்டு. உணவும் சரிசமமாய் எங்களுக்குக் கிடைப்பதில்லை. நல்லவேளையாய் என்தாயின் தாய்ப்பால் அதிக அளவில் கிடைப்பதால் அது ஈடுகட்டப்படுகிறது. புது உணவின் சுவை மூளையில் பதியப்பதிய தாய்ப்பாலைச் சற்றுத் தவிர்க்கிறோம்.

நாங்கள் மொத்தமாக 12 பேர் இருக்கிறோம். என் தாயும் தந்தையும் தலைவன் தலைவியாய் வழி நடத்துகிறார்கள். தாய்ப்பால் அருந்துவது நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் என் தாயின் பாதுகாப்பில் பெரும்பாலான நேரங்களையும் மற்றவர்களின் பாதுகாப்பில் சில நேரங்களையும் கழிக்கிறோம். குடும்பம் எனச் சொன்னாலும் அது ஒரு ராணுவப் படை போன்றதுதான். கட்டுப்பாடுகளுக்குத்தான் அங்கு முன்னுரிமை. என் தந்தையும் தாயும் தலைவர்களாய்! அது ஒரு மாதிரி ஜனநாயகமும் சர்வாதிகாரமும் கலந்த கலவை. ஒன்று தேவைப்படும்பொழுது மற்றது பதுங்கி அதற்கு இடமளிக்கிறது. சில நாட்களாய் குகையை விட்டு வெளியே வந்து விளையாடி மீண்டும் குகைக்குச் செல்கிறோம். ஏதாவது ஆபத்து எனில் எம்மைப் பாதுகாக்க அங்கு இருப்பவர் தம் ஒலியால் எங்களுக்கு அதை உணர்த்துவார்.

இன்று எங்களையும் வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. எங்கும் பச்சை நிறமிருந்தது! நாங்கள் உண்மையில் அந்தாடிகள். தலைவன் முன்செல்ல, இறுதியாய் நாங்கள். சிறிது தூரத்திலேயே கருமந்தி எம்மைக் கண்டு “ஊப்ப் ஊப்ப்” என்று ஒலி எழுப்ப, விலகி இருந்த குரங்குகள் ஒன்று சேர்ந்து வேகமாய் இடம் பெயர்ந்தன. நான் அதைப் பார்த்துக்கொண்டே பயத்துடன் எம்மவர்களைப் பின் தொடர்ந்தேன். இடையிடையே எம்மவர்கள் சிறுநீர் கழிப்பதும், விட்டையைப் போடுவதுமாய்! இதெல்லாம் இது “எங்கள் இடம்! எம் குழு!” என்று மற்றக் குழுவினருக்குப் பறைசாற்றும் வழி. போகும் வழியில் ஒரு புல்வெளித் தளம். அதைக் கண்டவுடனே எம்மவர்களில் பெரும்பாலோர் ஸ்பிரிங் போன்று எம்பிக் குதிக்க ஆரம்பித்தனர். அடுத்து நடக்கும் வேட்டைக்காக உடலை தயார்ப்படுத்தும் வேலையாய் இருப்பினும் புல்வெளியில் இதை எம்மவர்கள் கட்டாயம் செய்வார்கள்.

ஒரு அரைமணி நேர பயணத்தில் முன்னால் சென்ற என் தந்தை, தூரத்தில் கண்ட மான் கூட்டத்தைக் கண்டு பட்டெனப் பதுங்க, அதுவே சமிக்ஞையாய் பரவ, எம்மவர்கள் தயாரானார்கள். சப்தமின்றி சில நிமிடங்கள் கழிந்தன. எம்மில் இருவர் தலைவனிடமிருந்து வலதுபக்கமாய் 90 டிகிரி விலகிப் பதுங்கிச் செல்ல ஆரம்பித்தனர். அதேப்போல இடதுபக்கத்தில் இருவர் சென்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் இருதிசைச் சென்றவர்களும் மீண்டும் பழைய திசைக்குத் திரும்பினர். என் தலைவன் சட்டெனப் பதுங்கிய நிலையிலிருந்து விலகி, மான் கூட்டத்தை நோக்கி ஒட, அதே நேரத்தில் இருபக்கம் சென்றவர்களும் ஓட ஆரம்பித்தனர். மான் கூட்டம் சிதறி ஒட ஆரம்பித்தது. தலைவனும் அவனுடன் பின் சென்ற இருவரும் மான் கூட்டத்தை நோக்கித் துரத்த, மான் கூட்டம் வலது பக்கம் திரும்பி ஒட, திடீரென்று முன்பு வலதுபக்கம் சென்ற எம்மவர்கள் இருவரும் நுழைந்தனர். மான் கூட்டத்தில் பல தங்களுடைய திசையை உடன் மாற்ற, நான்கு மான்கள் மட்டும் தலைவனுக்கு முன்னே. அவற்றைத் தலைவனும் அவனுடன் இருவரும் பின்பக்கமும் வலதுபக்கமுமாய் அரவணைக்க, மற்ற இருவரும் துரத்த ஆரம்பித்தனர். அம்மான்களில் ஒன்று மட்டும் இப்போது இடதுபுறம் திரும்பி ஒட! அம்மானை எம்மவர்கள் தேர்ந்தெடுத்துவிட்டது தெரிந்தது. இதோ இடதுபுறத்தில் மற்ற இருவரும் இணைத்துவிட்டனர். மானை அவர்கள் தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிட்டனர். அதாவது அம்மான் செல்லும் வழியை இவர்கள் தீர்மானித்துத் துரத்துகின்றனர். அட! அவர்கள் ஆற்றை நோக்கி அல்லவா அம்மானைத் துரத்துகிறனர். மிக அழகாய் அம்மானை ஆற்றில் இறக்கி விட்டனர். ஆறு தப்பிச் செல்ல உதவும் ஒரு களம் அல்ல என்பதை அறியாத அம்மான் ஆழமிலா ஆற்றில் தடுமாறித் தடுமாறி நடந்தது. வேகமாய் ஒடிவந்த மான் நீரில் தவ்வித் தவ்வி வேகம் குறைந்தது. நீந்திச் செல்லும் ஆழத்திற்கு இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும். அதற்குள் என் தலைவன் அவளின் தொடையை முதல் கவ்வாய் கவ்வ, காலை விடுவிக்க எடுக்கும் நடவடிக்கையில் அவள் முன்னே செல்வதை மறக்க, சில நிமிடங்களில் அம்மான் சூழப்பட்டுக் கடிபட்டுக் கொண்டிருந்தது. உண்மையில் அம்மான் உயிருடன் இருக்கும்போதே எம்மவர்கள் அதை உணவாக்கி கொண்டிருந்தனர். தலைவன் அம்மான் இரையாகிவிட்டதை உணர்ந்து கரை வந்து வினோத விசில் ஒலியை எழுப்ப, ஆங்காங்கே பரவி இருந்த நாங்கள் அவ்விடம் வந்து சேர்ந்தோம்.

எம்மவர்கள் அம்மானைக் கரைக்கே வரவைத்து விட்டனர். இன்னமும் உயிர் இருந்தது. என் தாய் சில துண்டுகளைக் கடித்து எம்மருகே போட்டாள். நாங்களும் கடித்து உண்ணத் துவங்கினோம். வெகு வேகமாய் சாப்பிடும் திறன் எங்களுக்கு உண்டு. இதுவே மற்ற விலங்குகள் எங்கள் இரையைத் திருட வரும்போது நாங்கள் ஏமாறாமல் இருக்க உதவுகிறது. சற்றேறக்குறைய இரண்டறைக் கிலோ உணவை வயிற்றில் வைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இதைத்தான் குட்டிகளுக்குக் கக்கித் தர வசதி செய்யப்பட்டிருக்கிறது. இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. தூரத்தில் யானைகள் கிளைகளை உடைக்கும் சப்தமும் சில பிளிரல்களும் கேட்டன. எம்மவர்கள் அந்தக் கரையோர பாறைத் திட்டுகளில் வசதியாய் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.

மேற்சொன்ன நிகழ்வை,

“செந்நாய் எடுத்தலின் வளி முனை பூளையின்
ஒய்யென்று அலறிய கெடு மான்இன நிரை” – அகம்.199

என்று அகப்பாடல் கூறுகிறது. அதாவது ஆண் செந்நாயானது மான்கூட்டத்தின்மேல் பாயவும், அஞ்சி ஓடிய மான்கள் எழுப்பிய ‘ஒய்’ என்னும் அலறல் ஓசையானது, பூவரச (பூளை) இலையைச் சுருட்டிச் செய்யப்படும் பீப்பியின் குவிந்த முனையில் காற்றைச் செலுத்தி எழுப்பப்படும் ஓசையைப்போல இருக்கிறதாம்.

நான் நன்றாய் வளர்ந்துவிட்டேன். பெரிய காட்டெருமைத் தொடங்கி குறுமுயல் வரை வேட்டையாடியிருக்கிறேன். இறந்த அழுகிய யானையையும் உணவு கிடைக்காத ஒரு நிலையில் உண்டிருக்கிறேன். என்னுடன் பிறந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் மூன்று வயதானவுடன் எம் குடும்பத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். எங்கள் குழு மற்றக் குழுக்களுடன் இணையாமல் ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ கோட்பாட்டுடன் இயங்கும் ஒன்று. மற்றவையும் அப்படித்தான். அரிதாய் இருகுழுக்கள் இணைந்து உச்சகுழுவாய் உருவாகி பெரிய இரையை வேட்டையாடும். இதில் இரை, குழுவில் உள்ள அனைவரின் தேவையைத் தாண்டி இருக்கும். காட்டெருமை இரையாக்கப் பட்டது அப்படித்தான்.

குழுவினரிடம் சண்டை என்பது பெரும்பாலும் இருந்ததில்லை. ஆனால், இனப்பெருக்கக் காலங்களில் தலைவியை அடைய சில முயற்சிகளை இளம் ஆண்கள் செய்ய முற்படும்போது சிறிய அளவில் சண்டைகள் ஏற்படுவதுண்டு. பெரும்பாலும் இது தலைவனால் தடுக்கப்பட்டு விடும். தலைவி குட்டி ஈன்று விட்டால் அனைவரும் ஒருங்கிணைந்து தாயையும் குட்டிகளையும் பராமரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரும்பாலும் தலைவி மட்டுமே கருவுருவாள். அதனால் எங்கள் குழுவே சகோதரச் சகோதரிகளால் நிரம்பியதாகவே இருக்கும். குழுவின் எண்ணிக்கைக் கூடுவதும் குறைவதும் எங்களுக்கு இயல்பானதுதான்.

அட என்ன இது! தலைவனும் தலைவியும் காதல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒருவொருக்கொருவர் உரசி, நக்கி, பிணைந்து கொள்வதுமாய்! அது ஓர் அழகான காதல். வெகு நேரம் இது தொடர்ந்து பின் புணர ஆரம்பித்தனர். நாயினம் ஆயினும், நாய்கள் இணைந்த பின் “புணர் முடிச்சில்” சிக்கி எதிர் எதிர் திசையில் ஆண் பெண் இருவரும் இருப்பதுபோல் எம்மில் நிகழ்வதில்லை. ஆனாலும் வெளியில் அறியா வகையில் அப்புணர் முடிச்சு சில நொடிகளில் தோன்றி மறைவதுபோலத்தான் தெரிகிறது. குறுகிய கால இடைவெளியில் இரண்டொரு முறைப் புணர்ந்த பின் இருவரும் விலகினர்.

நல்ல வெயில் காலக் காலைப் பொழுது. வெளிச்சம் சற்று விரைவாகவே எம்மிடத்தைப் பிடித்திருந்தது. நாங்கள் பந்திப்பூர்-முதுமலைச் சந்திக்கும் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருக்கிறோம். சாலையைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். சோதனைச் சாவடி அருகே இருப்பவர்கள் சற்றே பதட்டத்துடன் இருப்பதுபோல் தெரிந்தது. ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் கைகளில் கற்களை வைத்துக் கொண்டு எதையோ துரத்துவதுபோல் இருந்தது. அதில் கவனம் செலுத்தாமல் எம் முன்னால் செல்பவர்களைத் தொடர்ந்து சாலையில் ஏறினேன். திடீரென தெருநாயொன்று ஓடி வந்து என் தொடையைக் கவ்வ, நான் சுதாரித்து ஒரு உதையில் காலை விடுவிக்க, கிழே விழுந்து தடுமாறி எழுந்து சென்றது அந்நாய். அதற்குள் வனக்காவலரின் கல் ஒன்று வேகமாய் அந்தத் தெருநாயின் மண்டையைத் தாக்க, அது துள்ளியதில் வேகமாய் வந்த லாரியின் முன்பக்கம் பட்டுச் சாலையில் சரிந்தது. எல்லாம் சில நொடிகளில்! தூரத்தில் சாவடிக்காரர்கள் கைகளில் கற்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்களில் ஒரு நிம்மதி. ஏன் அப்படி என நினைத்துக் கொண்டே காட்டில் மறைந்தேன். தொடையில் நன்கு கடி வாங்கியிருந்தேன். என் நாவால் அக்காயத்தை நக்கிக் கொடுத்தேன்.

இது நடந்து பத்து நாட்களாகிவிட்டது. மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே என் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது. வேட்டையாட அன்று வந்தவன் என் உடல் தந்த உபாதையில் எம்மவர்களைத் தொடர்ந்து செல்லாமல் பின் தங்கி விட்டேன். என்னால் சரிவர இயங்க முடியவில்லை. வழி அறிந்திருந்தாலும் வழி மாறுகிறேன். உண்ணுவதில் சிரமம் தெரிந்தது. தெருநாய் கடித்ததும், அச்சாவடி ஆட்கள் அந்நாய்க்குப் பதட்டமானதும் ஞாபகத்திற்கு வந்தது. புரிந்துவிட்டது. அந்த நாய்க்கு ரேபிஸ்! அது என்னிலும்!

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *